அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


போர் முரசு கொட்டுவீர்

விழித்தெழுக வீறுகொள்க, வீர பிரான்சு மக்களே!
கேண்மினோ, கேண்மினோ, கேடுகளைமினோ,
மக்கள் மனையாள் பெற்றோர் உற்றார்
கண்கள் கசிய, கதறுதல் கேண்மினோ,
கொடியோன் கொடும்படை கொண்டே நம்பதி
குனியக் குமுற கொக்கரித்திடவோ,
கோரிடும், சுதந்திரம் சிதைத்திடல் முறையோ?
கோலமிடும், சுதந்திரம் சிதைத்திடல் முறையோ?
கோலமிடும் சாந்தி சாய்ந்திடல் நெறியோ?
வாள்வேல் ஏந்துமின்? வகையுடன் வீசுமின்,
உரைதனை நீக்கமின், உக்கிரம் கொண்மின்,
பழிக்குப்பழி வாங்கிட பதைத்தே எழுமின்
பாய்க! பாய்க! படைக்களம் தனிலே,
வெல்க! வெல்க இன்றேல் மடிக!

(விடுதலை - 26.06.1940)

(கிளாடி ஜோசப் ரோஜட் டிலிஸ்லி என்பார் பிரான்சுக்க வந்த பேராபத்து பற்றிப் பாடிய பாடலுடன் தொடங்குகிறது. தலையங்கம் போர் முரசு கொட்டுவீர்)
குறிப்பு:
வீர பிரான்சு மக்களைத் தட்டி எழுப்பிய கவிதை.