அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


நிறவெறியர் விரும்புவது

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில்
அடக்கு முறையினால் அவதிபட்டோர்,
உரிமைவாழ்வை நாடிப்பெற்றிட
உறுதிகொண்டார், கடல்கடந்தனர்.

அமெரிக் காஎனும் அகன்ற பூபாகம்,
அளித்தது அவர்கட்கு அரிய வாழ்விடம்
ஆண்டவன் அருள் என அகமிக மகிழ்ந்து
அங்கு வாழ்ந்தனர், வளம்பல கண்டு.

மதசுதந் திரமும்மாண் புள்ள உரிமையும்,
பெற்றோம் இங்கெனப் பெருமிதம் கொண்டனர்
கற்ற றிவாளர் களித்தனர் மிகவும்
காடு நாடாகிட உழைத்தது கண்டு.

பெரும்பெரும் பண்ணைகள் கண்டனர் ஆங்கு!
பருத்தியும் கரும்பும் பாங்காய் விளைந்திட
பெருத்தது செல்வம் கருத்தது மனமும்
செல்வம் செருக்கினைத் தந்தது மிகவும்,
சீலம் மறைந்தது காலம் மாறிடவே.

பருத்திக் காடதில் உழைத்திடக் கூலிகள்
மலிவாய்ப் பெற்றிட எண்ணினர் உடையார்.
மக்களை மாக்களாய் எண்ணிய கொடியோர்,
வேட்டை யாடியே பிடித்தனர் மக்களை,
ஆப்பிரிக்க நாடதில் வாழ்ந்தஆண் டவன் அளித்த
மக்களைப் பிடித்து, அடிமைகளென்று
சந்தையில் விற்றார்!
அக்ர மத்தினைத்
தொழிலாய்க் கொண்டார்.

கருப்பர் கூட்டம்
பெருகிடப் பெருகிட,
வெள்ளையர் வெறியர்
ஆகினர் அங்கு!
ஆடவர் எமக்கு
அடிமை களாயினர்!
அவருடைப் பெண்டிரும்
எமக்குப் பொருளே!
கட்டுடல் கொண்ட
கருப்பி லழகியர்
காம வெறியர்க்கே
கரும்பாகுவர்!

கற்பெனப் படுவது
வெள்ளையர்க் கன்றோ!

கருப்பர், அடிமைகள்
கர்த்தர் அருளினார்!!
கைகால் பிடித்திட,
கடினமாய் உழைத்திட,
கொடுத்ததைப் பெற்றிட,
அடங்கி நடந்திட,
ஆண்டவன் விதித்தான்
அவர்க்குக் கட்டணை,
மனித உருவே எனினும் விலங்கே!
அறிவு அற்றவர்
ஆக்பிரிக் கரிவர்!
ஆணவ மிகுந்து
மொழிந்தனர் இதுபோல்.
ஆவி சோர்ந்திட
உழைத்தனர் கருப்பர்,
பொன்னி ளைத்திடும்
பூமி யாகியே
பொலிவு பெற்றது
புதியதோர் தேசம்.

கன்னியர் தம்மை
எதிரில் நிறுத்திக்
காணுக கட்டுடல்,
காணுக கவர்ச்சி.
களைப்பு மேலிடும்
இளைத்தவன் அல்ல,
காசு இல்லை அதிகமாகப்
பாசமலர் இவள்பாரீ ரென்றார்!

அங்கம் தனிலே
இளமை பொங்கிடும்
அடிமை இவளும்
வேண்டுமோ உமக்கு!
எனக்கூவி விற்பர்
சந்தை களிலேதான்!

எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
எவரிடமோ சிக்கி,
அடிமை களாகி,
இங்கிவர் இதயம்
புண்மிக ஆகி,
உழைத்து உழைத்து
உருக்குலை கின்றார்.
உருட்டு கின்றார்
ஜெபமாலைகள் தன்னை,
பாதிரிமார்கள்புது
ஆலயந் தன்னில்.

என்மகள் ஐயா!
என்றுஏங்குவான் தந்தை!
தந்தை மகள்எனல்
மாந்தர் வாடிக்கை,
மிருகமே! இதுஉன்
குட்டி! வேறென்ன!
அடிமைக் கேது
உரிமைப் பேச்சு!
அறைகுவார் ஆணவத்
துரைமார் ஆங்கு.

பற்பல கொடுமைகள்
பாவிகள் செய்திட
பதைத்தனர் ஆங்குப்
பராரியாய்க் கருப்பர்!

உடைகளை அணிந்தால்
உடல் மறையுது;
உடல் மறைந்தால்
உன்னதம் குறையுது;
ஆகவே அடிமையே!
ஆடை களைந்திடு!
ஆண்டை அதுபோல்
கட்டளை யிட்டால்
மீறிடல் ஆகுமோ,
மீறினோர் பிழைப்பரோ!

கொடுமை யிலிருந்து
தப்பித் திடவே
ஓடுவர் காடுகள்
நோக்கியும் அடிமைகள்.
வேட்டை நாய்களை,
ஏவுவர் வெறியர்!
பிடிபடும் அடிமை
பிணமாகிட
கசையடி தருவர்,
துக்கிலு மிடுவர்,
சட்டம் குறுக்கிட
வழியும் இல்லை,
அடிமை, பொருளே!
உடையார், விருப்பம்!!
ஆண்டவன் கேளார்.
ஆலயம் இருந்தார்.
ஆலயம் அமைத்தவர்
அடிமைக் கெஜமான்!

இந்தவித மானதொரு
நொந்தநிலை பெற்றவரை,
சிந்தை யிலேஅறம்
கொண்ட
செயல்வீரர் லிங்கன்
அவர்
விடுவித்தார், துணிவாக
வீணரை வீழ்த்தியுமே.

அடிமைக ளாகின்ற
அக்ரமம் இன்றில்லை!
பிடித்துச் சந்தையில்
நிறுத்திடுவார் இல்லை!
கருப்பரும் மனிதர்களே!
பொருளல்ல! இதுசட்டம்!

இந்தச் சட்டமதை
பெற்றளித்தார் லிங்கன்
என்றாலும், பேயுள்ளம்
போகவில்லை அங்குக்
கருப்பர் வெள்ளையர்
என்ற நிறபேதம்
வெறியாக மாறிஅங்கு
விபரீதம் விளைய,
வெள்ளையர் பிடிவாதம்
செய்கின்றார். துணிவாய்
என்னஇது மதியீனம்!
எனக்கேட்ட வீரன்
கென்னடியும் வீழ்ந்துபட்டான்.
கொலை பாதகத்தால்!
அன்னவரின் ஆன்மா
அமைதி பெற்றிடவே,
அளித்திடு வோம்சம
உரிமை, இனிக் கருப்பருக்கே
என்றுஅரசு கூறிற்று;
சட்டமது கொண்டு.

சட்டத்தைச் சாய்த்திடவே
சண்டாளத் தனமாய்
புரிகின்றார் கொடுமைபல
வெறிகொண்டார் ஆங்கு.
வெறிகொண்டார் மனக்
கண்முன் தோன்றுவது யாது?
எதிர்நிற்கும் கன்னி
அடிமைப் பெண்ணாள்தான்!
அந்தமுறை மீண்டும்வர
ஆவல் கொண்டுள்ளார்!

அறமல்ல நெறியல்ல
என்றால், அடங்கிடவு மாட்டார்
ஆதலினால் ஆற்றலுடன்
கிளம்பிவிட்டார் கருப்பர்!
அடிக்குஅடி, உதைக்குஉதை
என்றமுறை காட்ட,
அமளிகள் மூண்டிடுது
அமெரிக்கா தன்னில்!
ஆயினும் அதனாலே
அழி்ப்போம் கொடுமைஎன்றே
அறைகின்றார் நீக்ரோக்கள்
அவனி வாழ்த்திடவே!

(காஞ்சி - 27.09.1964)
(இதன் விளக்கமே, 1966-ல் அண்ணா தந்த 'வெள்ளை மாளிகையில்' எனும் மடல் வடிவப் புதினம்)