அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


காடுடையார்

கதிரவனும் புகஅஞ்சிப் பன்னாள்
காணாம லேகிடுவான்
காரிருள் சூழ்கானகம், கற்பாறை
மிகுந்த தஃது,
கரடிபுலி ஓநாய்கள் கடுவன்கள்
பலவும் உண்டு.
காட்டாறு புரண்டோடும், முதலை
ஆட்சி செய்யும்.
கொத்தவரும் பெரும்பறவை
வல்லூறுகட்கும் குறைவு இல்லை.
இக்கொடுமைக் காட்டிற்குள்ளே
மானின் கூட்டம்.
செத்தபடி இருந்தது, எனினும்
மிச்சம் மீதி
இனம்பெருக்கி வந்தது, ஏன்?
இரைதானாக!
அக்காட்டில், தாய்ப்புலிக்கு
அடங்காத குட்டி ஒன்று,
அதன்போக்கில் அங்கிமிங்கும்
அலைந்தபோது,
தந்திரமாய்ப் பிடித்ததனைக்
கொண்டு சென்றான்.
தன்பி்ழைப்புக்கிது நடத்தும்
வேடுவன் தான்

சிறிதுபணம் கொடுத்தோர்
சீமான் அதனை வாங்கிக்
கூண்டமைத்து, மாளிகையில்
வளர்த்து வந்தான்.
ஆண்டுசில அவ்விடத்தில்
இருந்தகுட்டி,
அய்யோ என்றெவரும் அலறும்
வண்ணம்,
ஓங்கி வளர்ந்து ஆங்கு
உறுமிக் கடந்ததுகாண்.

சற்றுத் தொலைவினிலே நின்றபடிச்
சீமானும்,
பாவம், இதன் தாயை மூன்றடியில்
கொண்றுவிட்டேன்.
கதறிக் கிடந்ததிது கண்டு,
கொண்டுவந்தே னென்று
அதரமதின் சிகப்பெல்லாம்
கண்கள் ஏறி,
அலுத்துக் கிடந்திட்ட அழகி
தனக்குச் சொல்வான்.

விலைபேசி முடித்திட்ட வீரய்யன்
அங்கிருந்தான்.
இருந்தா லென்ன? விரும்பிஅவர்
பொய்பேசும் போது
விழுந்தடித்துக் கொண்டுபோய்
உண்மை கூறலாமோ!
அவன்பெறும் ஊதியம், அவர்பொய்யை
மெய்தானென்று
கூசாமல் மகிழ்விக்கக்
கூறுதற்கும் சேர்ந்துத்தானே!
குற்றேவல் பிரிவதனைக் கற்றுத்
தேர்ந்தோன், அறியானோ!
இருக்கும், இருக்கும், இதன்
தாயைக் கொன்றிருப்பார்!
பிடிக்குள் அகப்பட்டார்,
பிழைக்கும் வழிதான் எது?
என எண்ணி இருந்திட்டாள்.
விருத்தளித்தாள்,
அறிவாளன்றோ அவர்
கொண்ட ஆற்றல்.
அணைப்பிலே சிக்கிக்கொண்டு
ஆவி போமும்
எப்படியேனும் தப்பிச் சென்றிட
எண்ணும் தையலர்போல்,
இப்புலியும் எப்படியும் தப்பிடவே
துடித்தபடி இருந்ததுகாண்.

கலைவல்லாள் காட்டிநின்ற
கடைஇடை எழில்தனிலே
கருத்தெல்லாம் செலவிட்டு,
அலுப்புத் தீர,
மதுமாந்தி மல்லாந்து அவன்
வீழ்ந்த அந்தப்போது
குடங்களிலே தளும்பினதைக்
குடித்தனர்காண் காவலர்கள்.
போதைஏறிப் புலிக்குரலைக் குழலெனக்
கொண்டொருவன் ஆடு கின்றான்.
கூண்டிற்கு வெளியே நின்று
கொஞ்சுமொழி தன்னில்,
குமரியே! உடுத்தியுள்ள இந்த ஆடை
என்ன விலை?
பொன்னிழைந்த இப்புடவை
உனக்கேது?
எனக்கேட்டுக் குளறுகிறான்;வேறொருவன்,
மற்றொருவன், இத்தனை பேர்
நாமிங்கு இன்பமாய் இருக்கையிலே
அய்யோ பாவம், இதுமட்டும்
கூண்டினிலே இருத்தல் ஏனோ?
எனக்கூறிக் கூண்டைத்
திறந்துவிட்டான்.

பாய்ந்தோடிச் சென்றது அடவி,
புலியுந்தானே.
வந்ததை இருந்தவைகள் வரவேற்று
உபசரித்துச்
சென்றிருந்த இடத்தின் சிறப்பென்ன?
எனக் கேட்க;
நரர்கள் வாழுமந்த நாடதனைக்
கண்டு விட்டால்
கானகராம் நமக்குத் தலைகவிழும்
வெட்கத்தால்,
என்னநம் ஆற்றல்? ஏதோ வயற்றுக்கு
வழி தேட
மோப்பம் பிடித் தறிந்து, மெல்ல
நடை நடந்து,
இடம் பார்த்துப் பாய்கின்றோம்,
இடறியும் வீழ்கின்றோம்.
எத்தனையோ இன்னல், பிறகே
இரைதனைப் பெறுகின்றோம்.

நான் இருந்த நாடதனில் இவ்வாறா?
இல்லை! இல்லை!
உழைக்காமல் உருசியான
பண்டம் பானமெலாம்
வேணுமட்டு்ம் உட்கொண்டு,
வீணாக்கியும் போடும்
வித்தையினைக் கற்றவர்கள்
மாளிகையில் வீற்றுள்ளார்
உறுமித் தொலைக்கின்றோம்,
பகை, கோபம் காட்டிட நாம்!
சிரித்தபடியே அவர்கள்
சித்ரவதை செயவல்லார்!
பல்லும் நகமும் கொண்டு
பலம் காட்டிக் கொல்கின்றோம்.
சொல்லாலே சாகடிக்க
வல்லாரும் ஆங்குள்ளார்.

பசிதீர உண்ட பின்னர்
படுத்துறங்கிக் கிடக்கின்றோம்.
உண்டு மகிழ்வதுடன், ஊர்க்
குடியைக் கெடுப்பதற்கு,
விழித்துக் கிடக்கின்றார்,
விபரீதம் விளைவிக்க,
சிற்சில வேளைதன்னில்
சச்சரவுக ளிடுகின்றார்.
பெரிதும், பேதம் பகை
மட்டிக் கச்சிதமாய் அழிக்கின்றார்.
அடங்கிக் கிடப்பவரை
ஆர்ப்பாட்டக் காரர்சிலர்,
கொன்றும் போடாமல்
குற்றுயிராய் வைத்துள்ளார்.

குயில்கள் இங்கும் கூவும், நாம்
கூறி அல்ல அன்றோ!
கூண்டுக்கிளி குயிலும் கூப்பி்ட்ட
குரல் கேட்டு,
பாடிக் கிடந்திடு மாங்கு.
காசுக் கட்டளைக் கேற்றபடி
மயிலாடும் துறையொன்று
மாந்தோப் பருகே உளதன்றோ!
தோகை விரித்து மயில்
தொத்தோம் என்றாடுவது
நம்மை மகிழ்விக்க அல்ல,
நாமறிவோம்,
ஆடும் அழகுமயில் ஆங்கு
ஆயிரம் உண்டறிவீர்!
தோகை பளபளப்பு போயினதால்
மெருகேற்றிப்
பாகையுடைச் சீமான் பள்ளி
அறைதன்னில்,
ஆடை நெகிழுமட்டும், அவர்
ஆசை தீருமட்டும்,
ஆடிடுவார், அவர்க்காவல்
எழும் வரையில்"

கேட்ட விலங்கினங்கள், தம்
பெருமை குன்றவைக்கும்
ஆற்றல் படைத்த மாந்தர்
அடவியிலே இல்லாமல்
தொலைநாடு தனிலுள்ளார்.
பிழைத்தோம் என்றெண்ணி,
இரைதேட விரைந்தன, அததன்
முறைதுரைக் கேற்பவே;

நாடேகி வந்த நல்லறிவு
பெற்ற புலி
நாளெல்லாம் மிகப்பலவாய்
எண்ணி எண்ணி
நாதனைக் கூப்பிட்டு நாம்தனைக்
கேட்டிடுவோம்.
உண்மை உயர்ந்த வர்கள்
ஊமையாக என்ன பயன்!
இந்தவிதம் எண்ணமிட்ட
அந்தப் புலியும் ஓர்நாள்
ஏகாந்த இடம் சென்று,
ஏகம்பனை நினைத்து,
வந்ததுகாண் பக்தியுடன்.

பன்னானாய்ச் செய்துவந்த
தவவலிமை தன்னாலே
கயிலைவரை மனம்எட்டிக்
கண்ணுதலோன் மனம்கிளற
புன்னகை செய்தபடிப்

புறப்பட்டான் மழுவேந்தி!
எதிர்வந்து நின்றது இருடபம்
பெம்மான் எழுந்தருள.
நான்போகும் இடந்தனக்கு
நீவருதல் கூடாது
முற்றுந் துறந்தவர் முன்
மேனகை சென்று நிற்க
ஞானம்தவம் துறந்து
ஈனம் புரிந்துவிட்டார்
உனைக்கண்டால், தவமிருக்கும்
உத்தமர்க்கு
உள்ளத்தில் என்னவெறி
மூண்டிடுமோ, யார் கண்டார்?
தவம்புரிந்து அழைப்ப தென்னைக்
கொல்புலி, அதனாலே,
உணவாக வல்லநீ, உறங்கிக்கிட
இங்கு
நான் சென்று வருகின்றேன்.

வேலுண்டு, சூலம்தானு முண்டு.
சிவனாரும் சென்றாங்குக்
காட்சி தந்தார் புலி்க்கே!
மேச்சினேன் உன்தவத்தை!
மேலானது செய்தாய்!
இச்சை என்ன? கூறு!
இக்கணமே தந்திடுவேன்.
வரம்தரவே ஒப்பிஅவர்
வாய்விட்டுச் சொன்னபோது,
தவமிருந்த புலியுந்தான்
தாள்வணங்கிக் கூறிற்று.
மனம் குழம்பி, மகேசா! நான்
மருண்டு கிடக்கின்றேன்.
தெளிவளிக்க தேவரீரால்
இயலுமென்றே அழைத்தேன்,
அரனே! உன் தயவினினால்,
அடியனுக்கோர் குறைவில்லை,
அகன்ற அடவிஇது, உணவுக்குப்
பஞ்சமில்லை.
பதுங்கிடமும் நிரம்ப இங்குப்
பக்குவமும் யாம் அறிவோம்.
நெருங்கி வந்தெம்மைக் கொல்வார்
நெடுந்தொலைவில் உள்ளார்கள்,
அடியேனுக்கு ஆதலினால்,
பொருள் ஏதும் தேவை இல்லை.
பொருள் தெரிந்து கொள்ளுதற்கே
புனிதா! உமை அழைத்தேன்.

பதுஙகிப் பாய்வதும், பற்கள்
கொண்டு தாக்குவதும்,
குருதி குடிப்பதுவும், கொன்று
தின்பதுவும்,
எம்இயல்பு, எமக்கென்றே
ஏற்பட்ட முறையதாகும்.
ஆகவேதான் இருள்சூழ்ந்த
இடம் பெற்றோம்.
உழல்கின்றோம், பணித்தீர்,
உண்மை, மறுக்கவில்லை.
துள்ளிடும புள்ளி மானைத்
துரத்திப் பிடிக்கின்றோம்;
கொன்று தின்கிறோம், தேவை,
அதனால், ஐயா!
எம்மைப்போல் இயல்புள்ள
இங்குள்ள விலங்கினங்கள்,
இளைத்தாலோ, நாங்கள் ஏமாந்து
இருந்தாலோ,
எமைஎதிர்த்துமே கொத்தும்
பிய்த்தும் போடும்,
திடுமென இடிவிழும்;
சாவோம் சிலரும்,
பெருமழையின் வெள்ளத்தில்
மூழ்கிப் போவோம்.
தீக்கிளம்பிச் சிலவேளை எமை
தீய்த்துப் போடும்
பெருமரங்கள் சாய்வதனால்
உண்டாகும் பேராபத்து.
வேடுவரும் கொல்லுவதற்கு
வந்துடுவர் சிலநாளில்.
இத்தனைக்கும் ஒப்பித்தான்
இங்கிருந்து வருகின்றோம்.
இறைமறையை மீறப்போமோ?
என்பதனால், பெய்யாய் ஐயா!

மருண்டவிழி மாதர்களை
அருகிழுத்து
அவர்கதறிட கத்திரிப்
பிடிபோட்டுக்
காமவெறியாளர் கசக்கிப்
போடுகின்றார், கன்னியரை,
கற்பினை அழித்த பின்னர்,
கயவர் கூட்டம்,
நலிகின்றார் சிலபேர்கள்
நடைப்பிணமாய்!
நாரா சந்தனில் சிலரும்
உழலுகின்றார்.
சிலரோ, மான மழிந்தபின்
சாவுவேண்டிக்
கூர்வாளோ, குளம்ஆறோ
கொடுவிஷமோ,
இறுக்கி உயிர்பிரிக்க வல்ல
முழக்கயறோ தேடுகிறார்.
பசிக்காக இரைத்தேடும்
பாவிநாங்கள், பரமனே! கேள்,
ஆங்கே, உருசிக் காகவே
பிரிகின்றார், கொலைகளவு காமம்
அடவியிலா ஐயனே! அவரெலாம்
இருக்கின்றார்?

குருதி குடிப்பது, கொன்று தின்பது,
எதியல்பு, மறுக்க வில்லை.
எம்இயல்பு மாறிட, நன்மை
தீமை உணர்ந்திட,
அறமறிய, அன்பு நெறி அறிய,
பண்பறிந்து ஒழுக.
அறிவுகொளுத்த, நீர்
அனுப்பிய வள்ளுவர்,
நாங்கள் உய்ந்திட காடா வந்தார்!
நாட்டிடை நவின்றார்!!
கருத்திலே துளிர்த்திடும் தீயன
கருகி வீழ,
தக்கன கூறிடும் நூற்களைப்
படிப்பது, காட்டிலா? நாட்டினில்!

கட்டு தி்ட்டம் காத்திட,
அரசு அமைந்த தெங்கே?
நாட்டிலே!
ஐயனே! சென்று வருகின்றீர்,
நல்வழி காட்டிட, அடிக்கடி
அனுப்பி இருக்கின்றீர்
அடியார்கள் பற்பலரை,
இத்தனைக் கனிவு இவர்க்காக!
இத்தனை முயற்சி இவர்பொருட்டு!
இம்மி அளவேனும் எமக்காக
என்றுண்டா? கோபியாதீர்!

எமது இயல்பினை யாம்
தேடிப் பெறவில்லை. வந்தது,
ஆங்கவர்கள் நல்லியல்பு
பெற்றிட பெருமுயற்சி செய்கின்றீர்.
அவரோ, ஐயா! உமைத்
துளியும் மதியாமல்
உணர்ச்சிகள் ஆட்டுவிக்கும்
வழிப்படி எலாம் நடந்து,
ஏழை எளியோர்கள், நோயாளி
கொலையாளி,
விபசாரி, சூதாடி, கள்ளன்,
கட்குடியன்,
காமவெறி பிடித்தோன்,
பொய்யன், புரட்டனெனும்,
பொல்லாத விலங்குகளாய்
ஆகிக்கிடக் கின்றார்!
பூஜைபல செய்கின்றார் என்பதற்கா
புனிதனே! இதை மறந்தாய்!

ஆடகப் பொன்மணி, முத்து,
தருகின்றாய் நீ!
அதில்கொஞ்சம் உனக்கென்று
ஆக்குகின்றார்!
இந்த அபின் அன்புக்கா!
அநீதி வளரவிட்டீர்?

காடெமக்கு, நாடவர்க்கு,
எனுமுறை இனிஇருக்க லாமோ!

ஏதோ, விலங்குகளாய்ப்
பிறந்து விட்டோம்,
கொலைத் தொழிலில்
ஈடுபட்டோம் என்றுணர்ந்து
கூனி நடக்கின்றோம்
கையையும் காலாய்க் கொண்டு.
அவர்கள் தாமோ நிமிர்ந்து
நிற்கின்றார், அச்சமற்று.
என்செய்ய இனிஎண்ணம்
என்றது புலியுந்தானே!

முப்புரம் எரித்த மூர்த்தி
முறுவலையும் இழந்து
கப்பிய கவலை யோடு
செப்பினான் இதனைத்தானே,
புலியே! உன்உணர்ச்சி
உரைண்ணைக் கேட்டேன்,
பொய்யல்ல! மெய்! அதனை
மறுப்பேன் அல்லேன்.
மானிடரின் லோகமது
நீ கூறியபடியே உளது,
எத்தனையோ செய்து பார்த்தேன்;
எதிலும் வெற்றி இல்லை,
தாமாக அழியட்டும், தரம்கெட்டு
எனவிட்டு விட்டேன்.

இனி இதனைச் சற்றே
கேளாய், தவப்புலியே!
நாடுதான் என்வழி
நடவா தெனினும்,

காடாகிலும் என்கட்டளை
கேட்டிடும் என்றே
கருத்திலே களிப்புடன்
கயிலை உள்ளேன்.
இனிக்காடும் எனைக்கைவிடும்
என்றாகி விட்டர்ல்
கடவுள்எனும் நிலை எதற்கு?

கவலை எனக்கதுவே,
கால்த்தின் கோலம் என்றார்
கண்களில் நீர்தளும்ப.
கால்வீழ்ந்து புலியும்

ஆங்குக் கூறி்ற்று.
ஐய! அறிந் துருகு நின்றேன்.
உமதுநிலை! அஞ்சற்க!
தெளிவுபெறக் கேட்டேன்.

உள்ளொன்று புறமென்று
இஃதுயாம் அறியா ஒன்று.
உறுதியாய் உரைநம்பிக்
கயிலை செல்லும்.
இனியும் காடது இருந்திடும்
உம்கட்டளைப் படியே
காசு பணந்தான் இல்லை.
கோயிலில் குளம் அமைக்க!

புலியின் உரை கேட்ட
புனிதனவன் முகமலர்ந்து,
கவலை தீர்த்த கடும்புலியே வாழ்க!
நீடு வாழ்க!
நாடு கைவிடினும், காடுளது,
களிப்புற்றேன் மிகவும் என்றார்!

காடுடைப் பொடிஅலவோ
பூசிடுவது மய்யா!
ஆடையும் எமதினம்
அளித்தது அன்றோ!
சிரித்தார் சிவனார். சிரித்தேன்
நானும்!

தூக்கத்தில் என்னடா இத்தனை
சிரிப்பெனக்
கேட்டு என் அண்ணன் எனைத்
தட்டி எழுப்பினார்.
அத்தனையும் கனவு தானே
ஆயினுமென் சுவைத்தேனே!
பயனும் உண்டே! சிந்தித்தால்!
என்றெண்ணிச் சென்றான்.
பொழுது புலருமுன் எழுந்து சென்ற
பொற்கொடியின்,
விற்புருவம், விழி மலர்கள்,
கனிஇதழைக் காணத்தானே.

(காஞ்சி பொங்கல் மலர், 1965)