அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


கதரின் மகிமை

இருப்பூ ராரிடம் குவிந்து விட்ட
கருப்புப் பணத்தின் தொல்லை யினால்
ஏறுது! ஏறுது! விலைமேன் மேலே
ஏழைகள் துடிக்கி றார்புழுப் போலே.

என்ன ஆட்சி இதுஅநி யாயம்!
என்எவ ரும்பேசு கிறார்மனம் நொந்து.
எதிர்ப்புஎங்க ணும்வெடித் திடுது.
இந்நிலை வளர்ந்திடல் என்றும் ஆபத்து.

புறப்படு வீர்போ லீஸ்படை யினரே!
சுறுசுறுப் புடனே பணியாற்றிச்
சூதுக்கோட் டைஎலாம் தூளாக்கிக்
கைப்பற்றிடுவீர் கள்ளப் பணத்தைஎலாம்.

நந்தா போட்டார் இவ்வுத்திரவு
நாங்களோ அதற்கெல்லாம் பொறுப்பு!
கடமை செய்திடப் புறப்பட்டோம்
கொடுமை அழித்திட உறுதிக்கொண்டோம்.

எங்கெங்கும் சென்று பார்த்திடவே
எமக்கிருக் குதுஅதி காரம்.
எம்மைத் தடுப்பது சட்ட விரோதம்.
எடுத்திடும் சாவி! எதற்கு விவாதம்!

அந்தப்பேச்சை காதிலே கேட்ட
ஆறுவிரல் அரிராம் சேட்டும்
அச்சம் துளியும் கொண்டிடவில்லை.
ஆத்திரம் பொங்கிடப் பார்த்தார்.

அதிகாரக்குரல் எழுப்புகின்றீர்.
அறியீர்நீர் எந்தன்பழங்கதை.
அதிகாரத் திமிராட்டமாடிய
ஆங்கில அரசைக் கவிழ்த்தவன்!

சட்டங்கள் பலப்பல உடைத்தவன்,
சபர்மதி வாசம் செய்தவன்.
சத்யாக்கிரகம் பலநடத்தி நடத்தி
காங்கிரஸ் வளர்ந்திடச் செய்தவன்!

வியாபாரம் நான்செய் வதனால்
வெறும்வியாபாரி என்றெனை எண்ணுகிறீர்!
வேண்டாம் உமக்கொரு பாதகம்,
விலகுவீர்! தேசியநெருப்பு நான்!

எந்தன் வார்த்தையை மீறிட
எந்த நந்தாவும் துணிந்திடார்!
வந்திடும் தேர்தல், அன்றுநான்
உழைததிட வேண்டுமே, உறுதியாள்.

கள்ளச்சந்தை! கொள்ளை இலாபம்!
கருப்புப்பண மூட்டைகள்! என்று
கதைத்திடுகின்றார், பதைத்திடு கின்றீர்,
கைநீட்டுகின்றார் தேர்தல் காலந்தன்னில்.

அன்று கொடுத்திட பெரும்பணம் தேவை.
அதற்கே திரட்டிக் குவித்திடு கின்றோம்.
வாத்தை அறுத்தபின் முட்டைகள் ஏது!
வகையற்றது செய்து வாடிட வேண்டாம்.

கதருடை யாளர் இதுபோல் கூறிட
கவலையும் கொண்டார் கணநேரம்
எனினும் துணிவினைத் திரும்பபப் பெற்று
என்கடமை செய்வேன்! வழிவிடு மென்றார்.

கணக்குகள் சிலபல கிடைத்தன;
கட்டித் தங்கமும் கிடைத்தது;
கெட்டிக்காரரிவர் என்ற புகழினைக்
கொட்டினர் களிப்புடன் மக்களும்.

அரிராம் சேட்டின் ஆட்களோ,
அமைச்சர் களைநச் சரித்தனர்,
அவருடன் பகைத்திடல் ஆகுமோ
அளித்தது அரைகோடி இதுவரை.

அமைச்சர்க்காம் பலவித விழாக்களில்
அறுசுவை விருந்துகள் நடத்திட,
அவர் தரும் நன்கொடை ஆயிரம்பல,
அதை நம்பி வாழ்பவர் நாங்களும்.

எதிர்க்கட்சி எலாமிங்கு அடங்கிட
எவரளித்தார் எமக்கிப் பெரும்பலம்?
அவர் இவர்! அதனை நன்கறிந்துமே
ஆவனஉடன் செய்வீர், ஐயனே!

அமைச்சர் கவலை கொள்கின்றார்,
ஆட்களோ தொல்லை தருகின்றார்.
அரிராம் தந்திகள் அடிக்கின்றார்,
அதிகாரியின் அக்ரமம் அறிகஎன.

மண்டலக் காங்கிரஸ் என்மடியினிலே,
மாமன் மைத்துனர் சட்ட மன்றத்திலே,
மந்திரி யோகம் இன்னும் எத்தனைநாள்!
அதைப்பார்த் திடுவேன் நான்எனக் கருவுகிறார்.

இதழ்கள் பாராட்டி வெளியிட்ட
புகழரை படித்ததி காரியுமே
மகிழ்வுடன் இருந்திடு்ம் வேளையிலே,
மாற்றல் உத்தரவு ஐயோ! வந்ததுஆங்கே!

நரஅரிராம் சேட்டின் கணக்குகளை
அரிராம் சேட்டின் கணக்கெனவே
தவறாய்க் கூறினார் அதிகாரிஇவர்
தகுதியில்லை மேலிடம் பெறவே.

தாக்கீது கிளம்பிற்று இதுபோல.
இப்படி யும்ஒரு அதிகாரி
இருப்பது அக்ரமம் எனச்சொல்லி
இடித்து ரைக்கிறார் மேலிடத்தார்.

அரிராம், நரஅரி ராமாக
செலவதி கமில்லை, நாலாயிரமே!
எழுத்தி ரண்டினைச் சேர்த்துவிட்ட
எம்பெருமாள் எனக்குற்ற நண்பன்.

நரஅரி ஒருவரைக் காட்டிடவே.
நாலேநாலு பச்சை நோட்டுகளே!
நம்மிடம் வேலையில் இருப்பவனே!
பதினாலு குழந்தைகள் உள்ளவனே!

மாளிகை பெரிது தானென்றாலும்
மாதம் முப்பது வாடகைதான்.
பாவம்பிழைத்துப் போகட்டும்என
தந்தேன் என்றார்! மறுப்பவர்யார்?

இந்தவிதமாக அந்த அரிராம்
இடர்தனைக் களைந்தெறிந்த பின்னால்,
வந்தனர் மந்திரி ஒருவருமாங்கு
வந்தேமாதர அரங்கு திறந்திட.

தலைமை தாங்குகிறார் அரிராம் சேட்
அமைச்சர் அவர்புகழ் பாடுகிறார்.
புது அதிகாரியு மாங்கு உலாவுகிறார்
கதருடையாரிடம் கனிவு காட்டி.

எப்படியும் நாமிங்கு வெற்றிபெற
இப்போதிருந்தே பணிபுரிய
அரிராம் அவர்கள் முனைந்திடுவார்,
அறிவேன் என்கிறார் மந்திரியார்!

அமைச்சரின பேச்சைனைக் கேட்டபின்னர்,
அரிராம் எழுந்து கூறுகிறார்,
ஆவி உடல்பொருள் அத்தனையும்
அன்னை பாரதிக்கே அர்ப்பணிப்பேன்.

ஆயினும் ஒருசொல் கூறுகிறேன்,
ஆங்கிலர் நாட்களில் அமுல்அதுவும்
அடியோடு மாண்டிட வழிவகுத்து,
ஆட்சி நடத்திட வேண்டுகிறேன்.

சிற்சில இடந்தனில் நடந்திடுது.
இல்லை எனக்கூறத் துணியேன்நான்.
அக்ரமம் நடந்திடும் போதெல்லாம்
எடுத்துரைத்திட வேண்டுமென்றார் அமைச்சர்.

அன்றே ஆங்கே அமைந்ததுகாண்
அக்ரமம் தடுத்திட புதுமந்திரி!
அரிராம் அதற்குத் தலைவரானார்,
அமைச்சரின் வேண்டுகோள் அதனாலே!

அதிகாரிகள் தந்திடும் தொல்லைகளை,
அவரவர் எனக்குடன் அறிவித்தால்,
நீக்கிடும் வழிகளைக் கண்டிடுவேன்,
உமது ஊழியன், அரிராம் நானென்றார்.

இதழ்களில் பார்க்கிறார் இச்செய்தி
கணக்கினை எடுத்த பழம்அதிகாரி
கதருக்குள்ள மகிமையே மகிமை
எனக்கூறிப் பெருமூச் செறிகின்றார்.

(காஞ்சி - 06.09.1964)