அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


என் கடமை!

எதிர்பார்த்தது நடைபெறுகிறது, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது, அதிலும், எந்தச் சமயத்தில் மக்களைச் சந்தித்து அமைதியும், கண்ணியமும், ஒழுங்கும், பலாத்காரமற்ற தன்மையும் மேலோங்கி நிற்க வேண்டும் – பண்புடன் செயலாற்ற வேண்டும் என்று நான் விளக்கிட வேண்டுமோ, வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டுமோ, அந்தச் சமயமாகப் பார்த்து, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்?

இந்தப் போக்கே எனக்குப் புரியவில்லை. மக்களைச் சந்தித்து, ஒரு முக்கியமான நிகழ்ச்சி குறித்து, கட்சியிலுள்ளோர் விளக்கமளிக்கும் வாய்ப்பைப் பறிப்பது ஜனநாயகமுமல்ல நல்லாட்சிக்கு அடையாளமுமல்ல!

கூட்டத்துக்கு அனுமதி மறுப்பதன் மூலம், இந்த ஆட்சி, தன் போக்கின் மூலம் புரிய வைத்துவிட்டது.

காரணமற்ற இந்தத் தடையை மீறுவதுதான் என் தலையாய கடமை என்று தீர்மானித்திருக்கிறேன்.

எனவே, இன்று !3.1.58) மாலை 5.30 மணிக்கு, நான், திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்திலே பேசுவதற்காக வருகிறேன்.

ஆட்சித் தொல்லைகளை ஏற்போர் வருக!

மேடை முன்பே பிய்தெறியப்படலாம்!
ஒலிபெருக்கி அமைப்பு எடுத்துவிடப்படலாம்!
மக்கள் அங்குக் கூடாதபடி தடுத்திடப்படலாம்!
வருகிறபோதே நான், சிறைக்கு அழைத்துச் செல்லப்படலாம்!

என்ன நேரிடும் என்பது சர்க்காருக்கு அவ்வப்போது தோன்றும் யோசனைகளைப் பொறுத்திருக்கிறது!

சர்க்கார் தனக்குச் சரியென்று தோன்றும் முறைப்படி நடந்துகொள்கிறது, மக்கள் சார்பில் நான், என் கடமையைச் செய்ய இன்று மாலை 5.30 மணிக்கு, திருவல்லிக்கேணிக் கடற்கரை வருகிறேன்.

அங்கு நான் பேச வாய்ப்புப் பெற்றால் மக்கள், ஜனவரி 6இல் கறுப்புக் கொடி காட்டுவதை, எப்படிக் கண்ணியமான முறையில் நடத்துவது என்பது பற்றி எடுத்துக்கூறுவேன்.

பொறுப்புடன் நடந்து கொள்க!

சர்க்கார், என்னை உங்கள் முன் காட்டி, உங்களையும் என் முன் காட்டி, நம் இருவரையும் அவர்களுக்கே உரிய முறையில் செய்வார்களானால், நீ்ங்கள் என்னிடம் காட்டிவரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்படி அங்கு மிக அமைதியாக – ஒழுங்காக இருந்து, தலைமகனை மாமியார் வீட்டுக்கு அனுப்பித்தரும் பெற்றோர்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அண்ணாதுரையைக் கடற்கரையில் கைது செய்தோம், அந்தக் கழகத் தேழர்கள் கட்டுப்பாடாக நடந்துகொள்ளாமல் குழப்பினர் என்ற சொல், என் செவி புகலாகாது, அந்த இழி சொல்லை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

‘கைது செய்தனர், எனினும் கடமையாற்றுவோம் காணிக்கை தருகின்றனர் என்று சீரிய நோக்குடன், கழகத் தோழர்கள் இருந்தனர்‘ என்று, அடக்குமுறை ஏவிடும் ஆட்சியே கூடக் கண்டு வியப்படைய வேண்டும்.

வீரர்களாக விளங்குக!

நெருக்கடிகளின்போது, நெஞ்சிலே கோப அலைகள் கடக்கத்தான் செய்யும் – அது எவருக்கும் ஏற்படும் – ஆனால் எவர், அத்தகைய நேரத்தில் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடந்து கொள்ளும் நெஞ்சுரம் கொண்டுள்ளனரோ, அவர்கள் வீரர்கள் – விடுதலைக் கிளர்ச்சியை வெற்றியுடன் நடத்திச் செல்லும் ஆற்றல் கொண்டோர்‘ – என்று நாடு பாராட்டும்.
எனவே, தோழர்களே! இன்று மாலை கடற்கரையில் உங்களைச் சந்திக்க வரும் என்னைக் கைது செய்வார்களானால், ‘என் தோழர்கள் அந்த நேரத்திலும், நேர்மையுடனும், அமைதியுடனும் நடந்து கொண்டனர்‘ என்று நான் என்றென்றும் எண்ணி எண்ணி மகிழ்ந்து, பெருமைப்படத்தக்க விதமாக நடந்துகொள்ள வேண்டும்.

எனக்கு, உங்கள் உள்ளங்களையே அன்புடன் தந்துள்ள உங்களிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கலாம் அல்லவா?

இன்று !ஜனவரி 3) மாலை கடற்கரைக் கூட்டத்தில் பேச, என்னுடன் ஆசைத்தம்பி எம்.எல்.ஏ., இரா. செழியன் எம்.ஏ. வருகிறார்கள்.

(நம்நாடு 3-1-1958)