அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


இந்தியும் திராவிட நாடும்
(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)

சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம். தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக நம்புகிறோம். ஆனால் தாங்கள் அது கூடாது என எதிர்ப்பதாகவும் அதற்கு முக்கியக் காரணமாக இந்தி ஆரிய மொழி என்று கூறுவதாகவும் கேள்விப் பட்டோம். ஆகவே, இது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.

சி்.என்.ஏ: மகிழ்ச்சி. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, யார் என்னைப்பற்றித் தப்பாகப் பிரசாரம் செய்கிறார்களோ அவர்களையே நீங்கள் முதலில் சந்தித்திருக்கிறீர்கள்.

சதுர்வேதி: இல்லை. இல்லை. அப்படி நினைக்காதீர்கள்.

சி.என்.ஏ.: நாங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாகவும் பார்ப்பன துவேஷத்தால் எதிர்ப்பதாகவும் தங்களிடம் மாதவ மேனன் போன்றோர் தப்பாகக் கூறி இருக்கிறார்கள். ஆனால்இந்தி திணிக்கப்படவேண்டாம் என்று கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே நாங்கள் இந்தியை எதிர்த்திருக்கிறோம். கட்டாய இந்தி கூடாது என்ற கிளர்ச்சி செய்திருக்கிறோம்.
தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று இந்தியைப் புகுத்துபவர்கள் காரணம் சொல்கிறார்கள். அதைக் காட்டியே இராஜகோபாலாச்சாரியார் இந்தியைப் கொண்டுவந்தார். அப்போது நாங்கள் எதிர்த்தோம். பலன் பெற்றோம். அற்குள்ள காரணம் எங்கள் குழந்தைகள் தாய்மொழி தமிழ், அகில உலக மொழி ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது. இது கடினமாகும்.
அதோடு எங்கள் மொழி என்றால் எல்லோரும் போற்றும் ஒரு சிறந்த மொழி. இலக்கிய வளமும் சிறந்த அழகும் வாய்ந்தது. இன்னொரு மொழி கட்டாயமாக எம்மீது திணிக்கப்பட்டால், தனிப்பெருமை உடைய எங்கள் தாய்மொழி பின் தள்ளப்படும்.
இந்தி அழகுள்ளதல்ல. இலக்கிய வளங்கொண்டதல்ல என்று தங்கள் போன்றோரே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ஆகவே, அத்தகைய ஒரு மொழி, எங்கள்மீது ஏன் சுமத்தப்பட வேண்டும்?
எங்கள் எதிர்ப்புக்கு அரசியல் ரீதியுலும் காரணங்கள் உண்டு. இந்தி அரசாங்க மொழியாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதாவது இப்போது ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் இந்திக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள். இதை எங்களால் ஒப்ப முடியாது.
இந்தி தேவை என்றால் வேண்டுபவர்கள் அதைக் கற்றுக் கொள்ள விரும்புவதில் எங்களுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், அது அரசாங்க மொழி என்று வலியுறுத்தப்படுவதில் வேறு பொருள் உள்ளது.
இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்திலேயே இந்தி மொழி ஆதரவாளர்கள் அரசியல் மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

காஞ்சனலதா: அப்படி என்றால் இந்தியா ஒரு நாடில்லையா?

சி.என்.ஏ.: இல்லை சகோதரி! இந்தியா நாடல்ல. உபகண்டம். பல இனங்கள் வாழும் ஒரு பரந்த நிலப் பரப்பு. இங்கே ஒரே ஆட்சி நிலவுவது என்பது முடியாதது. அதேபோல, ஒரே மொழி அரசாங்க மொழி ஆவதும் இயலாது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். வியாபார விஷயங்களுக்காகவோ வேறு எந்தவிதத் தொடர்புக்காகவோ இநதி வேண்டுமென்று கருதுபவர்கள் இந்தியைப் பயன்படுத்த எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால், அது அரசாங்க மொழி (ஆட்சி மொழி) என்று கூறப்பட்டு, இந்த உப (துணை) கண்டத்திலுள்ள எல்லா மக்களும் கற்றுக் கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்படுவதையே நாங்கள் ஒப்ப முடியாதது. இந்தியா ஒரு நாடல்ல. இந்த விஷயத்தில் அடிப்படையிலேயே நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கிறது.

சதுரவேதி: அதுபற்றி நாங்கள் தெளிவுபெற விளக்க முடியுமா? தாங்கள் திராவிடஸ்தான் கோருவதாகக் கேள்வியுற்றோம். அது சாத்தியமாகுமா? இந்தியாவைக் கூறுபோட்டு இரண்டாக்கிப் பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியதால் எவ்வளவு தொல்லையாக இருக்கிறது. பிரிவினையால் பொருளாதாரத் துறையில் நமது நாடு எவ்வளவு சங்கடப்படுகிறது. இதை எல்லாம் கவனிக்கும்போது, தனி நாடாகப் போவதிலுள்ள கஷ்டங்கள் விளங்கவில்லையா? இந்தியாவை ஆரிய வர்த்தம் என்றும் சீக்கிஸ்தான் என்றும் திராவிடஸ்தான் என்றும் பிரிப்பதால், இப்போது நாம் பாகிஸ்தானைப் பிரித்ததால் ஆளான கஷ்ட நஷ்டங்கள் உண்டாகாதா?

சி.என்.ஏ.: உண்மைதான். ஆனால், எங்கள் கோரிக்கை வேறுவிதமானது. பாகிஸ்தான், சீக்கிஸ்தான் போன்றதல்ல. ஏனெனில், பாகி்ஸ்தான் ஒரு புது படைப்பு. சீக்கிஸ்தான் ஒரு புதுக் கோரிக்கை. திராவிடஸ்தான் என்பது தனியாக இருந்த நாடு, இருக்கும் நாடு.

பாண்டே: அப்படி என்றால்?

சி.என்.ஏ.: நாங்கள் கோரும் திராவிடநாடு பூகோள நீதியிலும் சரித்திர ரீதியிலும் எப்போதும் தனியாகவே இருந்ததாகும். வட இந்தியாவைப் போன்றதல்ல. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வடக்கே இருந்திருக்கின்றன. சந்திரகுப்தன், அக்பர், அவுரங்கசீப் போன்றோருடைய சாம்ராஜ்யங்கள் வடக்கில் இருந்திருக்கின்றன. அப்போதும் நாங்கள் கூறும் திராவிடநாடு, தென்னாடு - தனியாகத் தனி அரசுடனே இருந்ததாகும்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்து, இந்திய நாட்டைத் தங்கள் வசப்படுத்திய பின்னரே இந்தியா உருவாயிற்று. நிர்வாக வசதிக்காகத் தென்னாடும் இணைக்கப்பட்டு டெல்லி ஆட்சி ஏற்பட்டது.
அதற்கு முன்னதாகத் தென்னாடு - தக்காணம் - ஒரு சுதந்திர நாடாகத்தான் இருந்தது.

சதுர்வேதி: தாங்கள் தனிநாடு கோருவதன் நோக்கம் என்ன?

சி.என்.ஏ.: எல்லா அதிகாரங்களும் எம்மிடமே இருக்கவேண்டும் என்பதுதான். இப்போது எதற்கெடுத்தாலும் டெல்லிக்குப்போக வேண்டி இருக்கிறது. அந்நிலை இல்லாமல், எங்களது வர்த்தகத்தை நாங்களே நடத்த உரிமை இருக்க வேண்டும். இதுபோன்ற எங்களது விவகாரங்களில் இன்னொருவர் தலையீடு இருக்கக் கூடாது எல்லாம் எங்களாலேயே கவனித்துக் கொள்ளப்படவேண்டும்.

பாண்டே: பொருளாதார ரீதியில் அது சாத்தியமா?

சி.என்.ஏ.: சாத்தியம்தான். எங்களை நாங்கள் ஆண்டு கொள்வதற்கான அத்துணை வசதிகளும் உள்ளன.

சதுர்வேதி: அதாவது, திராவிடஸ்தான் பொருளாதார வசதி நிறைந்த ஒரு தனிப்பகுதி என்று தெரிந்துகொண்டேன். அப்படித்தானே?

சி.என்.ஏ.: ஆமாம்!

சதுர்வேதி: அப்படி இருந்தாலும் இதுபற்றி என் சொந்தக் கருத்தைக் கூற விரும்புகிறேன். இரயில்வே, தபால் போக்குவதர்து போன்ற சில முக்கிய சாதனங்கள் பொதுவாக இருப்பததுதானே நல்லது. நான் பிரயாகையில் புறப்பட்டுக் கன்யாகுமரிக்கு வருகிறேன். பொதுவாக, ஒரே நிர்வாகத்திலிருந்தால். நான் நேராக வர முடியும். அப்படி இல்லை என்றால், ஒவ்வொரு பிரதேசத்தில் நுழையும் பொழுதும், இறங்கிப் பாஸ்போர்ட் போன்றவைகளைக் காண்பித்து விட்டுச் செல்ல வேண்டும். இதுபோன்ற கஷ்டங்கள் தபால் போக்குவரத்திலும் ஏற்படும். இது ஒரே நிரிவாகத்தில் இருந்தால் ஏற்படாது அல்லவா?

சி.என்.ஏ.: உண்மைதான். ஆனால், ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ், பிரான்ஸிலிருந்து இத்தாலி என்று செல்லும்போது, இறங்கிப் 'பாஸ்போர்ட்' காட்டவேண்டி இருக்கும் என்ற கஷ்டத்திற்காக ஐரோப்பிய மக்கள் எல்லாவற்றையும் ஒரே நிர்வாகத்தில் கொண்டுவர வேண்டும் என்றா விரும்புகிறார்கள்? பல நன்மைகளை நினைத்துத் தனிநாடு வேண்டுமெனக் கேட்டால், சில்லரைச் சங்கடங்களை ஏற்கத்தானே வேண்டும்.

காஞ்சனலதா: ஒரே உலகம் ஏற்படவேண்டும், உலகத்திற்கே ஒரு பொதுப் பாராளுமன்றம் ஏற்படவேண்டும் என்று எல்லாம் பேசப்படும் இந்தக் காலத்தில் 'தனியாகப் போகிறேன்' என்று கூறலாமா? ஒற்றுமையைக் குலைக்கலாமா? ஒரு குடும்பத்தில் வசிக்கும் ஒரு சகோதரர்கள் அல்லவா நாம்?

சி.என்.ஏ.: தங்கள் உவமானம் தவறு எனக் கூற வருந்துகிறேன். நாம் ஒரே குடும்பத்தில் வசிக்கும் சகோதர்கள் அல்ல. ஒரே வீட்டில் குடியிருக்கும் ஒரு நண்பர்கள். அதிலும் அழகான ஒரு தனிவீடு இருக்கும்போது, கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள்.
உலக ஒற்றுமை பற்றிக் கூறினீர்கள். நாங்கள் தனிநாடாகப் பிரிவதால், உலகத்தோடு துண்டித்துக் கொள்ளமாட்டோம். உலக விவகாரங்களில் அக்கறை காட்டுவோம். வெளிநாட்டு விஷயங்களில் முழுமையுள்ள இந்தியக் கருத்து எப்படிச் செல்கிறதோ அப்படியே அதை ஒட்டி நாங்களும் இருப்போம்.

சதுர்வேதி: அதாவது, வெளிநாட்டு விவகாரங்களில் பொதுவாக இருந்து, இந்திய ஆட்சியினர் எடுக்கும் நடவடிக்கைகளோடு ஒத்துழைப்பீர்கள்.

காஞ்சனலதா: அது எப்படி இயலும்?

சி.என்.ஏ.: முடியும்! இப்போது உலக விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள ஐக்கிய நாடுகள் இல்லையா? அதைப் போல இந்திய உபகண்ட முழுமைக்கும், நாம் ஒரு சபையை ஏற்படுத்திக்கொண்டு, வெளிநாட்டு விவகாரங்கள் பற்றிய பொதுக் கொள்கையை நிர்ணயத்துக் கொள்ளலாம்.

காஞ்சனலதா: வெளிநாட்டு விவகாரம் தவிர்த்து ஏனைய பொறப்புகளும் அதிகாரங்களும் உங்கள் வசமே இருக்கவேண்டும என்று விரும்புகிறீர்கள். இதை மத்திய சர்க்காரிடம் தெரிவித்து உங்கள் அதிகாரங்களைப் பெருக்கிக் கொள்ளலாமே? உங்கள் மாகாணத்திற்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமெனக் கோரி, அவைக் சர்க்காரால் மறுக்கப்பட்டால், அப்போது நீங்கள் பிரிவினை குறித்துப் பேசலாம் அல்லவா? இப்போது இந்திய சர்க்காருடன் இணைந்திருப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன?

சி.என்.ஏ.: நன்மைகள் எவையும் இல்லை. தாங்கள் சொல்வதெல்லாம் நாங்கள் கேட்டுச் சலித்துப் போனவை.

பாண்டே: ஆந்திரா, கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவை திராவிடஸ்தானில் அடங்கி இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள். அது எப்படி?

சி.என்.ஏ.: அந்தப் பிரதேசங்களில் வாழ்வோர் இனவாரியாகப் பார்த்தால் திராவிடர்கள்.

ஆப்டே: அப்படி என்றால் மகாராஸ்டிரம்? அங்கும் திராவிடர்கள் இருக்கிறார்கள். பஞ்ச திராவிடர் என்று கூறப்படுகிறார்கள்.

சி.என்.ஏ.: ஆமாம். அவர்களே விரும்பினால் தனிநாடு அமைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

காஞ்சனலதா: வங்காளம்?

சி.என்.ஏ.: அவர்கள் விரும்பினால்.

காஞ்சனலதா: இப்படியே பிரிந்துகொண்டே போனால்....

சி.என்.ஏ.: ஏன் விதர்ப்பம் போன்று 42 ராஜ்யங்கள் இருந்திருக்கின்றனவே!

இராகவதாஸ்: அதுசரி. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறதே!

சி.என்.ஏ.: அது நிரிவாகம் சுலபமாக இருப்பதற்குத்தான். நாங்கள் கூறும் வகையில் அல்ல.

இராகவதாஸ்: தாங்கள் திராவிடஸ்தானில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவைகளின் பொது மொழி என்ன?

சி.என்.ஏ.: ஆந்திரத்தால் தெலுங்கு, கர்நாடகத்தில் கன்னடம், கேரளத்தில் மலையாளம் முறையே அவர்கள் சொந்த மொழியாக இருக்கும். கூட்டு ஆட்சிமொழியாக சர்வதேச மொழிகவும் (Federal and International) ஆங்கிலம் இருக்கலாம்.

இராகவதாஸ்: ஆங்கிலம் படித்தவர்கள் எத்தனை பேர்?

சி.என்.ஏ.: 10% அல்லது 20% இருக்கலாம்.

காஞ்சனலதா: அதாவது, வட்டார மொழி அறிந்தவர்களைவிடக் குறைவு.

இராகவதாஸ்: உதாரணமாக, நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அப்படியானால் உங்கள் பாராளுமன்றத்தில் எனக்கு இடம் கிடையாது!

சி.என்.ஏ.: மன்னிக்க வேண்டும். வட்டார மொழி அறிந்தவர்கள் சட்டசபை போகத் தடை இல்லை. அந்தந்தப் பகுதியில் அந்தந்த வட்டார மொழிதான் அரசியல் மொழியாக (ஆட்சி மொழியாக) இருக்கும்.

இராகவதாஸ்: அப்படியானால், ஆங்கிலம்?

சி.என்.ஏ.: அகில உலகத் தொடர்புக்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் அது பயன்படும் என்று குறிப்பிட்டேன்.

இராகவதாஸ்: பொது ஜனமாகிய எனக்கு உலகம் வேண்டியதில்லை! நீங்கள் என்னைப் போன்றவருக்கும் சர்க்காருக்கும் இடையிலிருந்து மொழி பெயர்ப்பு வேலை செய்பவர்களாக ஆவீர்கள்!

சி.என்.ஏ.: ஒரு ஜனநாயக ஆட்சியில் பொது ஜனம் கட்டிப் பொருளல்ல. ஜனநாயகத்தின் உயர்நோக்கமே அவர்களை முன்னேற்றுவதுதானே! ஆகவே, அறியாமை அதிக நாட்கள் நீடிக்க வேண்டுமா? பொதுஜனம் எப்பொழுதுமே பொதுஜனமாகவே இருக்கவேண்டும் என்பது தங்கள் விருப்பமா?

சதுர்வேதி: பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?

சி.என்.ஏ.: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.

சதுர்வேதி: இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?

சி.என்.ஏ.: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.

காஞ்சனலதா: அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.

சி.என்.ஏ.: சகோதரி! இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இராகவதாஸ்: திராவிடநாட்டில் பார்ப்பனர்கள் நிலை என்ன?

சி.என்.ஏ.: மனித உரிமையோடு வாழ்வார்கள். அவர்களை விரட்டுவதல்ல எங்கள் நோக்கம்.

பாண்டே: பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?

சி.என்.ஏ.: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.

காஞ்சனலதா: ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!

சி.என்.ஏ.: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.

காஞ்சனலதா: உண்மைதான் இதே நிலைதான் வடநாட்டிலும் இருக்கிறது.

சி.என்.ஏ.: நீங்கள் அதை உணரவில்லை.

இராகவதாஸ்: தனிப்பட்ட பிராமணர்கள் இந்த விஷயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லையா?

சி.என்.ஏ.: எடுத்துக்கொண்டார்கள். அது அவர்களுடனேயே நின்றுவிட்டது. உதாரணமாக இராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள், தங்களைப் பொறுத்தவரையில் சீர்திருத்தவாதிகள்தான். ஆனால் அவர்கள் சீர்திருத்தம் அவர்களுடைனேயே நின்றுவிட்டது. தங்களைச் சேர்ந்தோரையும் தங்களைப் போல ஆக்கத் தவறிவிட்டார்கள்.

சதுர்வேதி: மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.

சி.என்.ஏ.: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.

சதுர்வேதி: உண்மைதான்.

சி.என்.ஏ.: காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.

சதுரவேதி: டெல்லியில் கூட மதராசிகள் (சென்னையைச் சார்ந்தவர்கள்) என்றால் வெறுப்பு இருக்கிறது. எல்லா உத்யோகங்களையும் அவர்களே பிடித்துக் கொள்வதாக ஓர் அதிருப்தி உலவுகிறது. பிரிவினை ஏற்பட்டால் அவர்கள் பலாத்காரத்தோடு வெளியேற்றப்படலாம் அல்லவா?

சி.என்.ஏ.: அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாட்டுப் பிரிவினை என்றால் இவைகளை எல்லாம் எதிர்பார்க்கத்தானே வேண்டும்.


மேலும் தொடர்ந்து பல கேள்விகளுக்குப் பொதுச்செயலாளர் பதில் அளித்தார். அவற்றின் சுருக்கமாவது: திராவிட நாட்டில் அயல் நாட்டாருக்குள்ள உரிமைகள், பார்பனர் பார்பனலல்லாதார் பிரச்சினை எவ்வளவு விரைவில் முடிவடைகிறதோ அவ்வளவு விரைவில் தீர்வும் கிடைக்க வழி உண்டு. ஏனெனில், இப்போது இந்த வேற்றுமை ஒழிய வேண்டும் என்பதில் பார்ப்பனத் தலைவர்களும் அக்கறை காட்டி வருகிறார்கள். இது வளருமானால் இந்து போன்ற பத்திரிகைகள் எங்கள் கோரிக்கையை விளக்கலாம். நாங்கள் பாகிஸ்தானுக்கு முன்பிருந்தே தனிநாடு கோருகிறோம். அனால், வடநாட்டிலிருக்கும் உங்களுக்கு வேண்டிய அளவுக்கு எங்கள் கோரிக்கை விளக்கம் பெறவில்லை. காரணம் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர்கள் வசமிருப்பதால், இப்பிரச்சினையை எடுத்துச் சொல்லவில்லை.

(இறுதியாக எல்லோரும் விடைபெற்றுக் கொள்கையில், 'தாங்கள் ஓய்வு கிடைக்கும்பொழுது வடநாடு வரவேண்டும்' என்று அழைத்தார்கள்.

'நான் முன்பே வந்திருக்கிறேன். ஓய்வு கிடைக்கும்போது கட்டாயம் வருகிறேன்' என்று பொதுச்செயலாளர் கூறினார்.

'நமது நட்பு வளர வேண்டும். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. சொந்த முறையில் கூறுகிறோம்' என்று கூறிச் சென்றனர் தூதுக் குழுவினர்.


இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி இது. தூதுக் குழுவில் பின்வருவோர் இருந்தனர்.

1. சந்திரபள்ளி பாண்டே, இந்தி சாகித்ய சம்மேளத் தலைவர், அலகாபாத்.

2. தோழியர் முதல்வர் காஞ்சனலதா, சபர் மாலா, மகிள வித்யாலயா, லக்னோ

3. பாபா இராகவதாஸ், ஐக்கிய மகாண சட்ட சபை உறுப்பினர்.

4. பண்டிட் சீதாராம் சதுர்வேதி, காசி இந்துப் பல்கலைக் கழகம்.

5. பால்சந்திரா ஆப்டே, தலைவர், தட்சிணப் பாரத இந்திப் பிரச்சார சாலை, சென்னை

6. சந்திர காந்தர், காசி-ராணி கல்லூரி உணவு விடுதி சார்ந்தவர், இவர் குழுவின் தனிச் செயலர்.

10.10.1950 அன்று குழுவின் தனிச் செயலர் அண்ணாவின் அனுமதி பெற, 11.10.1950 அன்று பேட்டி திராவிடநாடு அலுவலகத்தில் நடைபெற்றது.

பேட்டி கண்ட நாள் 11.10.1950
மூலம்: திராவிடநாடு 15.10.1950, 22.10.1950