அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

குன்றம் பல சென்றிருந்தேன்

சோறு தின்பவர் சோம்பேறி எனச்
சொல்லு கிறார் நேரு பண்டிதரும்;
"ஓட்டு' கேட்கும் காங்கிரசார்
உண்பது என்ன? கேட்டிடுவீர்!

கோட்டை கொத்தளம் கட்டினவர்,
கோபுரம் பலப்பல எழுப்பினவர்,
மாடமாளிகை அமைத்தவர்கள்
சோறு தின்பவர், நம் இனத்தவர்,
சோம்பேறிகளோ, அவர்களெலாம்?

கண்டவர் மெச்சும் காவியமும்,
கண்ணைக் கவரும் ஓவியமும்
வளம்தரும் தொழில்கள் வகை வகையாய்க்
கண்டவர் தமிழர்! சோறுண்டார்!
அவர்தமை ஏசும் காங்கிரசை
ஆதரிப்பது அறமாமோ?

அருந்தமிழ் நாட்டை ஏசுகிறார்
ஆளுங் காங்கிரஸ் கட்சியினர்.
அவர்க்கோ "ஓட்டு!' ஐயயோ!!

"செக்கு' இழுத்த சிதம்பரனார்
வளர்த்த, காங்கிரஸ்
இன்று

செக்கு தரும் சீமானிடம்
பல்லிளிக்குதே!

வெட்கம்! வெட்கம்! என்று காலம்
காரித்துப்புதே!

விலங்கொடித்த வீரர்களே!
விம்மிப் பயன் என்ன!
வீறுகொண்டெழுந்திடுவீர்
மரபு காத்திட!
"உதயசூரியன்' ஒளியை நாடு பெற்றிட!
"ஓட்டு'களை அளித்திடுவீர்
புதுவாழ்வு பெற்றிட!

காத்திருந்தவன் பார்த்த பெண்ணை
நேத்து வந்தவன், கடத்திச் சென்ற
கதையைப் போல, காங்கிரசாட்சியில்
கஷ்டம் தீரும் என்று ஏழை காத்திருக்கையில்,
கள்ள மார்க்கட்காரன் வந்து அடித்தான்
கொள்ளை!! கையைத் தலையில் வைத்தழுதான்
உழைக்கும் ஏழை!
உழைத்தலுத்த உத்தமனே! அழுதது போதும்!
உதிக்குதுனக்காகவே "உதயசூரியன்'
இன்ப ஒளி பெற்றிட நீ வாராய் என்று
அன்புடனே அழைத்திடுது, தி. மு. கழகம்.

புஞ்சை, நஞ்சை ஆச்சென்றார்,
புதுப்புதுப் பாசனம் பார் என்றார்,
விளையுது நெல்லு மலைபோல என
விளம்பரம் பலமாய்ச் செய்திட்டார்,
விளைச்சல் அதிகம் ஆனபின்பு
விலைகள் விஷம்போல் ஏறுவதேன்?
வீட்டைத் தேடிக் காங்கிரசார்
ஓட்டுக் கேட்க வரும்போது
விளக்கம் கேட்பீர், தோழர்களே!
திருவிடம் விடுதலை பெற்றிடவே
தி. மு. கழகம் ஆதரிப்பீர்!
"உதயசூரியன்' உம் சின்னம்
உலகு தழைத்திடச் செய்வதுவும்
"உதயசூரியன்' உணர்ந்திடுவீர்!

எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஏட்டினில்!
இந்தி குட்டக் குனியும் குணக்கேடர்கள் நாட்டினில்!
கடன் பட்ட நாடு காவல் இல்லா வீடு
விழி இழந்தும் வாழலாம்
மொழி அழிந்தால் வாழ்வில்லை.
தட்டிக்கேட்க ஆள் வேண்டாமாம்
தாள்வேண்டாமாம், கதவுக்கு!
உரிமை இழந்த நாடு உயிரற்ற வெறும் கூடு
சாக்காடு மேல் என்று புலம்பும் நிலை
பூக்காடு எனப்புலவோர் மொழிந்த நாட்டில்.
சங்கம் கண்டார், முன்னவர்; தென்னவர்
பங்கப்படுகிறோம், இன்று; அவர், வழி வழி!
வாளும் வேலும், முன்னோர் கரத்தில்
தளையும் வளையும் இன்றுளர் கரத்தில்!
இனத்துக்குள்ள இயல்பினை
எவரே அழிக்கவல்லவர்கள்?

அரிசிச் சோறு கூடாதாம்!
அறிவிக்கிறார் இப்போது.
ஆளக் காங்கிரஸ் வந்திட்டால்
அழியும் நெல்வயல் அறிவீரே.

கோதுமை விளைவது வடநாட்டில்.
கோதுமை சாப்பிடத் தூண்டுகிறார்.
கோதுமை சாப்பிட நாம் முனைந்தால்,
கோடி கோடி பணம் வடக்குக்கு.

ஓட்டுச் சாவடி போகுமுன்பு
ஒரு கணம் இதனை யோசிப்பீர்;
உழவுத் தொழிலைக் காத்திடவே
"உதயசூரியன்' ஆதரிப்பீர்!

அமெரிக்கா தரும் பால் பவுடர்
இலவசம், ஏழைக் குழந்தைகட்கு!
அதுவும் கள்ளமார்க்கட்டு,
வந்து விற்குது! காரணம் யார்?

பிச்சை எடுத்தார் பெருமாளு;
அதைப் பறித்ததாம் அனுமாரு
எனக் கொச்சை மொழியிலே கூறுவரே,
இது அதுபோலத்தானே இருக்கு!

அமெரிக்கத் தூதர் கண்டிக்கிறார்;
ஆளும் காங்கிரஸ் பதில் தருமா?

சிங்களம் ஆளும் சீமாட்டி
சிரீமாவோ கொடுமையினால்
சிறகொடிந்த பறவைகளாய்
சித்திரவதைக்கு ஆளாகிச்
சீரழிகிறார், நம் நாட்டார்.

அம்மாவுக்கு மாம்பழம்
ஐயா கொடுக்கிறார் பரிவோடு.
ஆலாய்ப் பறக்கும் தமிழர்களை,

அடித்து நொறுக்குவது அம்மாதான்!!
ஐயாவுக்குக் கவலை இல்லை, ஆமாம்,
அவர் வடநாடு!!
வதைபடுவது இலங்கையிலே,
வாழ்விழந்த திராவிடராம்.

திராவிடர் வாழப் பாடுபடும்
தி. மு. கழகக் கரம் வலுத்தால்,
தீரும் துயரம் இலங்கையினில்!

இலங்கைத் தமிழர் துயர் துடைக்க,
சிங்கத் திராவிடத் தோழர்களே!
பொங்கி எழுவீர்; வந்திடுவீர்,
பொதுத்தேர்தல் வருகுது விரைவினிலே.

பொல்லாங்கெல்லாம் அழிந்திடவே,
புதுமை வாழ்வு செழித்திடவே,
போட்டியிடுவீர் உம் ஓட்டுகளை
"உதயசூரியன்' அழைக்கின்றான்.

உறங்கும் உலகை எழுப்பிவிடும்
உதயசூரியன்!
உலகு தழைக்க ஒளி தருவது
உதயசூரியன்!
உழைப்பவர்க்கு உரிய சின்னம்
உதயசூரியன்!
உமது வாழ்வு மலரச்செய்வது
உதயசூரியன்!
இருளகற்றி எழிலளிக்கும்
உதயசூரியன்!
இன அரசு விரும்புவோர்க்கு
உதயசூரியன்!
திருவிடத்தின் விடுதலைக்காம்
உதயசூரியன்!
தி. மு. கழக தேர்தல் சின்னம்
உதயசூரியன்!
ஓட்டுப் போட ஏற்ற சின்னம்
உதயசூரியன்!
நாட்டினரே! போற்றிடுவீர்! உதயசூரியன்!

ஞாயிறு போற்றதும் என்று கூறினாரன்றோ,
இந்த ஞாலம் போற்றும் பேரறிஞன், இளங்கோவும்!
அந்த ஞாயிறு இல்லாவிட்டால் ஞாலம் ஏது?

உயிர்களுக்கெல்லாம் உற்ற தோழன்
உதயசூரியன்!
அரும்பை மலரச் செய்பவனும்
உதயசூரியன்!
அனைத்துக்கும் ஒளி ஊட்டுபவன்
உதயசூரியன்!
அகிலம் ஆளும் வலிமை பெற்றோன்
உதயசூரியன்!
பொங்கிவிடும் வளத்தைத் தந்திடுபவனும்
உதயசூரியன்!

(திராவிடநாடு- 23.10.1961)