அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆளுங்கட்சிக்கு அறைகூவல்

23.2.66 அன்று மாநிலங்களவையில் அண்ணா அவர்கள், குடியரசு தலைவர் உரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய பேருரை.

துணைத் தலைவர் அவர்களே! குடியரசுத் தலைவருடைய பேருரை, இரண்டாவது முறையாக வேதனைக் குமுறலுடன் தொங்கப்பட நேரிட்டிருந்தது துர்பாக்கியமானதாகும். (இம்முறை) முன்னாள் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் துக்கமிக்க அதிர்ச்சி தரத்தக்க திடிர் மறைவு குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற முறை, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் வேதனைமிக்க மறைவுபற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. இருமுறை திக்கற்றவர்களாக்கப் பட்டுவிட்ட இந்நாட்டு மக்கள், இம்முறை லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு தரும் மன அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

அனைவருடைய அனுதாபத்தையும் பெற்றுள்ள காலஞ்சென்ற முன்னாள் தலைமையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு குறித்து, குடியரசுத் தலைவர் தமது பேருரையில் தெரிவித்திருக்கும் வேதனை உணர்ச்சியை இந்த அவையிலும் வெளியிலேயும் உள்ளார் அனைவரும் பகிர்ந்துகொள்வது போலவே, நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

நாட்டு நிலையை உயர்த்துவதற்காகக் கடுமையாகவும் சுறுசுறுப்புடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணியாற்றிவந்தவர், இறுதியில், பணியாற்றிக்கொண்டிருந்த நிலையிலேயே மறைந்திருக்கிறார். உள்ளத் தூய்மையாளர்கள் எங்கெங்கு எவ்வெப்பொழுது கூடிச் சமாதானம் நிலவிடச் செய்திடும் பணியில் ஈடுபடினும், அந்தப் பெரியவரின் நினைவு அவர்களுக்கு வழிகாட்டும் ஒளி அளித்து, இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், சமாதானத்திலும் கனிவான தோழமையிலும் நாட்டம் கொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானப் பாதையினை வகுத்துக்கொள்ளத் துணைநிற்கும். என்னுடைய தாழ்மையான அஞ்சலியினை அந்தப் பெரியவருக்குச் செலுத்திக் கொள்கிறேன்.

இல்லாதது கண்டு மகிழ்ச்சி பிறக்கிறது!

எனது நண்பர் பேராசிரியர் முகுத் பீகாரி லால், குடியரசுத் தலைவருடைய பேருரையில், சமதர்மம் என்ற வார்த்தை இல்லாதது குறித்து வருத்தப்பட்டார். விசித்திரமாக, அந்த வார்த்தை அங்கு (பேருரையில்) இல்லாதது கண்டு எனக்கு மகிழ்ச்சி பிறக்கிறது அந்த வார்த்தை (சமதர்மம்) எனக்குப் பிடிக்காது என்ற காரணத்தால் அல்ல-நான் அதனை (சமதர்மத்தை) மிகமிக விரும்புகிறேன். ஆனால், இந்தச் சர்க்கார் கொண்டுள்ள கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது, இத்துடன் அதனை (சமதர்மம் என்ற பெயரை) இணைப்பது, சமதர்மத்தையே கேவலப்படுத்துவதாகிவிடும் என்பதால்!

பேராசிரியர் முகுத் பீகாரி லால்-தாங்கள் கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அண்ணா-அந்தக் கருத்திலே கூறுகிறேன். அந்த வார்த்தை (சமதர்மம்) பொருத்தமானவிதமாகவே விடப்பட்டு விட்டிருக்கிறது!

நம்பிக்கை நட்சத்திரம் அது-ஐயத்திற்கு அவசியமில்லை!

அவருடைய (லால்பகதூர்) கடைசிச் சாதனை-வரிசையிலே கடைசி வகையிலே அல்ல-பற்றி எண்ணிடும்போது, இங்குள்ள பலரும், நாட்டிலே உள்ள பலரும் கருதுவதுபோலவே-தாஷ்கண்டு ஒப்பந்தத்தை, காலையில் காட்சிதரும் நம்பிக்கை நட்சத்திரமாக நான் கருதுகிறேன். தாஷ்கண்டு ஒப்பந்தம் பற்றி ஐயப்பாடுகள் கொண்டுல்ளவர்கள்கூட, அது மற்றோர்விதமான மூனிச் (சரணாகதி) நிழலாகிவிடுமோ என்றுதான் அச்சப்படுகிறார்கள். அவர்களும், பாகிஸ்தானுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும். நட்புறவுடன் வாழவேண்டும். நேசத் தொடர்புடன் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

மிகுந்த பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டியவர்கள், இந்த அவையிலும் வெளிலேயும் அடிக்கடி எடுத்துக் கூறிக்கொண்டு வந்த கருத்துக்கள், உண்மையான உணர்வு கொண்டுள்ள பலருடைய மனத்திலே அச்சத்தை மூட்டிவிட்டிருக்கிறது. எனினும், தாஷ்கண்டு ஒப்பந்தம், நட்புக்கேற்ற சூழ்நிலையையும், அண்டை நாட்டிடம் நல்ல தொடர்பு பெறுவதற்கான சூழ்நிலையையும் அடைந்திட அழைத்துச் செல்வதனால், இந்த நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து நானும் இதனை (ஒப்பந்தத்தை) வரவேற்கின்றேன்.

நேசத் தொடர்பின் இலட்சணம் இதுதானா?

அந்நிய நாடுகளுடன் நமக்கு நேசத் தொடர்பு இருப்பதாகக் குடியரசுத் தலைவர், தமது பேருரையில் எடுத்துரைக்கிறார். அவர்களுடன் (அந்நிய நாடுகள்) நேசத் தொடர்பு இருப்பதாகக் காட்சிகள் மூலம் காட்டப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புகூட அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர் நமது நாட்டுக்கு வருகைதந்து, நமது நாட்டுத் தலைமையமைச்சருடன் கலந்துரையாடியிருக்கிறார். அன்றையத்தினம் டில்லியில் அங்காடிப் பகுதி ஒன்றில் நான் சென்றுகொண்டிருந்தேன். இரு இளைஞர்கள் பேசிக்கொண்டிருக்கக் கண்டேன். இரு (நாட்டு) கொடிகளும் ஒருசேர அமைக்கப்பட்டுப் பறந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஒரு இளைஞன் மற்றவனைக் கேட்டான் யார் இந்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள்? என்று மற்றோர் இளைஞன் சொன்னான். அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர் வருகை தந்திருக்கிறார் என்று மற்ற இளைஞன்-வேடிக்கைப் போக்கிலேதான். ஆனால், அதிலே பொருளும் பொதிந்திருக்கிறது சொன்னான். ஓ! அங்கேரி நாட்டுத் தலைமையமைச்சர், பசி நாட்டுத் தலைமையமைச்சரைக் காண வருகை தந்திருக்கிறாரா? என்று.

அந்நிய நாடுகளுடன் நமக்குள்ள நேசத்தொடர்பு பயனளித்திருக்குமானால் கனிந்திருக்குமானால், இந்நேரம், பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள மக்களின் குறிப்பாகத் தென்னகத்தவர் தொல்லைகளைத் தீர்த்திடத்தக்க வழி பெற்றிருந்திருப்போம். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை வாணிபத்திலே ஈடுபடுத்தப்பட்டிருந்த தொகையினை சரக்குகளைக் கூடப் பர்மா சர்க்காரிடம் பர்மியப் புரட்சி சர்க்கார் என்று அதனை அழைக்கிறார்கள் விட்டுவிட்டு வந்துள்ளனர். நமது நாட்டுச் சர்க்கார் தலைவர்கள் ஒரு முறைக்கு மேல் பர்மா சென்று வந்தனர். நம்பிக்கையும் நல்ல எண்ணத்தையும் கொண்டுவந்து தந்தனர். ஆனால் இது வரையில் ஒரு பலனும் கிட்டவில்லை. நேசத் தொடர்பு என்றால் இதுதான் என்று குடியரசுத் தலைவர் கருதுவாரானால், அதுபற்றி (பேருரையில்) அவர் குறிப்பிடாமலிருப்பதே நல்லது!

பயன்தரத்தக்க குறிக்கோள் கொண்ட நேசத் தொடர்பு பெற வேண்டுமென்றால், இதற்குள் நாம் புதிதாக எழுச்சி பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளுடன் தோழமைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே ஒருவிதமான கூட்டுப் பொது அரசு அமைப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். ஜப்பானியத் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோருடைய நம்பிக்கையைப் பெற்றிருந்திருக்க வேண்டும். இப்போது ஜப்பானியர் கூட்டுவதாக இருக்கிறார்களே... ஆசிய மாநாடு அதனை இந்தியாவே கூட்டியிருந்திருக்க வேண்டும்.

அந்நியநாட்டு அரசுத் தலைவர்கள் இங்கு வருகை தருவதும் இந்நாட்டு அரசுத் தலைவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வதுமான நிகழ்ச்சியைத்தான் ஒரு சமயம் குடியரசுத் தலைவர், நேசத் தொடர்பு என்று குறிப்பிடுகிறார் போலும்!

தாக்குதலை நாங்கள் தாங்கிக்கொள்ள இயலும்:
குடியரசுத் தலைவருடைய பேருரையைப் பொறுத்தமட்டில் அதிலே நெருக்கடிநிலை குறித்தும், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பற்றியும் ஏதும் குறிப்பிடாமல் விட்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.

திட்டவட்டமாக நீதி நூல் வித்தகர்கள் தந்துள்ள தீர்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் அரசியல் சட்டதிட்டம் பற்றிய நுண்ணறிவினர் கூறிய அறிவுரைகளைப் புறக்கணித்து விடப்பட்டிருப்பதையும், ஆட்சியிலே உள்ளவர்களின் அரசியல் அறிவே மேலானது என்ற அகம்பாவத்தைக் கொண்டு இன்னும் நெருக்கடி நிலையையும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் வைத்துக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம்.

இந்த அரசியல் கட்சி அல்லது அந்த அரசியல் கட்சி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் நான், நெருக்கடி நிலையையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கும்படிக் கேட்கவில்லை தாக்குதலை நாங்கள் தாங்கிக் கொள்ளமுடியும்-தாங்கிக் கொண்டிருந்திருக்கிறோம். ஆனால், தாஷ்கண்டு ஒப்பந்தத்திற்குப் பிறகும் நெருக்கடி நிலையையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீடித்துக் கொண்டிருப்பது, நாம் தா“கண்டு ஒப்பந்த உணர்ச்சியை உள்ளத்தில் கொண்டில்லை என்ற தவறான விளக்கம் அளித்துவிடும் என்பதாலேயே கூறுகிறேன். மறைந்த பெரியவரின் பெயருக்காவது மதிப்பளித்து, இந்த நெருக்கடி நிலையையும் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கிவிட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்-வலியுறுத்துகின்றேன்.
சொந்த மக்களிடமே அவநம்பிக்கை ஏன் அரசினருக்கு?

எந்தவிதமான விஷமத்தனத்தையும், சமூக விரோத நடவடிக்கையையும் தடுத்திடத்தக்க அதிகாரம் அனைத்தும் அவர்களுக்கு (சர்க்காருக்கு) அவர்களிடம் உள்ள (சாதாரண) சட்டங்கள் மூலமே இருக்கின்றன-போதுமான அளவுக்கு! இந்த நாட்டை ஆபத்துத் தாக்க கிளம்பியபோது நாட்டு மக்களனைவரும் கருத்துவேற்றுமைகளை மறந்து கிளர்ச்சிகளை நிறுத்திவைத்து விட்டு ஒரு மனிதன் போல் எழுந்து நின்றதை நாம் காணவில்லையா? சொந்த மக்களிடமே ஏன் அவர்களுக்கு (சர்க்காருக்கு) இந்த அச்சம்? நாட்டைத் தாக்கிட ஆபத்துக் கிளம்பும்போது எழுந்து நின்றிட (காத்திட) முடியும் என்பதை, இவ்வளவு பெரிய அளவிலும் சீலத்துடனும் இந்நாட்டு மக்கள் விளக்கிக் காட்டியான பிறகும், ஏன் மக்களிடம் இவர்களுக்கு (சர்க்காருக்கு) இந்த அவநம்பிக்கை?

இந்தச் சர்க்காரும், இதனை நடத்திச் செல்பவர்களும், நாட்டுப்பற்று உணர்ச்சிக்குத் தாங்களே மொத்த உரிமையாளர்கள் மற்றவர்களுக்கு நாட்டுப்பற்று உணர்ச்சியே கிடையாது என்ற அகம்பாவம் கொள்ளக் கூடாது.

ஆகவே, உடனடியாக நெருக்கடி நிலையினையும், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீக்கியாக வேண்டும் பல ஆண்டுகளாகச் சிறையிலே அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்தாக வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அவர்கள் (சர்க்கார்) அதைச் செய்தாலொழிய செய்கிற வரையில், நாகரிகம், சனநாயகம் என்பவைகளுக்கு அவர்கள் உரித்தானவர்கள் என்ற உரிமை கொண்டாடமுடியாது! ஏன் இந்த நெருக்கடி நிலையையும், பாதுகாப்புச் சட்டத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதுதான், முதல் கேள்வியாக-முன்னணிக் கேள்வியாக மக்கள் கேட்பர். அந்தக் கேள்விக்கே இவர்கள் (சர்க்கார்) பதில் அளித்தாக வேண்டும்.

அரசினரின் செயலாற்றலில் திருப்தியற்ற நிலைமை!

இந்தச் சர்க்கார் செய்த (கெடுதலான) காரியங்கள் பற்றியும், செய்யத் தவறிய (நல்ல) காரியங்கள் பற்றியும் என் நண்பர் பேராசிரியர் லால் அவர்கள் விரிவாக எடுத்துக்கூறி, என் வேலையின் பளுவை வெகுவாகக் குறைத்துவிட்டிருக்கிறார்.

அம்மையே! குடியரசுத் தலைவரின் பேருரையை, கணக்குப் பார்த்திடும் முறை என்ற முறையில் கவனிக்க வேண்டும். அதிலும், இப்போது இன்றையச் சர்க்காரும், அதனை நடத்திச் செல்பவர்களும் வெகு சீக்கிரத்தில் நாட்டு மக்களிடம் சென்று மீண்டும் (ஆட்சி நடத்த) உத்தரவு கேட்க இருக்கிறார்கள். வார்த்தைகளால் விளக்கவில்லையே தவிர, குடியரசுத் தலைவர்கூட ஐயப்பாடு கொண்டிருக்கிறார் என்பது (உரையில்) தெரிகிறது.

கிடைக்கக் கூடிய பொருளை (உணவுப் பண்டம்) சீராக நியாயமாக (மக்களுக்கு)ப் பங்கிட்டு அளிப்பதற்கான முறைகளை எடுத்தாக வேண்டும் என்று அவர் ஒரு பகுதியில் (தம் உரையில்) தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து, முறைகள் (இதுவரையில்) எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று பொருள்படுகிறது.

பொதுத்துறையிலே ஈடுபடுத்தியுள்ள தொகைக்கு ஏற்ற அளவு வருவாய் கிடைத்தாக வேண்டும் என்று உரையில் மற்றோர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் பொருள், இதுவரை அவ்விதமான ஏற்ற வருவாய் கிடைக்கவில்லை என்பதுதான்.

ஆகவே, குடியரசுத் தலைவருக்குக்கூட, இந்தச் சர்க்காருடைய செயலாற்றலில் நிரம்பத் திருப்தி இல்லை என்பது விளக்கமாகிறது.

ஆளுங்கட்சியினரிடையே விசித்திர நிலை:
குடியரசுத் தலைவர் மட்டுமல்ல-வேறு ஒருவருக்கும் கூட இந்தச் சர்க்காருடைய சாதனைகளில் திருப்தி கிடைக்கவில்லை.
ஒருவருக்கும் என்று நான் கூறும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நீக்கிவைத்திடவில்லை!

விசித்திரமான நிலைமை, அம்மையே! ஆளுங்கட்சியிலே இரண்டு அணிகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பதவியில் உள்ள அணி மற்றொன்று பதவியில்லாத அணி.

சர்க்காருடைய ஒவ்வொரு செயலையும் முந்திக் கொண்டும் தீவிரமாகவும் பதவி அணி ஆதரித்து வாதாடக் கிளம்பும்போது பதவியில் இல்லாதார் அணி எதிர்க் கட்சிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, சர்க்கார் செய்ததிலுள்ள குறை-செய்யாததால் விளையும் குறை ஆகியவற்றினைச் சுட்டிக்காட்டி வருகிறது.

கட்சிப் பாசங்களை மறந்து மதிப்பீடு காண்பது அவசியம்:
எனக்கு முன்பு பேசிய கனம் உறுப்பினர் ஒருவர், குடித்தண்ணீருக்காக மன்றாடிக் கொண்டிருந்தார்! குடித்தண்ணீருக்காக மனுச் செய்து கொள்வது ஒரு சோகக் காட்சியாகும்!

பதினெட்டு ஆண்டுச் சுதந்தர ஆட்சிக்குப் பிறகு சுயராஜ்யம் கிடைத்ததும் தேனும் பாலும் ஆறெனப் பெருக்கெடுத்தோடும் என்று மக்களுக்கு அறிவித்தான பிறகு ஆளுங்கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர், இந்த மாமன்றத்தில் எழுந்து நின்று, பருகிட நீர் தாரீர் என்று கேட்கிறார்.

அந்த உறுப்பினர் அமர்ந்ததும், என் நண்பர் பேராசிரியர் லால் அவர்கள், தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று எழுந்து கேட்டார்.

எனக்குக் கோபம்-பேராசிரியர் லால் அவர்களிடம்! ஆளுங்கட்சியிடம் அந்தக் கட்சி உறுப்பினர், குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நீர்! இந்தச் சர்க்காரிடம் நீதி வழங்கும்படி கேட்கிறீரே-என்ன துணிச்சல் உமக்கு! ஆகவே, கணக்கெடுக்க வேண்டியிருப்பதால், கட்சிப் பாசங்களையும் மறந்து மதிப்பீடு காண வேண்டியது மிகவும் அவசியமாகிறது!

18 ஆண்டுகால ஆட்சி தேடிவைத்துள்ள கடன்!

துணைத்தலைவர் அவர்களே! நாம் சுதந்தர அரசாகத் துவக்கியபோது நமது கணக்கில், அந்நிய நாட்டில் கிட்டத்தட்ட ரூ.1,800 கோடி அளவுக்கு இருப்பு இருந்தது. பதினெட்டு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு இன்றைய ஆளவந்தார்கள் சாதித்திருப்பது வெளிநாடுகளுக்கு நாம் தர வேண்டிய கடன் ரூ.3,39 கோடி!

செங்கோட்டையில் சுதந்தரக் கொடியைப் பறக்கவிட்ட போது ரூ.1,800 கோடி இருப்பு இருந்தது வெளிநாட்டில்! அப்போது பிரெட்டன்வுட்ஸ் மாநாட்டுக்குச் சென்று நமது பிரதிநிதிகளுக்கு இருந்த பிரச்சினை இவ்வளவு பிரும்மாண்டமான (இருப்பு) தொகையை என்ன செய்வது? எப்படி முதலீடாக்குவது? எப்படித் திருப்பிக் கொண்டு வருவது? எப்படிச் சரியான முறையில் (இந்தத் தொகையை) பயன்படுத்துவது? என்பதாகும். ஆனால் இப்போதைய சர்க்கார், அந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டார்கள்!

நமக்கு வெளியிடத்தில் (இருப்பு) தொகை இல்லை. ஆகவே, பிரச்சினையே இல்லை! ரூ.3,396 கோடி கடன் இருக்கிறது. அதற்காக அவர்கள் (கடன் கொடுத்தவர்கள்) கவலைப்பட்டுக் கொள்ள வேண்டும் நமக்கு இல்லை!

இந்தியாவுக்குக் கடன் கொடுத்தவர்களுக்குத் துணிச்சல் வரத்தேவையில்லை கடன் வாங்கியவருக்குத்தான் துணிச்சல் வந்திருக்கிறது.

கொடுத்த கடனைப் பெற்றுக்கொள்ள வழி கண்டுப் பிடித்துக் கொள்ள வேண்டிய கடமை, (கடன்) கொடுத்தவர்களுக்கு என்றாகிவிட்டது!

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காட்டப்பட்டுள்ள (கணக்கு) ஓவியம் எது என்றால், வெளிநாடுகளில் இருந்துவந்த (இருப்பு) தொகை அவ்வளவையும் தீர்த்துக்கட்டியாகிவிட்டது. உலகுக்கு நாம் ரூ.3,396 கோடி கடன் திருப்பித் தரவேண்டும் என்பது தான்!

வீழ்ந்துவிட்டதே ரூபாயின் மதிப்பும்!

துணைத் தலைவர் அவர்களே! இந்த ரூபாயின் மதிப்பும் வீழ்ந்துவிட்டது. எந்த அளவுக்கு? பொருளாதார நிபுணர்கள் தமக்குள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். ரூபாயின் மதிப்பு இப்போது எவ்வளவு 17 பைசாவா? 19 பைசாவா? அல்லது 20 பைசாவா? என்று.

ஒருவேளை சர்க்கார் முன்வந்து தைரியமாகச் சொல்லக்கூடும் இல்லை, இல்லை. (ரூபாயின் மதிப்பு) 22 காசு என்று! எப்படியோ ஒன்று ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவிட்டிருக்கிறது!

நிர்வாகச் செலவினத்தில் நாகரிகப் போக்கு!

1948-49 ல், துணைத் தலைவர் அவர்களே! மொத்த வரி வருமானம் ரூ.695 கோடி. இப்போது நமது முன்னேற்றம் மிக அதிகமாகிவிட்டதல்லவா இப்போது 1965-66ல், மொத்த வரி வருவாய் ரூ.2,186 கோடி ஆகிவிட்டிருக்கிறது!

சர்க்கார் நிர்வாகச் செலவினம் இருக்கிறதே அதிலே நாம், மிகவும் நாகரிகம் வாய்ந்த-புதுமை மிக்க நாடுகளுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறோம்!
1948-49 ல் (நிர்வாகச் செலவு) ரூ.295 கோடி! 1963-64ல், ரூ.1,049 கோடி என்ற அளவை அடைந்து விட்டோம்!

புனிதமான தத்துவம் கேவலமடைவதா?

இந்த நிர்வாகச் செலவுடன், பொதுமக்களிடம் வரியாகப் பெற்ற பிருமாண்டமான தொகையையும், அதைவிடப் பெரிய அளவிலே வெளிநாடுகளிடம் கடனாகப் பெற்ற தொகையையும் சேர்த்துச் செலவிட்டதுடன், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் கிட்டத்தட்ட ரூ.14,973 கோடியும் செலவிட்டிருக்கிறோம். இதன் பயனாக எங்கே நாம் வந்தடைந்திருக்கிறோம்? ரூ.2,000 கோடி அளவுக்கு வரி வசூலித்து, ரூ.4,000 கோடி அளவுக்கு வெளிநாட்டுக் கடன் பெற்றுத் திட்டத் தொகைகள் மூலம் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி செலவழித்துக் குடித்தனம் நடத்திய இந்தச் சர்க்கார், இன்று சமூகத்தை வைத்திருக்கும் நிலைமை என்ன? இதோ, தமது கருத்தைக் கூறுகிறார் தேபர். அவருடைய கருத்தை மேற்கோள் காட்டி, இன்றுள்ள நிலைமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தைரியம் பெறுகிறேன்.

100 க்கு 60 குடும்பங்கள், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளையும் பெற்றிட முடியாத நிலையில் இருக்கின்றன.

என்று அவர் (தேபர்) கூறுகிறார்.

நான் பேராசிரியர் லால் அவர்களைக் கேட்பேன். அவர்கள் (சர்க்கார்), சமதர்மத்துக்குப் பாத்தியதை கொண்டாடலமாமா? அவர்கள் (சர்க்கார்) அதனை (சமதர்மத்தை) விட்டுவிடுவதுகூட நல்லது. அந்தப் புனிதமான தத்துவமான சமதர்மமாவது, கேவல நிலை அடையாதிருக்கும்!

சங்கட நிலைமைக்கு ஏதோ ஓர்சான்று!

சத்துள்ள உணவு ஒருவன் பெற (மாதம்) ரூ.35 தேவை என்று சமீபகாலத்து ஆய்வுரை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் மிகக் குறைந்த அளவு வருமானம் இப்போது ரூ.6.60 ரூ.9.60, ரூ.17.70 ரூ.13.23 என்ற அளவில் இருக்கிறது.

இவ்வளவு தொகையை தொகையை மட்டுமல்ல 18 ஆண்டுகள் எனும் நீண்டகாலத்தையும் தின்று தீர்த்தான பிறகு (சர்க்கார்) இந்த நாட்டையும் மக்களையும் இந்தச் சங்கட நிலைமையில் விட்டுவைத்திருக்கிறீர்கள்!

செலவிட்டீர் கோடி கோடியாக! ஆனால் நிலைமை...!

விவசாயத்தை எடுத்துக்கொண்டால் மூன்று திட்டங்களிலும் விவசாயம், நீர்ப்பாசனம் ஆகியவற்றுக்கு மொத்தத்தில் ரூ.3,289 கோடியை இந்தச் சர்க்கார் செலவிட்டிருக்கிறது. இவ்வளவு செலவிட்டுப் புதிய புதிய அணைகளைக் கட்டியும், 1947 ஆம் ஆண்டிலிருந்து 1965 ஆம் ஆண்டுவரையில், குறிப்பாக அமெரிக்காவிலிருந்தும், பொதுவாகப் பல வெளிநாடுகளிலிருந்தும் அவர்கள் (சர்க்கார்) ரூ.2,634 கோடி பெறுமானமுள்ள உணவுப் பொருளை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

ரூ.3,000 கோடிக்குமேல் விவசாயத்துக்கும், பாசனத்துக்கும் செலவிட்டான பிறகு, ரூ.2,634 கோடிக்கு உணவுப்பொருளை அவர்கள் (சர்க்கார்) இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

மீண்டும் ஆட்சி செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது?

1949 ஆம் ஆண்டு 100 புள்ளி என்று விலைராசியைக் குறித்துக்கொண்டு பார்த்தால், 1965 ல் விலைவாசி, 161 புள்ளி என்ற அளவுக்கு ஏறிவிட்டிருக்கிறது.

இந்த நாட்டிக்கு இவர்கள் தந்திடும் ஓவியம் இந்த விதமானதாக இருக்கும்போது, ஆட்சியிலே மீண்டும் நீடிக்க வேண்டும் என்று கேட்டிட இவர்களுக்கு உள்ள யோக்கியதாம்சம் என்ன என்பதைக் காட்டும்படி இப்போது நான் கேட்கிறேன்.

இவ்விதம் கூறினால் என்ன பலன் உண்டு?

ஆனாலும் குடியரசுத் தலைவர், உணர்ச்சி ததும்ப உரைக்கிறார் நமது நோக்கங்களை அனைவரும் அறிவர். நமது இலட்சியம் தெளிவானது என்பதாக!

அம்மையே! மரத்தின் இலட்சணம், அது தரும் கனியில் தெரியும் எழுதி ஒட்டப்பட்டுள்ள லேபிள் மூலமாக அல்ல!

இருந்தும், குடியரசுத் தலைவர், நமது நோக்கம் அனைவரும் அறிந்ததே. நமது இலட்சியம் தெளிவானது என்று கூறுகிறார். விசித்திரமாக இருக்கிறது! நோக்கங்கள் தெளிவாக தெரியாமலிருந் தாலாவது, இந்தச் சர்க்காருடைய குறைபாடுகளுக்கு ஒரு மன்னிப்பு இருக்கக்கூடும். இலட்சியம் என்ன என்பதுபற்றிக் கண்டறிவதிலேயே அவர்கள் அலைந்து அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றலாவது, சர்க்கார் தமது குறைபாட்டிற்காக ஓரளவு மன்னிப்புப் பெற்றிடக்கூடும். ஆனால் அவர்கள் கூறுகிறார்கள்-எமது நோக்கங்களை அனைவரும் அறிவர். எமது இலட்சியம் தெளிவானது என்று!

நமது சாதனைகளோ இவை! கொள்கை எதுவென்று தெரியால் இலட்சியம் என்ன என்பது புரியாமல் இருந்திருந்தால், உங்களுடைய சாதனை என்னவாக இருந்திருக்குமோ! அதைச் சோகம் கலந்த நகைச்சுவை நாடகாசிரியர் தாம் எழுதவேண்டும்!

ஆகவே, கொள்கைகளை அனைவரும் அறிவர். இலட்சியம் தெளிவானது என்று கூறிக்கொண்டிருப்பதிலே பயன் இல்லை!

மனமுடைந்து கிடக்கின்றனர் மக்கள்!

அன்றோர் நாள் என் நண்பர் தயாபாய் பட்டேல், இவர்கள் (சர்க்கார்) எவ்வளவு சீக்கிரமாகச் சமதர்மத்தை விட்டுவிடுகிறார் களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று கூறினார். அவர் ஒரு நோக்கத்துடன் அதைச் சொன்னார். நான் வேறோர் நோக்கத்துடன் கூறுகிறேன். அவருக்கு (படேலுக்கு)ச் சமதர்மம் என்றால் அருவருப்பு-எனக்கு அப்படி அல்ல நீங்கள் (சர்க்கார்) அல்ல சமதர்மத்துக்காகப் பாடுப்படக்கூடியவர்கள் என்பது என் கருத்து!

ஆகவேதான் நான் கூறுகிறேன்-நீங்கள் எவ்வளவு சீக்கிரமாகச் சமதர்மத்தை விட்டுவிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது. சமதர்மத்துக்கு இந்த நாட்டுக்கும் கூட! இந்தப் போக்கினால் இன்று நாட்டிலே எல்லாப் பகுதியிலும் மக்கள், மனம் உடைந்து கிடக்கக் காண்கிறோம்! தொழிலாளர்கள் மனம் உடைந்து போயுள்ளனர்! விவசாயத் தொழிலாளர்கள் மனம் உடைந்துக் கிடக்கின்றனர்! விலைகளின் ஏற்றத்தால் சுமை அதிகமாகி, நடுத்தரக் குடும்பத்தினர் மனம் உடைந்துபோயுள்ளனர்! பிற்படுத்தப்பட்ட மக்கள் நிச்சயமாகவே மனம் உடைந்து காணப்படுகின்றனர்!

பேராசிரியர் லால் அவர்கள், பழங்குடி மக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களும் அப்படியே! (மனம் உடைந்த நிலையிலேயே)!

அவர்கள் எங்கெல்லாம் உலவலாம் (உரிமையோடு) என்பதைக் கண்டறிய ஒரு குழு, நாட்டிலே சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இப்போதும் சில கிராமங்களில் சில தெருக்களில், இம்சைக்கு ஆளாகாமல் பழங்குடிமக்கள் உலவவில்லை என்று பத்திரிக்கைகளில் அந்தக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சர்க்கார் அலுவலகத்தினர், மனம் உடைந்து கிடக்கின்றனர்! பஞ்சப்படி உயர்வு தரப்படுகிறபோதெல்லாம் விலை முன்னதாகவே உயர்ந்து போயிருக்கிறது! விலைவாசி உயர்வுக்கும் பஞ்சப்படி உயர்வுக்கும் இடையே நடைபெற்றபடி இருக்கும் வேட்டை ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டிருப்பது அவர்களை மனம் உடைந்த நிலைபெறச் செய்துவிடுகிறது!

நமது விஞ்ஞானிகள் மனம் உடைந்துள்ளனர்-எங்கு (விஞ்ஞான)க் கல்வி கற்றார்களோ, அந்த நாட்டுக்கே போய்விட விரும்புகிறார்கள்!

நமது தொழில் கருவிமுறை நிபுணர்கள் மனமுடைந்து கிடக்கின்றனர். தொழிலமைப்புத் துறையில் தமக்கு உரித்தான இடமளிக்கப்படவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
கிளர்ச்சிக் கனல் மடிந்துவிடவில்லை!

துணைத் தலைவர் அவர்களே! இதனையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா நாங்கள் இந்தி மொழி பேசாத மக்கள் மனம் உடைந்து போயிருக்கிறோம்!

விவாதத்தை (குடியரசுத் தலைவர் பேருரைக்கு நன்றி கூறும் விவாதத்தை)த் துவக்கிவைத்த என்னுடைய நண்பர் தாம் இந்தி பேசாத பகுதியினர் என்றபோதிலும் இந்தி மொழியினில் துணிந்து பேசுவதாகச் சொன்னார். அது, இந்தி பேசாத மக்களுடைய மனப்போக்கை (விளக்கி)க் காட்டுகிறது!

இந்தி பேசும் மக்களே பெரும் அளவில் கூடியுள்ள ஒரு அவையில், இந்தி மொழிக்காரரல்லாத (தாய் மொழியாகக் கொள்ளாத) ஒருவர் இந்தியில் பேசவேண்டுமென்றால், துணிவு வேண்டும் ஏன்? அவருக்குத் தெரியும் அது (இந்தி) தம்முடைய (தாய்) மொழி அல்ல என்று! எவ்வளவு நேர்த்தியாகப் பேசினாலும் இந்தி மொழியாளர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் (இந்தி மொழியாளரல்லாதாரின்) பேச்சின் நடை அமைப்பு ஆகியவற்றிலே குறை கண்டுப்பிடிப்பார்கள் என்பது தெரிகிறது.

பேராசிரியர் லால்:- இல்லை, நாங்கள் பாராட்டினோம்.

அண்ணா:- பேராசிரியர் லால் கூறுகிறார். தாம் பாராட்டியதாக! நாம் எப்போதும் அபூர்வ வேலைப்பாடுள்ள பொருளைப் பாராட்டுகிறோம்! ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால், என்னுடைய நண்பர் தமது பேச்சை, நான் துணிந்து இந்தியில் பேசுகிறேன் என்றுதான் துவக்கவேண்டி வந்தது அதைக் கூறுகிறேன்.
துணைத் தலைவர் அவர்ளே! தங்களுக்கும், தங்கள் மூலமாக இந்தச் சர்க்காருக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் கனல்
அடியோடு மடிந்துபோய் விடவில்லை என்று!

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறப்பாக மாணவர்கள், அந்நியத் தாக்குதலில் நாடு சிக்குண்டதைக் கண்டபோது கிளர்ச்சியை ஒத்திபோட்டு வைத்தனர். மொழி சம்பந்தமாக இந்தச் சர்க்கார் கொண்டுள்ள கொள்கை, மேற்கொண்டுள்ள வேலை முறை ஆகியவற்றிலே திருப்தி ஏற்பட்டதால் அல்ல. ஆனால் நாட்டுப் பாதுகாப்புக்கு முதல் இடம் தரவேண்டும் என்பதற்காக!

சின்னாட்களுக்கு முன்புதான், சென்னையில், மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது, அவர்கள் திட்டவட்டமாகத் தமது உறுதியைத் தெரிவித்திருக்கிறார்கள் இப்போது மேற்கொள்ளப் பட்டுள்ள மொழிக் கொள்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை என்பதே!
இந்தி ஏகாதிபத்தியம் ஏற்படவிடப் போவதில்லை!

எங்கெல்லாம் இந்த மொழிப் பிரச்சினை எழுந்திடினும்-நல்ல புத்திமதி கூறிடவும், நட்புணர்ச்சியுடன் யோசனைகளை நல்கிடவும், தோழமையுடன் கலந்து பேசிடவும் பலர் முற்படுவதை நான் காண்கின்றேன்.

என்னையும் என்போன்ற எண்ணம் கொண்டவர்களையும் கேட்கின்றனர்-இந்தியை ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? எந்த மொழி மீதுதான் எதற்காக எதிர்ப்புக் காட்டவேண்டும்? என்றெல்லாம்!

தங்கள் மூலமாக, துணைத் தலைவர் அவர்களே! இந்த அவைக்குக் கூற விரும்புகிறேன்-இந்தி மொழியாளர் அல்லாதாருக்கு சிறப்பாகத் தமிழக மக்களுக்கு, தக்க ஆதாரத்தின் மீது (இந்தி மொழி பற்றிய) அச்சம் ஏற்பட்டிருக்கிறது! வீண் பீதி அல்ல அது! இந்தியச் சர்க்காரில் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டுவரும் வலிப்பும் துடிப்பும் கொண்ட நடவடிக்கைகள், எமது அச்சத்தை மேலும் வளர்த்துவிடுகின்றன!

ஆகவே, அது, வீணான அச்சம் தேவையற்ற அச்சம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதிலே பயன் இல்லை!

ஒரு மொழிக்கு ஏற்றம் ஆதிக்கம் இந்தி ஏகாதிபத்தியம் அமைக்கத் திட்டமிட்ட செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று நாங்கள் அஞ்சுகிறோம்.

அது நடைபெறப்போவதில்லை! தென்னகம் வங்கத்தையும் சேர்த்துக்கொள்கிறேன். நமது நாட்டில் எந்தவிதமான மொழி ஏகாதிபத்தியமும் ஏற்பட விடப்போவதில்லை!

நாட்டுப்பற்று பல்வேறு வகையான பற்றுகளின் கூட்டு!

மெய்யுணர்வோடும் பொறுப்புடனும் நீங்கள் தேசீய ஒருமைப் பாடு பற்றிப் பேசுவதனால், தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள் நாட்டை மொழிமூலமாகத்தான் இணைக்கமுடியும் என்று கருதாதீர்கள்! அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டைப் பாதுகாத்திட இந்திய சர்க்காருக்கு ஆதரவு தந்திட வேண்டுமென்று இந்திமொழியில் பேசியா எனக்குத் தெரிவித்தீர்கள்? இல்லை! கிழக்கு-மேற்கு முனைகளில் உண்மையிலேயே ஆபத்து இருக்கிறது என்பதை நான் இந்தி மொழிப் பத்திரிக்கைகளைப் படித்துப் பார்த்தா தெரிந்து கொண்டேன்? இல்லவே இல்லை!

நாட்டுப் பற்று என்பது, பல்வேறுவகையான பற்றுக்களின் கூட்டு! மொழிப்பற்று என்பது, மற்ற எந்தப் பற்றைக் காட்டிலும் மெய்யுணர்வு அற்றது அல்ல எழுச்சிக் குறைவானது அல்ல!
கற்றறிவாளரிடமும் மனக்குமுறல்!

ஒரு சனநாயக நாட்டில் நாகரிகமறிந்த ஒரு சனநாயகவாதியின் கடமை, பல்வேறு பற்றுகளில் (எது முதல் எது இரண்டாவது என்பது போன்ற) வரிசை முறை காண்பதுதான்! எந்த ஒரு பற்றும் மற்ற ஒரு பற்றுக்கு மாற்று ஆகிவிடாது (ஈடாகிவிடாது) இதனால்தான் (இதனை உணராததால்தான்), சிலர் எங்கள் மீது குறைகாண்கின்றனர்-நாங்கள், தேவையற்று வீணுக்கு-இந்த மொழிப் பிரச்சனைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் எந்கின்றனர்.

இங்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்த மொழிப்பிரச்சினை வளர்ச்சிபெற்ற சனநாயக நாடுகளில், சாமானியர்களிடம் மட்டுமல்ல-கற்ற அறிவாளிரிடமும் மனக்குமுறலை மூட்டிக் கொண்டிருந“திருக்கிறது!

தவறான வாதத்திற்குத் தயவு செய்து செல்லாதீர்!

கனடா நாட்டின் மொழிப் பிரச்சினை சிக்கல் அனைவரும் கூர்ந்து கவனிக்கத்தக்க ந‘லை பெற்றதாகும். ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களால் அமைக்கப்பட்ட நாடு கனடா. ஆங்கில மொழிபேசும் கனடியரும் உள்ளனர்-பிரெஞ்சு மொழி பேசும் கனடியரும் உள்ளனர். பிரெஞ்சு மொழி பேசுவோர் ஒரு குறிப்பிட்ட பகுதியான கியுபெக்கில் உள்ளனர். மொத்தத்தில் பிரெஞ்சு மொழி பேசுவோர் சிறுபான்மையினராக உள்ளனர்.

கனடாவில் ஒருமைப்பாடு காண விரும்பியதால் கனடா அரசாங்கம், சட்டவழியில் கனடாவை இருமொழி அரசு ஆக்கி பிரெஞ்சு, ஆங்கிலம் எனும் இரு மொழிகளுக்கும் சரிசமமான உரிமை கொடுத்தனர். எனினும், இரு மொழித் திட்டத்தை அமுலாக்குவதில், ஆங்கில மொழி பேசுவோர் மிகுதியான பலனைப் பெற்றனர். (உயர்வு) ஏணியின் உச்சிப்படியில் ஏறினர்!

இப்போது கியுபெக்கில் உள்ள பிரெஞ்சு மொழியாளர்கள் (ஆங்கில) மொழி ஆதிபத்தியத்தை எதிர்த்து ஏன் என்று கேட்கவும், கண்டிக்கவும், புரட்சி செய்யவும் முற்பட்டு நிற்கின்றனர்.

ஆகவே, தேவையற்ற பிரச்சினையைத் தமிழர்கள் தேடுகிறார்கள்-கிளறுகிறார்கள் என்னவோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்ற தவறான வாதத்திற்குத் தயவு செய்து செல்லாதீர்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நாங்கள்:
தமிழர்களாகிய நாங்கள் மிக அமைதியாக இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் மிக மிக உறுதி கொண்டிருக்கிறோம்.

நாங்கள் எப்போதும் அற்ப சொற்பமான விஷயங்களில் ஈடுபடவில்லை. ஏனெனில், நாங்கள் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்!

ஆகவேதான், தமிழகத்தில் மொழிப் பிரச்சினை, அரசியல் கட்சித் தொடர்புகளை உடைத்தெறிந்து கொண்டு வருகிறது!

இன்று மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி வழக்கறிஞர் சங்கங்களைச் சார்ந்தோரும் முன் வந்துள்ளனர். இந்தி மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற‘ட கண்டித்திட!

பிரச்சினை மடியவில்லை-மறுபரிசீலனை தேவை:
இந்தச் சர்க்கார், தனது மொழிக் கொள்கையைக் குழப்பமற்ற விதத்தில் தெளிவுபடுத்தித் தீரவேண்டும். இப்போதே காலங்கடந்து விட்ட நிலை.

பரபரப்புமிக்க கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இன்றையத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள், சென்னைக்கு வந்திருந்தார் என்பது என் நினைவில் இருக்கிறது. அப்போது அவர்கள், பத்திரிகை நிருபர்களிடம், சென்னைக்கு வந்து ந‘லைமையை கண்டபிறகு, மொழிப் பிரச்சினை பற்றிப் புதிய சிந்தனை, (மறு பரிசீலனை) தேவை என்பதை நான் உணருகிறேன் எனக்கூறினார்கள். ஆனால் இந்தப் புதிய சிந்தனை, அவர்களை எங்கே கொண்டு சென்றிருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

தலைமையமைச்சராக இல்லாதிருந்தபோதே, மறு பரிசீலனை தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால், இந்த நாட்டு மக்களுடைய வாழ்வை நிர்ணயிக்கும் பாதுகாவலராக அவர்கள் ஆகியிருக்கும் இப்போது, அந்த மறுபரிசீலனை அதிகமாகத் தேவைப்படுகிறது மறுபரிசீலனை செய்திடவும், திருத்தி அமைத்திடவும், நொறுங்கிக் கிடக்கும் தமிழகத்தாரின் நம்பிக்கையினைத் திருப்பித் தட்டி எழுப்பிடவும் அவர்கள் முனைந்திட வேண்டும்.

எனவேதான், குடியரசுத் தலைவரின் பேருரையில் மொழிப் பிரச்சினை பற்றி ஏதும் குறிப்பிடாமலிருப்பது பற்றி நான் மிகுந்த வருத்தப்பட்டுக் கொண்டேன்.

ஆனால் அதிலே (பேருரையில்) குறிப்பிடாததாலேயே, நாங்கள் அதனை (மொழிப் பிரச்சனையை) நினைவிலே வைத்துக் கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டு விடாதீர்கள்!

கிளர்ச்சிகள் நடைபெறவில்லை என்பதாலேயே, மொழிப் பிரச்சினை மடிந்துபோய் விட்டது என்று தயவு செய்து எண்ணிக் கொண்டு விடாதீர்கள்!

கிளர்ச்சி என்பது வேறு-வன்முறை என்பது வேறொன்று!

கிளர்ச்சி என்று நான் குறிப்பிடுவது, வன்முறை (பலாத்கார)க் கிளர்ச்சியைக் கூறவில்லை. ஏனெனில், வன்முறை என்பது, பின் விளைவுதான்!

எவரும் வன்முறைக் கிளர்ச்சியைத் துவக்குவதில்லை. வன்முறைக் கிளர்ச்சி ஒரே ஒரு முறைதான் திட்டமிட்டு நடத்தப்படும் அதுதான் கடைசி முறையாகவும் இருக்கும் அதுதான் புரட்சியாகும்!

ஆனால், எந்தக் கிளர்ச்சியின் போதும் சமூக விரோத சக்திகள் நுழைந்துவிடும் போது, கிளர்ச்சியைத் துவக்கினவர்களே வெட்கப்படும்படியான காரியங்கள் நடைபெற்றுவிடுகின்றன. ஆகவே நான், கிளர்ச்சி என்று கூறும்போது, வன்முறைக் கிளர்ச்சியைக் குறிப்பிடவில்லை.

மனம் உடைந்த நிலையில் ஒத்துழைப்புக்கு இடமெங்கே?

நான் இந்தச் சர்க்காருக்குச் சொல்லிக் கொள்வேன்-நாங்கள் மனம் உடைந்து இருக்கிறோம்-இன்றையச் சர்க்காருடைய மொழிக் கொள்கையாலும் நடவடிக்கைகளாலும் இந்தி மொழி பேசாத மக்கள் மனம் உடைந்துள்ளனர்!

நான் கூறியபடி, துணைத் தலைவர் அவர்களே! எங்கு பார்த்தாலும் மனம் உடைந்த நிலை இருந்து வருகிறது. இவ்வளவு பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டான பிறகு-இவ்வளவு நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த பிறகு மக்களிடம் உள்ள தவிப்பு உணர்ச்சியை உங்களால் (சர்க்காரால்) போக்க முடியவில்லை என்றால், குடியரசுத் தலைவர் விரும்புகிறாரே- நாங்கள் ஒத்துழைக்கும் உணர்ச்சி கொள்ள வேண்டும் என்று அது எப்படி முடியும்!

குடியரசுத் தலைவர் அவர்கள், அரசியல் கட்சிகளுக்குள்ளே ஒத்துழைப்பு வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் கட்சியல்லாத அமைப்புகளுக்கும் இடையே ஒத்துழைப்பு வேண்டும். நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒத்துழைப்பு உணர்ச்சி எழவேண்டும் என்று விரும்புகிறார் எனத் தெரிகிறது.

நான் அந்த விருப்பத்தை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களை இந்தப் பிரச்சனைபற்றி இதயசுத்தியுடன் எண்ணிப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் (ஆளுங்கட்சியினர்) மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு உணர்ச்சி காட்டிடும் திறனுடன் இருக்கிறார்களா?

சான்றொன்று தருகிறோம்-சீர்தூக்கிப் பாருங்கள்!

துணைத் தலைவர் அவர்களே! சான்றொன்று கூறட்டுமா? இந்த அவை அறியும்-தி.மு.கழகத்தினராகிய நாங்கள் சென்னை மாநகராட்சியை நடத்திச் செல்கிறோம் என்பதை!
கடந்த ஆறு ஆண்டுகளாகச் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தை நாங்கள் நடத்திச் செல்கிறோம். ஆயினும் நாங்கள், அரசியல் பூசல்களைக் கிளப்பிவிடத் தக்க அரசியல் அற்பத்தனத்தை மேற்கொண்டிடவில்லை!

தி.மு.கழகம், சென்னை மாநகராட்சியில் ஆட்சிசெய்துவரும் இந்த நாட்களிலேதான் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசருக்குச் சிலை அமைத்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றோர். அவையில் (மக்கள் சார்பில்) புகழிடம் பெற்று வீற்றிருந்த காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களுக்கு சிலை அமைத்தோம். இந்தியாவிலேயே இதுதான் முதலாவது என்று எண்ணுகிறேன். மறைந்த பெரியவர் லால்பகதூர் சாஸ்திரிக்குச் சிலை அமைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இதனை அரசியல் அற்பத்தனம் என்று கருதுகிறீர்களா? இல்லை! ஆனால் ஆளுங்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழகத்தின் உள்ளே நெடுந்தொலைவிலுள்ள ஒரு நகரத்தில் ஒரு பேருந்து நிலையம் (பஸ் ஸ்டாண்டு) திறக்கப்படுகிறது. அதற்கு தி.மு.க. தலைவர் ஒருவரின் பெயரிடப்படுகிறது. துரதிருஷ்டவசமாக என் பெயர். உடனே தமிழக காங்கிரசு கொதித்து எழுகிறது. தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. பெயர்ப் பலகை அப்புறப் படுத்தப்படுகிறது. கைச்சாத்து (இரசீது) புத்தகங்கள் அச்சிடப்பட்டவை திரும்பப் பெறப்படுகின்றன. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குடிஅரசுத் தலைவர் அவர்களோ, ஒத்துழைப்பு உணர்ச்சி வழங்கும்படி எங்களைக் கேட்டுக் கொள்கிறார்.

ஒத்துழைப்பு உணர்ச்சியை உருவாக்குகிறதா இந்த ஆட்சி?
வெற்றி உலாவின்போது, காலஞ்சென்ற லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், சென்னை வந்திருந்தார். சென்னைக் கடற்கரைத் திடலில் அவர் பேருரையாற்றியபோது, அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசர், அங்கு, அவர் உடன் இருந்தார்.

அகில இந்திய காங்கிரசுத் தலைவர் காமராசருடைய பெயரைச் சொல்லுவதால், அவரிடம் எனக்குப் பகை உணர்ச்சி என்று கருதிக் கொள்ளாதீர்கள். நான் அவருடைய சிறந்த நண்பர்களிலே ஒருவன்-அவர் மேடைமீது இருந்தார். அதற்காக எவரும் குறைபட்டுக் கொள்ளவில்லை!
ஆனால், ஒத்துழைப்பு உணர்ச்சி என்பது செயல்படுத்தப்பட வேண்டுமானால், காங்கிரசுக் கட்சியும் தமிழக அரசும், என் கட்சியனரான சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரை அழைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா? அழைக்கப் படவில்லை.

தமிழகச் சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தபோது முதலமைச்சர், நாங்கள் காமராசரைத் தனி அழைப்புக் கொடுத்து அழைக்கவில்லை. பலருக்கு அழைப்புக்கள் அனுப்பியிருந்தோம். காமராசர் வந்திருந்தார் என்று பதிலளித்தார்.

துணைத் தலைவர் அவர்களே! எங்கள் மீது கரி பூசுவதாகக் கொண்டு தமிழக முதலமைச்சர், குழைத்த தார்கொண்டு, அகில இந்தியக் காங்கிரசுத் தலைவருடைய நல்ல பெயர் மீது அப்பீவிட்டிருக்கிறார்! தனியான அழைப்பு ஏதும் இல்லை. பலருக்கு அழைப்பு அனுப்பினோம், அவர் வந்திருந்தார் என்கிறார்.

திருமதி லலிதா இராசகோபாலன்-ஒரு ஒழுங்குப்ப பிரச்சினை இதற்கும், குடியரசுத் தலைவர் பேருரைக்கும் என்ன சம்பந்தம்.

துணைத் தலைவர்-அவர் அதுபற்றிக் கூறலாம், நாம் அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலெந்த ஒழுங்குப் பிரச்சனையும் எழவில்லை. ஆமாம், நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்?

என்.எம்.அன்வர்-அவர், முழு நேரம் எடுத்துக் கொள்ளட்டும்.

பி.என்.சாப்ரூ-ஆமாம், நாங்கள் அவர் பேச்சைக் கேட்க விரும்புகிறோம்.

அண்ணா- அதனால்தான், ஒத்துழைப்பு உணர்ச்சி என்பதைச் செயல்படுத்துவது குறித்து எனக்குச் சந்தேகம் எழுந்தது.

ஒத்துழைப்பு உணர்ச்சி செயல்படுத்தப்பட வேண்டுமானால், ஆளுங்கட்சியினரின் மனப்போக்கு முழுவதுமாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அதற்குத் தயாராக இருந்தால், இந்த வரிசையில் உள்ள நாங்கள், ஆளுங்கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்-தீமையை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைக்கிறோம்-எந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவது என்பதிலே ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிடுமானால்!

எந்த அடிப்படை மீது நடைமுறை அமைக்கப்பட்டிருக்கிறது?

நாம், நமது இலட்சியத்தைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள், இலட்சியம் தெளிவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அடிக்கடி ஆசையுடன் கூறிக் கொள்கிறார்கள்-நாங்கள் தத்துவார்த்தவாதிகள் அல்லர். நாங்கள் நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுபவர்களாக இருக்கப் போகிறோம் என்று!

துணைத் தலைவர் அவர்களே! நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுவது என்றால், இலட்சியத்தை இளைக்கச் செய்துவிடுவது அல்லது கேவலமாக்கிவிடுவது என்பதல்ல, நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்கு நடைமுறைக்கேற்பச் செயல்படுவது ஒரு வழியாகக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த நடைமுறை, எந்த அடிப்படை மீது அமைக்கப்பட்டிருக்கிறது?

நடைமுறைக்கு ஏற்றபடி செயல்படுவதும் ஒரு இலட்சியத்தின் மீதுதான் கட்டப்பட வேண்டும். அப்படியானால், உங்கள் இலட்சியம் என்ன? சமதர்மம், அது தெரியாதா உனக்கு? அப்படித்தான் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆமாம், ஆமாம், உங்கள் இலட்சியம் சமதர்மம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஏன் அது-பேராசிரியர் லால் போன்ற பேராசிரியர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த சமதர்மத்திலிருந்து அவ்வளவு மாறுபட்டிருக்கிறது?

கலப்படப் பொருளாதாரம்தான் சமதர்மத் தத்துவமா?

அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தனர்-சமதர்மம் என்றால், அதிலே லாப நோக்கம் களைந்தெறியப்பட்டு, தொண்டு நோக்கம் தலையாய இடம் பெற்றிருக்கும் என்பதாக! (தொழிலில்) இலாப நோக்கம் குறைக்கப்பட்டு தொண்டு நோக்கம் உயர்த்தப்பட்டிருப்பினுங்கூட, முழு அளவு சமதர்மத்தைப் பெற்றுவிட முடியாது. ஆனால் சமதர்ம பாதையில் செல்கிறோம் என்று ஏற்படும்.
ஆனால் நாம் இங்கு என்ன காண்கிறோம்? ஆசையுடன் கூறிக் கொள்கிறார்களே-கலப்பட பொருளாதாரம் என்று! அதுதான் அவர்களிடம் இருக்கிறது.

ஒரு முறைக்கு மேல் நான் இந்த அவையிலும் வெளியிலேயும் கூறியிருக்கிறேன். அது கலப்புப் பொருளாதாரமல்ல. கலப்படப் பொருளாதாரம் என்று.

முதலாளித்துவ முறையில் உள்ள கெட்டதை எடுத்துக் கொள்கிறீர்கள். சமதர்மத்தில் உள்ள நல்லவற்றை விட்டு விடுகிறீர்கள். ஒரு விசித்திரமான கலப்படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதைத்தான் உருவாக்கி இருக்கிறீர்கள்!

தொல்லைகள் உள்ள நிலைமைதான் தெளிவான இலட்சியமா?

பதினெட்டு ஆண்டுகள் தடுத்து நிறுத்துவாரற்ற விதமான அதிகாரத்தை நடத்திக் கொண்டிருந்துவிட்டு, கனவிலே கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவு தொகையை, கோடி கோடியான தொகையை செலவிட்டான பிறகு, நீங்கள் இந்த நாட்டை எந்த நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் என்றால்-கனம் உறுப்பினர் ஒருவர் எழுந்திருந“து, எனக்கு குடிநீர் வேண்டும் என்று கேட்கிறாரே-அந்த நிலைமைக்கு! ஆனால் நமது இலட்சியம் தெளிவாக இருக்கிறது-நமது நோக்கம் இதோ இருக்கிறது.

ஒன்றே ஒன்றுதான் இங்கு, குடிநீர் தேவை என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! குடியிருக்க வீடு வேண்டும் என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! உணவு வேண்டும் என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! வேலை கொடு என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்! நீதி வழங்குக என்று கேட்கும் மக்கள் இருக்கிறார்கள்!

இவைகளிலே ஒன்றைக்கூட நாம் தந்திடவில்லை! ஆனால் நமது நோக்கம் தெளிவானது-இலட்சியம் அதோ இருக்கிறது!

பார்வை பழுதானதன் விளைவா இது?

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னாலே மோசஸ் (கிருத்துவ மத நூலில் கூறப்படும் வழிகாட்டியான மோசஸ் போன்ற நிலையில் தன்னை நினைத்துக் கொண்ட காங்கிரசு அரசு) கூறினார். நாட்டு மக்களை மகிழ்ச்சிபுரிக்கு அழைத்துச் செல்வதாக!

குழந்தைகளே! என் பின்னே வாருங்கள்-உங்களை நான் மகிழ்ச்சிபுரி அழைத்துச் செல்கிறேன் என்றார் மோசஸ்.

மக்கள் கேள்வி எழுப்பாமல், நம்பிக்கையுடன் பற்றுடன் தயக்கமின்றி பின்தொடர்ந்தனர்.

அவர்களை (மக்களை) நீங்கள் (சர்க்கார்) எங்கே அழைத்துக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்? பார்வையே பழுதுபட்டுப் போயிருப்பதால், கருப்பு சிவப்பாகவும் சிவப்பு கருப்பாகவும் தெரியக்கூடிய ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!

வேற்றுமை ஒழிந்ததா? வேதனை குறைந்ததா?

எவ்வளவு (உணவு) உற்பத்தி ஆகிறது என்பது உங்களுக்குத் தெரியாது! உற்பத்தியான உணவுப் பொருள் எங்கே போய்விடுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது! ஐந்தாண்டுத் திட்டங்களால் ஏற்பட்ட பலன்கள் யாவை என்பதுகூட நமக்குத் தெரியாது! நான் தக்க ஆதாரத்துடன் இதைக் கூறுகிறேன். இதோ ஒரு கண்டனக் குறிப்பு.

சோஷலிச (சமதர்ம) இலட்சியத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு பதினொன்று ஆன பிறகும், ஏழை பணக்காரன் பேதம் ஒழிவதுகூடக் கிடக்கட்டும்-அந்தப் பேதம் குறையக் கூடக் காணோம்! ஒரு புறத்தில் சீமான்கள் கூட்டம், போகபோக்கியமாகச் செலவிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! மற்றோர்புறத்திலோ, எளியோர்கள், வேதனையிலும் வறுமையிலும் தள்ளப்பட்டுத் தவிப்பதைப் பார்க்கிறோம்!

நாளாக ஆக உற்பத்தித்துறை, சாமானியனுடைய அடிப்படைத் தேவைப் பொருள் உற்பத்தியில் நாட்டம் செலுத்தாமல், போகபோக்கியப் பொருள் உற்பத்தியிலேயே ஈடுபட்டிருக்கக் காண்கிறோம்!
வல்லாளன் வாயிலிருந்தே வந்த வார்த்தையாயிற்றே!

இந்த நாட்டு மக்களை இந்தச் சர்க்கார் அழைத்துச் சென்றுள்ள தரம் இதுதான்! இந்தக் கண்டனம், பொருளாதாரத் துறை வல்லுநர் கூறியது அல்ல, பொருளாதாரத்துறை வித்தகருடையதாக இருப்பின், வெறும் தத்துவார்த்தப் பேச்சு என்று கூறிக் கண்டனத்தை ஒதுக்கித் தள்ளிவிடுவீர்கள். இந்த பக்கமுள்ள எங்களிலே எவரேனும் இதனைக் கூறியிருந்திருப்பின், ஓ! அவர்கள் அதிருப்தியாளர்கள். ஆகவே இதையெல்லாம் சொல்லுகிறார்கள் என்று கூறிவிடுவீர்கள். ஆனால் இது (கண்டனம்) அகில இந்திய காங்கிரசுத் தலைவர் காமராசரிடமிருந்து வருகிறது....

வாஜ்பாய்-வல்லாளன் வாயிலிருந்தே வந்திருக்கிறது.

அண்ணா-என் மதிப்புமிக்க நண்பர் வாஜ்பாய், ஒரு வார்த்தையைத் தருகிறார். நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை. நான் கூறுவேன். எந“த வாய்க்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஊட்டி வந்தார்களோ அரசியல் சம்பந்தமாகக் கூறுகிறேன். உடல்கூறு முறையின்படி அல்ல அந்த வாயிலிருந்து வந்திருக்கிறது (கண்டனம்) என்று கூறுவேன்.

அகில இந்திய காங்கிரசுத் தலைவர், தமது ஜெய்ப்பூர் பேச்சொன்றில் இதுபோலக் கூறியிருக்கிறார். என்றாலும், உங்கள் நோக்கங்கள், அனைவரும் அறிந்தவையே என்கிறீர்கள்! உங்கள் சாதனைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதே! எப்படி உங்கள் நோக்கங்களைக் கேட்டு உற்சாகம் பெறமுடியும்.

பயன்படவேண்டிய பணம் எப்படிப் பாழாகிறது?

உண்மையான நோக்கமும், உண்மையான இலட்சியமும் இருந்திருக்குமானால், எங்களை (நாட்டு மக்களை)ப் பாதி வழியாவது அழைத்துச் சென்றிருப்பீர்கள் அதனைச் செய்தீர்களா?

ஒரு சிலரிடம் இதோ மற்றோர் கண்டனம். செல்வம் குவிந்து விடுவதுதான், பணவீக்கத்துக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.

இதைப் பேராசிரியர் லால் கூறியிருந்தால், அமைச்சர் அவையினர், இது உங்களுக்குத் தோன்றிய கருத்து என்று பதிலளித்து விட்டிருப்பர்! ஆனால் இது, எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்து அல்ல!
பணம் படைத்தவர்கள் அட்டகாசமாகச் செலவு செய்வது மட்டுமன்றி, பணத்தைக் குவித்து மறைத்து வைக்கும் போக்கையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் விலைவாசி ஏறிவிடுகிறது! எப்படி என்றால் உற்பத்திப் பெருக்கத்துக்குப் பயன்படவேண்டிய பணம், கெடுக்கும் சக்திக்குப் பயன்பட்டுவிடுகிற காரணத்தால்!

சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோமா?

துணைத்தலைவர் அவர்களே! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு (கல்லூரி) வகுப்பு அறையில் என்னுடைய பொருளாதாரத் துறைப்பேராசிரியர், இதையேதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். பணத்தை, உற்பத்திச் சாதனத்துக்காகப் பயன்படுத்தாவிட்டால் பணவீக்கம் ஏற்படும் என்று!

ஆனால் அதையேதான், பதினோராண்டுகால சமதர்மக் கோலத்துக்குப் பிறகும் இங்கு கூறப்படுகிறது. இதனை கனம் குல்ஜாரிலால்நந்தா கூறியபோது அவர்தான் இவ்விதம் கூறினவர் ஒரு குறுக்கீடு கிளம்பிற்று, கனம் உறுப்பினர் ஒருவர் திரு.மாளவியா நாம் சரியான பாதையிலே சென்று கொண்டிருக்கிறோமா? என்றோர் கேள்வி கேட்டார்.

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்கள்! நாம் சரியான பாதையிலே சென்றுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி!

அதற்குத் தரப்பட்ட பதில் துணைத் தலைவர் அவர்களே-அதைவிட மிகுந்த விசித்திரமானது, இப்போது நாம் சென்று கொண்டிருக்கும் வேகத்திலே போய்க் கொண்டிருந்தால், நாம் எதையும் சாதிக்க முடியாது என்று பதில் அளிக்கப்பட்டது.

கேள்வி:பாதை சரியானதுதானா எ
ன்பது பற்றி! பதிலோ வேகத்தைப் பற்றி! நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறோமா என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
செல்கிற பாதை சரியானது என்றால், நான் வேகத்தைப் பற்றி அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டேன். ஐந்து வருடத்திலோ... பதினைந்து வருடத்திலோ... இருபத்தைந்து வருடத்திலோ (இலட்சியத்துக்கு) போய்ச் சேரலாம்.

எந்த நிலையிலே இருக்கிறது இன்று காங்கிரசுக் கட்சி?

கண்டனம் என்று வார்த்தையைப் பயன்படுத்தக்கூட நான் அஞ்சுகிறேன். ஆனால் வேறு வார்த்தை இல்லை! என் கண்டனம் என்னவென்றால், நீங்கள் (சர்க்கார்) சரியான பாதையில் சென்று கொண்டில்லை என்பதுதான்.

ஏன் அவ்விதம் என்றால், சர்க்காரை நடத்திச் செல்லும் கட்சி இலட்சிய அடிப்படையில் இணைந்துள்ளவர்களைக் கொண்டதாக இல்லை. அங்கு (காங்கிரசுக் கட்சியில்) நாம், சுதந்திரக் கட்சியினரைக் காண்கிறோம். பிரஜா சோஷலிஸ்டுகளைப் (போக்கினர்) களைப் பார்க்கின்றோம். கம்யூனிஸ்ட்டுகளைப் பார்க்கின்றோம். சம்யுத்த சோசலிஸ்டுகளைப் பார்க்கின்றோம் துரதிருஷ்டவசமாக என் கட்சியினர் எவரும் அங்கு இல்லை!

அந்த (காங்கிரசு)க் கட்சி ஒன்றுபடுத்தப்பட்ட நிலையில் இல்லை அவ்வளவு குழம்பாக இருக்கிறது. உள்ளே எதுவும் புகலாம் எதுவும் வெளியே வந்துவிடலாம், அந்த நிலையில் (காங்கிரசு) கட்சி இருக்கிறது!

அதனால்தான் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், நீங்கள் நாட்டை இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை! நோக்கங்களை நிறைவேற்றிவைக்க இயலவில்லை.

ஒளிமயம் கண்டு மயங்கிக் கிடக்கிறீர்கள்-அடித்தளத்திலே உள்ள வெடிப்பைக் கண்டுபிடிக்க மறந்து விட்டீர்கள்!

மக்கள் சரியாக இருக்கிறார்கள். அடங்கி ஒடுங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதிலே நீங்கள் மகிழ்ச்சி பெறக்கூடும்.

பிரெஞ்சு புரட்சியின்போது வரலாறு படித்த மாணவர் அறிவர்-புரட்சி வெடித்துக் கிளம்பும் நேரத்திற்கு முன்புவரையில், எல்லாம் சரியாக (அமைதியாக) த்தான் இருந்தது-பாரிஸ் பட்டணத்தில் அரண்மனை போன்ற கட்டிடங்கள் இருந்தன. காவியக் கழகங்கள் இருந்தன. அங்கு சிற்பக் கட்டிடக் கலை நேர்த்திமிக்க மாடங்கள் கூடங்கள் இருந்தன. அவைகளை இலண்டனிலுள்ளவர்கள் வந்து கண்டனர். அதுபோன்ற கட்டிடம் அமைத்திடும் வழி கண்டிட கவிஞர்கள், நாடக இசைப்புலவர்கள் நடன நாரிமணிகள் இருந்தனர். எல்லாம் கண்கவர் வனப்புடன் இருந்தன. புரட்சி கிளம்பி எங்கும் செந்நிறக் குருதி குபுகுபுவென பீறிட்டுக் கிளம்பும் வரையில்!

ஏன் அப்படி என்றால், அடித்தளத்தில் வெடிப்பு இருந்தது. அதனைக் கண்டறிய முடியாமற் போய்விட்டது!

கலசத்தின் ஒளிமயம் கண்டு மயங்கிக் கிடக்கிறீர்கள் அடித்தளத்திலே வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்க மறுந்துவிட்டீர்கள்!

துணைததலைவர் அவர்களே! அந்த வெடிப்புதான் மக்களைக் கசக்கிப் பிழியும் வறுமை, ஆபத்தூட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டுவரும் வேலையில்லாத் திண்டாட்டம், நான் துவக்கத்திலே குறிப்பிட்டேனே மனம் முறிந்து போயுள்ள நிலை அது! என்றாலும், நீங்கள் நோக்கங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

காலஞ்சென்ற பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி, விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள பெருந்திரளான மக்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாட்டாளிகள் விலைவாசி ஏற்றத்தாலே நலிந்து கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினர் என்பவர்களுக்கு நிம்மதி கிடைத்திடச் செய்துவதுதான், சமதர்மம் என்று என் மனதிற்குத் தோன்றுகிறது என்று கூறினார்.

நீங்கள், சமூகத்திலுள்ள இத்தனைப் பகுதியினரையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டிருக்கிறீர்கள், என்றாலும் குடியரசுத் தலைவர், நோக்கம் தெளிவாக இருக்கிறது, இலட்சியம் அதோ இருக்கிறது என்று கூறுகிறார்!

ஆகவேதான், மெய்யாகவே அந்த நோக்கம் இருக்கிறதா உண்மையாகவே அந்த இலட்சியம் இருக்கிறதா? என்பதைக் கண்டு பிடித்திட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

சாதனைப் பட்டியலைக் காட்டியா காங்கிரசு வெற்றிபெற்றது?

நான், எனது மாநிலத்தில் காங்கிரசு, (பிற கட்சிகளுடன்) ஒத்துழைப்பு உணர்ச்சியைக் காட்டுவதில்லை என்று சொன்ன போது துணைத் தலைவர் அவர்களே! குறுக்கீடுகள் இருந்தன. இதோ இப்போது நான் கூற்போவதிலே மேலும் அதிகமான குறுக்கீடுகள் இருந்து தீரும்.
இப்போதைய ஆளுங்கட்சி, தேர்தல் வெற்றியின் பேரில் தன் வலிவினை அமைத்திருக்கிறது. அந்தத் தேர்தல் வெற்றியோ, சாதனைப் பட்டியலைக் காட்டிப் பெற்றதல்ல! போலி வாக்குறுதி களையும் சாகசப் பேச்சினையும் கொண்டு பெறப்பட்டது!
அது மட்டுமல்ல. இதோ ஒரு நண்பர், காங்கிரசு எப்படி எதனால் ஒட்டுக்களைப் பெற்றுக் கொள்கிறது என்பதுபற்றிக் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் கூறும்போது யாருக்காவது கொதிப்பு மூளுமானால், அவர்களுக்குக் கூறுகிறேன். இந்தக் கண்டனத்தின் கர்த்தா நான் என்று தயவு செய்து கருதிக் கொள்ளாதீர்கள்.

ஒழுக்கச் சிதைவுக்கு எவர் காரணம்?

குண்டர்களுக்கு (காலிகளுக்கு) அமைச்சர்களுடைய அரசியல்கட்சித் தலைவர்களுடைய ஆதரவு இருக்கிறது. அமைச்சர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுவரும் வால்காட்டுகள் (எத்தர்கள்) டில்லியில் பலர் இருக்கின்றனர். அமைச்சர்களிடம் உள்ள இத்தகைய செல்வாக்கை அவர்கள் (குண்டர்கள்) தவறான வழிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேல் மட்டத்திலுள்ளவர்களுடன் இவர்களுக்கு (எத்தர்களுக்கு) உள்ள தொடர்பு காரணமாகப் போலீசுத் துறையினரிடையே ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டு விட்டிருக்கிறது. தேர்தலில் ஓட்டுக்களைப் பிடித்துக் கொடுக்க குண்டர்களின் தயவு தேவைப்படுவதால் தான், அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு (குண்டர்களுக்கு) ஆதரவு தருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு, டில்லி பிரதேசக் காங்கிரசு கமிட்டித் தலைவர் முஸ்டாக் அகமது சொன்னது இது (கண்டனம்)

நானாக இதைக் கூறுவதற்கு நடுங்கி இருப்பேன். ஆனால், காங்கிரசு வட்டாரத்திலிருந்தே இந்தக் கண்டனம் கிளம்பியிருப்பது எனக்கு வலிவளித்திருக்கிறது.

எனது மாநிலத்தில், இதுபோல ஓட்டுக்களைப் பிடித்திடக் கையாளப்படும் முறைகள் பற்றிய பல ஆதார நிகழ்ச்சிகள் பற்றி எனக்குத் தெரியும். ஆகவே, நோக்கம் தெளிவாக இல்லை இலட்சியம் தெளிவாக இல்லை-சரியான பாதையிலே அவர்கள் (காங்கிரசு) சென்று கொண்டில்லை அவர்களின் அதிகார பலமும் சந்தேகத்திற்கிடமான ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது! இதனை (வலிவை) நாகரீகமான முறையால் சனநாயகப் பண்பாட்டினால் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ளவில்லை! என்றாலும், அநேகமாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாக அவர்கள் (காங்கிரசு) கூறிக்கொள்கிறார்கள்!

குன்றுபோல் நிதி கொடுத்திருக்க பிச்சைப் பாத்திரம் ஏன்?

தேவைப்படும் அளவுக்கும் அதற்குமேலாகவும் கூட உணவுப்பொருளை தந்திட அமெரிக்கா வாக்களித்திருப்பதனால், உணவுப் பிரச்சினையையும் தீர்த்துவிட்டதாக அவர்கள் (காங்கிரசு) கூறுகிறார்கள்!

முதிர்ந்த நிலையிலுள்ள இந்த நாட்டினர், ஒரு கவளம் சோற்றுக்காகப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றிடுவது இழிவல்லவா என்று அவையின் இந்தப் பக்கமிருந்து கேள்வி எழுந்தால், படால் என பதில் வருகிறது இல்லை என்றால் (பிச்சைப் பாத்திரம் தூக்கிச் செல்லாவிட்டால்) பட்டினிச் சாவு ஏற்படும் என்று!

என்னைப் பொருத்தவரையில், பிச்சைப் பாத்திரத்தைக் காட்டிலும் கோரமானது, பட்டினியால் பிணம் விழுவது என்றே கருதுவேன்!

ஆனால், பதினேட்டு ஆண்டு சுதந்தர ஆட்சிக்குப் பிறகு இந்தப் பிச்சைப் பாத்திரம் ஏன்? என்று கேட்கலாமல்லவா? கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறதல்லவா?

குன்றுபோல நிதி உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்க பெரும் அளவு பணத்தைக் கொடுத்திருக்க மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களையும் முடித்தான பிறகு, இந்தப் பிச்சைப் பாத்திரம் ஏன்?
பொறுப்புள்ளவர்களின் மனப்பான்மையில் உள்ள கோளாறு!

அவையின் அந்தப் பக்கமிருந்து ஒரு உறுப்பினர் கூறினார் திட்டத்திலே ஏதோ கோளாறு இருந்தாக வேண்டும் என்பதாக! துணைத் தலைவர் அவர்களே! திட்டத்தில் உள்ள கோளாறைவிட, திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலே அதிகக் கோளாறு இருக்கிறது! திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ளவர்களின் மனப்பான்மையிலே அதைவிட அதிகக் கோளாறு நச்சுப் போக்கு இருக்கிறது!

ஆகவே, இந்த நாட்டை நடத்திச் செல்வதற்கு ஒரு புதிய சர்க்கார் அமைந்தாலொழிய-புதிய அணி வந்தாலொழிய, உணவுப் பிரச்சினையையும் சரி தொழில் பிரச்சினையையும் சரி நாம் தீர்த்துவைக்கப் போவதில்லை!

குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லத்தான் வேண்டும்!

நான் மட்டுமல்ல இந்த முடிவுக்கு வந்திருப்பவன்-வேறு பலரும் உளர். இதோ மற்றோர் பெருந்தகையாளரின் உரை.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிறகும் நாடு உணவுப் பொருளை இறக்குமதி செய்தாக வேண்டியிருப்பது துர்ப்பாக்கியமானதாகும். இந்தியா போன்ற விவசாயநாட்டில் உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதையாகிலும் முதலிலே செய்து முடித்திருக்க வேண்டும் மற்ற எதையும் பிறகு செய்திட முனைந்திருக்கலாம்.

அவர் மேலும் கூறுகிறார்

வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய புத்தகம் நினைவுக்கு வருகிறது. ஏழையைப் புறக்கணித்துவிட்டனர் என்ற எனது நாலாவது குற்றச்சாட்டை விட்டுவிடுங்கள். உணவு கல்வி பாதுகாப்பு என்ற மூன்று துறைபற்றிய குற்றச்சாட்டு எழுமானால், இந்தச் சர்க்காரின் கதி என்ன ஆகும்? (எங்கே போகும்)?

ஒரு சமயம் சர்க்கார் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களின் ஒப்புதலைப்பெற்று நடந்துவருவதால், நடைபெற்றவைகளுக்கு (கேடுகளுக்கு) மக்களைத்தான் பொறுப்பாளிகளாக்க வேண்டும் என்று கூறப்படக்கூடும்.

சனநாயகத்தில் உங்கள் (மக்கள்) கடமை என்ன என்பதைப் பற்றிய உணர்வுப்பெற்றாக வேண்டிய காலம் வந்துவிட்டது.

டில்லியை நம்பிக் கொண்டு வீட்டில் சோம்பிக்கிடப்பதிலே பலன் இல்லை! டில்லியில், யமுனை மட்டுமல்ல சீமைச் சாராயமும் போதைப் பானமும்கூட ஆறாக ஓடுகிறது!

வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் டில்லியைக் கண்டதும் வியப்படைகிறார்கள்! கண்களை மூடிக்கொள்கிறார்கள் ஆச்சரியத்துடன். இது என்ன, இந்தியாவின் தலைநகரமா அல்லது தங்கள் நகரங்களான பாரிசா, இலண்டனா என்று எண்ணி ஆச்சரியப்படுகிறார்கள்!

துணைத் தலைவர் அவர்களே! இந்தக் கண்டனம் தெரிவிப்பவர் ஆளுங்கட்சியிடம் பகை கொண்டவர் அல்லர். ஆச்சார்யா வினோபா பாவேயின் கண்டனம் இது!

அவர் கேட்கிறார் உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படுமானால் எங்கே இருப்பீர்கள்? என்று நான் அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்கிறேன்.

நாடு முழுவதிலிருந்து, மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் இந்தக் கேள்விக் கேட்கப்படும்!

அந்த அரசியல் கட்சியின் கேள்வி இந்த அரசியல் கட்சியின் கேள்வி என்பதல்ல இது. மனம் முறிந்து கிடக்கும் மக்கள் எழுப்பும் கேள்வி. இதற்கு நீங்கள் (சர்க்கார்) பதில் சொல்லியே ஆக வேண்டும்!

எந்தவித முறையுள்ள அரசியலிலும், மனம் முறிந்து கிடக்கும் மக்கள் இருப்பது, பெருத்ததோர் ஆபத்தாகும்!

துணைத் தலைவர் அவர்களே! இறுதியாக இன்றைய ஆளுங்கட்சியின் நிலைமைக்கு ஓரளவு பொருத்தமானதாக உள்ள ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது:

வாத்து ஒன்று இருந்தது
முன்பொரு காலந்தன்னில்
உள்ளத்து உணர்ச்சியனை வாலுக்கு உணர்த்த
நேரம் எவ்வளவு பிடிக்கும் என்பது
அறியாதிருந்தது வாத்து!
ஆகவே, அதன் கண்களில்
துக்கம் தோய்திருந்தபோதிலும்
அதன் சின்னஞ் சிறு வால் ஆடிக் கிடந்ததாம்
முன்னாள்பெற்ற மகிழ்ச்சியின் நினைவால்!

நீங்கள் (ஆளுங்கட்சி) பழைய மகிழ்ச்சியிலே திளைத்துக் கிடக்கிறீர்கள்!

சென்ற தலைமுறையினர் அறுத்தெடுத்துக் கொடுத்த மகிழ்ச்சியைக் கொண்டே வாழ்ந்துவிட முடியாது. இப்போது புதிய தலைமுறை தோன்றிவிட்டது என்று அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் எச்சரித்திருக்கிறார்.

இந்தச் சர்க்காரின் தோல்விகளைப்பற்றியப் பல வார்த்தைகளால் கூறவில்லை என்றாலும், குடியரசுத் தலைவரின் பேருரை, இந்தச் சர்க்கார் மீது வீசப்பட்ட பயங்கரமான கண்டனமாகவே எனக்குத் தோன்றுகிறது!

அந்தப் பொருளில் துணைத் தலைவர் அவர்களே! நான் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நன்றி கூறி, அவருடைய பேருரையை வரவேற்கிறேன்.

மணிமலர் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு, 1966