அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மாணவர் தமிழ் விழா!

சென்னை ஜன.27
தமிழனாகப் பிறந்த ஒருவன் சகித்துக் கொள்ளாத அளவுக்குக் கொடுமைகள் இந்த நாட்டில் நடைபெற்று வருகின்றன. நமது சொந்த நாட்டில், நமது தாய்மொழிக்கு இருக்க வேண்டிய நியாயமான இடம், நம்மால் தரப்பட வில்லை. வாழ்வுத் துறையின் முக்கிய இடங்களிலெல்லாம், தமிழ்மொழி அலட்சியம் செய்யப்படுகிறது.

அரசாங்க அவையிலே, தமிழ் இல்லை. ஆலயங்களிலே, தமிழன் ஒலி கிளம்பவில்லை. அறங்கூறு மண்டபங்களிலே, நம் தாய்மொழியின் சாயல் இல்லை. அனைத்தக்கும் மேலாக, தமிழனாகப் பிறந்த ஒருவன், மற்றொரு தமிழனைச் சந்திக்கும் போது, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பேச்சு வார்த்தைகளிலே, தமிழ்மணம் கமழவில்லை. தமிழைக் கையாளுவதே, தன்னுடைய படிப்பறிவுக்குப் புறம்பான தென்ற எண்ணம் நம் உள்ளத்திலே ஊறிவிட்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்கும் வரையில் தமிழ்மொழி வளர வேண்டும் என்று பேசிக்கொண்டிருப்பதிலே, எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

மாணவர் பட்டாளம்
மொழித் துறையில் நிலவுகின்ற குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். அந்தப் பணியை முடிக்க, இப்போது கிளம்பிக் கொண்டிருக்கும் மாணவர் பட்டாளம் முற்றும் தகுதி படைத்தாகும்” என்று 26.1.54 செவ்வாயன்று, வடசென்னைத் தியாகராயர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழாச் சொற்பொழிவில் தோழர் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

நேற்று மாலை 5.30 மணிக்கு வண்ணை தியாகராயர் கல்லூரியில் கல்லூரி மாணவர் தமிழ் விழா நடைபெற்றது. பச்சையப்பன் கல்லூரி மாணவர் தலைவர் சி.வா.ஞானசம்பந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதன் பின் கல்லூரித் தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார். பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை அவர்கள் தமிழ் இலக்கியத்தின் மாண்பு குறித்துப் பேசினார்.

தோழர் அண்ணாதுரை மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
“தியாகராயர் கல்லூரியில் இந்த ஆண்டு கூட்டப்பட்டிருக்கும் தமிழ் விழா நிகழ்ச்சி ஒரு புதுமாதிரியானது. சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்மன்ற மாணவர்கள் கூடிக் கலந்து பேசி, அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒத்துழைத்து, ஆங்காங்கு தமிழ் விழா நடத்த முற்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

நல்ல நம்பிக்கை
தனித் தனியாக அந்தந்தக் கல்லூரிகளில் நடத்தப்படும் தமிழ் விழா நிகழ்ச்சிகளைக் காணும் நான், இதுபோன்ற கூட்டு முயற்சியுடன் கூடிய நிலை ஏற்படுமானால், எவ்வளவு பயன்தரத்தக்கதாக இருக்கும் என்று நினைத்ததுண்டு. இந்த ஆண்டு, நான் நினைத்து வந்ததை நடைமுறையில் செய்து காட்டி விட்டார்கள் மாணவர்கள்.

“மாணவர்களின் இந்த ஒற்றுமைப் பண்பும் அதற்குக் காரணமான தமிழ்மொழி மீது உள்ள ஆர்வமும், இந்த இரண்டையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் மொழியின் சிறப்பும், இந்த நாட்டின் எதிர்கால வாழ்வுக்கு நம்பிக்கை யூட்டுவதாக இருக்கின்றன.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்மொழி இருந்த நிலைமையையும் அதைக் கற்றுக்கொடுத்து வந்த தமிழாசிரியர்களின் அவலநிலையையும், கண்முன் நிறுத்தி, அதே நேரத்தில் இன்றைய தமிழ்மொழியின் தன்மையையும் தமிழாசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் எண்ணிப் பார்த்தால், நாம் நிச்சயமாகத் தமிழை வளர்த்திருக்கிறோம். மறைந்து கிடந்த அதன் பெருமையை ஓரளவுக்கு மீட்டுத் தந்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

ஆங்கிலத்துக்குச் சமமாக...
“பெரிய எழுத்து ‘நல்ல தங்காள் கதை’, ‘அல்லி அரசாணி மாலை’, ‘ஆரவல்லி-சூரவல்லி கதை’ என்ற புத்தகங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த தமிழ் இலக்கிய உலகத்தில், இன்று ஆங்கில நூல்களுக்குச் சமதையாக ஆயிரக்கணக்கான பதிப்புகள் வெளிவந்திருப்பதும், தமிழ் வளர்ந்துள்ள தென்பதற்குப் போதிய சான்றாகும்.

“இவைகள் மட்டும் போதாது. விவகார உலகத்தில் வளர்ந்திருக்கும் தமிழ்மொழியின் அளவுக்கு நமது வாழ்விலும் தமிழ்ப் பண்பு ஊடுருவி நிற்கவில்லை.

துர்பாக்கிய நிலை
“நமது நாட்டு அரசாங்க அவையிலே தமிழ் இல்லை; ஆலயங்களிலே தமிழின் ஒலி கிளம்பவில்லை; அறங்கூறு மண்டபங்களிலே நம் தாய்மொழியின் சார்பில் இல்லை; அனைத்துக்கும் மேலாக, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் தமிழிலே அளவளாவும் சின்னஞ்சிறு பண்புகூட நம்மிடையில் கிளைவிட்டுச் செழிக்கவில்லை. இந்தத் துர்பாக்கிய நிலை தமிழகத்தைத் தவிர்த்த வேறெங்கும் நடைபெற்று வருவதாகவும் எனக்குத் தெரியவில்லை.”
“ஒரு படித்த வங்காளி, மற்றொரு படித்த வங்காளியைச் சந்திக்கும்போது, அவன் மொழி தவிர்த்த மற்றைய மொழிகளை அவன் பேசமாட்டான்; வங்களா மொழியில்தான் பேசுவான். ஆத்திரரும் அப்படித்தான் தமிழனோ, அரைகுறையாகவாவது, அந்நிய மொழியொன்றைப் பேசி வைக்காவிட்டால் தன்னுடைய கல்வி அறிவுக்கே களங்கம் நேர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை.

மற்ற மொழி எதற்காக?
“அதிலும் வாணிபத்துறையில் தமிழ்மொழி எவ்வளவு தூரம் மதிக்கப்படுகிறது என்பது, வணிகர்களின் விளம்பரப் பலகையொன்றினாலேயே அறிந்து கொள்ளலாம். வாணிகம் செய்வோரும் தமிழர், வாங்குவோரும் தமிழர்கள், இந்த நிலையில், இருசாராருக்கும் புறம்பான மற்றொரு மொழி எதற்காக?

தப்பித் தவறி, ஒரு சில வணிகர்கள் தமிழிலேயே விளம்பரப் பலகை தொங்கவிட்டிருந்தாலும், அந்தப் பலகையிலிருக்கும் தமிழ் வாக்கியங்கள் பரிதாபப்படக்கூடியவைகளாக இருக்கின்றன. ‘வல்லினம்’, ‘மெல்லினம்’ ‘இடையின’ வேற்றுமைகளைப் பொருட்படுத்தாத சமரச மனப்பான்மையில், அந்தப் பலகைகள் எழுதப்பட்டு விடுகின்றன.

ஜப்பானைப் போல...
“20,25 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டிலும் இதுபோன்ற நிலை இருந்தது. இலக்கணத்துக்கு மாறாக, தவறுடன் எழுதப்பட்டிருக்கும் பலகைகளைத் திருத்தி எழுதி மாட்ட வேண்டுமென்று, தங்கள் மொழியில் அக்கரை கொண்ட ஜப்பானிய இளைஞர்கள், ஒரு குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய அறிக்கையொன்றை வெளியிட்டனர். கால வரையறை கடந்தும் திருத்தப்படாத பலகைகளைத் தாங்களே எடுத்துக் கொண்டு போய்த் திருத்தி எழுதி வந்து மாட்டிவிட்டனர்.

“அதேபோல், ஜப்பானிய இளைஞர்கள் முறையையே பின்பற்றுமாறு நான் சொல்வதாக நினைத்துவிட வேண்டாம். அப்படிப்பட்ட கெட்ட பெயர் எனக்கு ஏராளமாக உண்டு. இதைக் குறிப்பிட்டுச் சொல்வதின் காரணம், ஜப்பானிய இளைஞர்களுக்கு ஏற்பட்டது போன்ற மொழி ஆர்வம் இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதேயாகும்.

சூதுக்காரர்களின் சூழ்ச்சி
“சூதுக்காரர்கள் செய்த சூழ்ச்சிகள் காரணமாக, நமது இனம் மங்கிவிட்டது என்பதை, இன்று எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து கொண்டார்கள். தமிழ் நாட்டு இளைஞர்களிடையே இன்று கூட்டப்பட்டிருக்கும் தமிழ் விழா நிகழ்ச்சியில் காணப்படும் ஆர்வத்தைப் போலவே ஆந்திரநாட்டுச் சிறார்களிடத்தும் காணப்படுகிறது. கன்னட இளைஞரும் முனைந்து வேலை செய்கின்றனர்; மலையாளிகளும் பாடுபடுகின்றனர்; அனைவரும் அவரவர் மொழியின் ஏற்றங்குறித்து உழைக்கின்றனர்.

“இதன் பொருள் என்ன? தனது நாட்டில், தன்னுடைய தாய்மொழி தழைக்க வேண்டுமெனப் போராடிக் கொண்டிருப்பதின் நோக்கம் என்ன?

முட்டுக்கட்டைச் சக்தி
“தனது வளர்ச்சிக்குத் துணையாக நிற்கும் தாய் மொழியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிடும் ஏதோ ஒரு சக்தி இருந்து வருகிறது; நியாயமான வளர்ச்சியுறாமல் தேங்கிப் போவதற்கான கோளாறு ஏதோ ஒன்று இருந்து வருகிறது. கிள்ளி எறியப்பட வேண்டிய குறைபாடு எங்கோ இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்பதைத் தவிர, வேறென்ன பொருள் கொள்ள முடியும்?

“குறைபாடுகள், முட்டுக்கட்டைகள், கோளாறுகள் இளைஞர்களுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. தாங்கள் தெரிந்து கொண்ட அளவு, மற்றவர்களுக்கும், இதுபோன்ற விழாக்களின் வாயிலாக அறிவிக்கவும் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற விழாக்களை நடத்துவதன் நோக்கத்தை நல்ல முறையிலே நாட்டில் செயல்பட வைக்குமாறு மாணவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில், மொழிச் சீர்திருத்தம் ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் எச்சரிக்கிறேன்.

நெஞ்சுறுதி வேண்டும்
“மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தத்தின் ஒரு கூறு, அரசியல் கிளர்ச்சியில், ஒரு நாட்டை உருவாக்கலாம். ஆட்ச முறையை மாற்றியமைக்கலாம். ஆனால் சமுதாயச் சீர்திருத்தத்திலே ஒரு கோணத்தை அசைத்துக் கொடுப்பதானாலும், பலப்பல பயங்கர விளைவுகளுக்கு உள்ளாகித் தீரவேண்டும். ஏச்சுப் பேச்சுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். எதிர்பாராத இன்னல்களைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுறுதி வேண்டும். எதற்கும் அஞ்சாத உள்ள உறுதியுடன் நாம் இந்த நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல பாதையை அமைக்க முயற்சிக்க வேண்டும்.

கொந்தளிக்கும் கடலில் சிக்கிய மரக்கல நிலையில் இருக்கும் நமது இன்றைய வாழ்க்கைத் திரைகளிலிருந்து போராடிக் கரை சேர்வோம்; பூந்தோட்டங்கள் காண்போம்; புதுவாழ்வு பெறுவோம்; பொலிவுற்றுத் திகழ்வோம்.

(நம்நாடு - 27.1.54)