அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

இவர்களைப் பாருங்கள்

நாட்டின் நாயகரே! நளினிகளே!
வாசமிகு மாடம் கூடம்
வள்ள மலர்ப்பள்ளி நீங்கி
வந்திடுவீர் என்னோடு காட்சி காண!

முன்னோர்கள் செவி வீழ்ந்த
முரட்டுக் கூச்சலது.
காரிருள் சூழ்கானிடையே
குகை மாந்தர் எழுப்பியது,
ஈண்டது போல் எழுந்துளது.
செவி மடுப்பீர்! செந்தேனை!!
கூண்டிலடைபட்ட சிற்றுயிர்கள்
கூவிக்கிடக்கும் கோலம்நீர்
கண்டிடலாம்.
உம்மால் விளைந்திட்ட ஓவியம்
கண்டிடுவீர்!
அங்கோர் உரு எழுப்பும்
ஒலி கேளீர்!

ஆழ்ந்த தூக்கம் குறட்டைச்
சத்தம்
இங்கொரு உறுமல் கேளீர்!
வெறிமிகு விலங்கு போலும்!
அதோ ஓர் ஓலம்! விழித்த
விலங்கின் விம்மல்.
ஆங்கோர் சொறி நோய்ப்
பிராணி தானும்
கிளப்பிடும் 'பிராண்டும்'
சத்தம்!

நாட்டின் நாயகரே! நளினிகளே!

வந்தென்னுடன் காண்பீர் காட்சிதனை!
உம்கைவண்ணம் தந்ததிவை!
உமது மகிழ்ச்சிக்கும் மமதைக்கும்
உற்பத்திப் பீடம் இது!
பவனிவர உம் தேரில்
பிணைத்த பிராணிகள் இவை!
இவர் கொ்ட்டும் குருதியே!
நெய் மணக்கும் விருந்து
உமக்கு!
கண்டிடுவீர் என்று கேட்பேன்!
விண்டிடுவீர்
பண்டுபோல் பரமனவர்
பாரினுக்கு
அழிவேந்தும் வேல்தனையே
அனுப்பி வைத்தால்
என்ன கதியாவீர்! ஏந்தல்களே,
எண்ணிடுவீர்!
கூண்டுடைத்து இவ்
விலங்குகளை
தேவன் விடுவித்தால்
என்னாகும்!
வறியவர்! உம் வீதிஎலாம்
கலக்கிடுவர், அறிவீர், இன்றே!

('சமதர்மமும் சர்வேஸ்வரனும்'
- காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(உருவில் மக்கள்; நிலையில் மாக்கள் என வாழ்வேரைக் காணும்படி நாடாள்வோரை அழைக்கும் புரட்சிக்குரல்)