அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


பறந்தது ஓர் புறா!
புறாவே! புறாவே! புதுத்திறப் புறாவே!
பூசுரத் தலைவனைக் காணவோ செல்கிறாய்?
செல்லும் உன்னிடம் செப்புவேன் ஓர் மொழி
செத்த பாம்பினை ஆட்டிடு வோரை
செல்லரிச் சுவடியைத் தாங்கி நிற்போரை
வெறுத்திடும் தமிழரின் வீரம் புகலுவாய்!
வேதியர் தலைவன், பாதி அம்மதியன்,
கேளாக் காதினன், என்றெல்லாம் கூறுவர்
அந்நாள் அமைச்சராய் அவர் இருக் கையிலே!
இந்நாள் நிலையோ இந்திய பூமியில்
எழிலாம் பதவியில் இருப்பவர்! அறிவோம்
எனினும் எமது இன்மொழித் தமிழனை.
இகழ்ந்திடும் பேதையர் எந்நிலை கொளினும்,
எமக்கவர் பகைவர் - எதிர்க்போம் அவரை!
பதவியின் பசையிலே பண்புள தமிழர்
இழந்திட மாட்டார் சுயமரியாதையை
எவர்நிலை உயரினும் எம்நிலை தாழ்ந்திட,
அவர்வழி கோலுவ தறியின் அயர்ந்திடோம்.
நிறமிகு திராவிடர் தீயன புரியார்!
தீயன புரிந்திட வருபவர் நீய்வர்!
கதையல சரிதம், கனவல, உண்மை!!
கல்லெடுத் திட்ட கனகனை அறிவர்.
எனவே அவர்கழி ஏன்மறிக் கின்றீர்
எல்லாம் அறிந்திடும் ஏந்தலென் கின்றார்
உமக்குரைக் கின்றேன் உரிமையை இழக்க
ஊமையா, ஆமைய, உயர்தமிழ் மக்கள்?
உயர்ந்திடு மொழியினை உடைய அவர் மீது
உலுத்தரின் மொழியைத் திணிப்பது அழகோ?
திணிப்பது தவறெனக் கூறிய எமது
திராவிடத் தலைவனைச் சிறையிடல் முறையோ?
ஆண்டுஓர் எழுபது ஆன முதியவர்!
ஆலென ஓங்கிடும் கழகம் கண்டவர்!
ஆரியம் ஓங்கிடின் அறிவு கெடுமென
அன்றும் இன்றும் என்றும் சொல்பவர்!
வாழ்ந்திட வேண்டும் வையக மெல்லாம்
தாழ்ந்தவர் மேலவர் எனும் தருக் கின்றி,
உழைத்திடும் மக்களை உறிஞ்சிடு கூட்டம்
ஊரில் இருப்பது உலகக் கேடென
உரைத்திடும் பண்பினர் ஊன்று கோலினர்!
அவரை அடைத்திடச் சிறையோ நாட்டில்?
அதற்கோ வந்தீர், ஆள்வோம் என்று?
அறிவு வேண்டாம்! அன்பு இல்லையோ?
ஆணவம் கொண்டவர் அரசு நிலைத்ததோ?
அவை எலாம் அறிந்திடல் அவசியம் அலவோ?
கூடிய இக்குழு கொண்டிடு கோலம்
வாடிய முகமதை யன்றோ தந்தது!
வரிசைகள், பவனிகள், வாழ்த்துகள் பெற்றிட
வந்த உமக்குத் தந்தனர் வெறுப்பு!
காணு மிடமெலாம் கருப்புக் கொடிகள்,
கையினில் ஏந்திய காளைகள் பாரீர்!
கவர்னர் ஜெனரல்! ஆமாம் பயன் என்?
கடலலை அல்ல! காளையர் முழக்கம்!
வாழ்த்தல, வசைவல, சூளுரை அறிவீர்!
பட்டுடை அணிந்த பாவையர் சிலரும்
நெட்டுரு போட்ட வேதியர் தாமும்
அவரால் பிழைத்திடு்ம் அறமிழந் தோரும்
ஆவரோ மக்களின் அரும்பெரும் மன்றம்?
பாரதோ பறக்குது, பற்பல மூலையும்
கேளதோ சூளுரை! கேளதோ முரசம்!
என்றுமே கூறிடு என் அரும் புறாவே!
இன்மொழித் தமிழரின் இனிய தூதுவனே!
அன்றொரு கதையினை அளந்தனர் என்பால்
அரச குமாரனாம் சாரங்க தரனாம்
அவனோர், புறாவை அழகுற விடுத்திடு
சிறைப் பாவை பைங்கொடி யாளிடம்
சென்றதாம், பிறகு சென்றனன் அவன்என
செப்பினர் ஓர் கதை! செவிக்கு ஒருசத்தம்!
இன்றுநீ பறந்திடு - தமிழரின் தூதனாய்!
நின்றிடு ஓர்புறம், கூறிடு இம்மொழி
என்றுதான் கூறியே எழிலுறு புறாவினை
இணைவிழி கொட்டாது பார்த்துமே நிற்க,
தூது இனிக் கூறவோ, பாருமே நன்றாய்
என்றுமே புறாவும் எனைக்கேட் பதுபோல்
இருபுறம் விரிந்துமே பறந்தது துகிலும்,
மறுபுறம் கண்டேன் 'பெரியார் வாழ்க'

(திராவிடநாடு - 05.09.1948)
(இரண்டாம் மொழிப் போரில் தந்தை பெரியார் சிறையில் இருந்த போது, அண்ணா அனுப்பிய புறாத்தூது இது)