அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

நீங்கள் படைத்த ஏழை!

கால மெல்லாம் கடும் உழைப்பு
அவன் கூனிக் கிடக்கிறான்.
கட்டாந்தரையை நோக்குகிறான்,
மண்வெட்டி மீது சாய்கிறான்,
காலதேவன் கீறிவிட்ட
கோடுகள் - முகத்தில்,
முதுகினிலே பெரிய சுமை
உலகம் ஏற்றி வைத்தது,
மகிழ்ச்சி மாய்ந்து விட்டது
நம்பிக்கை தீய்ந்து விட்டது.
அவனுக்கு அக்கதிவரச்
செய்தவர் யார்?

திகைத்துக் கிடக்கிறான்
சிந்தனையற்று.
எருதுக்கு இவனும்
உடன் பிறப்பாளனோ!
அவன் புருவத்தைக்
கவலைக் கோடு ஆக்கிய
கைதான், யார்கை?
அவன் சிந்தனை விளக்கினை
அணைத்தது எவரின் மூச்சு?

நீராடும் கடலுடுத்த
நிலமிசை அரசாள
விண்மீனின் ஒளிகாண
விண்ணைக் காண
நித்தியத் தன்மையினை
உணரும் நேர்த்தி பெற
வல்லவன் படைத்தது
இந்த உருவையா?

கதிரவன், அதன் வழியைக்
கணித்தவன்
கண்டதும் இக்கனவா!
இதனினும் பயங்கரம்
இல்லை, வேறோருருவம்.
உலகிலுள பேரரசைக்
குருட்டறிவைக் கண்டிக்கும்
பேசா உருவம் இது!

ஆத்மா அழிவதனை
அறியச் செய்யும்
குறிதாங்கி
இவனே காண்!

பாரினுக்குப் பேராபத்து
அளித்திட வல்லதிது.
வேறி்ல்லை!!
அவனுக்கும் நிம்மதிக்கும்
வேதவேதாந்தம், அவன்
அறிவானா?

இசைதரும் இனிமை
அவன் நுகர்வானா?
பகலவன் விரித்திடும்
பொன்னிறக் கதிரும்
காற்றினில் மிதந்திடும்
மலர்தரு மணமும்
எதனை அவன் அறிவான்?
எங்ஙனம் அறிவான்?

குனிந்து கிடக்கிறான்
குவலயம் இழைத்த
கொடுமைதனைத் தாங்கி!

மனிதத் தன்மையை
மாய்த்தனர் காணீர்!
உடைமை பறித்தனர்
உரிமை அழித்தனர்
காணீர்! கேளீர்!
வருவது அறிவீர்!
நீதி தேவர்காள்! நெஞ்சினில்
கொள்வீர்!
என்று இயம்பிடும்
பேசா உருவம்
மண்ணைக் கொத்திடும
உழவன்! உணர்வீர்!

பற்பல நாட்டினிலே
பட்டயம் பெற்ற
மேட்டுக் குடியினரே!
மேலோரே! கோலோரே!
உருகி, உடல்கருகி,
உள்ளம் வெந்த
இவ்வுருவம் தானோ
நீர் அளிக்கும் காணிக்கை,
சொல்வீர் இறைவனுக்கே?

நெஞ்சை நிமிர்த்தி இவன்
நேர்த்தியாய் நடைபோட
வழி உண்டோ? செய
வல்லீரோ?
ஒளி நிறைக் கண்ணினைத்
தந்திட இயலுமோ?
ஆசைக் கனவுகள்
தவழ்ந்திடும் நிலையினை
அவனுக் களித்திட
ஆகுமோ உம்மால்!
காலமெல்லாம் நீர் இழைத்த
கேடதனைத் துடைத்து
நீதி வழங்கிட இயலுமோ
உம்மால்?
மேலோரே! கோலோரே!
கூறும் விடை தான்.

எதிர்காலம் எந்நிலைக்கு
இவனைக் கொண்டு செலும்?
உலகை நோக்கி
ஊழிபோல் பெரும் புரட்சி
வெடித்திடும் புது நாளில்
இடியென இவன் எழுப்பும்
வினாதனக்கு
ஏதுபதிலிறுப்பீர்? எங்ஙனம்?
எங்ஙனம்?

இந்த உருவினை
இவனக்களித்திட்ட
அரசும் அரசரும்
அந்நாள் தன்னில்
எந்நிலை பெறுதல் இயல்பு
எனக்கூறீர்!
பேசாது கொடுமையினைப்
பலகாலும் விட்டு வைத்த
பெம்மான் முன்னே
இப்பேசாப் பயங்கரம்
பேசிடும்!
விடை அளிக்க
அறியீர்! ஐயோ!

('சமதர்மமும் சர்வேஸ்வரனும்'
- காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(உருவில் மக்கள்; நிலையில் மாக்கள் என வாழ்வேரைக் காணும்படி நாடாள்வோரை அழைக்கும் புரட்சிக்குரல்)