அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


இயன்றதைச் செய்வோம் இயலாததை விடுவோம்
(24.02.1967 ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்
சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)

தலைமை:
உங்களிடம் மறைப்பானேன். தென் சென்னைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு இங்கே தமிழக்தில் அமைய இருக்கும் அமைச்சரைவையைத் தலைமை ஏற்று நடத்த இருக்கிறேன்.

வினா: தாங்கள் பதவி விலகுவதால் காலியாகும் சென்னைப் பாராளுமன்ற உறுப்பினர் இடத்தை ஒரு காங்கிரசாருக்கு விட்டுக் கொடுப்பீர்களா?


விடை: அதனால்தான் மைய அரசு தேசிய அரசாக இருக்கவேண்டும் என்று எங்களில் சிலர் சொல்லுகிறோம். நீங்கள் ஏன் இதை அரசாங்கத்துக்கு அறிவுறுத்தக் கூடாது? இருந்தாலும் தென் சென்னைப் பாராளுமன்ற இடத்துக்காகக் காங்கிரஸ்காரர்கள் என்னை அணுகினால் நான் அதைக் கவனிப்பேன்.

அமைச்சரவை:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (26.02.1967) சென்னையில் கூடுகிறார்கள். ஆனாலும், அமைச்சரவை அமைய இரண்டு வாரம் ஆகலாம். இப்போதுள்ள அமைச்சரவையைவிட அது பெரிதாக அமையலாம். ஏனெனில், நாங்கள் எல்லாம் இந்தப் பொறுப்புக்குப் புதியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அமைச்சர்களுக்குப் பல துறைகளைக் கொடுத்துச் சுமையை அதிகமாக்க நான் விரும்பவில்லை. அமைச்சரவையின் அளவும் பொறுப்புகளும் பற்றி ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உறதியாக ஒரு பெண் அமைச்சர் இருப்பார். முதலமைச்சருக்குத் துணையாக துணையமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்றச் செயலர் மட்டுமே இருப்பார்.

வினா: ம.பொ.சி. சட்டமன்றத் தலைவர் ஆகக்கூடிய வாய்ப்புள்ளதா?

விடை: என் நண்பர் ம.பொ.சி. ஆற்றல் மிக்க சிறந்த பேச்சாளர். அவர் சட்டமன்றத்தில் தேவை. அவைத்தலைவராகி அவரை மௌனியாக்கிட நான் விரும்பவில்லை. அது மட்டுமன்றி அவரும் தம்முடைய தமிழரசுக் கழகத்தின் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பக்கூடும்.

தூய நிர்வாகம்:
துய்மையான திறமையான நிர்வாகம் அமையத் திமுக முயற்சி மேற்கொள்ளும்.

இந்தி பிரச்சனை:
இந்தி பிரச்சினையில் திமுக தன் கொள்கையில் உறுதியாக நிற்கும். இந்தி தனி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்கும். 14 தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாகும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்திட வேண்டும். இந்தி ஆட்சி மொழியாகத் திணிக்கப்படும் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, அதற்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்தும் பிரச்சினையும் கட்சித் திட்டங்களில் ஒன்றாகும்.

திராவிடம்:
ஏற்கனவே மண்டல மன்றம் இருக்கிறது. வெறுங்கருத்துரை வழங்கும் கழகமாக இருக்கும் அந்த மன்றத்திடம் ஏன் அதிகாரங்களை ஒப்படைக்கக் கூடாது என்று ஆராயப்படும். கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியல் சட்டம் செயல்பட்ட முறையை ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தர வழி என்ன என்று ஆராயப்படவேண்டும்.

அதிகாரம்:
கல்வி, தொழில், வரிபோடுதல் போன்ற துறைகளில் மாநிலங்களுக்கு இன்னும் அதிக அதிகாரங்கள் வேண்டும். தொழில்களுக்கான அனுமதி வழங்குவதில் மாநிலங்களுக்கு அதிய அதிகாரங்கள் இருக்கவேண்டும்.

விடுகை உரிமைக்கும் உரிம முறைக்கும் (permit and licence) நாங்கள் எதிரிகள் அல்லர். அதில் நெளியும் முறைகேட்டையும் ஊழலையுந்தான் கண்டிக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் நாட்டின் முழுத்தன்மையையும் எல்லைகளையும் காப்பாற்றும் அளவுக்கு அதிகாரம் மட்டும் மைய அரசுக்கு இருந்தால் போதும். மைய அரசின் கைப்பாவையாக இருப்பது, பொருளாதார முழுமை ஆகாது. திட்டமிடுதல் பரவலாகக் கீழ்மட்டத்திலிருந்து இடப்பட வேண்டும்.

அரசியல் சட்டம் செயல்படும் வகையை அவ்வப்போது மதிப்பிடும் முறை சட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.

நான் திராவிடநாடு கேட்கவில்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன்.
பெருமைக்குத் திட்டமிடுவதைத் தவிர்த்து. உடனடியாகப் பயன்தரும் திட்டங்கள் இடப்படும்.

மதுவிலக்கு:
நாங்கள் மதுவிலக்கு ஆதரவாளர்கள். அதைமேலும் செம்மையாகச் செயல்படுத்த முயல்வோம்.

குதிரைப் பந்தயம்:
குதிரைப்பந்தயம் நடத்தப்படுவது அறவே ஒழிக்கப்படும்.

பேருந்து நாட்டுடைமை:
பேருந்துத் தொழிலைத் தேசிய உடைமை ஆக்குவது பற்றி அதிக அக்கறை செலுத்தப்படும். ஆனால், பேருந்து நாட்டுடமையாவது பற்றி ஏற்கனவே காங்கிரஸ் அரசை வற்புறுத்தி இருக்கிறோம்.

நிலச்சீர்திருத்தம்:
திமுக அமைச்சரவை நிலச்சீர்திருத்தத்தி்லும் அக்கறை காட்டும். நில உச்சவரம்புச் சட்டப்படி அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் நீக்கப்படும்.

உணவுநிலை:
நம் பொருளாதாரம் உணவுப் பண்டங்களின் மீது அமைக்கப்பட்ட பொருளாதாரம். அரிசிவிலை வீழ்ந்தால் மற்றப் பண்டங்களையும் அது தாக்கும்.

விளைச்சலை உயர்த்த வேண்டும் என்னும் எண்ணத்தை உழவர் மனத்தில் நாம் உண்டாக்கிடவேண்டும். எனவே, உழவுத் தொழிலுக்குத் தேவையான பொருள்களின் விலைகள் கணிசமான அளவுக்குக் குறைக்கப்படவேண்டும். திமுக அரசு இந்த வகையில் முனைப்புடன் செயல்படும்.

மாணவர் பிரச்சினை:
மாணவர் பிரச்சினை புதிதான ஒன்றல்ல. அது எங்கும் உள்ளது; என்றும் உள்ளது. மாணவர்கள் அரசியலைத் தெரிந்துகொள்ளக் கூடாது. ஈடுபடக்கூடாது என்று சொல்லவில்லை. உண்மையில் சில பிரச்சினைகளில் அவர்கள் மூலமாக நமக்குப் புதிய நோக்கம் கிடைக்ககூடும். ஆனால், படிப்பைப் பணயம் வைத்து அவர்கள் அரசியல் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது என்று நான் சொல்கிறேன்.

இலவசக் கல்வி:
முடிந்த அளவுக்கு இலவசக் கல்வி தரப்படுதல் வேண்டும். ஆனால் அந்தக் கல்வி தரமுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். அந்த வகையில் நான் கல்வி வல்லுநர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன்.

பயனுள்ள நடவடிக்கைகள்:
காங்கிரஸ் அரசு விட்டுவிட்டுப் போன பிரச்சினைகள் எவைஎவை என்பதை அறியும் பொருட்டு முதலில் நாங்கள் இப்போதுள்ள நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு உணவுப் பிரச்சினையில் கட்சி அக்கறை செலுத்தும்.

நிர்வாகத்தில் சிக்கனம், கிராமப்புறங்களில் பரவலாகத் தொழில்களை நிறுவுதல், ஒரே இடத்தில் பொருள் வளம் குவிவதைத் தடுத்தல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும்.

நல்ல பலனில்லாமல் வீண் ஆடம்பரத்திற்காக நிறைவேற்றப்படு்ம் திட்டங்களில் பெருமளவு மூலதனத்தை முடக்குவதற்குப் பதில், உடனடியாகப் பயன்தரும் திட்டங்களுக்கே முதலிடம் தரப்படவேண்டி இருப்பதால், அதற்கேற்ப மாநிலத் திட்டங்களை மாற்றியமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட சேலம் உருக்காலை, கல்பாக்கம் அணுநிலையம், தூத்துக்குடி துறைமுகத்திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தவும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் தேவைப்பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் திமுக அரசு மைய அரசை வற்புறுத்தும்.

நன்றி:
கூட்டணியின் முன்னோடியாகத் திகழும் திமுக ஆட்சிப் பொறுப்பெற்க ஒரு வாய்ப்பளிக்கவேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பக்குவம் கழகத்துக்கு வந்துவிட்டது என்றும், எனவே மக்களுக்கு அது நன்மையே செய்யும் என்றும் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

அந்தப் பணியில் எங்களுக்குத் துணையாக இராஜாஜி, காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் போன்ற முதிர்ந்த அரசியல் அறிஞர்களின் அறிவுரை கிடைத்திருப்பதால், திமுக நிலையான ஆட்சி அமைக்கும் என்று மக்கள் முழுக்க நம்புகிறார்கள். ஆகவே, அவர்களுக்கும் இச்சமயம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

(24.02.1967 ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)