அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

காத்திருந்தேன்

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
கஷ்டமெல்லாம் காங்கிரசால் தீருமென்று காத்திருந்தேன்
வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி
வரிகளெல்லாம் கொடுத்துவிட்டேன்.
வாழ்வில்சுகம் வருமென்று ஆவலோடு காத்திருந்தேன்.
வருஷம் பதினைந்துமாச்சு
வந்தசுகம் ஒன்றுமில்லை.
வாடுகிறேன் ஓடாகி, மாடாகநான் உழைத்தும்
கள்ளமார்க்கட் கழுகு கண்டேன்
அவைகதர் உடை போடக்கண்டேன்
கொள்ளை இலாபக்காரர்கூடி, கொடி
பிடிக்கும் காட்சி கண்டேன்.
கரையான் புற்றெடுக்க, கருநாகம் புகுவதுபோல்
காந்திமகான் வளர்த்த கட்சி, கபடர்
குகை ஆகக் கண்டேன்.
கள்ளக் கும்பிடுகள் போட்டுக்
காங்கிரசார் வந்துநின்று,
'ஓட்டு'க் கேட்கிறார்கள் என்னை
ஓட்டாண்டி ஆக்கிவிட்டு!
பட்டதெல்லாம் போதுமய்யா
படமுடியா தினித்துயரம்
பாட்டாளி ஓட்டுஇனி உனக்கில்லை
போ! போ! என்றேன்.
பாடுபடும் தோழர்களே! பாங்காக நாம்வாழ
பாடுபடும் திமுக நம்கட்சி; அதனாலே
பரிந்தளிப்போம் ஓட்டுகளை
உதயசூரியனுக்கே!

(26.11.1961)