அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

இன்பம் காண!

புதுவுலகம் போற்றி எதிர்கொண் டழைக்கும்
புனிதமிது சமதர்ம ஆட்சி யாலே
கதியற்றோர் நிதியற்றோர் வறுமை யுற்றோர்
காலமெலாம் உழைத்துழைத்து வலிமையற்றோர்
சதிசெய்யும் சாத்திரத்தால் மதத்தால் மற்றும்
சாதியெனுங் கொடுமையினால் நசுக்கப் பட்டோர்.

அதிவிரைவில் துயர்நீங்கி இன்பம் காண்பர்!
ஆதலினால் சமதர்மம் தோற்று வீரே!

ஒருசிலரே நாட்டினது செல்வந் தன்னை
உறிஞ்சி மிகக்கொழுக்கின்ற நிலைமை மாறப்
பெருந்துயரில் வருந்துகின்ற கொடுமை யேகச்

சரிசமமாய் மக்களெல்லாம் விளங்கி நாளும்
தன்மான வாழ்வினிலே இன்பங் காண,
அருநெறியாய் விளங்குகின்ற சமதர்மத்தின்
ஆட்சியை இந்நாட்டினிலே தோற்றுவீரே!

(திராவிடநாடு - 07.11.1946)