அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


தம்பி கேள்!

காது கொடுத்துக் கேள்நீ தம்பி; என்றன்
கருணாநிதி எனுமரிய கழகக் கம்பி!
ஏதுமறி யாத்தமிழர் தூய வாழ்வை
எனக்குப் பின் சீர்படுத்தும் மறவன் நீதான்!
தோதான நம்முயர்வுக் கொள்கை பற்றித்
துறைதோறும் புகுத்துவதே உன்றன்வேலை!
மாதுக்கம் சூழ்ந்திருக்கும் இனிய நாட்டில்
மறுமலர்ச்சி பூக்கச் செய்வாய்நீ தம்பி!
கண்ணீரில் வளர்ந்தவர்நாம்; எனவே அந்தக்
கண்ணீரில் மிதப்போரின் துயரைத் தீர்க்க
எண்ணியெண்ணிச் செயலாற்றிப் புகழைத் தேக்கு!
இதயத்தை எப்போதும் துயரில் ஆழ்த்தி
உண்ணாமல் கிடக்கின்ற ஏழை வாழ்வை
உயிரோட்ட மாக்குவதே பெருந்தொண்டாகும்!
அண்ணன் என் சொல்வழியில் நடந்து சென்று
அவனியெலாம் இத்தமிழர் நாட்டில் இன்றே
புலர்ந்தெழநீ பாடுபடு! உன்நெஞ் சுள்ளே
இதுகொடுமை எனக்கண்ட தெல்லா மும்நீ
என்வழியில் சென்றுடனே களைவாய்! தஞ்சைப்
பதுமைக்கே ஒப்பான திந்த வையம்
பகுத்தறிவின் வழிதொடரக் கடமை யாற்று!
எதுதீமை யோஅதனை மண்ணுள் ஆழ்த்தி
இந்நாட்டார் வாழ்வுக்கே வாழ்க தம்பி!

1969