அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சி மொழி!

நானும், எதிர்க்கட்சியினர் வேறு சிலரும் கலந்துகொண்ட மொழி ஆய்வுக் கமிட்டியில், இந்திய ஆட்சி மொழியாவதற்கு நான் சம்மதம் அளித்ததாகத் தெரிவிக்கும் பத்திரிக்கைச் செய்திகள் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

தப்பர்த்தம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ள அத்தகைய அறிக்கைகளால் தவறான எண்ணங்கள் எழக்கூடுமாகையால், இந்தி ஆட்சிமொழி ஆவதற்கு நான் சம்மதம் அளித்து விட்டேன் என்று கூற்றினை, இதன் மூலம் மறுக்கிறேன்.

உண்மையைக் கவனிக்குமிடத்து, அந்தக் கமிட்டி, இந்தி ஆட்சி மொழியாக இருக்கலாம் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டதல்ல.

1965இல், ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக்கூறும் கேர் கமிட்டி அறிக்கையைப் பற்றி, சென்னைச் சர்க்கார், இந்தியச் சர்க்காருக்குத் தமது கருத்தைத் தெரிவிக்க விரும்பினர்.

இந்தி ஆட்சிமொழியாக சம்மதம் அளித்தேனா?

இந்த அம்சத்தைக் கவனித்துப் பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு யோசைனையைக் காணவே, கமிட்டி கூட்டப்பட்டது இந்தி ஆட்சிமொழி ஆக இருப்பதா என்பது பற்றி எமது கருத்தினை அறியவோ-ஆதரவு பெறவோ அல்ல.

அரசியல் சட்டத்தில், இந்தி ஆட்சிமொழி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்டத்தின்படி கிடைத்துள்ள இந்த நிலைமையை, நடைமுறைக்கு எப்படிக் கொண்டு வருவது என்பதுதான் கேர் கமிட்டியினரின் அறிக்கையின் சாரமாகும்.

அரசியல் சட்டத்தைத் தாயரித்தவர்கள், இந்தியை ஆட்சி மொழி அந்தஸ்துள்ளதாகச் செய்தது மாபெரும் தவறு என்று கருதியும், கூறியும் இந்தியைத் திணிக்கும் முயற்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தும், அரசியல் சட்டத்திலேயே பல திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்று வலியுறுத்தியும் வருகிற ஒரு கட்சியைச் சார்ந்தவன் நான்.

கேர் கமிட்டி கருத்து அறியவே கூடினோம்!

நான் கமிட்டிக்கு அழைக்கப்பட்டது, இந்த என்னுடைய கட்சியின் கொள்கையை-விட்டுக்கொடுத்து விடவோ, அல்லது அதைக் கவனிக்காமலிருந்து விடவோ, அல்ல.

கேர் கமிட்டி அறிக்கையின் விளைவாகக் கிளம்பிய பிரச்சினை குறித்துக் கருத்து அறியவே எங்கள் உதவி நாடப்பட்டது. பல்வேறு கட்சியினர், வெவ்வேறான பல கருத்துக்களை, விவாதித்தான் பிறகு ஆங்கிலம் தொடர்ந்து நீண்ட காலம் ஆட்சிமொழியாக இருந்து வரவேண்டும் என்றும்; இதற்கான முறையிலே பார்லிமெண்டு சட்டச் சம்மதம் தரவேண்டும் என்றும்-இதனை எப்பொழுது மாற்றுவதாக இருப்பினும் மாநிலச் சட்டசபையின் சம்மதம் பெற்றாக வேண்டும் என்றும் இந்தியச் சர்க்காருக்கு எடுத்துக்கூறும் திட்டத்தைச் சென்னை சர்க்கார் தீட்டிற்று.

ஆங்கிலம் தொடர வேண்டும்!
எல்லா எதிர்க்கட்சிகளும், ஆங்கிலம் தொடர்ந்து மிக நீண்ட காலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்குச் சம்மதம் தெரிவித்தன. இந்தி ஆட்சிமொழி ஆவதற்கு நான் சம்மதம் அளிக்கவில்லை. அதிலே பொருளும் இல்லை; ஏனெனில், அரசியல் சட்டம் இந்தியை ஆட்சிமொழி என்று குறிப்பிட்டிருக்கிறது; என் கட்சியும், வேறு சில கட்சிகளும் (இந்தி ஆட்சி மொழி என்று சட்டம் கூறுவதை) எதிர்த்துக் கிளர்ச்சி செய்துகொண்டு வருகின்றன.

கமிட்டியில், ஒன்றுக்கொன்று மிக வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகளெல்லாம் இருந்தன. ஆங்கிலத்தை அகற்றியே தீர வேண்டும் இந்தியைப் புகுத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாகக் கூறிடும் பிரஜா-சோஷலிஸ்டுக் கட்சியும் இருந்தது;

‘இந்தி எந்த முறையிலும் வடிவிலும் புகலாகாது’ என்று கூறும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நானும் இருந்தேன். உடனடியாக வரரிருக்க விபத்து குறித்து எங்கள் கருத்து அறிய விழைந்தனர்; அனைவரும் ஆங்கிலம் தொடர்ந்து நீண்ட காலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்குச் சம்மதம் அளித்தோம்.

தத்தமது கட்சியின் கருத்துக்களைக் கொண்ட மாறுபாடான கருத்துகொண்ட அறிக்கைகளையும் சர்க்கார் அறிக்கையுடன் இணைத்து அனுப்பலாமா என்று கேட்டபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள், எந்தக் கட்சியும் அதனுடைய கொள்கையை விட்டுவிட்டதாக எண்ணத் தேவையில்லை; வரவிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு கேர் கமிட்டியின் விளைவுகளைக் கவனிப்பதற்குத்தான் ஒன்றுபட்ட கருத்தை அறிகிறோம்-பெறுகிறோம் என்று சொன்னார்.

எனவே, எல்லா எதிர்க்கட்சிகளும், ஆங்கிலம் தொடர்ந்து மிக நீண்டகாலம் ஆட்சி மொழியாக இருப்பதற்குச் சம“மதம் அளித்தன.

தி.மு.க கருத்து இதுதான்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து, திட்டவட்டமாகக் கூறப்பட்டாகி விட்டது 1. இந்தி ஆட்சி மொழி என்று தி.மு.க. ஏற்க மறுக்கிறது. 2. தனி அரசு காணவேண்டும் என்று பாடுபட்டு வரும் கழகமாதலால், அந்த அரசு அமையும்போது, ‘அகில இந்தியப் பாஷை’ என்ற பேச்சுக்கே, அவசியமோ அர்த்தமோ இல்லை என்று கருதுகிறது.

எனவே, தி.மு.கழகத்தையோ, அதன் சார்பில் என்னையோ அழைத்து; இந்தியை அகில இந்தியப் பாஷை என்று ஏற்கச் சம்மதமா? என்ற கேட்பதிலேயே பொருள் இல்லை.

கேர் கமிஷன் அறிக்கையின் விளைவாகத் தோன்றி, நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையை-நெருக்கடியை எவ்விதம் சமாளிப்பது என்பதுதான் கமிட்டியின் முன்பிருந்த பணி. இதிலேதான் ஒருமித்த கருத்து தேடப்பட்டது; அடிப்படைத் தத்துவங்கள் பற்றி அல்ல.

இந்தி ஆட்சி மொழி அல்ல!
தி.மு.க. கொண்டுள்ள கொள்கைகளை நான் திட்ட வட்டமாகவே தெரிவிக்க விரும்புகிறேன்.

1. இந்தி ஆட்சிமொழியாக இருத்தல் கூடாது.

2. தனித்திராவிட நாடு பெறும் நிலையை எதிர்பார்த்து இருக்கும் நாங்கள், அகில இந்தியாவுக்கு ஒரு ஆட்சிமொழி வேண்டும் என்ற தத்துவத்தையே, பொருளற்றது-தேவையற்றது என்று கருதுகிறோம்.

நாங்கள் சம்மதம் தரவில்லை!
பத்திரிக்கையில் வெளிவந்த செய்திகளால், ஏதேனும் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்குமானால், அதனை நீக்கிட விரும்புகிறேன்.

இந்தியை ஆட்சிமொழியாக்குவதற்குச் சம்மதம் தரச்சொல்லி என்னை அழைக்கவும் இல்லை; நான் சம்மதம் தரவும் இல்லை.

கேர் கமிட்டி அறிக்கையின் விளைவாகக் கிளம்பிய பிரச்சனை குறித்தே கலந்தாலோசிக்க நேரிட்டது; அதில், அனைவரும், ‘ஆங்கிலமே தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

இந்த விஷயத்தில்தான் எல்லாக் கட்சிகளும் ஒரு முகமான சம்மதம் அளித்தன. அந்தந்தக் கட்சியின் அடிப்படைத் தத்துவங்கள், அந்தந்தக் கட்சிகளின் தனி உரிமை. எங்களைக் கலந்தாலோசித்து, எமது சில கருத்துக்களை இணைத்துச் சென்னை சர்க்கார் ஒரு ‘மனு’ தயாரித்தனர்; நடந்தது அவ்வளவுதான்.

அது எல்லாக் கட்சிகளும் கூடித் தயாரித்த அறிக்கை அல்ல.

அதிலே, நாங்கள் கையெழுத்து இடவுமில்லை; அதில் காணப்படும் யாவும் எங்களுக்கு முழுக்க முழுக்க ஒத்தவை என்றும் கூறுவதற்கில்லை.

உண்மையினைத் திரித்துக் கூறாதீர்!

1965-க்குப் பிறகும்,தொடர்ந்து நீண்டகாலம் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதிலேதான் பொதுவான சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்தி ஆட்சி மொழியாவதற்கு நான் சம்மதம் அளித்தேன் என்று கூறுவது உண்மையினைத் திரித்துக் கூறுவதாகும்.

(நம் நாடு - 31.12.1957)