அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

வீட்டு விளக்கு

தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே...?

தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!

தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?

வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!

இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே...?

தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்...

துரைத்தனம் நமதாக இல்லாததேன்...?
வடநாட்டுக் கடிமை ஆனதாலே...!

வடநாடு வாழ்வதும் எதனாலே...?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே...!

சுரண்டும் வல்லமை எதனாலே...?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!

டில்லியில் சர்க்கார் அமைவானேன்?
தேசியம் பேசியோர் ஏய்த்ததனால்!

தமிழர் உண்மையை அறியாததேன்?
தினசரி ஏடுகளின் புரட்டாலே...!

புரட்டொழியும் காலம் வாராததேன்...?
அறிவுத்தெளிவைப் பாமரர் அடையாததால்...!

இதையெல்லாம் இன்று கூறுவதேன்...?
இனியேனும் ஏமாற்றம் தெளிவதற்கே!

ஏமாற்றுக் காரரிடம் சிக்குவதேன்...?
சுண்ணாம்பை வெண்ணெய் என்பதாலே

தெளிவினைப் பெறுவது எப்போது?
தேர்தல் பொறுப்பறியும் போது...

பொறுப்பினை உணர்ந்தோர் செயல் யாது?
புது ஆட்சி அமைத்திட வழிகாணல்.

ஆட்சியில் புதுமை கேட்போர் யார்?
அருந்தொண் டாற்றிடும் தி. மு. க.

காங்கிரஸ் ஆட்சி வேண்டாமோ?
காட்டுத் தீயை வேண்டுவையோ...?

வீட்டு விளக்குத் தி. மு. க.

நாட்டுத் தொண்டன் அதுவேயாம்!

வீட்டு விளக்கை ஏற்றிடுவீர்!

நாட்டு நலனைப் பெற்றிடுவீர்!

(திராவிடநாடு - 06.01.1957)