அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


டில்லியே, நியாயம் வழங்கு!

ஆகஸ்டு 6 ஆம் தேதியன்ற நாகர்கோவில் கோர்ட்டு முன்பும் செங்கோட்டை கோர்ட் முன்பும் தி.மு.கழக அறப்போர் வீரர்கள் செய்ய இருக்கும் அடையாள மறயில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று பொதுச் செயலாளர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவைத் திரு.கொச்சித் தமிழக மக்கள் கலங்கரை விளக்கமாகக் கருதுகின்றனர்.

மறியலில் பங்குகொள்ள பதிவு செய்து கொள்ளும் அறப்போர் வீரரக்ளின் தொகை மளமளவென வளர்கிறது.

“டில்லியே, நியாயம் வழங்கு! நேரு சர்க்காரே நீதி காட்டு! டில்லியே, தமிழர் – மலையாளி பகையை மூட்டி விடாதே! அடக்குமுறை ஆட்சி ஒழிக! தமிழகம் வாழ்க!‘ என்பன போன்ற சுவரொட்டிகள் நாகர்கோவிலிலும் திரு – கொச்சித் தமிழகப் பகுதி ஊர்களிலும் அலங்கரமாக ஒட்டப்பட்டிருக்கின்றன. பல சுற்றறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

அடையாள மறியல்

தி.மு.க. துணைச் செயலாளர் கே.ஏ. மதியழகன், இரணியர், பீர்மேடு, மார்த்தாண்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று அறப்போர் குறித்துத் தோழர்களிடம் கலந்து பேசினார்.

சனிக்கிழமையன்று முனிசிபல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும், ஞாயிறன்று மார்த்தாண்டத்தில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்திலும் தோழர் மதியழகன் பேசினார். “அடையாள மறியல்“ குறித்து மக்களின் அமோக ஆதரவை விளக்குவதாய் அக்கூட்டங்கள் அமைந்தன.

தோழர் ஜான் அவர்களும், மற்ற தோழர்களும் இரவு பகலாகக் காரியங்கள் ஆற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் “அடையாள மறியல்“ திரு-கொச்சித் தமிழக அரசியல் வரலாற்றில் ஓர் முக்கிய இடம் பெறுவதாய் இருக்கும் எனப் பேசிக்கொள்ளப்படுகிறது.

மறியல் ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டுத் தி.மு.க. துணைச் செயலாளர் கே.ஏ.மதியழகன் சென்னை புறப்பட்டார்.

பொதுக்கூட்ட நடவடிக்கைகள்!

இன்று மாலை 2 மணிக்குத் திரு – கொச்சித் தமிழகப் போராட்ட நிலை குறித்து அறிவதற்கும், திட்டங்கள் தீட்டுவதற்கும் தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணா அவர்கள் – துணைச் செயலாளர் கே.ஏ.மதியழகன், மதுரை எஸ்.முத்து, சி.வி. ராஜகோபால், திருச்சி முத்துகிருஷ்ணன் ஆகியோருடன் காரில் திருவாங்கூர் – கொச்சி எல்லையை வந்தடைந்தார்.

திரு.கொச்சி எல்லை நுழைவாயிலாகிய ஆரல்வாய் மொழியில், நாஞ்சில் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் தோழர் ஜான் அவர்களும் – நூற்றுக்கணக்கான தோழர்களும் கொடிகள் நாங்கிய நான்கைந்து கார்களுடன் அண்ணாவை வரவேற்கக் காத்திருந்தனர்.

பொதுச் செயலாளர் அண்ணா அவர்களுக்கும், மதியழகனுக்கும் நாஞ்சில் மக்கள் சார்பாக மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நாஞ்சில் நாடு பகுதியில் அண்ணா!

அங்கிருந்து நேராக நாகர்கோவில் சென்றனர். வழியில் கிளைக் கழகங்களும், தோழர்களும், அண்ணா அவர்களுக்கு மலர் மாலைகளைச் சூட்டி வரவேற்றனர்.

நேராகக் கோட்டாறு தி.மு.கழகப் படிப்பகத்திற்குப் பொதுச் செயலாளர் அண்ணா அவர்களும் மதியழகனும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோட்டாறு தி்.மு.க. சார்பில் நடைபெறும் படிப்பகத்தைப் பார்வையிட்டு, சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு டிராவல்ஸ் பங்களாவிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்பு பெற்றார்.

மணி 4 மணி முதல் 5.30 மணி வரை வடசேரியில் நாஞ்சில் மாவட்டத் தி.மு.க. செயற்குழுக் கூட்டம், பொதுச் செயலாளர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. தோழர்கள், திரு-கொச்சித் தமிழக அரசியல் நிலைமைகளைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மாலை 7 மணிக்கு வடசேரி வஞ்சி ஆதித்தன் புதுத் தெருவில் நிலைமை சமாளிக்க முடியாததாய் இருந்தது. இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கடல் தி.மு.கழகப் பொதுச்செயலாளரின் பேச்சைக் கேட்கக் குழுமியிருந்தது..

நாஞ்சில் மாவட்டத் தி.மு.கழகச் செயலாளர் தோழர் ஜான் தலைமை தாங்கினார்.

பல கிளைக் கழகங்களின் சார்பிலும், தோழர்கள் சார்பிலும் பொதுச் செயலாளர் அண்ணா அவர்களுக்கு ஏராளமான மலர் மாலைகள் சூட்டப்பட்டன.

பிறகு துணைச் செயலாளர் தோழர் கே.ஏ. மதியழகன் பேசினார்.

(நம்நாடு - 3-8-1954)