அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆதிக்க ஒழிப்பே தி.மு.க. திட்டம்!

”தமிழர்களை மிகக் கேவலமான முறையிலே, இழிமொழி புகன்று மனதைப் புண்படச் செய்கிறார் நேரு – மக்களின் கிளர்ச்சிகளை எல்லாம் மட்டரகமான மொழியால் ஏசுகிறார் – “நான்சென்ஸ்“ என்றும், “முட்டாள்“ என்றும் வைகிறார் – ஒரு பெரிய துணைக் கண்டத்தின் தலைவர் இப்படி ஒரு இனமக்களைத் துச்சமாகக் கருதி இழிமொழி கூறுவதைக் கண்டிக்கவும் நாட்டின் மனப் போக்கை அவர் அறியச் செய்யவும், தமிழகமெங்கும், ஜூலை 15இல் பகலில் எல்லா ரயில் வண்டிகளையும் நிறுத்திக் கண்டனக் குறியைக் காட்ட நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று, பல தோழர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அவர்களுடைய போக்கையும் உறுதியையும் நான் பாராட்டுகிறேன். ஜூலை 15இல் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ரயில் நிறுத்தக் கிளர்ச்சியைஆதரிக்கிறேன் என்று சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் இரண்டாம் நாள் மாலை பேசும் போது குறிப்பிட்டார் மற்றும், டால்மியாபுரம் போராட்டம், ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புக் கிளர்ச்சி ஆகியவை பற்றியும் விளக்கம் கூறினார்.

சிதம்பரம் மாநாடுகள்!

சிதம்பரம் மாநாடுகளைச் சிறப்புற நடத்தித் தந்த தோழர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு, வளர்ந்து வரும் சக்தியைக் கட்டுப்பாடும் கண்ணியமும் மிகுந்ததாக்க வேண்டியதன் அவசியத்தையும், வலியுறுத்திக் கூறினார்.

“சிதம்பரத்தில் இதுவரை நடைபெற்ற எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கும். இப்போது வந்துள்ள அளவு தாய்மார்கள் வந்ததில்லை என்று கேள்விப்பட்டேன் – பெருமிதம் கொள்கிறேன். தி.மு.கழகம் இங்குப் போலவே எங்கும் பேராதரவு பெற்று வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பணபலம் அல்ல! இதை மாற்றாரும் அறிவர். பத்திரிகை பலம் அல்ல! அனைவரும் அறிவர். பெரிய புள்ளிகள், மகான்கள், அருளாளர்கள் இங்கு இல்லை – உள்ளவர்கள், வாழ்க்கையிலே மிக மிகச் சாதாரண படிக்கட்டுகளிலே உள்ளவர்கள் – சாமான்யர்கள் – இவர்கள் இத்தனை பெரிய கழகத்தைக் கட்டி்க் காத்து வளம் பெறச் செய்த வருகிறார்கள் என்றால், காரணம் என்ன? நாம் எடுத்துரைக்கும் உண்மைகளை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.

நாம் காட்டும் ஆதாரங்கள் அசைக்க முடியாதன – தரும் புள்ளி விவரங்கள் மறுக்க முடியாதன – காட்டும் காரணங்கள் அலட்சியப்படுத்த முடியாதன – எனவேதான், கழகம் பொதுமக்களிடம் மேலும் மேலும், செல்வாக்கு பெறுகிறது. தென்னார்க்காடு மாவட்டம் வளம் குறைந்தது. இங்குத் தி.மு.க. மாநாடு வனப்புடன் நடைபெறுவது கடினம் என்றனர். இரு நாட்களாக நடைபெற்ற மாநாடுகளின் எழிலைக் கண்ணுற்றவர் எவரும். அவர் எந்தக் கட்சியினராயினும், மாநாட்டின் சிறப்பினை அறிந்து கொள்ளாமலி்ருக்க முடியாது, தி.மு.கழகத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமலிருக்கவும் முடியாது.

ஆதிக்க எதிர்ப்பு உரிமைப் போராட்டமே!

பலர், தி.மு.கழகம்தான், ஏதோ வம்புக்கு, வீணுக்கு அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது, இந்த முறையை ஒழிப்பது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது, கிளர்ச்சிகளைச் செய்து வருகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகிலே, பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுவரும், ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி, உரிமைப் போராட்டம் ஆகியவற்றின் ஒரு அங்கம்தான், தி.மு.ககழக நடவடிக்கை என்பதை ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

முறைகளிலே மாறுபாடு இருக்கலாம், ஆனால், மூலாதாரம் நோக்கத்தைக் கவனித்தால் எங்கும் இதுபோது நடந்து கொண்டு வரும் உரிமைக் கிளர்ச்சி போன்றதே, இங்குத் தி.மு.கழகம் நடத்தி வருகிற கிளர்ச்சியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முதுகிழவர் முசாதிக் முழக்கிமிடுகிறார்! ஏன்?

“என் நாட்டு எண்ணைக் கிணறுகளிலே வெளி நாட்டானுக்கு ஏன் ஆதிக்கம்? என் நாட்டு மக்களின் வியர்வையும் இரத்தமும் வெளிநாட்டானுக்குக் கொட்டித் தரப்படவேண்டுமா? ஆகுமா இந்த அக்கிரமம்? இந்த ஆதிக்கத்தை எதிர்த்து ஒழித்தே தீருவேன்“ என்று முதுகிழவர் முசாதிக் முழக்கிமிடுகிறார்.

இங்கு நாம், திராவிடத்தைத் தொழில் வளமாக்கக்கூடிய நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தை, வடவர் ஆதிக்கத்திலும் அமெரிக்கர் ஆதிக்கத்திலும் தருகிறீர்கள், இது சரியா – அக்கிரமம் அல்லவா, என்று கேட்கிறோம். வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.

நகீப் நடத்தும் போர்!

எழில் மிக்க எகிப்து நாட்டைக் கசக்கிப் பிழிந்து தர்பார் நடத்திய பரூக்கை விரட்டி விட்டு, நகீப், மக்களாட்சியை மலரச் செய்து இருக்கிறார் – அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு, என் நாட்டில், சூயஸ் பகுதியில், ஏன் ஆதிக்கம், வாரீர் அதனை ஒழித்துக் காட்டுவோம், என்று முரசு கொட்டுகிறார்.

இங்கு நாம், பண்டைப் பெருமை மிகுந்ததும், வளம் கொழிப்பதுமான திராவிடத்தை, வடநாட்டுக்கு வேட்டைக்காடு ஆக்கிவிட்டு, அரசியலில் அடிமைத்தனத்தைச் சுமந்து கொண்டிருக்கும் போக்கைக் கண்டிருக்கிறோம் – வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்கிறோம்.

கென்யாட்டா போன்ற தலைவர்கள், நிறத் திமிர் கொண்ட வெள்ளையரின் வெறியை எதிர்க்கிறார்கள். மலானுடைய மமதையை, அங்கே உள்ள மனிதப் பண்பை மறவாதவர்கள் எதிர்க்கிறார்கள்.

உரிமைக் கிளர்ச்சியின் ஒரு பகுதியே

அதே முறையிலே இங்கு நாம், ஒரு கூட்டத்தை எஜமானர்களாகவும், பிறரை அவர்களின் பிறவி அடிமைகளாகவும் செய்து வைத்துள்ள வர்ணாஸ்ரமத்தைக் கண்டிக்கிறோம். இந்த வர்ணாஸ்ரமம் எனும் அக்கிரமத்தை, ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் இந்த ஆதிக்க உணர்ச்சி கொண்டவர்களின் போக்கைக் கண்டிக்கிறோம் – பார்ப்பனர்களை மட்டுமல்ல, பார்ப்பனரல்லாதாரிலே உள்ள பார்ப்பனர்களையும் சேர்த்து – பொதுவாக, வர்ணாஸ்ரம்களைக் கண்டிக்கிறோம்.

ஆராய்ந்து பார்த்தால், ஆதிக்கத்தை ஒழிக்க. பல்வேறு நாடுகளி நடைபெற்றுக் கொண்டுவரும், உரிமைக் கிளர்ச்சியிலே ஒரு பகுதியே, தி.மு.கழகக் கிளர்ச்சி என்பது புலனாகும்.

இத்தகைய கிளர்ச்சியைச் சுடுசொல் கூறியும், இழி மொழி பேசியும் கேவலமாகத் தாக்கியும் ஒழித்துக்கட்ட முனைந்திருக்கிறார் பண்டிதர் நேரு. அவர் தமிழரின் கிளர்ச்சியை முட்டாள் தனம் – என்று கூறிவிட்டார்.

தமிழர்கள் முட்டாள்களா?

தமிழர்களை மிகக் கேவலமான முறையிலே, இழிமொழி புகன்று மனதைப் பண்படச் செய்கிறார் நேரு – மக்களின் கிளர்ச்சிகளை எல்லாம் மட்டரகமான மொழியால் ஏசுகிறார் – “நான்சென்ஸ்“, என்றும், “முட்டாள் தனம்“ என்றும் வைகிறார் ஒரு பெரிய துணைக் கண்டத்தின் தலைவர் இப்படி ஒரு இன மக்களைத் துச்சமாகக் கருதி, இழிமொழி கூறுவதைக் கண்டிக்கவும் நாட்டின் மனப்போக்கை அவர் அறியச் செய்யவும், தமிழகமெங்கும் ஜூலை 15இல் பகலில், எல்லா ரயில் வண்டிகளையும் நிறுத்தி. கண்டனக் குறியைக் காட்ட நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று பல தோழர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கத்தையும் – உறுதியையும் நான் பாராட்டுகிறேன். ஜூலை 15இல் அவர்கள் மேற்கொள்ள இருக்கும், ரயில் நிறுத்தக் கிளர்ச்சியை ஆதரிக்கிறேன்.

இரயில் நிறுத்தக் கிளர்ச்சி!

ஜூலை 15 இல், ரயில் நிறுத்தக் கிளர்ச்சி, தூய்மை நிரம்பியதாக இருக்க வேண்டும். ரயில்வே சொத்துக்களுக்குச் சிறிதளவும் சேதம் இருத்தலாகாது. சொத்து நம்முடையது பொதுமக்கள் அருவருக்கத்தக்கக் கூச்சல்கள் போடக்கூடாது பொது மக்களின் சார்பிலே பாடுபடுவர் நாம் என்பது நினைவில் இருக்க வேண்டும். பகல் நேரம் மட்டுமே ரயில் நிறுத்தக் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். பொதுமக்களிடம், இந்த ரயில் நிறுத்தம் ஏன் என்பது பற்றி விளக்க வேண்டும். இன்றைய ஆட்சித் தலைவர் நேரு தமிழர்களை அவமானமடையும்படி ஏசுகிறார் என்பதை எடுத்துரைக்க வேண்டும். வடநாட்டு ஆதிக்கக் குறியாக உள்ள டால்மியாபுரம் என்ற பெயர் எடுபட வேண்டும் என்ற போராட்டங்கள் துவக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

பண்டிதர் பார்வைக்கு!

ஆச்சாரியாரின் புதிய கல்வித் திட்டத்தின் கேடுகளை விளக்கிட வேண்டும். அந்தத் திட்டத்தை எதிர்த்து அறப்போர் நடத்தும் செய்தியைக் கூற வேண்டும். ரயில் நிறுத்தத்தின் மூலம், நேரு நாட்டின் நிலைமையை அறியச் செய்யலாம், தமிழரைத் தாழ்வாகப் பேசியதை நாடு கண்டிக்கிறது என்பதை அவர் அறியச் செய்யலாம். இதுதான் அவருடைய கண்டனத்துக்குச் சரியான பாடமாக அமையும் ஜூலை 15, ரயில் நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று, செய்திகள் நேருவின் முன்பு குவிந்தால்தான் அவருக்கு திராவிடத்தின் எழுச்சி, தெரிய முடியும். வேறு எந்த வகையிலே, அவர் திராவிடத்தின் எழுச்சியை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற மாநாடுகளை, அவர் டெலிவிஷன் பாட்சியாகக் காணவா போகிறார். அல்லது, அவர் பார்க்கும் பத்திரிகைகளிலே செய்திச் சித்திரமா வெளிவரும்? எனவே, பண்டிதர் இங்குள்ள நிலைமையை அறயிச் செய்ய வேண்டும்.

மக்கள் என்ன சொரணை கெட்டவர்களா?

ரயில்களை நிறுத்தினால், இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பண்டிதர் மிரட்டுகிறார்.

கனிவான மொழி பேசி வந்த காலம் மலை ஏறிவிட்டது. இப்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன் என்று மிரட்டுகிறார்.

கடுமையான நடவடிக்கைகளைத் தி.மு.க. கண்டிருக்கிறது – தாங்கிக் கொண்டிருக்கிறத – அதன் காரணமாகவே வளர்ந்துமிருக்கிறது. அது போலவே இவர் மிரட்டுகிறபடி கடுமையான நடவடிக்கையும் கிடைக்கட்டும், தாங்கிக் கொள்வோம். தாய்மார்களைத் தடிக்கொண்டீ அடிக்கவில்லையா, இந்த ஆட்சி சிறையிலே தள்ளவில்லையா? துப்பாக்கியால் சுடவில்லையா? கடுமையான நடவடிக்கைகளை – எவ்வளவு கண்டிப்புடன் பேசுகிறார் – எவ்வளவு சொரணை கெட்டதனம் இருந்தால், இப்படிபட்ட சுடு சொற்களை எல்லாம் தாங்கிக் கொள்வார்கள் மக்கள்.

சவ ஊர்வலத்தால் தானே இந்தியை ஒழித்தோம்?

தி.மு.கழகம், கடும் நடவடிக்கைகளை வரவேற்கிறது. தோழர் கருணாநிதி பேசும் போது சொன்னார் – டால்மியாபுரத்தில் நடந்தால், வெற்றி ஊர்வலம் நடைபெற வேண்டும். அல்லது கருணாநிதியின் சவ ஊர்வலம் நடைபெற வேண்டும் என்றார். கேட்கும் போதே கண்ணீர் கசிந்தது. தம்பிக்கு நான் கூறுவேன். நாடு, இனி அத்தகைய சவ ஊர்வலங்களை நடைபெற விடாது. வெற்றி ஊர்வலம் நடத்தவே நாடு துணை செய்யும். சவ ஊர்வலம் நடத்தி விட்டிருக்கிறோம் – இந்தி எதிர்ப்புப் போரின் போது தாளமுத்து, நடராசன் எனும் இரு மொழிப் போர் வீரர்களை பலி கொடுத்தோம் – உயிருடன் சிறை சென்றனர் – பிணமாக்கித் தந்தார் ஆச்சாரியார் – சவ ஊர்வலம் நடத்தினோம். இந்தியை ஒழித்தோம்.

கடும் நடவடிக்கைகளால் தாக்குண்டு, குருதி கொட்டித்தான், கழகம் வளர்ந்தது – மேலும், கடும் நடவடிக்கை கிளம்புகிறேன் என்றால், நாம் அதற்குத் தயாராகத்தான் இருக்க வேண்டும். அமைதியைக் கெடவிடக் கூடாது. ஆட்சியாளரின் உத்தரவைக் கேட்டு அடிக்க வரும் அதிகாரிகளிடம் பகை உணர்ச்சி அறவே கூடாது. எத்தகைய நிலையின் போதும் கண்ணியத்தை இழக்கக் கூடாது – கட்டுப்பாடு வளர்ந்த வண்ணம் இருக்க வேண்டும் – அறப்போருக்கான உள்ளப் பண்பும், ஆற்றலும் பெற வேண்டும் – ஆர்வமூட்டும் இம்மாநாடுகள் இதனை நமக்கு அளிக்கும் விதமாக அமைகின்றன. அத்தகைய ஆற்றல் கொண்டவர்களின் தி்.மு.கழகத்தில் ஏராளம் – எனவேதான் அறப்போருக்கு அனுமதி அளித்திருக்கிறேன்.

டால்மியாபுரம் போராட்டம் ஜூலை 15இல் துவக்கப்பட இருக்கிறது. டால்மியாபுரம் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள பலகை மீது கல்லக்குடி என்று பெயர் அச்சடிக்கப்பட்ட தாளை கருணாநிதி ஒட்டுவார். அதிகாரிகள் அதனைக் கிழித்துப் போட்டால், மீண்டும் தாள் ஒட்டப்படும் – ஒட்டச் செல்லும் போது, கைது செய்யப்பட்டால், வேறு தோழர்கள் தொடர்ந்து அந்தக் காரியத்தைச் செய்வர்.

டால்மியா எதிர்ப்பே கல்லக்குடிப் போராட்டம்!

இந்த அறப்போருக்காக, தோழர் கருணாநிதிக்கு, கல்லக்குடி என்று அச்சடித்த தாள்களையும், கையினால் எழுதப்பட்ட தாள்களையும், உடனே அனுப்பி வையுங்கள். அறப்போர் குழுவிலே சேருங்கள். வெற்றியைத் தேடித் தாருங்கள்.

டால்மியாபுரப் போர் மும்முரமாக நடைபெற ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது, மற்றோர் போருக்கும் நாம் அழைக்கப்படுகிறோம் – ஆச்சாரியாரின் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து, ஆச்சாரியார் வீட்டின் முன்பு மறியல் செய்யத் தொண்டர்களுடன் செல்லுமாறு, தோழர் சம்பத் அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதனை ஜூலை 13இல் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் ஐம்பது தொண்டர்கள். ஜூலை 13-லேயே தேவைப்படுவர்.

ஆச்சாரியார் திட்டம் கொடுமையானது!

ஆச்சாரியார் உத்திரவு பிறப்பித்து, தோழர் சம்பத்தையும் அவருடன் செல்லும் தோழர்களையும் தாக்கி, இரத்தத்தச் சிந்த வைத்து அதையே தமது நெற்றிக்கு திலகமாகத் தரித்துக் கொண்டு, சட்டசபை சென்று கொலுவிருக்கட்டும்.

இரத்தக்கறை படிந்த மனதோடு, அவர் நாட்டை ஆளட்டும். அவர் கொண்டு வந்து திணித்திருக்கும் கல்வித் திட்டம் இந்தியை விடக் கொடுமையானது – எனவே, அதைப் போக்க இந்தி எதிர்ப்புக் காலத்திலே நாம் தந்த பலிகளை விட – அதிகமாகத் தந்ததாக வேண்டும்.

நல்லவர்கள் இந்தத் திட்டத்தைக் கண்டித்தனர். ஆச்சாரயார் பிடிவாதத்தை விட மறுக்கிறார். காமராஜர், ஓமந்தூரார், சுப்பராயன் இப்படிப் பலர் கண்டிக்கின்றனர்.

இவர்களில் யாரும் தன் திட்டத்தைக் கண்டிக்கும் தகுதி பெற்றவர்கள் அல்ல என்று எண்ணி, இவர்களைத் துச்சமாக மதிக்கிறார் ஆச்சாரியார்.

உண்மை காங்கிரஸ்காரருக்கு இந்தப் போக்கு, மான ரோஷத்தைக் கிளப்ப வேண்டாமா?

நாணயமான ஆட்சியிலே, இப்படி ஒரு திட்டத்தைப் புகுத்துவது என்றால், முதலில், அதுபற்றியப் பிரச்சாரம் செய்வார்கள் – திட்டத்திலே உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டி எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் – பொதுமக்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, ஒரு முடிவுக்கு வருவார்கள். பிறகே சட்டம் தீட்டப்படும்.

பொது மக்களைக் கலந்து சட்டம் செய்தாரா?

ஆச்சாரியார் இதைச் செய்வாரா? இல்லை! ஐம்பது வருஷக் காலமாகவே எனக்கு இந்த எண்ணம் உண்டு, என்கிறார். அதுவா முக்கியம்? ஐம்பது வருஷமாகவா, மாறாமலிருக்கிறது. அது எப்படியோ போகட்டும், இவருடைய மனதிலே உதித்த அருமையான திட்டம் பற்றி மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லையா? பொது மக்களின் ஆதரவு பெற்றுத்தானே புதிய திட்டத்தைப் புகுத்த வேண்டும்? பொது மக்களைக் கலந்து பேசினாரா?

இப்போதும் சரி – ஆச்சாரியாரை, தி.மு.க. அறை கூவி அழைக்கிறது – அவர், உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிடட்டும் ஓராண்டுக் காலம், ஆச்சாரியாரும் அவருடைய பிரச்சாரப் பீரங்கிகளும், புதிய கல்வித் திட்டத்திற்கப் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டட்டும். தி.மு.கழகமும், புதிய கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கட்சியினரும், அறிவாளரும், பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கட்டும். ஓராண்டுக்குப் பிறகு, பொது மக்களிடம் இந்தத் திட்டம் பற்றி “ஓட்“ எடுப்போம். சம்மதிக்கிறாரா, ஆச்சாரியார்? தி.மு.க. அழைக்கிறது, ஆச்சாரியார் இந்த ஏற்பாடுக்கு இசைகிறாரா?

மக்களைக் கேட்டா காரியமாற்றினர்?

இது போலப் பேசுவார்கள் என்று தெரிந்துதான் ஆச்சாரியார், புத்தரும் ஏசுவும் மக்களைக் கேட்டா காரியம் செய்தனர் – அதுபோலத்தான் நானும் – என்று பேசுகிறார். ஆச்சாரியார் தம்மைப் புத்தருடனும் ஏசுவுடனும் ஒப்பிட்டு உயர்த்திக் கொள்ளும் சபலத்தைக் கவனிக்க வேண்டாம். தள்ளாத வயதிலே அப்படி ஒரு ஆசை போலும் அவருக்கு! ஆனால், ஏசுவும், புத்தரும் பொதுமக்களிடம் தம் புதிய முறைகளைப் பற்றிப் பேசினார்கள் – அறிவுரை தந்தனர் – புதிய சட்டங்களைத் திணிக்கவில்லை – புத்தரும், ஏசுவும், அறநெறி பற்றி உபதேசம் செய்தனர் – பொது மக்கள் அந்த உபதேசங்களை ஏற்றுக் கொண்டனர் – ஆட்சி புரிந்தவர்கள், புது முறைகளிலே மக்களுக்கு ஏற்பட்டு விட்ட பற்று பற்றித் தெரிந்து, புதுச் சட்டம் செய்தனர் – ஆச்சாரியார் செய்வது அது அல்ல! ஐம்பது வருஷமாகவே அவருக்கு இந்த அதிகாரம் கிடைக்கட்டும், கிடைக்கட்டும் என்று இருந்திருக்கிறாரே தவிர, இது பற்றி அவர் பொது மக்களிடம் பேசவில்லை. அதிகாரம் கிடைத்தது, பிடி சாபம், என்கிறார். புத்தரும், ஏசுவும் செய்தது இது அல்ல! இவர், வாயால் அவர்களுடைய பெயர்களை எடுத்துக் கூறியதே அக்கிரமம்.

புத்தர் அரண்மனையைத் துறந்து – ஆலமரத்தடி வந்து சேர்ந்தவர். ஆச்சாரரியாரோ, திருச்செங்கோட்டு ஆஸ்மரத்தை விட்டு விட்ட – வைசிராய் அரண்மனை சென்று அலங்கார வாழ்வு நடத்தியவர். அந்தப் புத்தருக்கச் சமமாகத் தாம் இருப்பதாகக் கூறிக் கொள்ள எண்ணுவதே கேலிக் கூத்தாகும்.

அலை அலையாய் திரண்டு அறப்போருக்கு வருக!

பொதுமக்களைத் துச்சமாக மதித்தது மட்டமல்ல, காங்கிரஸ் கட்சியை மட்டும் அவர் எங்கே மதித்தார். இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கே பேராபத்தாகும். எனவேதான், தி.மு.க. கஷ்ட நஷ்டம் பற்றிக் கவலைப் படாமல், புதியக் கல்வித் திட்டத்தை எதிர்த்து அறப்போர் நடத்தத் தீர்மானித்து, ஜூலை 8, ஜூலை 13, ஜூலை15 எனும் கண்டனக் குறி நாட்களைப் பொது மக்களிடம் எடுத்துக் காட்டியிருக்கிறது. பொது மக்களின் பேராதரவைத் திரட்டித் தந்து, அறப்போரில் ஈடுபட்டு, வெற்றி பெற்றுத் தருமாறு, தி.மு.க. தோழர்கள் அனைவரையம் கேட்டுக் கொள்கிறேன். மாநாடுகள் – இதற்கான ஆர்வத்தையும் ஆற்றலையும் தருகின்றன – எனவே மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தித் தந்த தோழர்களுக்கெல்லாம் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

(நம்நாடு - 8-7-1953)