அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஜனநாயகப் பயிற்சிக்கூடம்!

சட்டசபைத் தொகுதி மிகப் பரந்ததாயிருப்பதால், எல்லா மக்க்ளும், தேர்தலுக்கு நின்று வெற்றிபெற்ற பிறகு, சட்டசபை உறுப்பினர்களைச் சந்திக்கவே இயலாது போய்விடுகிறது, ‘அடுத்த தேர்தலில் நாம் நின்றால் பார்த்துக்கொள்வோம்‘ என்ற நினைப்பில், அவர்கள், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்சி மாறிக் கொள்ள முடிகிறது.

‘இந்த அவல நிலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஷயத்தில் நிகழச் சாத்தியமில்லை, ஏனெனில், தினம் தினம் தெரு வீதிகளிலும், கடை முனைகளிலும் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களை உறுப்பினர்கள் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள், பொதுமக்களை உறுப்பினர்கள் அலட்சியம் செய்யவோ, அவர்கள் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடவோ முடியாது. அப்படி மக்க்ளுடன் நெருங்கயி தொடர்பு கொண்டவர்களாக ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், உண்மையான ஜனநாயக வளர்ச்சிக்கு ஊராட்சி மன்றங்கள் வெகுவாகப் பயன்பட முடியும் – என்று தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள், துறையூர் ஊராட்சி மன்ற வரவேற்புக்கு நன்றி கூறுகையில் குறிப்பிட்டார்.

தி.மு.கழகப் பொதுச் செயலாளனாயிருந்து பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள எனக்கு, இந்த ஊர் ஊராட்சி மன்றத்தார் தந்துள்ள வரவேற்பு எனது பொதுப்பணியைப் பாராட்டுவதாகவும், என்னை மேலும் தொடர்ந்து பொதுப்பணியில் ஈடுபட ஊக்குவிப்பதாயும் அமைந்துள்ளது. அத்தகைய ஒரு வரவேற்பை எனக்களித்த இந்த மன்றத்தாருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் அடிப்படை ஊராட்சி மன்றங்களே!

இப்பொழுதெல்லாம் மந்திரிகளுக்கு இம்மாதிரி வரவேற்புத் தருவது, இத்தகைய ஊராட்சி மன்றங்களின் நிர்வாகக் கடமைகளுள் ஒன்றாகவே ஆகிவிட்டது.

என் போன்ற ஆளும் கட்சியில் இல்லாத அதிகமான அனுபவம் இல்லாதவன், எனவே, ஊராட்சி மன்றங்களின் நிர்வாகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்துக் கூற முடியாதவனாக இருக்கிறேன்.

ஊராட்சி மன்றங்களில் உள்ள குறைகளைப் போக்குவதற்கும் என்னால் இயலாது. இந்த மன்றங்களின் குறைகளை என்னிடம் கூறப்போவதில்லை என்று வரவேற்பு இதழிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஊராட்சி மன்றங்களில் உள்ள குறைகளை மந்திரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் அமைச்சர்களுக்கு ஊராட்சி மன்றங்களின் குறைகளைத் தெரிந்திருந்தாலும், அவற்றை நீக்கிவிடுபவர்களாகக் காணோம்!

என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்லக்கூடியதெல்லாம், இத்தகு ஊராண்மைக் கழகங்கள்தான், ஒரு ஜனநாயக அரசியலின் அடிப்படையாகும்.

ஊராண்மைக் கழகங்களில்தான் நல்ல நிர்வாகத் திறன் பெற முடியும், ஜனநாயக அரசியல் சிறப்புற நடைபெற நிர்வாகத் திறன் இன்றியமையாததாகும்.

நான் மட்டுமா தமிழ் ஆர்வம் கொண்டவன்?

சட்டசபைகளிலும், வேறு பல ஆட்சி மன்றங்களிலும் வீற்றிருப்பவர்களுக்கு நிர்வாகத்துறையிலே போதுமான அனுபவம் இல்லாமையினால் பல கஷ்டங்கள் அவர்களுக்கு நேரிடுகின்றன.

எனக்குத் தரப்பட்ட வரவேற்பில் என்னைத் தமிழ் ஆர்வம் கொண்டவன் என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த ஊராட்சி மன்றத்தாரும், அந்தத் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள் என நம்புகிறேன்.

அப்படியானால் அவர்கள், ஊர் மக்களிடையே தமிழ் அறிவு வளரப் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும், கல்வி – அறிவு பெற்றவர்களாக இந்த நாட்டு மக்களை ஆக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

இரண்டு வகைச் சொற்பொழிவுகள்!

அந்தக் கல்வி அறிவைப் பெறுகிற வாய்ப்பும் வசதியும் இந்த நாட்டு மக்களுக்கு வெகுவாக இல்லாமலிருக்கின்றன.

அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் இத்தகு ஊராட்சி மன்றங்கள் உருவாக்கித் தர முடியும் என்று நம்புகிறேன்.

இந்த ஊர் மக்களின் பொது அறிவை வளர்க்க, ஊராட்சி மன்றத்தார், நல்ல பல பிரச்சாரம் செய்யலாம்.

பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கொண்ட, சிறப்புச் சொற்பொழிவுகள் செய்யச் சொல்லலாம்.

இன்று இந்த நாட்டில் நடைபெறுகிற சொற்பொழிவுகள் இருவகைப் பட்டவைதான், ஒன்று, மதச் சொற்பொழிவுகள், இரண்டாவது, எங்களைப் போன்ற அரசியல் கட்சியினர் நிகழ்த்தும் அரசியல் சொற்பொழிவுகள்.

சிறப்புச் சொற்பொழிவுகள்

நான் சிறப்புச் சொற்பொழிவுகள் என்று குறிப்பிடுவது, இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டன – நாள்தோறும் முன்னேறிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய உலகத்தை, நாட்டு மக்களுக்குப் படம் பிடித்துக்காட்டும் சிறப்புச் சொற்பொழிவுகளைப் பற்றி நான் குறிப்பிடுவது.

உதாரணமாக, மக்களின் பொது அறிவை வளர்க்கும் முறையில், அமெரிக்காவைப் பற்றியும், ஆஸ்திரேலியாவைப் பற்றியும் – ரஷ்யாவைப் பற்றியும், சீனாவைப் பற்றியும், அவற்றின் அரசியல் வரலாறு, நீர்வளம், நிலவளம், தொழில்வளம், அந்த நாட்டு மக்களின் நாகரிகப் பண்பாடு, பழக்க வழக்கம், இன்னபிறவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லப் செய்யலாம்.

இந்தத் துறையில் சிறந்து விளங்கும் நல்ல பல கல்லூரிப் பேராசிரியர்களைக் கொண்டு இந்தச் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதின் மூலம், மக்களின் பொது அறிவு வளர முடியும் மேலும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்தவித அரசியல் கட்சிப் பூசல்களும் நிகழ இடமிருக்காது.

ஊராட்சி மன்றங்களுக்கு இப்போதுள்ள அதிகாரங்கள் போதாது என்று பல கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள், மேலும் அதிகமான அதிகாரங்களைப் பெற்றுத் திறம்பட வேலை செய்வதற்காக, இத்தகு மன்றங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.