அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

ஒரே நிலவு!

(புரட்சிக்கவிஞர் புதுக்கவிதைக்கு இலக்கணம் காண்கிறார் அண்ணா.
புரட்சிக்கவியின் மணிவிழா மலரில், 29.04.1951. கவிஞர் பிறந்தநாள் - 29.04.1891)


கணநேர ஒலி! கை தட்டல்!
கேலிச்சிரிப்பு, கிண்டல், கண்டனம்
மந்தைகள் ஊளை, மடையர்தம் தீர்ப்பு
மனதை வளைக்கா, 'மன்னன்' அவன்

இதயங்கள் குவிக்கும் எழுச்சி வாழ்த்து
இறக்காத புகழ், எட்டாத செல்வாக்கு
மக்களின் மறையாத அன்பு,
இதுவே, அவனுக்கு, மணிமுடி!
கவிதைக்குக் காசு, நினைப்புக்குப் பரிசு
வெற்றிக்கு விருது, புகழ்ப் படையல்
'கூலிக்குப் பாட்டு-ஆகட்டும் தா!' என்ற
அரசின் ஆணை; அவனுக்கோர் தூசு!

எண்ணம் துடிக்கும் - அவன் இதயம், பாடும்!
கனவுகள் வெடிக்கும் கவிதைகள் மலரும்!
கண்ணீர் வடிக்கும் சொல்நீர் சுரக்கும்,
துந்துபி கிளம்பும்! துயரங்கள் நீங்கும்!
தொல்லை! ஏழ்மை! இல்லாமை!
எல்லாம் ஒழிய, எழுப்புவான் கீதம்.

- புஷ்கின்

கவிஞன் ஓர் காலக் கண்ணாடி -
பழைமைச் சாயலின் பிரதி பலிப்பல்ல!
உள்ளத்தில் ஆவேசம், உணர்ச்சியில் 'புயல்'
எழுப்பிடும் அவனது இதய கீதம்.

எதுகை, மோனை, எழில்தரும் உவமை,
வசீகர வர்ணனை - பழமைக்கு மெருகு
இத்தனையும் தேடி, எங்கெங்கோ ஓடி
'வார்த்தை முடையும்' வலைஞன், அல்ல!

- வால்ட் விட்மன்

உயர்ந்த உள்ளங்களின் உன்னத நேரங்கள்!
வடித்துக் காட்டும் வரலாற்றுத் துளிகள்
அவையே கவிதை, அதுவே வாழ்வின் நூல்!

- ஷெல்லி

உன்னத எண்ணம், உயர்ந்த உணர்ச்சி
எழுப்பிக் காட்டும இனிய சங்கீதம்
அதுவே கவிதை

- வால்டேர்

(திராவிடநாடு - 29.04.1951)