அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


இலட்சிய அரசு
(1967-ஏப்ரலில் நேபன் செய்தியாளருக்கு அளித்த பேட்டி)

மைய அரசின் அதிகாரம் எங்கு முடிகிறது. மாநில அரசின் அதிகாரம் எங்குத் தொடங்குகிறது என்று நாம் முடிவு செய்தாக வேண்டும்.

இக்கட்டான இந்த விஷயத்தில் நான் மட்டும் தனித்து நிற்கவில்லை. மைய அரசு தன் இறக்கையை வெட்டுவது குறித்துக் கேரள அரசு குறிப்பிட்டுவிட்டது. மைசூரிலுள்ள காங்கிரஸ் முதலமைச்சர் மைய அரசின் தலையீட்டைப் பற்றிக் கசப்போடு குறை கூறியுள்ளார்.

வினா: இந்திரா காந்தியிடம் இவ்விஷயங்களை எடுத்துக் கூறும் நோக்கம் உண்டா?

இது குறித்து மக்களின் கருத்தை உருவாக்க முதலில் விரும்புகிறேன். அதன்பிறகுதான் இதில் மேற்கொண்டு செயலாற்ற முடியும்.

கல்வி போன்ற மாநிலத் துறைகளில் மைய அரசு சட்டமியற்றுவதும் முடிவெடுப்பதும் விரும்புதற்குரியவை அல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் முடிவே இறுதியாக இருக்கவேண்டும். நம் மக்களுக்கு எவ்வகையான கல்வி வேண்டும் என்பதை அவைதாம் முடிவு செய்யவேண்டும்.

உணவில் நெறிமுறைகளைத் தொடர்புப் படுத்தவேண்டாம். அமெரிக்காவில் மட்டுமே மிகுதியான கோதுமை இருந்து, அது நமக்கு உதவியளிக்குமானால் அமேரிக்காவின் அரசியல் எதுவாயினும், கோதுமையை நாம் அதனிடம் பெறத்தான் வேண்டும். ஆனால், ஒரே இடத்தைப் பெரிதும் நாம் நம்பி நிற்கலாகாது.

பர்மிய உணவு உபரிமீது நாம் கண்வைக்கவேண்டும். நாம் 10-15 ஆண்டு ஏற்பாட்டைச் செய்து கொண்டால் பர்மாவிலிருந்து அரிசி பெறமுடியும். இப்போது பர்மாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் சொத்து மதிப்பாகிய சுமார் ரூ.100 கோடியைக் கொண்டு அங்கிருந்து அரிசி பெறலாம். புதுதில்லி இந்த ஏற்பாட்டுக்கு வர முனைந்து நிற்கவேண்டும்.

ஜுன் ஜுலையில் (1967) காங்கிரசல்லாத முதலமைச்சர்களை இங்கு வருமாறு அழைப்பது காங்கிரஸ் எதிர்ப்பு முயற்சியன்று. பொதுப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காணவே நாம் விரும்புகிறோம்.

மாநிலங்களுக்குச் சட்டப்படி சேர வேண்டிய துறைகளில் எல்லாம் மைய அரசு மெதுவாக நுழைவதை நாம் காண்கிறோம். மைய அரசு மட்டத்தில் பல முடிவுகளை எடுக்கும் இப்போக்கை நாம் ஒடுக்கியாகவேண்டும். இல்லையேல் மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமை முற்றிலும் மறைத்து ஒழிந்துவிடும்.

மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி உரிமையை வழங்குவதற்காக மைய மாநில ஒருங்கிணைவான விஷயங்களில் மூன்று பட்டியல்களையும் ஆராய்ந்து, திருத்தியமைப்பதற்காக மைய அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.

மைய அமைச்சரவையானது உள்துறை, பாதுகாப்புத்துறை, அயலுறவுத்துறை முதலிய மூன்று துறைகளை மட்டும கவனித்துக் கொண்டு, எஞ்சிய துறைகளை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும். நாங்கள் விரும்பும் இலட்சிய அரசு இதுதான்.

இன்றைய அரசியல் சட்டத்தின்படியே மைய அரசு நாட்டின் ஆட்சித் தலைமை உரிமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கு மட்டும வேண்டிய வகையில் பொறுப்பானதாய் இருக்கவேண்டும். இதர விஷயங்களை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். சான்றாக, மாநிலங்களின் தொழில்களுக்கு மைய அரசு ஆண்டுதோறும் அயல்செலாவணியை வழங்கவேண்டும். நாங்கள் எம்மாநிலத்தில் தொழில்களைத் தொடங்க விரும்பும்போது எல்லாம், ஒவ்வொரு முறையும் ஏன் புதுடில்லி செல்லவேண்டும?

(1967-ஏப்ரலில் நேபன் செய்தியாளருக்கு அளித்த பேட்டி)