அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

“வேலை மாநகர் ஆட்சி மன்றத்தார், மணி மண்டபத்தில் விளங்கும் உத்தமரின் சிலையைத் திறக்கும் பணியினை எனக்களித்தார்கள். இது பற்றிக் குறிப்பிட்ட மன்றத் தலைவர் ‘வேலூர் வரலாற்றிலேயே இன்று ஓர் பொன்னாள்“, எனக் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையிலேயே, என்னுடைய வாழ்க்கையில் – ஏன், தமிழ்நாட்டின் அரசியலில், ஒரு முக்கியமான கட்டம் என்று கூறுவேன். காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன் – இந்தச் செய்தியால் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை நாடு அறியும்.

எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு – என்னைப் பொறுத்தவரையில் முதல் முறையல்ல, இரண்டாவது தடவை. இதற்கு முன்னரே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைப்பாடியிலே, ராஜாஜி பூங்காவிலேயுள்ள காந்தியாரின் சிலையை, நான் திறந்து வைக்கும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். ஆனால், அங்குள்ள காங்கிரஸ் நண்பர்கள், இங்குபோல் கிலேசம் அடையவில்லை – பீதியடையவில்லை – ‘இவனாவது திறப்பதாவது!‘ என்று கூறவில்லை.

என்னையும் தகுதியுடையவனாக்க....

காந்தியாரின் உருவச் சிலையை நான் திறக்கிறேன் – நான் திறக்க வேண்டும் என்று நகராட்சி மன்ற நண்பர்கள், பெரிதும் விரும்பியிருக்கிறார்கள், காரணம் என்ன? காந்தியாரின் சிலையைத் திறக்க நான் மட்டுமே தகுததியுள்ளவன் என்பதாலா, அல்ல! அல்ல! என்னைவிடத் தகுதியுள்ளவர்கள் ஏராளம் இருக்கிறார்கள், ஆனால், நான் வந்து திறக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்பியதற்குக் காரணம், மற்றவர்கள் எவ்வளவோ திறப்பு விழாக்களைக் செய்கிறார்கள். அதோடு, இதுவும் பத்தோடு பதினொன்றாகப் போய்விடும் – ஆகவே, இவனையும் இதுபோன்ற காரியத்துக்குக் தகுதியுடையவனாக்குவோம், என்ற நல்லெண்ணமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன்.

எனக்குப் பதில், இந்நாட்டு முதலமைச்சர், காந்தியாரின் சிலையை திறந்திருக்கலாம், ஆனால், அது, அவ்வளவு முக்கியத்தவம் பெற்றிருக்காது. அவர் அடிக்கடி திறந்து வைக்கும் பல சின்னங்களிலே, இதுவும் ஒன்றாகப் போயிருக்கும், அதனாலேயே, என்னை – காந்தியாரின் முகாமிலே இல்லாதவனும் – அவரது திட்டங்களில் சிலவற்றை ஏற்றுச் சிலவற்றைக் கண்டித்தவனும், ஆகிய என்னை, இந்தப் பணியை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கண்டு, எனதருமைக் காங்கிரஸ் நண்பர்கள், கலக்கமா அடைவது?

மாற்றான் தோட்டத்து மல்லிகை

மாற்றான் தோட்டத்து மல்லிகையென்பதால், அதன் மணத்தை ரசிக்கிறானா அல்லது ரசிக்க மறுக்கிறானா, என்பதைத் பாத்திருக்கலாம்! என்னைப் பொறுத்தவரையில், மல்லிகை மாற்றாரிடமிருப்பதால், அதற்கு மனமிருக்காது என்று உரைப்பவனல்ல. அதனால்தான், நண்பர்கள் வந்து என்னை அழைத்ததும், ஒப்புக் கொண்டேன்.

அவர்கள் அழைத்த நேரத்தில் நகராட்சி மன்றத்தினர் மெஜாரிட்டி முடிவோடு, என்னை அழைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் – ஒரு முறைக்கு இரண்டு முறை! - தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

ஆகவே, நான் வர இசைந்தேன். இந்தச் சிலைத் திறப்பு விழாவுக்கு, உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியினரும் கடைசி நேரத்தில் கூடி, இந்த விழாவில் ஒத்துழைக்க வேண்டுமெனத் தீர்மானம் செய்தார்களாம். இந்தப் பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

ஏன்? இவர்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன் என்றால், இதுபோன்ற பெருந்தன்மை, அரசியல் வாழ்வில் நிலவ வேண்டும் என்ற ஆசை கொண்டவன், நான். அதற்கு உதாரணம் போல், நாம் எல்லாம் நடத்து காட்ட வேண்டும்.

காந்தியிடம் எனக்கும் மதிப்பு உண்டு!

‘உத்தமர் காந்தியாரிடத்தில், எனக்கு மதிப்பு உண்டா? இவ்விதம், சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்வேன் – மதிப்பு காட்டுவது என்பது இருவகைப்படும். எதிரில் வாயாரப் புகழ்ந்துவிட்டு தலை மறைந்ததும் மாறாகப் பேசுவது ஒரு வகை! பழகாவிட்டாலும், கூடாரத்திலில்லாவிட்டாலும், பிறரின் பணியினைத் தனித்திருகிற நேரத்தில் எண்ணி எண்ணி, மகிழ்வது இரண்டாவது வகை.

நான், இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். நம்முடைய உலக உத்தமர் உயிரோடிருந்த நாட்களில் – பிடிக்காதவைகளைக் கண்டித்த போதும் – எனக்கேற்ற எண்ணங்களைப் பாராட்டிய போதும். அவருக்குள்ள சிறப்பை நான் எண்ணாமலிருந்ததில்லை.

மாற்றார் காந்தியாரைப் பற்றி, எண்ணுமளவுக்கு, அவருடைய தொண்டு இருந்ததால்தான், அவர் உலகத்தின் ஒளியானார்! காந்தியாரின் புகழை, காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல – எல்லோரும் புகழ்கிறார்கள், உலக மக்களெல்லாம் போற்றகிறார்கள். அவ்விதம் பிறர் போற்றுவதுதான், ஒரு தலைவருக்கு கிடைக்கும், தனி மரியாதையாகும்.

இதனைக் காங்கிரஸ் நண்பர்கள் எண்ணியிருந்தால், என்னை உள்ளன்போடு வரவேற்றிருக்க வேண்டும். மாற்றுக் கட்சிக் காரனான நான் திறந்து வைப்பதைக் குறித்துப் பெருமையடைந்திருக்க வேண்டும்.

பாராட்டிடும் கீர்த்தி தேடிக் கொள்க!

அருளொழுகும் கண்ணைப் பார்! அழகு மேனியைப் பார்! ஒளி தவழும் முகத்தைப் பார்! எங்கள் உத்தமரைப் பார்! - என்று என்னை அழைத்துச் சொல்லியிருக்க வேண்டும். இவ்விதம் செய்திருந்தால், தங்களுக்கும் கீர்த்தி தேடிக் கொண்டவர் அதைவிட்டுவிட்டு எம்முடைய காந்தியாரைத் தீண்டவே கூடாது! என்று சொல்வது பொருத்தமில்லை – பொருளில்லை – கீர்த்தி இல்லை – சிறப்பு இல்லை.

உத்தமர் காந்தியார் வெறிகொண்ட ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டாலர் எனும் செய்தியை, ‘ரேடியோ‘ மூலமாகக் கேள்விப் பட்டேன் – பதறினேன், அப்போது என்னை வானொலி நிலையத்தார் அழைத்தார்கள். காந்தியடிகளைக் கொன்றவன் மராட்டியப் பார்ப்பனான கோட்டே என்பவன். அதனால், மக்களின் ஆத்திரவெறி, அக்குலத்தார் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சிய காரணத்தால் என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள்.

கயவனாயிருந்தால், கட்சி வெறி கொண்டவனாயிருந்தால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டில் விபரீதங்கள் பல ஏற்படுவதைக் கண்டிருக்க முடியும். அப்படிப்பட்ட, விபரீதங்களைக் கண்டு கைகொட்டும் கருத்தற்றவனல்ல, நான்.

‘உத்தமரை, ஒருவனின் வெறி, கொன்றுவிட்டது, அதற்குப் பார்ப்பன மக்கள் மீது பழி சுமத்தக்கூடாது, என்று எடுத்துரைத்தேன். அந்த நேரத்தில், எந்தக் காங்கிரஸ்காரருக்கும், ஏற்படாத அதிர்ச்சி இப்போதேன் ஏற்பட வேண்டும்?

நாமக்கல்லார் பாராட்டினார்!

அந்த நிகழ்ச்சி முடிந்த சினனாட்களுக்கெல்லாம், காங்கிரஸ் தேசியக் கவியான நாமக்கல் கவிஞரை, ஓரிடத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது, அவர் என்னைப் பாராட்டினார் – ‘காந்தியடிகளின் அருமை பெருமைகளைப் பலர், உரைக்கக் கேட்டிருக்கிறேன், ஆனால் ரேடியோவில், தாங்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டபோது, நான் மனம் குளிர்ந்தேன், யாரும் அப்படிச் சொல்லியதில்லை, என்று தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

என்னுடைய சொந்த விஷயங்களை, எடுத்துக் கூறுவது, எனது வழக்கமல்ல. ஆனாலும், இதனை, இங்குள்ள தேசீய நண்பர்களுக்காகக் குறிப்பிட விரும்புகிறேன். எனவே, என்னைப் போன்றவன் – காந்தியாரின் அடிப்படை ஆசைகளையும், அவைகளைச் சாதிக்க அவர் ஆற்றிய அரும் பணியினையும் கண்டு அகமகிழ்ந்தவன் – இந்தச் சிலையைத் திறந்து வைப்பதில், பொதுத்தமுடையதாகாது, என்று யார் கூற முடியும்?

நான், என்ன, நாள் முழுவதும் காங்கிரசைத் தூற்றிக் கொண்டிருந்துவிட்டு, தேர்தல் காலத்தில், காங்கிரசிலே நுழைந்த கொண்டு, வேட்டையாடியவனா? காங்கிரஸ் போர்வையைப் போட்டுக் கொண்டு அதிகார வேட்டையாடியவனா! இந்தக் கரம் வெள்ளையைனோடு கை குலுக்கிய கரமா! வகுப்பு வாதத்தை வளர்த்து, வெறிச் செயல் ஏற்பட பாடுபட்ட கரமா! பள்ளி வாழ்வு முடிநத்தும் உத்தியோகத்துக்குச் செல்லாது, ஊருக்காக உழைக்கும் கரம்! பொது வாழ்வுக்காகப் பாடுபடும் கரம்! இந்தக் கரம் தவிர, வேறு எந்தக் கரம் சிலையைத் திறப்பது பொருத்தமாகும்?

அந்த ஒளி எங்கே? இந்த இருள் எங்கே?

காந்தியார், காங்கிரசைக் கட்டிக் காத்தார் – வளர்த்தார் – நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தார். காங்கிரசில் நாலணா மெம்பராகக்கூட அவர் இருந்ததில்லை, பலகாலம்! தான் விருமபிய விடுதலை கிடைத்துவிட்ட தென்றதும், ‘காங்கிரஸ் தேவையில்லை – கலைக்கலாம்‘, என்று சொன்னார். “காங்கிரஸ் லாபவேட்டைக் காரர்களின் கூடாரமாகிவிட்டது“ என்று கூறி மனமும் நொந்தார்.

நான், காந்தியார் பெயரைச் சொல்லி, லாபம் பெறாதவன்! அவர்களால் அழுத்தி வைக்கப்பட்டிருப்பவன். அவர் வளர்த்த காங்கிரசின் நிலை என்ன, இப்போது? பழைய கோட்டையில் வௌவாலும், புற்றுக்குள் பாம்பும், இருப்பதுபோல், காங்கிரசுக்குள் கயவர்களும், சுயநலவாதிகளும் இருப்பதாக அவர் கூறினார். அவர் எங்கே? இன்று இருப்போர் எங்கே? அந்த ஒளி எங்கே! இந்த இருள் எங்கே!

இந்தச் சிலை திறப்பு விழாவை, என்னைக் கொண்டு செய்ய வேண்டுமென்பதில், இங்கிருக்கும் கம்யூனிஸ்டுத் தோழர்களும் விரும்பி, ஒத்துழைத்தாக அறிந்தேன். அந்த நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

மனமொத்துப் போவதுதான் அரசியல் நாகரீகம்!

இவ்வண்ணம், மாற்றுக் கட்சியினருடன் மனமொத்துப் போவதுதான் அரசியல் நாகரீகம் எனது தலைவர் பெரியாரும், முதலமைச்சர் ஆச்சாரியாரும் நபகிள் நாயகத்தின் நாளில், ஒரே இடத்தில் சந்தித்தார்கள், அது அரசியல் நாகரீகம்.

இன்று நான் காந்தியாரின் சிலையைத் திறக்கிறேன்! இது ஓர் புனிதமான நாள் எனக் கூறுவேன். இந்தச் சிலையைத் திறக்கம் விஷயத்தில், கட்சிப் பாகுபாடு வெறி இல்லாது, எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் – அதுதான் அரசியல் நாகரீகம்.

அப்படியின்றி, அரசியல் அமளியிலீ்டுபட்டால், இந்த உபகண்டத்தின் பிதாவுக்குக் கீர்த்தி தேடியவர்களாக மாட்டோம்.

எனக்கும், காங்கிரசுக்கும் பலமான கருத்து வேற்றமைகள் உண்டு. காங்கிரசுக்கு மட்டுமல்ல – மற்றக் கட்சிகளுக்கும் – எனக்குமிடையே கருத்து வேற்றுமைகளும் உண்டு, ஒற்றுமைகளும் உண்டு.

நன்றாகச் சிந்தித்தால் விளங்கும். வேற்றுமைகள் கொஞ்சம், ஒற்றுமைகள் அதிகம். இந்த ஒற்றுமைப் பண்பு வளர, ஒவ்வொரு கட்சியும், அரசியல் அமளியிலீடுபடாமல் ஒத்துழைக்கும் மனோபாவம் ஏற்பட்டு, அரசியல் நாகரீகம் வளர வேண்டும்.

மரியாதை மட்டமானதா?

காந்தியார் இறந்த பிறகு கட்டப்பட்டுள்ள சமாதியிருக்கும் ராஜ கட்டத்துக்கு, அமெரிக்க நாட்டுத் தூதுவர் வந்து, மல்லிகைக் செண்டுகளை வைத்து வணக்கம் செலுத்துவதையும், பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர் வந்து மரியாதை செய்வதையும், வேறு பல வெளிநாட்டுக்காரர்கள் வந்து தமது அன்பு வணக்கங்களைச் செலுத்திப் போவதையும், படங்களில் காண்கிறோம். இதன் பொருள் என்ன? வெளிநாட்டுக்காரர்கள் வந்து வணங்குவதன் சூட்சமம் என்ன? அவர்களையெல்லாம் படம் எடுத்துப் பிரமாதமாக எழுதி, ‘யார்! யார்! அவர்கள் செய்யும் அஞ்சலி என்று பெருமையோடு வெளியிடுகிறோமே, அவர்களுக்கெல்லாம், யார்? காங்கிரஸ்காரர்களா? காங்கிரசிலே இருந்தறியாதவர்கள்! அது மட்டுமல்ல, காங்கிரசையே எதிர்த்தவர்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாதவர்கள் – வெளிநாட்டினர்! அவர்களெல்லாம் காந்தியாரின் நினைவுச் சின்னத்தைக் கண்டு, பூரிப்புக் கொள்வதை விட – மரியாதை செய்வதைவிட, நான் செலுத்தும் அன்பு, எந்தளவுக்குக் குறைந்தது, என்று கூற முடியும்? அவர்களைவிட நான் செலுத்தும் மரியாதை, மட்டமாகவா இருக்கும்?

அவர்களின் மரியாதை செலுத்தும்போது அகமகிழும் உங்களுக்கு அரசியல் ஆவேசமும், ஆத்திரமும் ஏற்படலாமா! மலர் தூவுகிறான் வெளிநாட்டான். அதைவிட நான் தூவும் மலர் எவ்விதத்தில், கெட்டதாகும்? இந்தப் பொது அறிவு – அரசியல் விளக்கம் – நம்மவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

மன்மதன் எரிந்தானா? எரியவில்லையா?

ஆனால், நாம் நினைப்பது போல, அவ்வளவு சுலபத்தில் இங்கே வந்து விடாது. ஏனெனில், வருடத்துக்கு ஒரு தடவை, நமக்குள், இன்னும் மன்மதன் எரிந்தானா? எரியவில்லையா? – என்கிற பிரச்சனையே தீரவில்லையே! மன்மதனைக் கண்டவர்கள் யாரும் கிடையாது – சண்டையோ, ஓயாமல் நடக்கிறது!! இதைப் போல எத்தனை நாளைக்கு, இருக்க முடியும்?

சுதந்திரம் கிடைத்தபின், உத்தமர் காந்தியடிகளே சொன்னார் இந்தச் சுதந்திரம், ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக அமைய வேண்டும்“ என்று.

அவர் வெளியிட்ட அதே கருத்தைத்தான், நானும் கூறுகிறேன், “களிப்படையவில்லை. கவலை கொள்ளுகிறேன்!“ என்றார், அதுதானே நிலையும்!

காகிதப்பூ சுதந்திரமாம்!

சுதந்திரம் காகிதப் பூவாக இல்லாமல், மணமுள்ள பூவாக இருக்க வேண்டுமானால், மாற்றுக் கட்சிகள் யாவும், வந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

யாரைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், சுதந்திரக் குழந்தை! சுதந்திரக் குழந்தை! என்கிறார்கள். அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி விட்டால் மட்டும் போதாது. தாலாட்ட வேண்டும் – சொக்காய் போட வேண்டும் – விளையாட்டு காட்ட வேண்டும் – இது அத்தனையையும் தாயே செய்துவிட முடியாது. மாமன்மார் விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிவர, தங்கை தாலாட்டுப் பாட உற்றார் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்ச – இவ்விதம் வளர வேண்டும், அக்குழந்தை!

அப்படியில்லாமல் ‘குழந்தையை நான்தானே பெற்றேன்‘, என்று சொல்லி, மற்றவர் எவரும் அருகில் வரக்கூடாது‘ என்று பெற்றெடுத்த தாய் சொன்னால், குழந்தையை எவரும் சீந்தார்! குழந்தையின் அருமை பெருமையையும் அறியார்!! அது போலவே, பிறந்த சுதந்திரக் குழந்தையைச் சீராட்டி வளர்க்க, எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சந்தர்ப்பம் வேண்டும். குழந்தைக்கு அடிக்கடி உணவு தந்து – அதிகமாகவும் தந்து – யாரிடமும் அண்டவிடாமல், சில பணக்காரக் குடும்பத்திலே வளர்க்கப்படும் குழந்தை, கடைசியிலே நோஞ்சானாகிவிடும்! டாக்டரிடத்தில் செல்ல நேரிடும்!!

ஏன் பயப்பட வேண்டும்?

இதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுதந்திரக் குழந்தையைத் தூக்கி மகிழ, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சந்தர்ப்பம் தாருங்கள். எங்களிடம் விட்டுப் பாருங்கள். நிச்சயம், கெடுதல் வராது.

அப்படியே, கெடுதல் வருவதாகக் கருதுவீர்களேயானால் – உங்களுக்குப் பிடித்தமான கிருஷ்ணன் கதையையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிருஷ்ணனுக்குப் பாலூட்டச் சொன்ன பூதகி போல நாங்கள் என்றால், கிருஷ்ணன் கவனித்துக் கொள்வான் – அந்த நம்பிக்கையாவது இருக்கக் கூடாதா உங்களுக்கு!! அதை விட்டுவிட்டு எங்களைக் கண்டால், ஏன் பயப்பட வேண்டும்?

காந்தியாரின் சிலையை நான் திறந்து வைப்பதைக் காணும் நீங்கள், முகத்தையாவது தொங்கப்போட்டுக் கொள்ளாது – பார்! எதிர்க்கட்சிக் காரனாகிய அவனே எங்கள் காந்தியின் சிலையைத் திறக்கிறான். எங்கள் காந்தியின் பெருமையல்லவா, இது? என்று நீங்கள், மார்பல்லவோ, தட்ட வேண்டும்!

காந்தியாரின் புகழுக்குக் காரணம், குடும்பத்திலேயிருந்தவர்களால் மட்டும் உண்டானதல்ல, வெளியேயிருந்தவர்கள் அவரைக் கண்டதால் உலக – ஒளியானால் அவர்,

நான் திறப்பதைக் கண்டு சந்தோஷமடைய வேண்டும். இந்த மேடையில் எனது நண்பர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தோழர் மாசிலாமணி அவர்களும் இருந்திருந்தால், மிகவும் பெருமையாயிருந்திருக்கும்.

நீங்கள் யார்? நான் யார்?

நான் யார்? நீங்கள் யார்? நமக்கு இடையிலிருக்கும் உறவு முறை – முறிகின்ற முறை – இருக்கலாகாது. இதனை எனதருமை காங்கிரஸ் நண்பர்களுக்கு, வலியுறுத்திச் சொல்லுவேன். சில பல, கருத்து மாறுபாடுகளிருக்கலாம், எனக்கம் உங்களுக்கும் – காந்தியாரின் சில கொள்கைகளை மறுக்கின்ற முகாமில்தானிருக்கிறேன் நான், ஆனால், அதற்காக, நாட்டு விடுதலையை மறைக்க வில்லையே! உத்தமர் வாங்கித் தந்த விடுதலையை மறைத்துக் கூறுபவன் – ஏமாளி!!

அவர் விரும்பியது இந்த நாட்டுக்குச் சுயராஜ்யம் மட்டுமல்ல அவர் விரும்பிய சுயராஜ்யமல்ல, இன்று இங்கிருப்பது.

“ஏழை – பணக்காரன், கூடாது! மதத்தின் பெயரைச் சொல்லி ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளுவது கூடாது – மேதுதலை உண்டாக்கக் கூடாது – ஜாதி ஆணவம் கூடாது“ என்றார் அவர்.

அத்தகைய விடுதலைப் பூமியைக் காண விரும்பினார்! அதனாலேயே, ஒருமுறை, அவரைக் கேள்வி கேட்டபொழுது கேட்டவருக்கு விளக்கினார் – “வைணவர் என்றால் யார்? நெற்றியிலே திருநாமமும், நெஞ்சிலே வஞ்சகமும், கழுத்திலே துளி மாலையும் – கருத்திலே கபட எண்ணங்களும் கொண்டவர்களல்ல. உண்மையான உள்ளம் கொண்டவர்கள்“ என்று விளக்கினார்.

வேறு வேறு இராமர்கள்!

அவர், அன்றோர் நாள் தென்னாட்டுக்கு வந்திருந்த நேரத்தில் நானும் என்னைச் சார்ந்த இயக்கத்தினரும் ‘ராமாயண எதிர்ப்புக்‘ கிளர்ச்சியிலீடுபட்டிருந்தோம். அதைப் பற்றி, அவரிடம் குறிப்பிட்டபோது உத்தமர் குறிப்பிட்ட வார்த்தைகளை, தேசிய நண்பர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவர் சொன்னார் – “நான் கூறும் ராமன் வேறு! ராமாயணத்தில் வால்மீகியும் கம்பரும் வர்ணிக்கும் ராமன் வேறு! என்னுடைய ராமன் சீதையின் புருடனல்ல, தசரதரின் மகனுமல்ல, இராவணனைக் கொன்றவனுமல்ல, அவன் அன்பின் சொரூபம்! உண்மையின் உருவம்“ என்று விளக்கினார். அப்போது, நான் திராவிட நாடு‘ இதழில் தீட்டினேன் – ‘எரியிட்டார்! என் செய்தீர், என்று.

இதுபோல, அவருடைய அடிப்படைக் கொள்கைகளை அலசிப் பார்த்தால்தான், அவருடைய எண்ணங்களுக்கும் எனது இயக்கத்தின் அடிப்படை ஆசைகளுக்குமிடையே ஒற்றுமைகளிருப்பதைக் கண்டோம். அதனால்தான், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டதும், எனது இயக்கத் தலைவர், பெரியார், ஒரு அறிக்கை விடுத்தார்.

காந்தி நாடு – காந்தி மதம்!

“இந்த நாட்டின் பெயரை, இந்தியா என்பதற்குப் பதில் ‘காந்தி நாடு‘ என்றழையுங்கள் – ‘இந்து மதம்‘ என்பதற்குப் பதில் ‘காந்தி மதம்‘ என்று மாற்றுங்கள் – இவ்வண்ணம் செய்தால், ஏற்கத் தயார்!“ என்று கூறினார். யார் முன்வந்தார்கள்? இன்றிருக்கும் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கிறேன், யார் ஏற்றுக் கொண்டார்கள்?

அதுமட்டுமா? காந்தியார் அடிக்கடி சொன்னார் – “உண்மையே என் கடவுள்!“ என்று. இதனை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இதுபோல், அவர் கூறிச் சென்ற பல வழிகளை, உங்களால், ஜீரணிக்க முடியவில்லை – ஆனால், மாற்றுக் கட்சியிலிருக்கும் நாங்கள் ஏற்றுப் பணி செய்து வருகிறோம். அந்த நற்பணியின் பெயரால், மணிமண்டபம் கட்டி, உருவச் சிலையைத் திறந்து வைக்கும் இந்த நேரத்தில், உங்களை நான், கேட்டுக் கொள்வேன் – அவரது பெயரால் – ‘அரசியல் நாகரீகத்தை வளர்க்கப் பாடுபடுங்கள்,‘ ‘ஜாதி பேதம் ஒழியப் போராடுங்கள்,‘ இல்லாமைக் கொடுமையொழிய ஒத்துழையுங்கள்‘.

‘மத நம்பிக்கையால் விளையும் கேடுகளை ஒழித்துக்கட்ட முன்வாருங்கள்.‘

(நம்நாடு - 14-1-54)