அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


பிடிபட்டான்

பிடிபட் டான்அதி காரிஇலஞ்சம்
பெற்றான் என்பதால், நின்றான் நீதிமுன்,
ஐயா, நான் பெற்ற தெல்லாம்
இந்த அலங்கார உடைகட்கும்,
ஆடம்பர ஆட்டந் தனக்கும்
மெய்யாய்த் தேவைப்படும் பொருளே!
மிச்சம் பிடித்திடவில்லை ஓர்இலட்சம்.

கொடுத்தவர் கோலாகலச் சீமான்!
கோட்டைக் கோமான்களின் நண்பருமாவார்.
நீட்டினார் சிலபச்சை நோட்டு,
நெருக்கடி நிலையினால் புத்தியுங் கெட்டுப்
பெற்றுக்கொண்டேன், கொஞ்சக் காசு.
பிள்ளைகுட்டிகள் மேலாணை, பெரியதொகை அல்ல
தந்த அந்தத் தனவந்தர் என்போல்
ஏழெட்டுப்பேர்களை மயக்குவார் விழியால்.

"அஞ்சி அஞ்சிச் சாக வேண்டாம்
அமைச்சர்கள் இன்னின் னார்என் நண்பர்"
என்றார்.

"அவர்களின் தேர்தல் வெற்றிக்கே
ஆயிரம் அல்ல, பலஇலட்சம் தருபவன்நான்!
என்னை நம்பிடு நண்பா! ஏனோ,
உனக்கு வீண் சந்தேகந் தானே!!
எடுத்துக் கொள், இது சகஜ" மென்றார்
ஏமாளி ஆகினேன்; இனித்துங் கிடந்தேன்.
என்பிழை உணர்கின்றேன், மெய்யாய்.

இந்நிலை நான்பெற எவர்காரணமோ
அன்னாரைக் கூண்டிலே ஏற்றி,
அறிகுவீர் பற்பல சூழ்ச்சிகள்தமை.
மெத்தப் பெரியவர் என்போர்
செய்திடும் தகிடுதத்தம் காண்பீர்!
உண்மையைக் கண்டிடுவீரே.
என்உரை யினைநம் புவீர்,
நீதிக் குழைப்போரே!

பெற்றேன் கொஞ்சத்தை இலஞ்சமாக, அதனை
மறுத்திட வில்லை, ஒப்புக்கொள் கின்றேன்.
பிழையது அதனையும் இனிநான்
இல்லை என்பேனோ?
முழுஉண் மைதனை மட்டும் காண
முனைந்திடு வீர்ஐயா? முறையிடு கின்றேன்
வெறும்பலி ஆடு தேடுதல் நன்றோ?

இலஞ்சம் எனக்குத் தந்தவர் எவரே?
இருளப்பன் அல்ல! அவன் வெறும்
அம்பு!
எய்தவன் ஏழெட்டு இலட்சம்
கொண்ட,
இருப்பூரான், இவன், அவன் எடுபிடி
அறிவீர்!
கொடுத்தவன் அவன் என்பதற்கே
நான் கொண்டு வந்திடத் தெய்வமும்
உண்டோ?
உள்ளத்தைத் திறந்துரைக்கின்றேன்
உண்மையாய் இலஞ்சத்தைக்
கொடுத்தவன் இன்று,
உலவுகின்றான் உயர்வுடனே,
ஊராள்வோர் மத்தி்யில், உற்சாகத்துடனே!
பிடித்திடுவீர் அந்தப் பெரும்புள்ளிதனை;
பிழைத்திடும் நீதியும் நேர்மையும்
இனிமேல்!

பேர் கண்டு மிரண்டிட வேண்டாம்.
என்னுடன் பள்ளியில் படித்தான்
ஏகாம்பரம் எனும் ஏ.அம்பரந்தான்!
எலுமிச்சம் பழத் தோட்டம் உண்டு!
இவனப்பன் அதனாலே பிழைத்து
வந்தான்!
எப்படியோ சில ஆண்டில்
இவன் ஏழெட்டு இலட்சத்தைப்
பெற்றானே! விந்தை!!

சுற்றிவந்தான் சொகுசாக,
'சோணாசலம்' என்னை மறந்தாயோ"
என்றான்.
ஏகாம்பரந்தானே! என்னப்பா
சேதி!
எப்படி வாழ்க்கை எனக்கேட்
கின்றேன், நானும்
மாதம் முந்நூறு சம்பளம் பெற்றிடும்
நிலையில்!

அளக்கின்றான் அவனியின்
அதிசயம் எல்லாம்
வாய்பிளக்கின்றேன்! என் செய்வேன்!
அவன்நிலை கண்டேன்!!
கவனித்துக் கொள்ளப்பா! என்றேன்
சூது கபடு துளியுமின்றிக்
கண்சிமிட்டிச் சிரித்திட்டான்.
கணவானான ஏகாம்பரந்தானும்
என்னோடு படித்தவன்! என்றேன்
துணைவியிடமே!
எப்படிப் பிழைத்திடும் வழி
கண்டார், காணீர்!
இப்படி இருக்கின்றோம், இதில்
என்ன இலாபம்?
அப்படிப்பட்டாரை அடுத்து
நீர் தானம்,
அறிந்திடும் பொருள் ஈட்டிடும்
வழிதன்னை என்றாள்.

"பற்பல திட்டங்கள் பாங்காகத்
தெரியும்,
செப்பிடுகின்றேன், நல்ல சமயமும்
வரட்டும்.
இடையில் எத்தனை கஷ்டம்!
உனக்கு வந்தாலும்,
இருக்கின்றான் இந்த
ஏகாம்பரந்தானும்"
என இயம்பிய மொழிகேட்டுப்
பூரித்துப் போனேன்.
ஏதேதோ மயக்கினான்
ஏமாந்து போனேன்.

சிற்சில தகவல்கள் சேகரித்திடுவாய்!
செய்தொழில் தனக்கவை
வேண்டும் என்றானே,
எப்படி மனம் ஒப்பும் எனக்
கைபிசைந்தேன் நான்.
"இப்படிக் கோழையாய் ஏன் சாகின்றாய், நீ!!

எந்த ஆபத்தும் உனை
அண்டாது; அணுகாது; காப்பேன்!
எந்தன் ஆளிடம் தந்தனுப்புறேன்
பணமும்,
சிந்தையில் குழப்பம் சேர்திடாமல்
நீ,
செய்திடு உதவியும்! செய்வேன்!
உதவிநான்!!
முந்தையர் சொத்தது மூழ்குது
கடவில்,
என்று அன்று நீ ஏங்கினாய்
அறிவேன்.

அந்தச் சொத்தினை அளிப்பேன்
உனக்கே நான்;
ஆகட்டும் வேலையைக் கவனி
இனி" என்றான்.

பிழை செய்துவிட்டேன்; உணர்கின்றேன், ஐயா!
ஆனால் நீர் பிடித்திட்ட ஆள்,
அம்பு!
பிடித்திடுவீர், ஏகாம்பரத்தை!!

இந்தவிதம் உரைத்த இவன்
பேச்சைக் கேட்டு;
இலஞ்சம் இவன் பெற்றிட்டான்
பிடிபட்டான், இதற்கு
ஆண்டு ஆறு தண்டனை
அளித்திட்டேன்,

இவனும் வேறு சில
கூறுகின்றான், அதற்கு,
வேண்டும் ஆதாரம், இல்லை,
எனவே ஏதும் செய்வதற்கில்லை,
இழுத்துச் சென்றிடுவீர் இவனைச்
சிறைக்கூடம் என்றார்.
என் செயவான், சிறை
சென்றான், மனமும் வெதும்பி.

(காஞ்சி - 1964)