அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


நானே தலைவன்
(கவிதை அல்ல: ஆக்கிக் கொள்ளலாம்)

"எட்டாம் என்றி" என்றோர் மன்னன்
இருந்தனன் முன்னம்.
எழிலுடை நாடாம்; இங்கிலாந் ததனில்;

முன்னவன் பெண்டாய்க் கொண்டவள் தானும்,
விதவைக்கோலம் பெற்றபாலை, தானே மணந்தான்;
அத் தையலைத்தானே, போப்பின் தயவால்!

காதரைன் என்னும் அப்பெருமாட்டி
அரசி யானாள்; அழகுதா னில்லை.

அரசன் வனப்பு மிக்கோ னோஎனில்
ஆடவன், ஆகவே கேள்வி எழாதென,
அறைகுவர் பல்லோர், அறிவீர், நீவீர்!

காதரை னோடு வாழ்ந்த போது,
கடும்புயல், கர்த்தர் மார்க்கத் துறையில்
போப்பின் ஆட்சி புனிதம் மாய்க்கும்,
தீக்கிரை யாக்கும் திருமறை தனையும்
என்றே எழுந்து புரட்சி செய்தனர்
புராடெஸ் டண்டு பிரிவினர் எங்கும்.

மன்னன் மகேசன் மிம்பம் அன்றோ!
மதமும் அதனை மொழிந்தது, அறிவீர்.
எனவே மன்னன் 'என்றியும்' தனது,
மதபக் தியினை மாந்தர் அறிந்திட,
வரைமுறை காக்கும் வன்க ணாளரால்,
திருமறை காக்கும் போப்பாண் டவரும்
தீண்டப் படுதல் தீதெனக் கூறி,
தீட்டினன் ஓர் நூல்!
சூட்டினர் பட்டம்.
மார்க்கம் காத்த மாண்பினன் என்று!

அரசுகள் சிற்சில அமளிகள் மூட்டி.
ஆகா நெறியினில் வேகமாய் நுழைந்து,
'அழியும்' வேளை!

இங்கி லாந்தின் ஏற்புடை மன்னன்,
எமக்கரணாக இருத்தரைக் கண்டோம்.
இறைவன் இன்னருள் இவர்க்குண்டு, இதனை
எடுத்தி யம்பினோம், அறிக என்று
ஆண்டவ ராக அவனியில் உள்ள
போப்பும் உரைத்தார், பூபதி மகிழ்ந்தான்.

மாசுகள் குவிந்தே மாண்புகள் கெட்டன.
மதத்தில் பற்பல கேடுகள் சேர்ந்தன.

திருந்தினால் மட்டுமே திருவருள் கிட்டும்.
இல்லையேல், ஆங்குத்
தீயவர் கொட்டமும், பேதையர் கூட்டமும்
நிரம்பித் திருச்சபை பாழாய்ப் போகும்.
என்றெலாம் கூறினர் புதுமுறை விழைவோர்.
பழமைக் கோலம் பெற்றத னாலே,
பரமன் அருளிய மாமதம் தனையே,
மாற்றிட முனைவது மாந்தர்க்கு அடுக்குமோ?
செச்சே! இஃது சாத்தான் செயலே!
சீலர்கள் இதனை ஏற்கார் என்று,
செப்பிய மன்னன்,
முன்புஒப்பி மணந்த காதரைன் அம்மை
கவர்ச்சி யற்று, முதுமையும் பெற்று,
இருந்திடக் கண்டு,
பெற்றாள் பெண்ணை, பிள்ளையைக் காணோம்.
பெறுவதும் ஏது இவளுடன் கூடி,
அண்ணனுக் கன்றோ வாய்த்தாள் பெண்டாய்,
அவளைக் கொண்டது, அநீதி, பாபம்
எனவே இவளை 'விலக்கி விட்டு'
என்மனத் தூய்மையைப் புதுப்பித் திடவே
எண்ணினேன்
அதற்கு அனுமதி அருளும்,
ஆண்டவனாக அவனியில் உள்ள
போப்பாண்ட வரே!
புனிதரே என்று
மன்னவன் கேட்டான்.
மண்டியிட்டுமே!

கேட்பவன் காவலன் அறிவார் போப்பும்.
மகிழச் செய்தான் ஏடும் தீட்டி,
மதத்தைக் காத்திட முனைந்து நிற்பவன்,
எனினும்
காதரைனோ, அரசகுமாரி!
ஸ்பெயின்எனும் நாட்டின் மன்னன் மகளாம்!
அவள்மணம் ஆகம விதிப்படி இல்லை,
விலக்கிட அனுமதி தந்தேன் என்று,
போப்பும் கூறிடத் துணியின், என்னவாம்?
எதிர்ப்புக் கிளம்பும் ஸ்பெயினெனும் நாட்டில்,
ஸ்பெயினோ, அன்று பார்புகழ் நாடு!!

இந்நிலை தன்னால் இடுக்கண் கண்டு,
போப்பும் பற்பல சாக்குகள் கூறிக்
காலங் கடத்தி வந்தார், பன்னாள்.
பார்த்தனன் மன்னன்.
வெகுண்டனன் மிகவும்.

காத ரைனைக் கண்ட உடனே
காவலன் இத்துணை கோபம் கொண்டது
கடிமணம் கர்த்தரின் அருள்கெடுத் திடுமோ?
என்பத னாலே மூண்டு முகி்ழ்ந்த,
கலக்க மதனால் அல்லவே அல்ல!
அரசியின் தோற்றம் அருவருப் பானது.
அஃதும் உண்மையில் பாதி மட்டுந்தான்!
மற்றப் பாதி, மன்னன் மனையில்
மலர்முகம் காட்டி, மதிமயக் கிற்றே!

அரசிக் குரிய அலுவலைப் பார்க்கும்
ஆரணங் குகளி்ல் ஒருத்தி உண்டு.
ஆன்போலீன் என்பது அவள்பெய ராகும்:
பார்த்திபன் மனைவி நேர்த்தியாய் வாழ்ந்திட
பணிவிடை செய்து, இருந்தனள், அவளும்.

காடிக் கருகில் கனிரசம் போல!
இருளுக் கருகில் குளிர்நில வெனவே!
மங்கை இருந்தாள், மன்னன் கண்டான்.

இனிமை இங்கே இருந்திட, நானும்
முதுமை யுடனே வாழ்வதோ இனியும்?
விலக்கியே விடுவேன் விம்மிடும் பெண்டினை!
கடிமணம் கொள்வேன் காரிகை தனையே,
என்பதே,
மன்னன் எண்ணம், திட்டம்.

அனுமதி அருள ஆகா தென்று,
போப்பாண் டவரும் உரைத்தார் துணிந்து.
அரசன் மனமோ, ஆன்பொ லீனிடம்
ஆகமம் காட்டிக் காதரைன் தனையே,
விலக்கிட வழியோ, ரோம்தர வில்லை!
இந்நிலை கண்டான் மன்னன், சொன்னான்.

எதற்கெடுத் தாலும் அவர் அருள் கேட்பது
ஏற்புடைச் செயலென எவரே கூறுவர்?
மார்க்கக் காவலர் என்பது உண்மை.
மார்க்கம் காத்திட இயலவோ இல்லை.
அவருடைய ஆட்சியில் ஊழல்கள் அனந்தம்.
அதனை மறைப்பது ஆகா தன்றோ!
ஏன் அவர் ஆணை, இனியும் இங்கே?
நம்முடை நாட்டில் புதுமுறை நிலவும்!
புராடெஸ் டெண்டு மார்க்கம் புகுவோம்!

கொள்வீர்! ரோமைத் தள்ளுவீர் உடனே!
புகன்றான் மன்னன் புகுந்தது சட்டம்.

அம்முறைப் படியே புதுநெறி வந்தது:
புனிதம் என்றனர். போற்றினர் பல்லோர்.
புதைந்து கிடந்த உண்மையோ, வேறு!
புதுமலர் கொய்திட பூபதி தனக்கு,
அனுமதி கிடைத்திட வில்லை. ஆதனால்,
அனுமதி அளிக்கும் நிலையைத்
தமக்கே உரிமை ஆக்கிக் கொண்டான், என்றி.

மன்னன் 'மஞ்சம்' தந்த சிக்கல்
மதமுறை தன்னில் மாற்றம் தந்தது.
மார்க்கம் காத்தவன் என்பதோ பட்டம்!
புதுநெறி புகுந்தான்; போப்பைத் தவிர்த்தான்.
போனாள் காதரைன்! வந்தாள் ஆன்போலீன்.
தித்திப்பு இதற்கு மேலும் உண்டோ!

மன்னன் மார்க்கம் மாறிய காரணம்,
மார்க்கம் அல்ல 'மாதுஉளம்' அறிவோம்!
மறைத்திட இயலா உண்மை இஃது.
எனினும் பல்லோர்.
எட்டாம் என்றி காட்டிய துணிவால்,
எழுந்தது புதுமுறை இங்கிலாந்தில்
என்று கூறினர், ஏற்றதிவ் வுலகு!

அஃதே போல, பாரினிற் சிற்சிலர்.
கொள்கை மாற்றிடல், கோலம் மாற்றிடல்,
கொள்கையால் என்று கூறிடப் போமோ!
வேறு காரணம் இருந்தி டாவோ!!

எழிலுடைப் பொழிலும், குளிர்தரு, நிலவும்,
கோலமா மயிலும் கொஞ்சிடும் கிள்ளையும்,
இன்ன பிறவும், வெறுத்தனன் வேம்பென,
எனக்கேன் இவையெலாம் என்று ரைப்பது,
ஆங்கவை எல்லாம் கெட்டன ஆயின,
என்பதனாலா?

கேட்டது கிட்டிட வில்லை என்றால்,
தொட்டதி லெல்லாம் குற்றம் காணுதல்,
தொன்று தொட்டுள்ள இயல்பே யன்றோ!

மார்க்கம் காத்திடும் மாமுனி என்று
முன்னம் போப்பினைத் தொழுதீர்! இன்றோ?

அவருடைய ஆணை ஆகா தென்பது
ஏனோ என்று 'என்றி'யைக் கேட்டால்
ஏது கூறுவான்?

அன்று சொன்னேன் அறியாத் தனத்தால்,
இன்று அறிந்தேன் அறியதோர் உண்மை,
என்பா னன்றோ!!

ஆன்பொலீனா அவ்வுண்மையின் பெயரெனக் கேட்பவர், உண்டோ?
கேட்டிடின் அவர்தலை, உருளும் அன்றோ?
அன்றும் அரசன்! இன்றும் அரசன்!
உரைத்திடு வதனை மறுத்திட வல்லார்
உண்டோ? என்றே உறுமி நிற்பான்!

ஆகவே அருமைத் தோழர்காள்! நீவிர்.
ஆகா தினிமேல் இன்பத் திராவிடம்
கானல் நீர் அது! கதைக்குத வாது!!
என்றெவர் மொழியினும்,
காரணம் கேட்டிடக் கிளம்பு வீராயின்,
கடுமொழி கிளம்பும் காட்டு முறையில்,
கொற்றவன் கொள்ளும் கோல மதற்கு
காரணம் காட்டிட வேண்டுமோ? இல்லை!

அதுதான், இங்கும்!
திராவிடம், இன்பம் என்பேன் ஓர்நாள்!
அதனை மறுத்து உரைப்பேன், மறுநாள்!
கேட்டு நடந்திடக் கூட்டம் உண்டு.
நானேதலைவன்! நானே தலைவன்!!
என்றுரைத்திடுவார், இம்மியும் கூசார்!
அன்னவர் காட்டும் வழிதனில் செல்வோர்.
அடிமைக ளாகி அவதியே காண்பர்,
அவனியில் இதற்கு ஆயிரம் சான்று.
அறிந்து நடமின்!
தெரிந்து ரைக்கின்றேன்!!

(04.06.1961)
(ஈ.வெ.கி. சம்பத், தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றபோது, அவரது கொள்கையற்ற இயல்பை விளக்கி வரைந்து அங்கத ஓவியம் இது)