அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


தேயிலைத் தோட்டத்திலே!
(தேயிலைத் தோட்டத்திலே என்ற மெட்டு)

சிறைக் கூடத்திலே - அவர்
செய்வ தென்ன வென்று
தெரியாமல் வாடுகிறார்!

(சிறைக்)

பாழும் மனம் என்னமோ,
பாகாய் உருகுது பலப்பல
நினைக்குது,
ஓயாது ஓயலமிட்டும் - நான்
ஓங்காரங் கூவியும் ஒரு
பலனும் இல்லை.

(சிறைக்)

கதவுந் திறக்கக் காணோம் - இந்தக்
கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே.
கண்கள் சிவந்திடுதே - என்
காலமும் வீணாகப் போகுதே
ஐயையோ!

(சிறைக்)

அடுப்பிலிட்ட கட்டைபோல் - அவர் அனைவரும் தேய்வதா
அணைத்திட வேண்டாமா.
அண்டை அயலார்களே! - நீங்கள்
ஆவன செய்திடத்
தேவைதான் இல்லையா

(சிறைக்)


(ஆகஸ்டுப் போரில் காங்கிரசார் சிறையில் துன்புறக்கண்டு ராஜாஜி வருந்துவதாக, அவருக்குக் கூறும் அண்ணா தம் "தேயிலைத் தோட்டத்திலே" கட்டுரையில் இப்பாடலைப் புனைந்துள்ளார். )
(திராவிடநாடு - 05.09.1943)