அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

குறை கேளாய்

கடவுளே! குறைகூற
எனக்கு விருப்பமில்லை.
காரணம் கேட்டிடும் இடம்,
அல்ல, சுரங்கம்.
மழைநீர் தேங்கிடும்
குட்டைகள்
குளிருடன் இருளும்
இருந்திடும் இடம்.

கடவுளே! விண்மீன்கள்
ஒளி தரும் இடம்
கதிரவன் அருகினில்
இருக்கிறான், இதமளிக்கிறான்.
ஒளிமிக்க விண்ணுலகில்
இருக்கின்றீர்!
சுரங்கத்தின் நிலைமை
எப்படி உமக்குப் புரியும்!

பூமிக்கடியில் இருள்
குகையில்
விளக்கொன்று தலையினில்
சுமந்து கொண்டு
ஆழ்குழி இறங்கிடில்!
அலுத்துப் போவீர், நீரும்
ஆமாம்!

இருளன்றி வேறில்லை
ஆங்கே
பொறி அசைவதின்றி
வேறு அசைவு இல்லை
கடவுளே! எமது அன்பு
பெற நீர் விருமபிடின்
கைப்பிடி விண்மீன்
வீசுவீர் இங்கு!

(காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(கடவுளை நிந்திக்கிறானே கயவன் என்று எவரும் கூறிட இயலாத முறையில், நகைச்சுவை கலந்து, முறையீட்டினை வெளியிடுகிறார் லூயி உன்டர்மேயர் எனும் அமெரிக்கக் கவிஞர், 1885 - ஆம் ஆண்டு பிறந்தவர். நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி முறையீடாக அமைகிறது)