அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


எதிர்ப்பு வெள்ளம் நீந்தினோம்!

ஒரு கழகமோ – கட்சியோ வளருகிறதா – இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, சாதாரணமான தனிப்பட்டவர்கள் கூடிப் பேசுகிற இடத்திலே, கடைவீதியிலே, சாலை வழியிலே எங்கெல்லாம் அந்தக் கழகமோ, அக்கட்சியின் பெயரோ அடிபட்டால் – அதுவே போதுமான அத்தாட்சியாகும். அதை வைத்துப் பார்ப்போமானால், தி.மு.கழகத்தின் பெயர் அடிபடாத இடமே கிடையாது. அதன் நடவடிக்கைகளைப் பேசாத கட்சிகளே கிடையாது. கழகப் பெயரை உச்சரிக்காத கட்சித் தலைவர்களே கிடையாது.

அப்படியென்றால், எல்லாக் கட்சியினரும் தி.மு.கழகக் கொள்கைகளை ஆதரித்துப் பேசுகின்றனர் என்று நான் சொல்ல மாட்டேன், அவ்வளவு பைத்தியக்காரனல்ல நான்!

கம்யூனிஸ்டுகளானாலும், காங்கிரசாராயினும், பிரஜா சோஷியலிஸ்டுகளாயினும் இசைக் கச்சேரிகளில் கடைசியாக மங்களம் பாடுவதுபோல், தி.மு.கழகத்தைக் கிண்டல் செய்தோ, கேலி பேசியோ கண்டனம் தெரிவித்தோ, எப்படியோ ஏதாகிலும் நம்மைப் பற்றிப் பேசினால்தான், அவர்கள் கூட்டம் பூர்த்தியாகிறது என்கிற நிலைக்குத் தி.மு.கழகம் வளர்ந்திருக்கிறது.

இந்த, எல்லோராலும் பேசப்படுகிற நிலைக்குத் தி.மு.கழகம் வளர எத்தனைக் கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது?

எத்தனை எதிர்ப்புப் புயல்கள்!

அதை எதிர்த்து வந்த வெள்ளம் என்ன சாமான்யமானதா, அல்ல அல்ல – கழகத்தின் மீது வீசிய பொறாமைப் புயல், அடக்கு முறைப் புயல், ஏளனப் புயல், எதிர்ப்புப் புயல், என்ன கொஞ்ச நஞ்சமா? அத்தனை எதிர்ப்பு வெள்ளத்தையும் எதிர் நீச்சல் அடித்துத்தான், புயல்களைத் தாங்கிக் கொண்டுதான், இன்று தி.மு.கழகம் எல்லோரின் கவனத்தையும் கவரும் கழகமாக வளர்ந்திருக்கிறது.
இன்று தி.மு.கழகம், நம் நாட்டில் நிலைத்துவிட்ட ஒரு ஜனநாயக அமைப்பு இதை உணர்ந்து கொள்ள மறுப்பவர்கள், நாட்டின் உண்மை நிலை அறியாதவர்கள்! உணர்ந்தும் வெளியே சொல்ல வெட்கப்படுபவர்கள், சொன்னால் எங்கே இவர்கள் இன்னுவம் வளருவார்களோ என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டவர்கள் ஆவார்கள்.

தி.மு.கழகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பவர்களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே இருப்பவர்களும் தங்கள் தங்கள் கருத்திற்கேற்ப நம்மைப் பற்றிச் சொல்கிறார்கள். காங்கிரசார் நினைக்கிறார்கள் – இவர்கள், தங்களை ஒழிக்க வந்தவர்கள் – என்று கம்யூனிஸ்டுகள் கருதுகிறார்கள் – அவர்களை ஒழிக்க நாம் வளருவதாக!

கொள்கையையும் விட்டுக் கொடுக்காது!

பணக்காரர்கள் நினைக்கிறார்கள் – தங்கள் பகட்டான வாழ்வைப் பறித்துச் செல்லப் படை திரட்டுகிறார்கள் இவர்கள் என்று!

சினிமாத் துறையிலிருப்பவர்கள் சிலர் நினைக்கிறார்கள் – தி.மு.கழகத்தார் தங்கள் மீது படை எடுத்துவிட்டிருப்பதாக! இவர்களிலே பலர், சில நேரங்களில் நம்மை முற்போக்குவாதிகள் என்றும், சில நேரங்களில் பிற்போக்குச் சக்திகள் என்றும் பேசுகிறார்கள்.

ஆனால், இவர்களில் எவரும் நம்மை, இன்னும் இன்னவர்தான், இப்படிப்பட்டவர்தான் என் அறுதியிட்டுச் சொல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கும் நமக்கும் கிட்டிய நெருக்கமில்லை, நம்மை நன்கு புரிந்து கொள்ள!

தி.மு.கழகம் எல்லாத் துறைகளிலும் படை எடுக்கிறது. இதனாலேயே யாருக்கும் பகைமூட்டாது! தனது கொள்கைகளையும் இலட்சியத்தையும் விட்டு கொடுக்காது!

சமுதாய நலிவுகளைப் போக்க வேண்டும், மத, மார்க்கத் துறைகளிலே, அவற்றைப் பரப்பும் கலைத் துறையிலே நிலவும் சிர்கேடுகளைப் போக்கியாக வேண்டும், பொருளாதாரத் துறையிலே ஓங்கி நிற்கும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றியாக வேண்டும், அரசியலில் இடம் பெற்றிருக்கும் இழிதன்மையைத் துடைத்தாக வேண்டும்.

ஆக்க வேலைக்கு நமது சக்தி்,

இவற்றில் எதிலேனும் ஒன்றில் மட்டும் ஈடுபட்டு, இதிலேயே மூழ்கிவிடுவது கேடானது.

இத்தனைத் துறைகளிலும் தி.மு.கழகம் படையெடுத்திருக்கிறது. அத்தனைத் துறைகளையும் நல்லதாக்க வேண்டுமென எண்ணிப் பாடுபட்டு வருகிறது.

வளர்ந்து வருகிற அந்தச் சக்தியை ஆகக்க வேலைக்குப் பயன்படுத்தலாம், அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாமா!

இந்தச் சக்தியை வளர்த்து, இதற்குக் கட்டுப்பாடு உணர்வைப் போதி்த்து, கூரிய வாளையும் தந்து, குறி பார்த்து வீசவும் சொல்லித் தர வேண்டும்!

அந்த சக்திக்குத் தரப்படும் வாளும் கூரியதாயிருக்க வேண்டும் குறியும் தெரிய வேண்டும்.

நாம் எதிர்த்துப் போரிட்டு வீழ்த்த வேண்டிய குறிகள் ஒன்றல்ல, இரண்டல்ல.

கழகம் ஆக்கச் சக்தியாகும்
சங்கராச்சாரியார்கள், தம்பிரான்கள் ஆகியோரின் ஆதிக்கத்தையும் அவர்கள் போதிக்கும் மதக் கருத்துக்களையும் அவைகளினால் மக்களிடையே இடம்பெறும் மாச்சரியங்களையும் – மூடப் பழக்கங்களையும் போக்கியாக வேண்டும் – ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு போக்கப்பட வேண்டும். திராவிடத் தனியரசு என்ற லட்சியத்தை ஈடேற்றியாக வேண்டும். இத்தனை குறிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

திராவிடத் தனியரசு நமது இலட்சியம்!

குறி தெரிந்தால் மட்டும் போதாது, கூரிய வாளையும் பெற்று, குறி பார்த்து வீசத் தெரிந்தவர்களையும் அந்தந்த இடத்திலேயே உண்டாக்கிட வேண்டும். அப்போதுதான் கழகம் ஒரு நல்ல ஆக்க சக்தியாக விளங்க முடியும்.

காங்கிரசாரைப் போல் அல்லது பிற கட்சியினரைப்போல் நமக்கு ஒரே ஒரு குறி அல்ல.

காங்கிரசாருக்கு அன்னை பாரதமாதாவின் கைகளிலிருந்து வெள்ளையர் ஆதிக்கமெனும் அடிமைச் சங்கிலி ஒன்றுதான் குறி!

நமக்கு அப்படி அல்லவே! குறிகள் பல, நமக்கு வேண்டியுள்ளன – என்று. காஞ்சி அண்ணன் டாக்கீஸ் திடவில் 22.8.1954 ஞாயிறன்று நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.கழக இரண்டாவது அரசியல் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில் தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் குறிப்பிட்டார்.

(நம்நாடு - 23.8.1954)