அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

வேண்டும் விடுதலை

தொல்லைகள் தீரவேண்டின்
சுதந்திரம் வேண்டும்; மக்கள்
எல்லோரும் ஒன்றே என்னும்
எண்ணமிங் கோங்க வேண்டும்
பல்லரும் தொழில்கள் செய்தும்
பசியினால் வாடும் மக்கள்
அல்லது தெய்வம் இல்லை
என்பதை அறிய வேண்டும்.

கல்வியில் பெருக்கம் வேண்டும்
கலைகளில் புதுமை வேண்டும்
சொல்லிலே உண்மை வேண்டும்
சோர்விலா உள்ளம் வேண்டும்
கல்லிணுள் தேரை போல
உலகினை எட்டிக் காணாப்
புல்லியநிலையை ஞானத்
தீயினாற் புகைத்தல் வேண்டும்

கோடியதாய் நஞ்சைக் கொண்ட
நாகமும் கூடிவாழும்
இடியென உறுமிப்பாயும்
உலிகளும் இனத்தைக்கொல்லா,
அடிமைகள் ஆண்டை என்ற
பேதங்கள் ஆக்கிக்கொண்டு
முடிவிலாப் பகைமைப் போரில்
மூழ்கிடும் மனிதர்கூட்டம்

சாதிகள் கோடி பேசும்
சண்டையால் ஒய்ந்து போவார் -
வீதியில் சந்தில் எல்லாம்
பசியினால் வீழ்ந்து சாவார்
நீதியைத் தூயதாக
நிலவிடும் காதல் தன்னை
ஓதுவார் கவிதை செய்வார்
வாழ்க்கையில் என்றும் காணார்
பஞ்சமும் பிணியும் தீர்ந்து
பண்புடன் வாழும் மார்க்க்
கொஞ்சமும் எண்ணார் வாழ்வில்
கொடுமையே குறியாக் கெண்டார்
நஞ்சிலும் கொடிய நெஞ்சார்
நாணிலச் செய்கைக்காக....

(அண்ணாவின் குறிப்பேடு - 1945)


(குறிப்பு: இறுதிப்பாடல் முடியவில்லை. குறிப்பேட்டில் உள்ளபடி தரப்படுகிறது.)