அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அக்கரை இல்லாத அரசாங்கம்!

இன்று உழவுத் தொழில் நம் நாட்டைப் பொறுத்தவரையில், இலாபகரமானதாக இல்லை. இதற்குக் காரணம் என்ன?

உழவுத் தொழில் இன்னமும் மெருகேறாத ஒரு தொழிலாக இங்கு இருப்பானேன்?

இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள், வேறு பல நாடுகளில் இதே அளவு நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கிறது – இதற்குக் காரணம் என்ன?

இந்த நாட்டு உழவர் பெருமக்கள் சரியாக உழைப்பதில்லையா? என்றால், அப்படி அல்ல, வேற்று நாட்டவர்களைக் காட்டிலும், இந்த நாட்டவர்தான் கடுமையாக உழைக்கிறார்கள், அதிலும், கோவை மாவட்டம் போன்ற இடங்களில் நிலத்தை உழுது பயிரிட்டுப் பலனடைவது என்பது, கல்லிலிருந்து நார் உரிப்பதைப் போன்றதாகும்! பருக்கைக் கற்களும், முற்புதர்களும், கரம்புக் காடுகளும் நிறைந்த இந்த மாவட்டத்தில், உழவரின் உழைப்பு அளவிட முடியாதது! அப்படியெல்லாம் உழைத்தும் நல்ல வருமானமும் வளமும், பலனும் இல்லாமற் போவானேன்?

விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவோம்!

வேறு பல மேலை நாடுகளில், உழவுத் தொழிலுடன் அவர்கள் விஞ்ஞானத்தையும் கலந்துகொண்டு வேலை செய்கிறார்கள், அதனால் அவர்கள் குறைவாக உழைத்தாலும், நம்மைக் காட்டிலும் அதிகமாகப் பலன் பெறுகிறார்கள்.

நாம் விஞ்ஞான அறிவைப் பெருக்கிக் கொண்டு, உழவுத் தொழிலையும் அந்த விஞ்ஞானத்துடன் செய்தால்தான் குறைந்த உழைப்பில் நிறையப் பலன்பெற முடியும் என்று பல்லடத்தில் நடைபெற்ற கோவை மாவட்ட உழவர் மாநாட்டில் 5.9.1954 அன்று மாலை தி.மு.க.ப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். மேலும் அவர் சொன்னார்.

ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் போன்ற நாடுகளில் பசுமாட்டுக் கூட்டத்தையும், பசும்புல் தரையைம் வைத்துக் கொண்டே, வையம் வியக்க வாழ்கிறார்கள், அந்த நாட்டவர்கள் பசுமாடுகளைப் பேணி வர்த்து, பால் கறந்து பாலாடை எடுத்து, விஞ்ஞான ரீதியாக அதைப் ‘பாடம்‘ செய்து பல நாடுகளுக்கும் தந்து, அந்த வருமானத்தைக் கொண்டே வாழ்கிறார்கள், அந்த நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ, அவர்களுக்குக் கிடைத்திருக்கிற சொத்துக்கள், பசுக் கூட்டம், பசும்புல் தரை ஆகியவைகளேதான்! ஆனால், இந்த நாட்டில், தங்கம் முதல் எல்லா உலோகங்களும், கனிப் பொருள்களும், நிலவளமும், நீர்வளமும் ஆகிய எல்லா வளங்களுமிருந்தும், நிலத்தில் இறங்கி உழைக்கும் உழவர்களுக்கு மூன்று வேளை உணவும், ஒண்டக் குடிசையும் உடுத்த உடையும் கிடைப்பதில்லை.

அக்கரை குறைந்து விட்டது!

இதையெல்லாம் எண்ணிப் பார்த்தால், உழவுத் தொழில் முன்னேறி, நல்ல பலன் தரும் – இலாபம் தரும் தொழிலாக மாற முதலாவதாக, அந்தத் தொழில் தற்கால விஞ்ஞான அறிவுடன் செய்யப்படவேண்டும், இரண்டாவதாக, இன்று, உழவர் பெருமக்களுக்கு உழவுத் தொழிலில் அக்கரை இல்லலை, இந்த அக்கரை அவர்களுக்கு வருமாறு செய்ய வேண்டும். இந்த இரண்டும் செய்தால்தான் உழவுத் தொழில் ஈடேற முடியும், நாடு முன்னேற்றத்தைக் காண முடியும்.

உழவர்களுக்கு அக்கரை இல்லை என்பதை இனியும் மூடி மறைத்துப் பயனில்லை. உழவுத் தொழிலிலிருந்த அக்கரை இப்போது குறைந்து விட்டது. நான் இப்படிச் சொல்லும்போது, உழவர்கள் எல்லோரும் ஏதோ உழைக்காத சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். எப்படி அவர்களுக்கு அக்கரை குறையாமலிருக்க முடியும்?

ஒரு சிறு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவன் கூட, தங்களிலும் சற்று உயர்ந்த வாழ்வு பெற்றிருப்பதைப் பார்க்கிறார்கள், தங்களைக் காட்டிலும் குறைந்த அளவு உழைக்கும் பலர், பல வழியிலும் சற்று வசதியான வாழ்வு பெற்றிருப்பதைக் கண்டு புழுங்குகிறார்கள், அதாவது, உழவுத் தொழில், வாழ்வுக்குப் பாதுகாப்புடைய தொழிலாக இல்லை, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் போதுமான வாழ்க்கை வசதிகள் தரப்படவில்லை – இதை எண்ணும்போது, உழவர்களுக்கு, தங்கள் தொழில்மீது வெறுப்பேற்படுவது இயற்கைதானே!

இரண்டாவதாக, உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைக்கிறார்கள், உழுது பண்படுத்தி, பரம்படித்து, விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து, காவல் புரிந்து, பயிர் வளர்க்கிறார்கள் இவர்கள் உழைப்பால் உயர்கிறது நெற்கதிர், பார்க்கிறார்கள் – பெருமூச்சு விடாமலா இருக்க முடியும்?

இனி அவர்களுக்குத் தொழிலில் அக்கரை வளர இரண்டு நல்ல காரியங்களைச் செய்தாக வேண்டும் – ஒன்று, வேறு பல தொழில்களில் கிடைக்கும் பாதுகாப்பு இந்தத் தொழிலுக்கும் கிடைக்கத் திட்டம் தீட்டியாக வேண்டும், இரண்டாவதாக, உழுகிறவர்களுக்கு நிலம் தரப்பட வேண்டும்.

நிலச் சீர்த்திருத்தம் பற்றி சர்க்காரர் யோசித்து வருவதாக அடிக்கடி பேசப்படுகிறது, யோசிக்கட்டும் சர்க்கார் நன்றாக! ஆனால், பல யோசனைகளில், தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளக்கூடாது.

இரண்டும் கெட்டான் நிலை

இருசாரருக்கம் – நிலப்பிரபுவிற்கும் உழவர்க்ளுக்கும் – மோதல் ஏற்படுகிற வகையில் சர்க்கார் பிரச்சனைகளை ஒத்திப் போட்டுக் கொண்டே செல்லக் கூடாது, இவர்கள் இருவரையும் மோதவிட்டு ஓட்டு வேட்டையாடுவதிலேதான் காங்கிரஸ் சர்க்கார் கவனமாயிருக்கிறது என்று எண்ணுகிறேன், அல்லது ‘இந்த நிலப் பிரவினைதான் என்றாவது வருவது வரத்தானே போகிறது, அதுவைரையில், தள்ளுகிற வரையில் காலம் தள்ளலாம்‘ என்று எண்ணும்இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறதோ என்னவோ, சர்க்கார்.

ஆனால், ஒன்றுமட்டும் சர்க்காரின் கவனித்திலிருக்க வேண்டும் – தஞ்சை மாவட்டத்தில் உழவர்களுக்கும், நிலப் பிரபுக்களுக்கும் இடையே தோன்றிய நிலைகள், மற்ற மாவட்டங்களிலும் வளரா முன்னம், பிரச்சனை கவனிக்கப்பட வேண்டும்!

நிலப் பிரபுக்களைப் பார்க்கும்போது அவர்களுக்குச் சமாதானமாகவும், உழவர்களைக் காணும்போது, அவர்கள் உள்ளளம் குளிரவும் பேசுவதும் கூடாது.

சர்க்கார், இரண்டு தரப்பினரையும் கூப்பிட்டு வைத்து, நிலப் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவைச் சீக்கிரமே மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுப் பண்ணை வேண்டும்!

நிலங்களை விவசாயிகளுக்குப் பிரித்துத் தந்தால் மட்டும் போதாது, பிரித்துத் தரப்படுகிற நிலங்களைக் கூட்டுப் பண்ணை முறையில் பயிரிட்டால்தான் எல்லா விவசாயிகளும் நல்லதார் பலன் காண முடியும், அந்த வகையில், சிறு சிறு நிலப்பரப்பைச் சொந்தமாக உடைய விவசாயிகளைக் கூட்டுப் பண்ணை முறையில் ஒன்று கூட்டி அந்தப் பண்ணை நிர்வாகத்தை வேண்டுமானால் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம். அதன்மூலம், இந்த விவசாயத் தொழிலில் அவர் பெற்றிருக்கிற நிபுணத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துத் தந்துவிடுவதாலேயே வறுமை போயிவிடுமென்பதல்ல, நிலம் பிரித்துத் தரப்படும் மென்பதின் மூலம் உழவர்களுக்கு, தொழிலில் அக்கரை வளரும்.

அந்த அக்கரையுடன், விஞ்ஞான அறிவும் தரப்பட்டால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும், அப்போதுதான் வறுமை ஒழியும்!

இவற்றைச் செய்ய, ஒரு நல்ல அக்கரைகொண்ட சர்க்கார் வேண்டும், இங்குள்ள காமராசர் சர்க்காருக்கு, அக்கரை கூட இந்த விஷயத்தில் இருக்கலாம், ஆனால், அதிகாரமில்லாத சர்க்காராக இருக்கிறது.

அக்கரை இல்லாத அரசாங்கம்!

நேருவின் தலைமையில் உள்ள சர்க்காரரோ, அதிகாரமிருந்தாலும், தென்னாட்டவர் மீது அக்கரை இல்லாத சர்க்காராக இருக்கிறது என்று பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, நம் பிரச்சனைகளை நாமே கவனித்துக் கொள்ள நமக்கு எல்லா அதிகாரங்குமுள்ள ஒரு நல்ல அக்கரைகொண்ட சர்க்கார் வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கி, அந்த அதிகாரம் படைத்த – அக்கரை கொண்ட சர்க்காரை அமைப்பதே தி.மு.கழகத்தின் இலட்சியம் என்பதையும் விளக்கினார்.

சொற்பொழிவின் துவக்கத்தில் பொதுச் செயலாளர் அவர்கள் குறிப்பிட்டதாவது –

உழவர் தம் குறைகளை எடுத்துரைக்கவும், அவற்றிற்குப் பரிகாரம் காணவுமாகக் கூட்டப்பட்டுள்ள இந்த மாநாட்டில், என்னையும் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது ‘இந்த மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உழவர் கழகங்களைத் தோற்றுவித்து, அவர்களையெல்லாம் ஒரு மாவட்ட இயக்கமாக, ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டி, பின்னர் மாநாடு நடத்துவது நலம்‘, என்ற குறிப்பிட்டேன். ஆனால், ‘மாநாட்டிற்கப் பிறகுதான், காண முடியும், என்று நண்பர்கள் கருதினார்கள். அந்த வகையில் இங்கு நடைபெறும் இந்த மாநாட்டில் என்னைக் கலந்துகொள்ளச் செய்த நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் வாழ்வு வேண்டும்!

தென்னாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வு தேவை என்ற திட்டத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவன் நான், உழவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், இவர்களுக்கிடையிலிருக்கும் மத்தியத் தரவர்க்கத்தினர், பாட்டாளிகள் எல்லோருக்குமே வாழ்வுதர தன்னை ஒப்படைத்திருக்கிற தி.மு.கழகம், உழவர் பிரச்சனையில் கொண்டுள்ள கருத்தைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாயிருந்த முதலமைச்சர் திரு.காமராசர், ஒரு வாழ்த்து அனுப்பி இருக்கிறார்.

அந்த வாழ்த்து – ஆட்சியிலிருந்த ஆள்தான் மாறியிருக்கிறாரே தவிர, ஆட்சியின் பொருளாதாரத் திட்டங்கள் மாறவில்லை என்பதைத்தான் காட்டுவதாக இருக்கிறது!

இதுபோன்ற நடத்தப்படுகிற எல்லா மாநாடுகளுக்கும், எல்லா முதலமைச்சர்களும் அனுப்புகிற வழக்கமான வாழ்த்துச் செய்தியையே காமராசரும் அனுப்பியிருக்கிறார்.

நட்டு வைத்த பூச்செடியா என்ன?

‘மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டு‘மெனக் குறிப்பிட்டுவிட்டு, ‘உழவர்கள் நாட்டு முன்னேற்ற்திற்கு உழைக்க மாநாடு பயன்பட வேண்டு‘மென அவர் விரும்புவதாகவும் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கிறது.

எங்குச் சென்றாலும், ‘நாட்டு முன்னேற்றத்திற்கு உழையுங்கள், உழையுங்கள்‘, என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்களே, அந்த நாட்டு முன்னேற்றம்தான் என்ன?

உழவுத் தொழில் எந்த அளவு மேம்பாடுடையதாயிருக்கிறதோ – எந்த அளவு முன்னேறி இருக்கிறதோ – அதைப் பொறுத்திருக்கிறது நாட்டின் முன்னேற்றம்!

அந்தத் தொழில், முன்னேற்றம் காண வழி செய்யாது, தொழில் ஜீரணித்துப் போகவிட்டுவிட்டு, ‘நாட்டு முன்னேற்றத்திற்கு உழையுங்கள்‘, என்று கூறுவது என்ன நியாயம்?

நாட்டு முன்னேற்றமென்பது, நட்டு வைத்துள்ள பூஞ்செடி போலவும், அதை வளர்க்க, ‘ஆளுக்கொரு குடம் தண்ணீர் ஊற்றுங்கள்,‘ என்று கேட்பது போலவும் இருக்கிறது ஆட்சியாளர் போக்கு!

(நம்நாடு - 8-9-1954)