அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

பேசுகிறார் ஏசுபிரான்

சென்று நான் காண்பேன்
மாந்தரை, உடன் பிறப்பாளரை
என்னிடம் அவர் கொளும்
நம்பிக்கை எவ்விதம் உளதெனக்
கண்டிடச் செல்வேன்
என்றுரைத்தார் ஏசு.
பிறவிப் பெருங்கடல்
புகுந்தாரில்லை.
வந்தனன்! என்றே
வையத் தோர்க்கு
அறிவித்தார் ஏசு.
வந்தார் அதுபோல்!

ஆலயத் ததிபரும்
அரசாளுநரும்
ஆங்கது கண்டு
அறைந்தனர் இதுபோல்;
சகலமும் அருளியோன்
பிரசன்னமாகிறான்.
எல்லாம் வல்லவன்,
எவரினும் பெரியோன்,
எதிர்கொண்டழைப் போய்
ஏற்புடை முறையில்,
ஆணிப் பொன்னாலான
அழகு விரிப்பமைத்தார் காண்!
ஈடில்லா எழில் மேவும்
மாடங்கள், கூடங்கள்
அவர் தங்கத் தந்திட்டார்.
மாமன்னரைக் களித்திடும்
வைபவம், விருந்தளித்தார்!
மகிழ்வார் ஏசு என்று.

அலங்கார வளைவுகள்
ஆனந்த கீதம்
ஐயன் புகழ்பாட
இசைவாணர் கூட்டம்
ஆலயத்தின் அரண்மணையில்
நீதி மன்றத்தன்னில்
எடுப்பாக அமைத்தார்கள்
ஏசுவின் திரு உருவம்.

எனினும் எங்கெங்கு
நாதனை
அவர் அழைத்துச்
செலினும்
துக்கம் மிகக் கொண்டு
சிரம் தாழ்த்தி
நடந்தார் ஏசுபிரான்
நடுக்குற்றார் மிகவும்.

இத்தனை அமைப்புகளின்
அடித்தளத்திலிருந்து
மேரி மகனார் செவியில்
வீழ்ந்ததோ விம்மல்!
ஆலயத்தில், அரண்மனையில்
நீதி மன்றந்தன்னில்
வெடிப்புகள் பலகண்டார்,
சுவர்களிலே, ஏசு
அடித்தளமாய் அமைந்த
மாந்தர் பெருமூச்சு
பெரியதாக்கிடுதலையும் கண்டார்.

மாந்தரின் உடல்மீதும்
ஆத்மாவின் மீதும்
ஆலயமும் அரண்மனையும்
அமைத்தீரோ! ஐயா,
செல்வரைச் சீராட்டி
ஏழையரை வாட்டும்
அநியாய அமைப்புகளும்
நிலைத்திடுமோ கூறீர்!
வெள்ளி வாயிற்படிக்குத்
தங்கக் கம்பிகளிட்டுத்
தந்தையின் மந்தையினைப்
போட்டடைத்தீர், நீவிர்!
மந்தையினர் சிந்திடும
கண்ணீர்ச் சத்தம்
கேட்டுவருகின்றேன் நான்,
ஆயிரத்துத் தொண்ணுறு
ஆண்டுகளுக்குப் பிறகு!

கூனிக்குறுகிப் போன
குடிமகன், ஓர் பாட்டானி,
தாயற்ற தையல், கதியற்றாள்,
காமக்குழி வீழ்ந்த காரிகை,
இவர் போன்றாரைக் காட்டி,
எனை ஏத்தும் போக்கினரே,
நீர்சமைத்த இவ் உருவத்
தினைக் காணீர் என்றுருகிச் சொன்னார்
பாவம் படருமெனப்
பதைத்தவரும்
பட்டுடையைத்
தொட்டிழுத்துக் கொண்டார்.
தீட்டாகா வண்ணம்!

('சமதர்மமும் சர்வேஸ்வரனும்'
- காஞ்சி ஆண்டு மலர் - 1965)


(ஜேம்ஸ்ரசல் லோவெல் ஏசுநாதரைப் பேசவைக்கும் கவிதையின் கருத்தாக்கம்)