அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அமைச்சர் பேச்சு, அண்ணா அறிக்கை!

அண்மையில் நகரில் நிகழ்ந்த பலாத்காரச் சம்பவங்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் பொறுப்பு என்று போலீஸ் மந்திரி பக்தவச்சலம் கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டதாகத் தெரியவருகிறது.

பொறுப்பற்ற முறையில் துரதிருஷ்டவசமாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தென்றே இதனைக் கூற வேண்டியிருக்கிறது. ஏனெனில், அதிகாரத்திலிருக்கிற ஒருவர் இப்படிக் கூறியிருக்கிறார் – அதுவும் கழகத்தின் பொதுச் செயலாளர் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்டான பிறகு – அந்த அறிக்கையைப் பார்க்கிற எந்த நேர்மையானவரும், பலாத்காரத்திலிருப்பவர்களைப் போலவே – ஏன், அவர்களைவிட அதிகமாகவே கூட – நாம் கண்டித்திருக்கிறோம் என்பதை உணர முடியும்.

கடந்த 3ஆம் தேதியன்று கூட்டம் நடத்த அனுமதி மறுத்தும், அதனைத் தொடர்ந்து அவசரப்பட்டு ஏராளமான கட்சித் தோழர்களைச் சிறைப்படுத்தியும், சர்க்காரும் – போலீசும் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் கொந்தளிப்பு ஏற்பட்டதற்கும், அதன் காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பலாத்காரச் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கும் காரணம் என்பது, பொதுவாக எல்லோராலும் சந்தேகமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் செய்த குழப்பங்கள்!

எங்களை அல்லாத – எங்களை எதிர்க்கிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுடைய அறிக்கைகளும், சொற்பொழிவுகளும் – தங்களுடைய நடவடிக்கைகளால் போலீசார்தான் குழப்பங்களை உருவாக்கி ஊக்குவித்தனர் – என்ற உண்மையை நிலைநாட்டியிருக்கின்றன.

துவக்கத்திலிருந்தே கறுப்புக் கொடி கண்டன நிகழச்சி கண்ணியமாகவும் அமைதியாகவும் நடைபெறவேண்டிய மேலான அவசியத்தை தி.மு.க. வற்புறுத்தி வந்திருக்கிறது.

படுகாயமுற்றவர்களை, நான், இதாருடன் சென்று பார்த்தேன் என்பதை வைத்துக்கொண்டு, கட்சிதான் குழப்பத்தை மூட்டியது என்று யூகிக்கிற மந்திரியின் வாதம் வேடிக்கையாக இருக்கிறது – போலீசாரின் பலாத்காரத்தால் படுகாயமுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லியாக வேண்டும். மந்திரிகளோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களோ, இந்த விஷயத்தில் தாங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டாலும், நான் மனிதாபிமான உணர்ச்சிகளை உதறிவிட விரும்பவில்லை.

மந்திரியே சென்று பார்க்க வேண்டும்!

படுகாயமுற்றவர்களை மந்திரியே சென்று பார்க்க வேண்டும் ஏனெனில், மக்கிடம் ஈவிரக்கமின்றிப் போலீசார் நடந்துகொண்ட தவறுக்கு, அதிகாரத்திலிருப்பவர்கள் பரிகாரம் தேட, குறைந்த பட்சம் செய்யக் கூடியது இதுதான் என்றே எவரும் எதிர்பார்ப்பர்.

மூன்றாம்தேதி கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்காக மந்திரி தந்துள்ள விளக்கம், மிகத் தெளிவானதாகும்.

பிரதம மந்திரி கண்டனத்திற்கு ஆளாக்கப்படும் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவதை அனுமதிக்கத் தாங்கள் விரும்பவில்லை என்பதை, ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமையின் உள்ளடக்கத்தை மந்திரி இவ்விதம்தான் புரிந்து கொண்டிருக்கிறார் என்றால், நாம் சொல்லக் கூடியதெல்லாம், குடி உரிமைகளை அவ்வாறு மூர்க்கத்தனமாகப் பறிக்கப்படுவது, அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என்பதுதான்.

தவிர்க்க வேண்டும் என்று விரும்பிய கேடுகளைத் தடுப்பதற்காகப் போலீசார் அமல் நடத்திய அடக்குமறை, நியாயமானதுதானா – அவசியமானதுதானா – தேவைதானா – அளவுக்கு உட்பட்டதுதானா என்பதை அறிய, ஒரு நீதிப்பூர்வ விசாரணை நடத்த வேண்டுமென நான் கோருகிறேன்.

காவல்துறை அடக்குமுறை களபலி இருவர்!

இருவர் படுகாயங்களுக்குப் பலியாகியிருக்கின்றனர், எண்ணற்றோர் படுகாயமுற்றிருக்கின்றனர்.

சர்க்கார் கொஞ்சமேனும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வார்களானால், தாங்கள் நியாயமாகவே நடந்து கொண்டதாக மக்களுக்குச் சொல்வதற்காகவேனும், இந்தக் கட்டத்திலாவது அத்தகைய ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீதி விசாரணை நடத்துக!

6ஆம் தேதி இரவு போலீசார், நகரிலுள்ள சில சேரிப் பகுதிகளுக்குச் சென்று, நூற்றுக்கணக்கான நிரபராதிகளை, அவர்கள் பலாத்காரச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று சாக்குக் கூறிப் பலவந்தமாகச் சிறைச்சாலைக்கு இழுத்துச் சென்றிருக்கின்றனர் எனவும் புகார்கள் வந்துள்ளன.

ஏதுமறியாத ஏழை – எளிய மக்களை, இதுபோல அச்சுறுத்துகிற முயற்சி, தங்களது அரசியல் உள்நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகும். இதை வன்மையாகக் கண்டிக்காமலிக்க முடியாது. இது விசாரணை செய்யப்பட்ட வேண்டிய மற்றொரு விஷயமாகும்.

அப்படியொரு விசாரணை நடத்த வேண்டுமென்று கோர மக்களுக்கு உரிமை உண்டு, விசாரணை நடத்த வேண்டுமென நான் கோருகிறேன்.

(நம்நாடு - 11-1-1958)