அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

விடுதலை

விடுதலையே! இருண்ட மொய்குழல்
சுருண்டு அழகு தரும்
கொடி போன்றாள்!
இள மங்கை!
என்று உன்னைக் கூறுகின்றார்.
உண்மை அல்ல அது.
கவிஞர் கனவில் உருவானது.
வாளொடு கரம்!
வந்திடு கேடு தடுத்திடும்
கேடய மறுகரம், படைக்கலன் பல உள
போரிடும் விடின் நீ!
களம்பல கண்ட கட்டுடலோன் நீ
நெறித்த புருவம் நேர்த்தி அளித்திடும்
முகமெலாம் வடுக்கள் போர்ப்புகழ்க் குறிகள்!
இடிதனை ஏவினர் உனை அழித்திட
இலை அதற்கு ஆற்றல் உனை வீழ்த்திட!
உரை பல தனிலே உருக்கி வடித்தனர்
உனைப் பிணைத்திட தளை பலப்பல
கட்டி, அடக்கினோம் என்றவர் களித்தனர்.
பட்டுத் தெறித்திட பலமதை ஏவினாய்!
உனை அடைத்திட அமைத்தனர் ஆழ்சிறை
உதைத்து எழுந்தனை சிறை பொடியாகிட;
கொழுந்து விட்டெறி தீயென, நீயுமே
எழுந்தனை! எழுப்பினை எங்குள பேரையும்,
உன்குரல் கேட்டதும் பற்பல நாட்டவர்,
இங்குளோம், இங்குளோம்!
என்று உடன் முழக்கினர்.
அடக்கிடும் சழுக்கர்கள் அரண்டுஓடிட!

(காஞ்சி பொங்கல் மலர் - 1966)


(குறிப்பு: 'விடுதலை' பற்றி தீட்டிய கவிதையினைப் படித்திடும் பேறு, மொழிக்கிளர்ச்சியின்போது சிறைப்பட்டிருந்தபோது கிடைத்தது ... எனக்குக் கிடைத்ததை உனக்களிப்பது என்ற முறையிலே அந்தக் கவிதையை தந்திடுகின்றேன். - அண்ணா)