அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


வேட்பாளர் வருகின்றார்...

வேட்பாளர் வருகின்றார்
வேழமுகன் தொழுது,
காழ்ப்பாளர் கண்டிடினும்
கைகூப்பி நின்றிடுவார்
தாழ்ப்பா ளிடாதீர் என்று ரைப்பார்.

ஏழெடடுச் சதுரங்கள்
எல்லாம் அயன் தஞ்சை
மொத்தமாய் முன்னூறு
ஏகர் அளவினது

முன்னோர்கள் தேடினதை
மும்மடங்காக்கி விட்டார்
புன்ணைவன நாதரவர்
புள்ளியில் பெரிய புள்ளி!

கடல்போல வீடென்பார்!
காண்பதற்குக் காட்சி என்பார்!
கட்டி முடித்திட்ட
கொத்தனார் கைத்தடிக்கு,
வெள்ளிப் பூணிட்டு,
விழாவன்று விருந்தளித்தார்,
புதுமனை புகுந்த பு்னைவனநாதர்,

பூர்வீகத் தொழிலான
போதைக்கடை தன்னால்
பொருள்குவியக் கண்டவரும்,
புதுத்தொழில்கள் பலகண்டார்.
வட்டிக்குக் கடன் தருதல்,
வாங்கிவைத்து விற்றிடுதல்
போயில் புதுப்பித்தல்,
கூலவாணிபம் செய்தல்.,
ஒன்றல்ல, பலஉண்டு,
இலாபம் வந்ததுகாண், உருண்டு!

பொருள் உடையா ரானாலும்,
போதைக் கடையாரைப்
போற்றுவார் பலர்இல்லை!
பொருட்படுத்தத் தானில்லை!
பொன்னுத்தாய் சொல்லும்வரை.

காந்தி மகாத்மாவைக்
கடவுளெனத் தொழுதின்றார்!
அவருக்குச் சீடன்என்
அருமருந்தத் தம்பியுந்தான்,
ஊரெல்லாம் நல்லபேர்
உருகுவார் உரைகேட்டு,
புகழ்தேடிப் பெற்றிட்டான்,
இதழ்பலவில் அவன்பாடல்!
என்னே இவன்நிற னென்று
தலைவர் பலர்பா ராட்டும்
நிலைபெற்றான் எல்லப்பன்!

ஓடிஆடிச் செல்வமதைத்
தேடிக் குவித்திட்டாலும்,
நாலுபேர் பாடும் புகழ்கேட்க
நான்கொடுத்து வைக்கவில்லை
பொன்னுத்தாய் உள்ளமதில்
பொங்கிவரும் எண்ணமது
கண்டுகொண்ட புன்னவனம்,
காலம் கனியட்டு மென்று
காத்தி ருந்தார், பொறுமையுடன்.

காலத்தைக் கனியச் செய்து,
காந்திமகான் அரசு காண,
கள்ளுக் கடைகளை மூட,
கடும்சட்டம் வந்த தகங்கே.

இலாபத்தைப் பார்க்க லாமோ?
பாபம் சேர்க்கப் போமோ!
தொழிலென்றிதைக்கூற லாமோ!
பலகூறி ஆறுதலைத் தேடிக்கொண்டார்!
பரிதாபம்! வேறென்ன அவரும் செய்வார்!

வெள்ளையர் வெளிஏறி விட்டால்
கொள்ளையர் ஒழிந்தா ரென்று
கூறுகிறார், கொடிஏற் றுகிறார்,
முன்புகூடிப் பங்கேற் றோரும்!

"எல்லப்பன் சொன்னதுபோல்
எழுந்ததுகாண் சுயராஜ்யம்
எல்லப்பன் செய்த தொண்டு
எவரே அறியார்கள்!

அவனப்பன் ஆர்ப்பரித்துக்
காசுபணம் சேர்த்திடாமல்
நாசமாய்ப் போகின்றாய்
நடடா! வீட்டை விட்டென்றே
கொதித்த போதெல் லாம்நான
கோபம் கொள்ளற்க!
கோடிபணம் குவித்தென்ன.
நாடடிமைக் காடானால்
அன்னை விலங்கொடிக்க,
அரும்பாடு மேற்கொள்ளும்
எல்லப்பன், நல்லப்பன், செல்லப்பன்!
எறிந்தவன்மேல் விழவேண்டாம்.
எவ்வளவு கசெனினும்
தந்திட உள்ளேன்நான்,
தடுக்காதீர் அவன்போக்கை,
என்றெல்லாம் இதம்சொல்லி
எல்லப்பன் தொண்டு வளரச் செய்தேன்.
எப்போது 'பணம்' என்று கேட்டாலும்
தப்பாது நான்தருவேன்.
கணக்கெண்ணிப் பார்த்ததில்லை.
ஏதோ இவ்விதமாய்
நாட்டுக்காம் நற்பணிக்கு
நான்தந்தேன் என்பங்கை!
நவில்கின்றார் புன்னைவனநாதர்
நடந்ததோ முற்றிலும் வேறு, வேறு,

கூரைக்கோழி பிடித்திடாக் குப்பனோ
போபுரம் ஏறிக் காட்டுவான் வைகுந்தம்!
செங்கோலுக்கு மிஞ்சிய தாமோ
சங்கீதந்தான்!
அஞ்சில் வளையாத இதா
ஐம்பதில் வளையும்!
மானம் போகுதுகாண்!
மண்சட்டியாம் சிறையில்!!

இன்னும் இதுபோல இழிமொழிகள்
பழிசொற்கள் பல உமிழ்ந்தார்,
கள்ளுக்கடையாலே கனவானான அன்று!
பணம்தந்தது மட்டும் உண்மை
எல்லப்பன் தொண்டுக்கல்ல!
என்னாலே வந்தது தான்எலாம்
என் 'ராசி' அதுபோல என்று
பொன்னுத்தாய் கூறினதால்!
நாட்டில் பெரியவிழா, ஆரவாரம்
நல்வாய்ப்பு இதுவென அறிந்தது மேதான்
பொய்யைப் பரப்பினார் புன்னைவனம் விரிவாக
புதுமுறையில் அமையும் ஆட்சி
பொதுத்தேர்தல் முடிவுக்கேற்ப,
ஏற்பாடு இதுவென்று அறிந்த போது
எல்லப்பன் நிற்கட்டும தேர்தலுக்கே!
மைத்துனன் என்பதனால் அல்ல, அல்ல!
மகாத்மாவின் சீடனவன், அதனா லய்யா!

புன்னைவன நாதர் தூதனுப்ப
பூரித்துப் போயிருந்தான் எல்லப்பன்,
ஆனால், கணக்கேடு பொய்யல்ல,
நன்றி மறப்பது நன்றல்ல
என்று பல எடுத்துககூறி,
"எத்தனை ஆயிரம் செயலென்றாலும்
அத்தனைக்கும் சித்தமாய் உள்ளேன்.
அனைவரும் எனை ஆ'தரித்திடுக'என்று
ஆலைஅதிபர் இல்லை! நாங்கள்!
கொலுவிருக்க அவர்வருவார்,
கொடுமைஇதைக் காணலாமோ!
பணம்எதற்கு, தேர்தலுக்கு,
மக்கள்மனம் எல்லாம் நமது பக்கம்!
எனைநிறுத்தி வெற்றி காண்பீர்"
எடுத்துரைத்தான் எல்லப்பன் எழுச்சி யோடு.

பணம் பத்தும் செய்யும்
அறிவாய் நீயும்!
ஆளுக்கு ஐந்து பத்து
அவிழ்த்துவிட,
ஆள்விழுங்கிகள் உண்டு.
ஆகவேதான்,
ஆலை அதிபர் ஆறுமுகம்
இன்று தேவை.
எப்போதும் உனது தொண்டு,
எமது மனமிருக்கு மென்றார்!!

எல்லப்பன் எண்ணிப் பார்த்தான்.
"ஆலை அதிபரைத் தேடுவது
பணத்துக்காக!"
"ஆமாமா! அதை வெளியே
சொல்லப் போமோ?"
"பணந்தானே வேண்டும்,
சரி."

என்மாமன் நிற்கின்றான்
தேர்தலுக்கு!
எத்தனை செலவுக்கும்
சித்தம், ஆமாம்!
புன்னை வனநாதர்

கிராமப் புள்ளி,
பூர்வீகப் புகழுண்டு,
திறனுமுண்டு,
"நிறுத்திடுவோம் தேர்தலுக்கு
அவரை" என்றான்
நிற்கின்றார் தேர்தலுக்குப் புன்னைவனம்.

கள்ளுக்கடை மூடி,
காசு குறையச் செய்த,
காங்கிரசின் ஆட்சியிலே,
கலந்து நின்று புன்னைவனம்
எந்தெந்த முறையினிலே,
பணம்தேடிப் பெறலா மென்று,
புதுக்கணக்குப் போடு கின்றார்.
பழையபுலி யன்றோ! இயல்பு போமோ!
புன்னகை யால்இதை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
புறப்பட்டு விட்டார்காண்,
புதுக்கோலப் புன்னைவனம்!

வேட்பாளர் வருகின்றார்,
வேழமுகம் தொழுது!

ஆனைமுகத்தானும், காணும்
அக்ரமத்தை எதிர்ப்பானே!
அபிஷேகம் அடிக்கடி அவர்க்கே
அளிப்பவர் புன்னைவனமே யன்றோ!

வேட்பாளர் வருகின்றார்
வேழமுகன் தொழுது!
கேட்பார்யார் பழங்கதையை
அறிவீரே, பத்தும் செய்யும் பணம்!!

(காஞ்சி பொங்கல் மலர் - 14.01.1965)