அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


அனைவரும் விரும்பிய பேட்டி
(22.04.1968 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் செய்தியாளர்களுக்கு
அண்ணா அளித்த அருமையான பேட்டி)

செய்தியாளர்: தங்களைக் காந்தியுடனும், கென்னடியுடனும் ஒப்பிட விரும்புகிறேன்.

அண்ணா: என்னை மிகப் பெரிய மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதாக அஞ்சுகிறேன்.

செய்தியாளர்: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடவிருக்கும் ராபர்ட் கென்னடி, மக்கார்த்தி ஆகிய இருவரில் யாரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? யார் குடியரசுத் தலைவராக வருவதை விரும்புகிறீர்கள்?

அண்ணா: இந்தியாவிற்கு யார் அதிக உதவி தருவாரோ அவரைத்தான் ஆதரிப்பேன்.

செய்தியாளர்: அமெரிக்க உள் விவகாரம், வியட்நாம் பிரச்சினை, மேற்காசிய பிரச்சினைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

அண்ணா: இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள் அவை பற்றிக் கருத்து தெரிவிப்பதற்கில்லை.

செய்தியானர்: இந்திய வெளிநாட்டுக் கொள்கை தகராறு பற்றித் தங்கள் கருத்தென்ன?

அண்ணா: அது மைய அரசைப் பொறுத்த விவகாரம் அதில் தலையிட விரும்பவில்லை.

செய்தியாளர்: சீனாவுடன் இந்தியாவுக்குள்ள மோதல் காரணமாகத்தான் இந்தியா மேலைநாடுகளின் பக்கம் சாய்கிறதா?

அண்ணா: முன்னர் இந்தியா ஒரே கட்சி ஆட்சியில் இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆனால், பல மாநிலங்கள் காங்கிரசல்லாத நிலையில், நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் துவக்கப்பட்ட நிலையில் வறட்சியின் காரணமாகத் தொழிலில் மந்த நிலை நிலவிய நிலையில் இந்திராகாந்தி பதவிக்கு வந்தார். இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது அவர் நன்றாகவும் திறமையாகவும்தான் செயல்படுகிறார்.

அவர் அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கக் கூடாது என்று நான் கருதுகிற பிரச்சினை மொழிப் பிரச்சினை ஒன்றுதான்.

நேருவின் வாக்குறுதியைச் சட்டமாக்க முனைந்தமைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஆனால், அதே வேளையில் இந்திக்கு ஆதரவாக இந்திரா மற்றொரு தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட்டார். மைய அரசின் வேலை வாய்ப்புத் துறையில் மொழித் தீர்மானம் இந்தி பேசுவோருக்கே சாதகமாயிருக்கிறது.

செய்தியாளர்: சீன ஆக்கிரமிப்பு நிலை எப்படியுள்ளது?

அண்ணா: சீனா முன்னர் இந்தியாவில் விழுங்கிய பகுதிகளை இன்னும் தன் வசமே அப்படியே வைத்துள்ளது. அண்மையில் அது முன்னேறாவிடினும், நாங்கள் எப்பொழுதும் முன்னேறாவிடினும், நாங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கிறோம். அதன் வலுத்தாக்கல் வென்றுவிடாதபடி பார்த்துக்கொள்கிறோம்.

செய்தியாளர்: இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா உள்ளதா?

அண்ணா: இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக உள்ளது என்னும் பொதுவான ஓர் எண்ணம் நிலவுகிறது என்றாலும், அதை நான் மறுக்கிறேன். இந்தியா இஸ்ரேலுடன் ஓரளவு அரசியல் உறவுகளை வைத்துள்ளது. அரபு நாடுகளுடன் எங்கள் தொடர்பு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்ற போதிலும் இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் எதையும் சொல்லவில்லை.

செய்தியாளர்: உலக அரங்கில் இந்தியாவின் பங்கென்ன?

அண்ணா: இந்தியாவிற்கு உள்நாட்டிலேயே பல சொந்தச் சிக்கல்கள் உள்ளன. எனவே, அனைத்து நாட்டு விவகாரங்களில் பெரும் பங்கு எதையேனும் வகிப்பது என்பது இந்தியாவுக்கு இயலும் என நான் நினைக்கவில்லை. ஆனால், ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்குமிடையே நடுவராக அமைதியையும் தோழமையையும் உண்டாக்கும் தூதுவராக நாங்கள் பணியாற்ற முடியும்.

செய்தியாளர்: மாணவர் ஆற்றல் பற்றியும் அரசியலில் அவர்கள் பங்கு கொள்வது பற்றியும் தங்கள் கருத்தென்ன?

அண்ணா: மாணவர் கிளர்ச்சி என்பது உலகெங்குமுள்ள காட்சியாகும். அரசாங்கத்திற்கு ஆதரவாகச் சில செயல்களை மாணவர்கள் செய்யும்பொழுது பாராட்டப்படுகிறார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தால் அரசியலில் கலந்துகொள்ளாதீர்கள் என்று உடனடியாக அவர்கட்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மாணவர்கள் பாகிஸ்தானுக்கோ சீனாவுக்கோ எதிராக ஆர்பாட்டம் செய்கையில் அவர்களது பேராசிரியர்கள் கூட அவர்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால், மொழிச் சிக்கலுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்யும்பொழுது, அரசியலைவிட்டுப் போகும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியாளர்: இந்தியாவின் மைய மாநில அரசுகள் தொடர்பு, நிதி ஒதுக்கீடு முதலியவை பற்றித் தங்கள் பட்டறிவு என்ன?

அண்ணா: மைய அரசுகளும் மாநில அரசுகளுக்குமிடையேயுள்ள உறவு, மாநிலங்களுக்கு மைய அரசு நிதி ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக எனக்குக் கடந்த 20 ஆண்டுகளில் போதுமான பட்டறிவு ஏற்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்த நான் வற்புறுத்தியுள்ளேன். கடந்த 20 ஆண்டுக்காலப் பட்டறிவை மனத்தில் கொண்டு அக்குழு ஆராயலாம்.

தமிழக அரசு ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை மைய அரசுக்கு அனுப்பியது. அத்தொகை அதிகம் என்று மைய அரசு கூறியதால், அதை ரூ.90 கோடியாகக் குறைத்தோம். அதன் பிறகு மைய அரசினரோ நீங்கள் ரூ.90 கோடிக்கோ ரூ.100 கோடிக்கோ திட்டத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் ரூ.50 கோடிதான் கொடுப்போம். எஞ்சிய தொகையை நீங்களே தேடிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர்.

தமிழகத்தில் காங்கிரசல்லாத ஆட்சி நடக்கிறது என்பதால் குறைவான நிதி ஒதுக்கீடு என்று கூறுவதற்கில்லை. காங்கிரஸ் கட்சி இருந்தபோது கூட அதன் திட்டம் மைய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நிதி ஒதுக்குவதில் மாநிலங்களில் மக்கள் தொகையை மட்டுமன்றித் தேவையையும் மைய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

செய்தியாளர்: தங்கள் இருமொழிக் கொள்கை பற்றி...

அண்ணா: சில ஆண்டுகளுக்கு முன்பும் மும்மொழித் திட்டத்தை வைத்துக் கொள்வது என்று மாநிலங்கள் ஒப்புக் கொண்டன. தமிழ்நாடு அத்திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆனால், இந்தி பேசும் மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. தமிழகம் தவிரக் கேரளத்தி்லும் இருமொழித் திட்டத்திற்குக் குறிப்பிட்ட ஆதரவு காணப்படுகிறது.

செய்தியாளர்: உணவு உற்பத்தியைப் பெருக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்.

அண்ணா: உணவு தானிய விளைச்சலைப் பெருக்குவதற்காக மேம்படுத்தப்பட்ட விதைகள், கூடுதலான வேதி உரம், அதிகப்படியான கடன் வசதி ஆகியவை அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மொத்த உணவு உற்பத்தி, வளர்ந்துவரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்குப்போதுமானதாக இல்லை. இந்தியாவில் நிலத்தைச் சமூக உடைமையாக்கும திடடம் தேல்வியடைந்துவிட்டது. மக்கள் அதை விரும்பக்கூடும். ஆனால், நடைமுறையில் கூட்டுறவுப் பண்ணை வேலை செய்யவில்லை.

செய்தியாளர்: வேலை வாய்ப்புப் பற்றிய நிலை என்ன?

அண்ணா: நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் இறுதியாக்கப்பட்டுவிட்டால், பொறியாளருக்கும் தொழில்நுணுக்க வினைஞர்களுக்கும் அதிக வேலை வாய்ப்புண்டு.

செய்தியாளர்: வியட்நாம் பிரச்சனை பற்றித் தங்கள் கருத்தென்ன?

அண்ணா: வியட்நாமைப் பற்றி ஏதும் பேசுவதைவிட எவையேனும் சிலவற்றை செய்வது நல்லது என்ற நிலையை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள்.

வியட்நாம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தில்லி களமாக அமைவதைப் பெரிதும் விரும்புகிறேன். தில்லி வெப்பமாக இருக்குமென்று அமெரிக்கா, விட்நாம் ஆகிய இருநாடுகளும் கருதுமானால், அதைவிடக் குளுமையான இடத்தைத் தமிழகத்தில் தேடித்தர நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என இடத்தின் பெயரைச் சொல்வதில் இரு தரப்பும் தவறு செய்துவிட்டன. ஒவ்வொரு தரப்பும் இன்னின்ன இடத்தில் நடத்தலாம் என எண்ணுவதற்குப் பதிலாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூறுங்கள் என்று அவர்கள் ஐ.நா. தலைமைச் செயலாளர் ஊ-தாண்டைத் கேட்டிருக்கவேண்டும். அதை இரு தரப்பும் ஏற்றிருக்க வேண்டும்.

செய்தியாளர்: அமெரிக்கா வியட்நாமில் இருப்பதற்கு எதிராகப் பொதுமக்கள் கருத்து இந்தியாவில் வலுவாக உள்ளதா?

அண்ணா: பொதுவாக அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளின் செயல்கள் பற்றி நாங்கள் கடுமையான கருத்துகளை கூறுவதில்லை.

செய்தினாளர்: இந்தியாவின் காஷ்மீர்க் கொள்கையிலும் பாதுகாபப்புத் துறை, வரவு செலவுத் திட்டத்திலும் மாற்றம் ஏற்பட வழிவகை உண்டா?

அண்ணா: வெளிவிவகாரங்களில் முனைப்பு காட்டுவதோ வழிகாட்டுந்துறையில் பங்கு எற்பதோ மைய அரசின் கையில் இருக்கிறது. மாநிலங்களிடம் இல்லை. என் தனிப்பட்ட கருத்துகளும் சர்ச்சைக்குரியவை ஆகா. மைய அரசின் கருத்துகளும் அவற்றில் குழப்பம் அடைவதற்கில்லை.

செய்தியாளர்: பொதுவுடைமைப் படை எடுப்பால் இந்தியாவில் அபாயமுள்ளதா?

அண்ணா: அபாயமிருப்பதாக நான் கருதவில்லை. பொதுவுடைமை இந்தியாவில் பரவ வழியுண்டு. ஏனேனில், இங்கே வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பிற்படுத்தப்பட்ட நிலைமையும் எப்போதும் உள்ளன.

செய்தியாளர்: இந்தியாவில் பஞ்சம் எற்பட வாய்ப்புண்டா?

அண்ணா: இல்லை. கடந்த ஆண்டில் (1967) வறட்சியால் இந்தியா வருந்தியது. பீகாரில் பஞ்ச நிலை நிலவியது. ஆனால் இந்த ஆண்டில் நல்ல மழை பெய்துள்ளது. எனினும் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக உணவுப்பற்றாக்குறை உள்ளது.

செய்தியாளர்: குடும்பக் கட்டுப்பாடு எந்த அளவில் உள்ளது?

அண்ணா: வேளாண்மைத்துறையைச் சீர்திருத்தவும் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தமிழகமும் மராட்டியமும் குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னேறியிருக்கின்ற வேளையில், உத்தரப்பிரதேசத்திலும் மத்திதயப் பிரதேசத்திலும் பீகாரிலும் வேறு சில மாநிலங்களிலும் பெரும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

செய்தியாளர்: அந்நிய உதவியின் தாக்கம் என்ன?

அண்ணா: திட்டமிடல் மூலம் பொருளாதராத் துறையில் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ள இந்தியா முயன்று வருகிறது. ஆனாலும் பெருமளவு உதவி தேவைப்படுகிறது. அந்நிய உதவி இல்லாவிட்டால் இந்தியாவில் திட்டம் இவ்வளவு பெரியதாக இராது. அமெரிக்கர் தாராளமாக உதவி செய்ய வேண்டும். அது உதவியளிப்பதானது மற்ற நாடுகளிலிருந்து உதவி கிடைப்பதற்கு வழிகோலுவதாகும்.

செய்தியாளர்: இந்தியாவின் அணுக் கொள்கை என்ன?

அண்ணா: அணு ஆற்றலை அமைதிப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்பதுதான் இந்திய அரசின் கொள்கை. அணுகுண்டு தயாரிப்பது அல்ல.

அணு ஆற்றலை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து விட்டதாக எங்கள் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப்போது எங்கள் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது சில உறுப்பினர்கள் அணுக்குண்டுகளைத் தயார்க்கவேண்டும் என்று பேசுகின்றனர். ஆனால் அதை அரசாங்கம் அவசியமென்றோ இயலக்கூடியதென்றோ நினைக்கவில்லை. ஏனெனில், இந்தப் போட்டியில் இறங்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஆக்க வேலைகளுக்கு மட்டும் அணு ஆற்றலைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

(22.04.1968 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் செய்தியாளர்களுக்கு அண்ணா அளித்த அருமையான பேட்டி நாற்பது நிமட அளவு நடைபெற்றது. செய்தியாளர் பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கி, அறிவுக்கூர்மையாக அண்ணா அவர்களை மடக்கினாலும், அண்ணா அவர்கள் தமக்கே உரியதான தனித் திறமையில் செய்தியாளர்களை வாயடைக்கச் செய்து அவர்களை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தினார்.

இது குறித்து யேல் பல்கலைக் கழகச் செய்தி மடல் கூறுவதாவது:
முதலமைச்சர் அவர்கள் நகைச்சுவையும் இளைஞர்களிடையே அவர் தாராளமாகப் பழகியதும் மனம் விட்டுப் பேசுவதற்குத் தங்க தடையில்லாத சூழ்நிலையை அளித்தன. எல்லாக் கேட்ளவிகளுக்கும் பொறுப்புடன் பதில் அளித்தார். வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தார். இது குறித்து மாணவர்களும் செய்தியாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். பல முறை அவர் இளைஞர்களை வாய்விட்டு சிரித்து மகிழுமாறு செய்தார். சான்று:மாணவர் செயல்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் அவர்களை அரசியல்வாதிகள் தட்டிக் கொடுக்கின்றனர் என்றும், பிடிக்காவிட்டால் பேச்சுமூச்சு இல்லாமல் நழுவிவிடுவார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டபோது அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.)