அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


கல்கத்தா கலக்கம்
(கல்கத்தாவில் நடந்த, சுபாஷ் பாபு கவிழ்ந்த படலத்தைப் பற்றி
ஒரு காங்கிரஸ்வாதி கலங்கித் தன் மாமனிடம் முறையிடுகின்றார்)

(மானா மதுரையிலே, மாபெரிய கூட்டத்திலே - என்ற மேட்டு)

கல்கத்தா நகரத்திலே, காங்கிரசு கூட்டத்திலே
கல்லடியும் மணணடியும் கண்டதது போதும் போதும்

- மாமா

இந்தக் காலம் இப்ப கெட்டிடவும் போமா.

காந்தியாரின் கருத்துப்படி நடத்திட வேணுமென்ற
கண்மூடி வாயடக்கி கைதூக்கி நின்றனரே - மாமா
இதைக் காலத்தின் கோலமென்ன லாமா?

நாமேநம் 'ஓட்' கொடுத்து நல்லவரென்றே எடுத்து
நமது போசை கவிழ்த்ததாலே நாடுமிக சிரித்திடுதே

- மாமா

இந்த நாசகாலச்செயல் நமக்கும் ஆகுமா?
வங்கத்தின் வீரரென்றும் வாட்போரில் தீரரென்றும்
கொக்கரித்துப பூஜைசெய்து கொண்டாடி வந்தோமே

- மாமா

இந்தக் கோபமும் மனஸ்தாபமும் இப்போ ஆமா?
என்னசெய்தார் ஏதுசெய்தார் எவருக்கவர் தீங்கு செய்தார்
பண்ணிட்ட குற்றந்தான் என்ன பகருமே நீருமிப்போ

- மாமா

இரு பாபம் மிகப்பாபம் அல்ல வாமா?
சமட்டியை ஒழித்திடவே சமர்செய்ய வேணுமென்று
சைன்னியத்தைத் திரட்டிவந்தால் சரியது அல்லவோ

- மாமா

இப்போ ஏங்கறாரே ஏசுறாரே வீண்போமா?
புரட்சிக் கொடி உயர்த்திப் போர் தொடுப்பேனென்று வறிப்
போசும் வெளிக் கிளம்பினாரே பொல்லாத காலமிது

- மாமா

நாம் பூரிப்பு அடைந்திடவும் போமா?

(குடியசது - 28.05.1939)

'ஓட்' - வாக்கு
'போசு' - சுபாஷ் சந்திரபோசு