அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஜனநாயகம் நிலைக்க
1

நாட்டு ஜீவநாடியான பொது மக்கள், மார்ச் 4 ஆம் தேதியும், அதற்கு முன்னாரே முதல் தேதியும், பிறகு 6ம் தேதியும், 8ம் தேதியும், 11ம் தேதியும் என்று வைத்திருக்கின்ற இந்த தேர்தலில் எந்த வகையிலே தீர்ப்பளிக்கின்றார்களோ அதைப் பொறுத்தான் நாட்டினுடைய எதிர்காலம் உருவாக இருக்கின்றது. அதைப் போலவே, நாடு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்களோ, அதற்கேற்பத்தான் ஆட்சி அமையும்.

மண்ணினுடைய வளம் எப்படியோ அப்படித்தான் பயிர் இருக்கும் என்பதைப் போல், நூலினுடைய திடம் எப்படியோ அப்படித்தான் வேட்டி சேலை இருக்கும் என்பதைப் போல், நெய்பவனுடைய திறமை எப்படியோ அப்படித்தான் வேட்டி சேலையில் நயம் இருக்கும் என்பதைப்போல், பொதுமக்கள் அளிக்கின்ற தீர்ப்பைப் பொறுத்துத்தான் எதிர்கால அரசியல் வாழ்வு உருவாக இருக்கிறது. ஆகையினாலே மார்ச் மாதம் நடைபெறுகின்ற தேர்தலில் நீங்கள் காட்டுகின்ற பொறுப்புணர்ச்சி முக்கியமானது.

நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் உலகத்திலேயே பழம் பெருமைகளில் முதன்மையானதாக இருந்தது. ஒரு காலத்திலே தமிழ் நாட்டினுடைய அருமை பெருமை உலகத்திலே இருக்கிற பல்வேறு நாட்களிலே பரவி, தமிழ்நாட்டின் முத்தும், தமிழ் நாட்டினுடைய சந்தனமும், தமிழ்நாட்டின் அகிலும், தமிழ்நாட்டிலே நெய்யப்பட்ட பட்டுப் பட்டாடைகளும், ரோம் நாடு வரையிலே சென்றது என்று புராணங்கள் அல்ல, இதிகாசங்கள் அல்ல, வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்த தமிழ் நாட்டில் (இதே) காஞ்சிபுரத்திலிருந்து புத்தமார்க்கத்தைப் போதிப்பதற்காகப் புத்தப் புலவர் சைனா வரையிலே சென்றார் என்று வரலாறு சொல்கிறது.

வடநாட்டிலே எத்தனையோ மன்னர்கள் கொடிகட்டி ஆண்டார்கள் என்று வரலாறு சொல்கிறது.

அசோகன் ஆண்டான், அக்பர் ஆண்டான், ஔரங்கசீப் ஆண்டான், கனிஷ்கன் ஆண்டான், சந்திரகுப்தன் இருந்தான். சமுத்திர முப்தன் இருந்தான் என்றெல்லாம் சொல்லப்பட்ட அந்தக் காலத்திலேயும் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ்நாடு, யாருக்கும் தாள் பணியாமல், யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் தாழ்ந்துவிடாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்ததாக நமக்கு வரலாறு இருக்கிறது.

இவைகளை எல்லாம் வரலாற்றிலே படித்தும், இலக்கியத்திலே தெரிந்து கொண்டும் இருக்கிற நம் தமிழ்நாட்டு மக்கள், இன்றைய தினம் எந்த நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் காங்கிரஸ்காரர்களாக இருக்கட்டும், கம்யூனிஸ்ட்டுகளாகட்டும், சோஷலிஸ்டுகளாகட்டும், எந்தக் கட்சியும் சேராத கனவான்கள் ஆகட்டும், அதைப்பற்றிக் கவலை இல்லை. தாங்கள் பிறந்து வளர்“நது வாழ்ந்து கொண்டு வருகின்ற நாட்டு நிலைமையைப் பற்றி, முன்னாலே இருந்த நிலைமையையும், இன்றைய தினம் இருக்கின்ற நிலைமையையும் அவர்கள் அருள் கூர்“ந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாராவது நம் வீதியிலே இருக்கிற ஒருவர் வெளியூருக்குப் போய் விட்டு 6 மாதத்திற்குப் பிறகு திரும்பி வந்த போது, முன்னாலே இருந்ததை விட இளைத்திருந்தால் எவ்வளவு அன்போடு அவரை விசாரிக்கிறோம்?

“என்ன அம்பலவாண முதலியாரே ஏன் இப்படிக் கயிறுபோல் ஆகிவிட்டீர்கள்? முன்னாலே எல்லாம் பீமராஜாபோல் இருப்பீர், இப்போது என்ன இப்படி இளைத்துவிட்டீர்கள்? முன்னாலே எல்லாம் 4 மைல் 5 மைல் தளராமல் நடப்பீர்கள், இன்றைய தினம் ஒரு பர்லாங் நடந்தால் ஏன் பெருமூச்சு வாங்குகின்றது? ஏன் உடம்பெல்லாம் கறுத்திருக்கிறது? ஏன் கண்கள் எல்லாம் மஞ்சளாகி இருக்கின்றன? என்று நாம் கேட்க, அவரும் பரிதாபத்தோடு நம்மிடத்திலே எடுத்துச் சொல்லுவார்.

“அப்பா, எனக்கு நோய் வந்து விட்டது. மஞ்சள் காமாலை என்கிறார் ஒரு வைத்தியர், இல்லை காசம் என்கிறார் ஒரு டாக்டர். அது அல்ல குன்மம் என“கிறார் இன்னொருவர், இது அத்தனையும் அல்ல, புழக்கடையான பிடித்துக் கொண்டான் என்கிறான் பூசாரி. இதிலே எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உடல் மட்டும் இளைத்துவிட்டது என்று நம்மிடம் பச்சாதாபத்தோடு சொல்வதைப் போல், நாம் வாழுகின்ற இந்த நாடு நம்முடைய முன்னோர்கள் காலத்திலே எப்படி இருந்தது. இன்றைய தினம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு ஆள் இளைத்து விட்டால் விசாரிக்கின்ற அக்கரையைத் தயவு செய்து நீங்கள் நாட்டினிடத்திலே காட்டுங்கள்.

நீங்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருங்கள். கார்ல் மார்க்ஸ் பேரிலே ஆணை வையுங்கள்; லெனினைப் பூஜியுங்கள்; ஓய்ந்த நேரத்திலே ஸ்டாலினைப் புகழுங்கள்; ஏதாவது கோபம் வந்தால் அவனுடைய கல்லறையைத் தோண்டி வெளியே போடுங்கள்; அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் பிறந்து வளர்ந்த இந்த நாட்டையும் ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். ஏன் என்றால் எந்தத் திட்டத்தை நீங்கள் புகுத்தினாலும், எப்படிப்பட்ட சமதர்மத்தைக் கொண்டு வந்தாலும், எத்தகைய பொதுவுடைமையைக் கொண்டு வந்தாலும், மண் வளத்திற்கு தக்கபடிதான் திட்டமிருக்கும். மண் வளம் சரியாக இல்லாவிட்டால் நல்ல விதை போட்டுவிட்டால் மட்டும் போதாது. சந்தேகமிருக்கின்ற தோழர்கள், உதகமண்டலத்திலேயும், பெங்களூரிலேயும் மட்டுமே பயிராகக் கூடிய சில காய்கறி கிடைக்கும். ஆனால் மலரிலே மணம் இருக்காது; காய்கறிகளிலே சுவை இருக்காது. அங்கு இருப்பதைப்போல.

அதைப்போலத்தான் இந்த நாட்டிலே நீங்கள் பொதுவுடைமைத் தத்துவத்தைப் புகுத்தினாலும், எந்தத் திட்டத்தை நீங்கள் நிறைவேற்றினாலும், இங்கே இருக்கின்ற என்னுடைய மதிப்புக்குரிய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் இராமமூர்த்தி அவர்களே, இந்த நாட்டுக்கு அதிபரானாலும் மண் வளத்திற்குத் தக்கபடிதான் சமதர்மம் இருக்கும். ஆகையினாலே தான் மண்வளத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் என்று உங்களிடத்திலே நான் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நான்கூட கலாசாலையிலே படிக்கின்ற போது கேள்விப்பட்டிருக் கின்றேன் வெண்பா புலி வேலுச்சாமி என்ற புலவர் இருந்தார் என்று. நான் தமிழ் கற்றதே காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு தமிழ்ப் புலவர்களிடத்தில்தானே. அதிலே ஒருவர் பெயர் ஏகாம்பர ஐயா என்பது. மற்றொரு புலவர் திருஞானசம்பந்தர். நம்முடைய புலவர் திருஞான சம்பந்தர். நம்முடைய புலவர் திருஞானசம்பந்தருக்கு வேண்டுமானால் கொஞ்சம் என்னிடத்திலே கோபம் இருக்கலாம். நான் கற்றுக்கொடுத்த புராணத்தை அண்ணாத்துரை இப்படி எல்லாம் பயன்படுத்துகின்றானே என்று கொஞ்சம் கோபம் இருக்கலாமே தவிர, அவரையே நீங்கள் விசாரித்துப் பார்த்தால் நல்ல மாணவன் என்று சொல்லுவாரே தவிர, போக்கிரி மாணவன் என்று சொல்லமாட்டார். ஆகியனாலே இன்றைய தினம் என்னிடத்திலே ஏதாவது தமிழ் அறிவு இருக்கிறது என்றால், அதனைத் தமிழ்நாடு இன்றைய தினம் ஏதாவது ஓரளவு போற்றுகின்ற தென்றால், அது காஞ்சிபுரம் அளித்த பிச்சை என்பதைப் பெருமையுடன் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அந்த அளவுக்கு எனக்குத் தமிழ் அறிவும், தமிழ் இலக்கியத்தில் பற்றுதலும் ஏற்படச் செய்த இரண்டு தமிழ்ப் புலவர்களைக் காஞ்சிபுரம் எனக்களித்திருக்கிறது. அதைப்போலவே, இன்றைய தினம் தேர்தலில் ஈடுபட்டிருக்கின்ற நான், நீங்கள் எனக்கு அந்த ஏற்றத்தைத் தருவீர்கள் என்ற நல்ல நம்பிக்கையோடு தான் உங்களிடத்திலே தேர்தலைப் பற்றி அதிகம் பேசாமல் இருக்கிறேன்.
நான் உங்களைப் பழைய தமிழ் நாட்டைப் பார்க்கும்படி அழைத்தேன். அந்தப் பழைய தமிழ் நாட்டில், நீர் வளமும், நிலவளமும், குடிவளமும், அறிவு வளமும், அப்பழுக்கற்ற வகையிலே இருந்திருக்கின்றது. அந்தக் காலத்திலே தான் நம்முடைய நாட்டில் சிலப்பதிகாரத்தை இயற்றினார்கள் பெரும்புலவர்கள். அந்தக் காலத்திலே தான் மணிமேகலையை இயற்றினார்கள்; அந்தக் காலத்திலேதான் அகநானூறு பாடினார்கள் புறநானூறு பாடினார்கள், அந்தக் காலத்திலேதான் தொல்காப்பியத்தைப் பாடினார்கள்; அந்தக் காலத்திலே பாடாத பாட்டு இல்லை; அப்போது தோன்றாத பெரும்புலவன் இல்லை. அதைப் போலவே, அறிவிலே சிறந்தவர்கள் இருந்தது மாதத்திரமல்ல. வீரத்திலே சிறந்தவர்கள் தமிழகத்திலே ஏராளமாக இருந்தார்கள்.

இங்கிருந்து கிளம்பி இராஜேந்திர சோழன், பர்மா வரையிலே சென்று வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு வந்திருக்கின்றான். இங்கிருந்து கிளம்பிய குலோத்துங்க சோழன். இன்றைய தினம் ஒரிசா என்று அழைக்கப்படுகின்ற பழைய கலிங்கத்தை வென்றிருக்கின்றான். அதனைத்தான் கலிங்கத்துப் பரணி என்று தமிழ்ப் புலவர்கள் பெருமையோடு சொல்கிறார்கள். இங்கிருந்து கிளம்பியவர்கள் யவன நாடு வரையிலே வியாபாரம் செய்திருக்கின்றார்கள். இன்றைய தினம் தமிழ் நாட்டினுடைய படத்தை நீங்கள் பூகோள பாட புத்தகத்திலே பார்த்தால், மூன்று பக்கத்திலே அழகான கடலும், கடலை அடுத்து மலைகளும், மலைகளைத் தாண்டி அழகான சிற்றூர்களும், பல சிற்றூர்களுக்கு நடுவிலே பல பெரிய நகரங்களும், சிற்றூர்களுக்கும் நகரங்களுக்கும் வாழ்வும், வளமும் அளிக்கத்தக்க ஆறுகளும், ஆறுகளிலிருந்து பிரிந்து செல்கின்ற வாயக்கால்களும், வாய்க்கால்களாலே வளமூட்டப்படுகின்ற வயலும், வயலைக் கட்டிக்காக்கின்ற உழவர்களும், உழவர்களுக்கு மானத்தை மறைத்துக்கொள்ள ஆடை தருகின்ற நெசவாளர்களும், நெசவாளர்களையும் உழவர்களையும் போற்றிப் பாடுகின்ற புலவர்களும், இப்படி எல்லாம் இருப்பதைப் பூகோளப் படத்திலே இன்றைய தினம் அமைப்புவரையிலே பார்க்கலாம். இன்றைய தினம் புலவர்களுக்கு அந்த நிலை இல்லை. எங்காவது சீமான் வீட்டுத் திருமணமானால் மணமக்களை வாழ்த்திப் பாட்டுப் பாடுகின்றார்கள். பழைய காலத்துப் புலவர்கள் அப்படி இருந்ததில்லை. மன்னன் தவறி நடந்தால் புலவன் உள்ளே நுழைந்து சென்று “மன்னா நீ செய்வது தவறு” என்று கண்டித்து உரைத்திருக்கின்றார்கள். ஏரடிக்கும் சிறு கோலிலேதான் உன்னுடைய யானை ஓட்டுகின்ற பெருங்கோல் இருக்கின்றதென்று, புலவர்கள் எல்லாம் வாதாடி இருக்கின்றார்கள்; போராடியிருக்கின்றார்கள். இவ்வளவு பழம் பெருமை வாய்ந்த நம்முடைய தமிழகம் இன்றைய தினம் எதற்கெடுத்தாலும் டெல்லி, எதற்குத் தொட்டாலும் டெல்லி, எந்த அதிகாரம் என்றாலும் டெல்லி என்று போக வேண்டி இருக்கின்றதென்றால், எங்களுடைய உடலிலே ஒரு சொட்டு இரத்தம் இருக்கின்ற வரையில் அதை மாற்றுவதுதான் எங்கள் கடமை. இதிலே எங்களுக்குத் தேர்தல் சாதகமானாலும், பாதகமானாலும் அக்கரை இல்லை. என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்னிடத்திலே கேட்டார்கள், “அண்ணாத்துரை, நீ திராவிட நாடு பிரிவினையை விட்டு விடு, உன்னை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றார்கள். நான் அவர்களிடத்திலே திருப்பிக் கேட்பேன் “நீ உன்னுடைய உயிரை விட்டுவிடு, உனக்குக் கல்யாணம் செய்து வைக்கிறேன், என்றால் என்னய்யா பொருள்? அதைப் போல என்னைப் பார்த்து திராவிடநாடு பிரிவினையை விட்டு விட்டால் என்னைக் காங்கிரஸ் அல்லவா ஆதரிக்கும்? கம்யூனிஸ்ட் என்ன எனக்கும் காங்கிரசுக்கும், எனக்கும் சோசியலிஸ்டுக்கும், எனக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும், என்ன அடிப்படை வித்தியாசம்?

அவர்கள் அகில இந்தியா என்கிறார்கள். நான் தனித் திராவிட நாடு என்று கேட்கின்றேன். அவர்கள் யானைக்கு கவுன் தைக்க வேண்டும் என்கிறார்கள். ஆகையினாலே தையற்காரர்களுக்கு ஆசை பிறக்கிறது. கவுன் தைத்துக் கொடுக்கலாம் என்று. நான் யானைக்குக் கவுன் தைக்க முடியாதையா, வீட்டிலே இருக்கிற பானையிலே சோறு இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள் என்று நான் நாட்டைப் பற்றி எடுத்துச்சொல்லுகின்றேன். யானைக்குக் கவுன் தைக்கக் கூடிய சாமர்த்தியமுள்ளவர்கள் தயவு செய்து தைத்துக் கொள்ளட்டும். ஆனால் நான் பானையிலே சோறு இருக்கிறதா என்று பசியிலேயும், பட்டினியிலேயும் ஈடுபட்டிருக்கின்ற மக்களிடத்திலே சொல்லுகின்றபோது, “நீ பானையைப்பற்றிப் பேசினால் என்னுடைய யானை மிரண்டுவிடும் என்று சொன்னால், அது என்ன யானை உன்னிடத்திலே இருப்பது? நீ அகில இந்தியா என்று எடுத்துச் சொல்லுகின்றாயே அந்த அகில இந்தியா, நான் இப்போது குறிப்பிடுகின்றேனே பழந் தமிழகம், நக்கீரன் வாழ்ந்த தமிழகம், கபிலர் இருந்த தமிழகம், பெரும் புலவர்கள் இருந்த தமிழகம், சிலப்பதிகாரமும், சீவக சிந்தாமணியும் இருந்த தமிழகம்-அந்தக் காலத்திலே அகில இந்தியா இருந்ததா?