அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கலை விழா

வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பெயரால் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் கல்லூரியை முதல் ‘கிரேட்’ கல்லூரியாக்குவதற்கான நிதி திரட்டுவதற்காகக் கடந்த பல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடகங்கள் நடத்தப்பட்டன.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.எஸ்.சகோதரர்கள், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.கேசவன் முதலியோர் பல நாடகங்கள் நடத்தியுதவினர். நடிப்புப் புலவர் கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன் ஆகியவர்களின் ஒத்துழைப்போடு திராவிட முன்னேற்றக் கழகமும் நாடகங்கள் நடத்தியுதவியது.

மேற்படி கலை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக ஜுன் 14 ஆம் தேதி தோழர் கருணாநிதியின் ‘பரப்பிரம்மம்’ நாடகம் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

நாடக முடிவில் கல்லூரி வளர்ச்சிக் கமிட்டித் தலைவர் பி.ராமசாமி (தியாகரின் பேரனார்) கல்லூரி வளர்ச்சிக்குதவி வரும் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும்போது “அண்ணாவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க முடியாது. ஏனெனில், இந்தக் காரியத்தை அவர்தான் துவக்கி வைத்தார். உதவினார். உதவிக் கொண்டிருக்கிறார் உதவவும் போகிறார்!” என்றார்.

இசையரசு படத் திறப்பு
கல்லூரி வளர்ச்சிக் குழுவின் செயலாளராக இருந்து பணியாற்றும் இசையரசு எம்.எம்.தண்டபாணி அவர்களின் படத்தை அண்ணா திறந்து வைத்துப் பேசியதாவது:-
அன்புள்ள தோழர்களே! மறைந்த மாவீரர், மக்களுக்காக உழைத்த உத்தமர் தியாகராயர் பேரில் ஒரு கல்லூரி நிறுவி அதற்கு நிதி திரட்டிடப் பெரும் முயற்சி செய்து வரும் எனது நண்பர் இராமசாமி அவர்கள், அதற்கு உதவியாக அரும்பாடுபட்டு வரும் எனது நண்பர் திராவிடத்தின் தென்றல்-இசைச்செல்வம் தண்டபாணி தேசிகரின் படத்தை என்னைத் திறந்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாளிகைவாசி
தியாகராயர் அவர் மாளிகைவாசியாயிருந்தவர். ஆனால் அந்த மாளிகைவாசத்திலே அவர் மயங்கிச் சிக்கவில்லை மக்களோடு பழகினார். பெரிய வியாபாரியாக இருந்தும் அரும்பணி புரிந்தார். குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், ஏன் இருக்கிற லட்சக் கணக்கான சொத்தைக் கோடிக்கணக்காக்க வேண்டும் என்ற கோணல் புத்தி இல்லாமல் எப்போதும் நாட்டு மக்களுக்காக, மக்களின் நன்மைக்காக அரும்பாடுபட்டவர்.

அவருடைய பணியிலே சந்தேகப்பட்டவர்கள் இன்று சஞ்சலப்படுகிறார்கள். அவரைத் தூற்றியவர்கள் இன்று துதிபாடுகிறார்கள். அவரைத் தாக்கியவர்கள் இன்று உருவாகி வளர்ந்து வரும் தியாகர் பரம்பரையைக் கண்டு குமுறுகிறார்கள்.

அத்தகைய பெரிய மனிதர் பெயரால் நடைபெறும் இந்தக் கல்லூரிக்குப் பொருள் சேர்த்துத் தரவேண்டியது நம் கடமை.

அந்தக் கடமை உணர்ச்சி முதலில் நமது தேசிகருக்கு ஏற்பட்டபோது நான் உண்மையில் ஆச்சரியப்பட்டேன். காரணம் அவர் ஒரு பெரிய இசைவாணர். இசைவாணர்கள் சாதாரணமாகப் பஜனைக் கோயில் அமைக்கத்தான் நிதி திரட்டுவார்கள். ஆனால் தேசிகர் கல்விக் கோயில் கட்ட முன் வந்தது மிகவும் மகிழத்தக்கதாகும்.
கலைச்செல்வம்
அவருடைய படத்தைக் கல்லூரியில் திறந்து வைப்பது மிகவும் பொருத்தமானதாகும். கலைஞர்கள் சாதாரணமாக வறுமையில் தாக்கப்பட்டவர்களாக, ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்களாகி, பத்தாண்டுகளில் சேர்த்த பணத்தை இழந்து, “பழைய ராஜபார்ட்” என்று பெருமை பேசித்திரிபவர்களாக இருப்பார்கள். ஆனால் நமது தேசிகர் நமக்கு ஒரு நிரந்தரமான கலைச்செல்வம் கல்விச் செல்வம்.

நண்பர் இராமசாமி அவர்கள் என்னை முதலில் காஞ்சியில் சந்தித்துக் கலைவிழா குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோது “ஏழுமலையான கிருபையால் என் எண்ணம் ஈடேறிடும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். ஆனால், அந்த ஏழுமலையான், மக்களுக்கு அருளியிருக்கிற வறுமையின் கொடுமையால், எண்ணம் ஈடேறவில்லை. போதிய நிதி கிடைக்கவில்லை.

அடுத்த முறை தியாகராயரால் முன்னேறியவர்கள், பிழைத்தவர்கள், பணம் சேர்த்தவர்கள், ஏன் மனிதர்களானவர்கள் அத்தனைப் பேரையும் கண்டு கல்லூரி நிதிக்காக ஒரு கமிட்டியை அமைத்துச் சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் தேசிகர் அரிய தொண்டு புரிவார் என்று தளராத நம்பிக்கை எனக்குண்டு.

தேசிகர் படத்தைத் திறந்து வைக்கும்போது அவர் செய்த தொண்டுக்காக மட்டுமல்ல, அவர் மேலும் இத்தகைய நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையோடு செய்கிறேன்.

கருப்பு அழகே அழகு
கருப்பாயிருப்பவர்களின் அழகே தனி-அதுவும், சிரிக்கும்போது அந்த அழகே அலாதியாயிருக்கும். தேசிகர் கருப்பு நிறம் சிரித்த முகத்துடன் குளிர்ந்த பார்வை. அன்பு மொழிகள், எல்லோரையும் குளிரச் செய்யும் இசை குறிப்பிடத்தக்கது. பத்து பனிரெண்டு நாட்கள் கலைவிழா நடந்தும் போதிய நிதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டில் பழைய நாடகங்களை யாரும் நடத்தாமல் கல்லூரி நிதிக்காக ஒவ்வொருவரும் மூன்று புதிய நாடகங்கள் நடத்தித் தரவேண்டும். அந்த நாடகங்களைப் பணக்காரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ ஆடிக்காட்டக் கூடாது. அதன்படியே முயன்றால் நாம் நிச்சய மாகக் கல்லூரிக்குப் போதிய நிதி திரட்ட முடியும்.

புதிய நாடகங்கள்
அடுத்து மு.கருணாநிதி பேசுகையில், அண்ணா கட்டளைப்படி புதிய நாடகங்கள் தீட்டிப் பொதுமக்களுக்குக் காட்டாமல் கல்லூரி நிதிக்காக நண்பர் சிவாஜி கணேசனுடன் நடத்திக் காட்டுவேன் என்று கூறினார்.

இந்த அரிய முயற்சியில் பங்கு கொண்ட, தோழர்கள் ப.ராமசாமி, சமரசம், டாக்டர் தர்மாம்பாள் ஆகியோரின் நல்லெண்ணத்தையும், ஆர்வத்தையும் மனமாரப் பாராட்டு கிறோம்.-ஆ.ர்.

(நம்மாடு - 16.6.53)