அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாட்டு நலிவு நீங்கினால்தான் நல்ல நூல்கள் கிடைக்கும்

சென்னை தியாகராய நகர் வாணி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் சங்க 9 ஆவது மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் முக்கியப் பகுதிகள் இங்குத் தரப்படுகின்றன.

“இம்மாநாட்டிலே நான் கலந்து கொள்வது, எழுத்தாளன் என்ற முறையிலா, சொற்பொழிவாளன் என்ற முறையிலா? என்ற ஐயம் எனக்கே எழுகிறது. எனது பக்கத்திலே அமர்ந்திருக்கிற ‘முரசொலி’ மாறனைப் பார்க்கும்போது, ‘முன்பு இப்படி அல்லவா இருந்தோம்’ என்ற எண்ணமும், இன்னொரு புறத்திலே அமர்ந்திருக்கும் பரலி சு.நெல்லையப்பரைப் பார்க்கும்போது, ‘இப்படியல்லவா ஆகப்போகிறோம்’ என்ற எண்ணமும் எழுகிறது.

அதைப் போலவே, ‘எழுத்துலகில், நல்ல பல பணிகளை ஆற்ற முடியவில்லையே’ என்று நான் வருந்துகிறேன்; ‘எண்ணியிருக்கிற பணிகளை எழுத்துலகில் செய்ய இயல வில்லையே என்று நான் எண்ணும்போது, இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருக்கும் என் நிலையை நான் உணருகிறேன்.

நிலை என்ன அறிவீர்
எழுத்தாளர் சங்கம், இந்நாட்டிலேயும், நல்லமுறையில் பரவவேண்டும். இச்சங்கம், எழுத்தாளர்கள் மத்தியில் நல்ல பல பணிகளையாற்றி, அவர்களிடையே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நான் இக்கூட்டத்தில், சிறப்புரை ஆற்றப்போவதாகக் குறிப்பிட்டார்கள். நான் இப்பொழுது பேசப் போவதில் சிறப்பு எதுவும் இருக்கப் போவதில்லை; அப்படிப்பட்ட சிறப்புரை ஆற்றும் நிலையிலும் நான் இங்கு இல்லை; எந்தத் தெருவில் எத்தனை ஓட்டுகள் பறிபோய்விடுமோ என்ற நிலையில்தான் நான் இப்பொழுது இருக்கிறேன். எப்படியிருப்பினும் நான் பேசினால் அது சிறப்பாக இருக்கும் என்ற கருத்தில் தோழர்கள் கூறியிருப்பார்கள்.

நான் இப்பொழுது பிறநாட்டு எழுத்தாளர்கள் நிலையையும், எடுத்துக்கூறி ஒப்புவமை காட்டிப் பேசப் போவதில்லை. ஆனால், சிற்சில கருத்துகளை மட்டும் உங்களிடையே எடுத்துக்கூறுகிறேன்.
பக்குவம் பெறவில்லையே!

பிறநாடுகளில் எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ள ஏற்றம் இங்கு இல்லை. நான் இப்படிக் கூறுவதால், நம்முடைய நாட்டில் நல்ல எழுத்தாளர்கள் இல்லையென்று பொருள் அல்ல. எழுத்தாளர்களை மதிக்கும் அளவுக்கு போற்றும் அளவுக்கு நம்முடைய நாட்டுமக்கள் இன்னும் பக்குவம் பெறவில்லை.

நாட்டில் கல்வித்தரம் பெருகி, வறுமையின்றி வாழ்க்கைத்தரம் உயர்ந்து, நல்ல ஓய்வும் கிடைக்குமானால், நல்ல எழுத்தாளர்களைப் பெற இயலும், அப்படிப் பெற்ற எழுத்தாளர்களின் பணியைப் பெற்று அதைச் சுவைக்கவும், சுவைத்ததைத் துய்க்கவுமான நிலை ஏற்படும்.

பிறநாடுகளில் 100க்கு 97 பேர், 98 பேர் படித்தவர்கள், அவர்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்துள்ளது; அந்த நிலையில் அவர்கள் எழுத்தாளர்குக்கு ஏற்றம் அளிக்கிறார்கள்.

திறமையின் மூலம் உள்ளத்தைக் கவர்ந்தனர்
நம்முடைய நாட்டைப் பொறுத்த அளவில், எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் என்று நான் கருதவில்லை. கடந்த 35 ஆண்டுகளில் நல்ல எழுத்தாளர் பரம“பரை ஏற்பட்டு, அவர்கள் தங்கள் திறமையின் மூலம் பலருடைய உள்ளத்தை ஈர்த்துக் காட்டியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஏற்றம் பெற வேண்டுமானால், நல்ல வாழ்க்கைத் தரம் இருக்க வேண்டும்; நூல்களைப் படிக்கும் பழக்கம் ஏற்படவேண்டும்.

மனமுடைந்து விட்டனரே!
நல்ல நூல்களை நமது நாட்டில் படிக்கின்றவர்களின் தொகை எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நல்லநூல்கள் ஓராயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்டால் அதுவே பெரிய வெற்றி என்ற நிலைதான் இருக்கிறது.

நான் அறிந்த வரையில் பல நல்ல எழுத்தாளர்கள், அரிய கருத்துள்ள நூல்களை எழுதி, அவைகள் விற்பனை யாகாத காரணத்தால் மனமுடைந்து இருக்கிறார்கள்.

நமது நாட்டில், அதிக அளவில் விற்பனையாகும் நூல்கள் எவை என்றால், ‘பஞ்சாங்கமும் அதை அடுத்து இரயில்வே கைடுகளும்தான் ஆகும். இவைகளன்றி, ஐந்தாண்டுத் திட்ட விளக்க நூல்கள் சிறியவை பலவாகும்.

இவை தவிர, வேறு நல்ல நூல்கள் நமது நாட்டில் உள்ள வீடுகளில் இருக்கின்றனவா என்று பார்த்தால் இல்லையென்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டும்.
வேறு ஊர்களுக்குப் போனால் நமக்கு அவசியம் இருக்கிறதோ அந்த ஊரில் பிரசித்தி பெற்ற சாமான்களை வாங்கத் தவறுவதில்லை. இதில் காட்டப்படுகின்ற அளவுக்கு அக்கறை வசதி உள்ளவர்களுக்குக்கூட நூல்களை வாங்குவதில் ஏற்படுவதில்லை. அச்சாமான்களை வாங்குவதைப்போல், நல்ல நூல்களும் வாங்கும் பழக்கம் நாட்டில் ஏற்படவேண்டும். அப்பொழுதுதான், எழுத்தாளரை, ‘ஏழை எழுத்தாளர்’ என்று குறிப்பிட்டுக் கூறப்படும், ‘ஏழை’ என்பது விரட்டப்படும் நிலை ஏற்படும்.

வாழவும் முடியாது-எழுத்தும் வளராது!
ஏழை எழுத்தாளர் எவரும் பாராட்டை விரும்புவதும் இல்லை பாராட்டைப் பெறும் நிலையில் இருப்பதுமில்லை அதற்காக ஏங்கித் தவிப்பதும் இல்லை.

சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் சத்திமுற்றப் புலவர் பாடியிருப்பதாகக்குறிப்பிடப்பட்டுள்ளது:-
“நாராய், நாராய், செங்கால் நாராய்
...........................................
கையது கொண்டு, மெய்யது பொத்தி”
என்ற நிலை நம்முடைய எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. அப்படிப்பட்ட நிலை ஏற்படுமானால், எழுத்தாளர்கள் வாழவும் முடியாது எழுத்தும் வளராது.

நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள் என்று நான் சொன்னால், ‘பிறர் வாங்கிய நூலை வாங்கிப் படியுங்கள் என்பதாகாது. நீங்களே நல்ல நூல்களை விலைகொடுத்து வாங்கிப் படித்து அந்நூல்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.

இந்த அவலநிலை மாறாதா?
நம்முடைய நாட்டில் சாதாரணமாக ஒரு வீட்டிற்குச் சென்றால், அவ்வீட்டில் உள்ளவர்கள், ‘இது படுக்கை அறை, இது சமையல் அறை. இது கூடம், இது பூசை அறை’ என்றுதான் காட்டுகிறார்களே தவிர, ‘இது புத்தக அறை; இது அமர்ந்து படிக்குமிடம்’ என்று காட்டுவதில்லை. அப்படிப் பட்ட இடம் எந்த வீட்டிலாவது இருக்கிறதா? சாதாரண வீட்டில் மட்டுமல்ல நல்ல வசதியான வீடுகளில்கூட இருப்பதில்லை.

பல வீடுகளில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்ட அறைகளையும், வேறு பல வீடுகளில் மான் கொம்பு, காட்டெருமையின் தோல், புலித்தோல், மான்தோல் இப்படியாக மிருகங்களின் சின்னங்கள் முன்புறத்தில் வைக்கப்பட்டிருப்பதையும் கூட நான் கண்டிக்கிறேன்.

சாதாரணமாக சினிமாப் படங்களில்கூட, புத்தக அறையில் கதாநாயகன் அமர்ந்து படிப்பதாகக் காட்டப் படும் காட்சிகள் இருப்பதில்லை.

இந்த நிலை மாறி, ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அறை இருக்க வேண்டும்; வசதியாக அமர்ந்து படிக்கத்தக்க இடம் இருக்க வேண்டும்; நல்ல புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கப்பட வேண்டும்.
நிரம்ப நூல்கள் விற்பனையானால்தான், எழுத்தாளர்களின் நிலையும் உயரும்; அதன் பயனாக நல்ல கருத்துகளும் பரவும்.

பண்டைத் தமிழகத்தில் நிலவியதைக் காண்பீர்
பண்டைத் தமிழகத்தில் மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஏழு வள்ளர்களை மட்டுமின்றிப் பல்வேறு வள்ளல்களும், தமிழ்ப் பெரும் புலவர்களைப் போற்றி வளர்த்தார்கள்; வறுமையினின்றும் அவர்களைப் பாதுகாத்தார்கள். பின்னால் வந்த சீமான்கள், பிரபுக்களும்கூட எழுத்தாளர்களை ஆதரித்தார்கள்.

மன்னர்களும், குறுநில மன்னர்களும், வள்ளல்களும் வாழ்ந்த காலத்தில், எழுத்தாளர்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்கள் கருத்தை எடுத்துக் கூறினார்கள்.

ஆனால், பின்னால் வந்த சீமான்களும், பிரபுக்களும், எழுத்தாளர்களை நோக்கி, ‘என்னைப் பற்றி பாடு’ ‘எனது குடும்பத்தைப் பற்றிப் பாடு’, ‘எனது முன்னோர்களைப் பற்றி எழுது’ என்று கூறும் நிலையும், அதனால் எழுத்தாளர்களுக்கு இக்கட்டான நிலையும் எழுந்தன. இதன் விளைவாக அந்த எழுத்தாளர்களும், ‘அந்தப் பரம்பரை, இந்தப் பரம்பரை’ என்று இழுத்துத் தொடுத்துப் பாடவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அன்று மாறியது-இன்று!
இந்த நிலை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாற்றம் அடைந்தது. எழுத்தாளர்கள் எந்தச் சீமானின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், வெறுப்பைக் கண்டு நடுங்காது, தைரியமாகத் தங்கள் கருத்தை எடுத்துரைத்தார்கள். எழுத்தின் மீது தடை விதித்தால் தடை யார் மீது என்று கருதாது எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிலைமை உருவாகுமானால் மீண்டும் பழைய பிரச்சனைக்குத்தான் திரும்ப வேண்டும்.

அதிகப் பிரதிகள் விற்பனையாகும் காரணத்தால் ஒருவரைப் பெரிய எழுத்தாளர் என்றும், குறைவான பிரதி விற்பனையாவதால் அவரைச் சிறிய எழுத்தாளர் என்றும் கருதக்கூடாது.

அந்த மனநிலை நம்மிடம் உருவாக வேண்டும்
வங்கத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திரர் பெரிய நாவல் எழுத்தாளர்; இரவீந்தரர் உலகம் புகழும் எழுத்தாளர். ஒருமுறை, ஒருவர் பங்கம் சந்திரரிடம் சென்று தாகூர் சிறந்த எழுத்தாளர்; உலகம் பாராட்டும் புகழ்பெற்றவர் என்று கூறப்படுகிறது; ஆனால், அவர் எழுதிய நூல்கள் மிகக் குறைவான பிரதிகளே விற்பனையாவது ஏன்? என்று கேட்டார். அதற்கு பங்கிம் சந்திரர், ‘நான் எழுதும் நூல்களெல்லாம், உங்களுக்காக எழுதுவதாகும். ஆனால் தாகூர் எழுதும் நூல்களெல்லாம் எங்களைப் போன்றவர்களுக்காக எழுதுவதாகும்’ என்றார்.

அப்படிப்பட்ட மனப்பக்குவம், நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட மனநிலை நம்மிடையே வளர வேண்டும்.

நண்பர் அன்பு. கணபதியை நோக்கி நீங்கள் ஏன் நடிகராகக் கூடாது? என்று கேட்டால், ‘அது என்னால் முடியாது-இயலாது-அதற்குரிய திறமை என்னிடம் இல்லை’ என்பார்.

அதைப்போல் இளஞ்செழியனை நோக்கி, நீங்கள் ஏன் ஒரு சிற்பியாகக் கூடாது? என்றால், ‘அதற்குரிய ஆற்றல் எனக்குக் கிடையாது’ என்று கூறுவார்.

யாராவது ஒருவரை, ‘நீங்கள் ஏன் எழுத்தாளராகக் கூடாது?’ என்றால் ‘ஆகவேண்டும்; விரைவில் ஆகிவிடுவேன்’ என்பார்.

உண்மையான எழுத்தாளர் எவரென்பதை உணருவீர்!
அழகாக மலர்ந்து, காண்போரைக் கவரும் வகையில் உள்ள மலரைக் கண்டு ஒருவன், ‘இக்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது; இப்பொழுது மலர்ந்துள்ள மலரின் காட்சி, இன்னும் சில மணி நேரத்தில் வாடி உதிர்ந்து விடுமே’ என்று எண்ணி, ‘இக்காட்சி காலமெல்லாம் நிலைத்து நிற்கவேண்டும்; அதனை எல்லோரும் கண்டுகளிக்க வேண்டும்’ என்ற உணர்ச்சி உள்ளத்தில் எழ, அவன் கையிலே உளியேந்தி, அம“மலரைப் போல் செதுக்கு வானானால், அவன் சிறப்பிக்கத்தக்கவன்.

இதைப்போலவே, ஒருவன், ‘முன்பு ரேஷன் கடை குமாஸ்தாவாக இருந்தேன்; ஆகவே, இப்பொழுது எழுத்தாளனாக இருக்கிறேன்’ என்று கூறினால், அவன் எழுத்தாளனாக மாட்டான். சிறந்த எழுத்தாளனாக ஆவதென்றால், அவ்வளவு சுலபமானதல்ல; கருவிலே உள்ள குழந்தை வளர்ந்து வளர்ந்து, அது தாயின் வயிற்றிலே உலவி உலவி எப்பொழுது வெளியேறுது என்று அது துடிப்பதைப் போல, எண்ணங்கள் சிந்தனையில் உருவெடுத்து, இதயத்திலே உலவி உலவி, அது, ‘என்னை வெளியே விடு, வெளியே விடு’ என்ற உணர்ச்சி பிறக்க வேண்டும்; அப்படித்தான் எழுத்து அமைய வேண்டும்.

இந்த நிலையெல்லாம், ‘போட்டா போட்டி சதாரத்’ துக்கு விளம்பர நோட்டீசு எழுதி விட்டுத் தன்னை எழுத்தாளன் என்று கூறுபவனுக்கு ஆறு அணா கூலி கிடைக்கலாம்; ஆனால், எழுத்துலகம் பயனடையாது.

மனதில் தெளியப் பதியவைத்தனர்!
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கருத்தை அப்புலவன் எடுத்துக் கூறியதால், அவருக்கு எந்த இராஜ்யமும் கிடையாது விடவில்லை; மக்கள் மனதில் எப்படியாவது இக்கருத்தைப்பதிய வைக்க வேண்டுமென்றுதான் அப்புலவர் கருதினார். சுருக்கமாக தெளிவாகப் பதிய வைப்பது எப்படி என்று எண்ணியதன் ஆவலே, இக்கருத்தைக் கூறச் செ“யதது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை வள்ளுவர் கூறினார். இக்கருத்தைக் கூறாவிட்டால், மக்கள் தவறான கருத்தில் செல்வர் என்று அவர் கருதினார். அதன் விளைவாக இக்கருத்தை எடுத்துச் சொன்னார். ஆகவே, எழுத்தாளர் முதலில் ஓர் எண்ணத்தைப் பெற வேண்டும்; அப்படிப் பெற்றால்தான், சிறப்பான எழுத்தாக அது அமையும்.

இலக்கண விதிகளைக் கையாள வேண்டாமா?
தேவநாகரி எழுத்து வடிவ நுழைப்பைக் கண்டித்து, இங்குத் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதை நானும் படித்துப் பார்த்தேன். தமிழில் ‘இடக்கரடக்கல்’ என்றோர் இலக்கணம் இருக்கிறது. நானறிந்த வரையில் தமிழில் தவிர வேறு மொழிகளில் இவ்வித இலக்கண அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பொருளை இப்படியும் கூறலாம்; ஆனால், அப்படிக் கூறுவதை மேலும் சிறப்பாக வேறு வகையிலும் எடுத்துச் சொல்லலாம் என்பதைக் குறிப்பதே இலக்கண விதியாகும். இப்படிப்பட்ட இலக்கணங்களைக் கற்றுத் தமிழ் எழுத்தைக் கையாளுபவர்கள், சரியாகத்தான் கையாளுவார்கள்.

எழுத்தாளர்கள் கடமை
எழுத்தாளர்கள் அனைவரும் ஒரே துறையில் ஈடுபடக்கூடாது. எழுத்துத் துறையில் வெவ்வேறு துறையில் ஈடுபடவேண்டும்.

சிறுகதை ஒரு காலத்தில் மக்களால் விரும்பிப் படிக்கப் பட்டது; அதில் இரண்டொரு எழுத்தாளர்கள் வெற்றி பெற்றுவிட்டதால் அதே துறையில் எல்லா எழுத்தாளர்களும் ஈடுபடுகிறார்கள்.

அதைப் போல், சரித்திர நாவல் என்றால், அதில் எல்லோருமே ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் எழுத்தாளரிடையே போட்டியும் காழ்ப்பும் ஏற்படுகிறது. இதனால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, எழுத்தாளர்கள், பல்வேறு துறைகளில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, பிரயாண நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருக்கின்றன; ஆனால் தமிழில் ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலும், திரு.வி.க. அவர்களின் ‘இலங்கைச் செலவு’ என்ற நூலும்தான் இருக்கின்றன. இந்தத் துறையில் இன்னும் ஏராளமான நூல்களை வெளியிடலாம்.

பிறமொழிகளில் உள்ள சிறந்த பொருளாதார, அரசியல், சரித்திர நூல்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

மற்றும் எழுத்துத் துறையில், பல துறைகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் எழுத்தாளர்கள் ஈடுபட்டுப் பணியாற்ற வேண்டும்.

கருத்தைத் தெளிவாக வெளியிட வேண்டாமா?
இரண்டாவதாக நம்முடைய எழுத்தாளர்களிடையே, ஒரு கருத்தைத் தெளிவாக உறுதியாக வெளியிடும் தன்மை இல்லை. மேற்கோளாகக் கூறவேண்டுமானால், இராச இராச சோழனின் மகன் இராசேந்திர சோழன் என்று ஒரு நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதற்குப் பக்கத்திலேயே ஒரு நட்சத்திரக் குறியிருக்கும் நூலின் அடியில் அதற்குக் குறிப்பு இருக்கும்; அதில் இராச இராசனின் மகன் இராசேந்திரனில்லை என்று மறுப்பாரும் உண்டு’ என்று இருக்கும். இப்படி நம்மிடையே ஒழுங்கான-முறையான சரித்திர ரீதியான காலங்கள் இருப்பதில்லை.
நான் ஒரு நூலைப் படித்தேன்; அந்நூல் இங்கிலாந்து நாட்டு மன்னன் ஜான், பயணம் செய்ததைப் பற்றிக் கூறுவது; அந்தப் பயணத்தின்போது அவர்கள் தங்கியிருந்த ஊரில் நடந்த விருந்தில், எத்தனைக் கோழி சமைக்கப்பட்டது என்பதிலிருந்து, கோழியின் விலை, முட்டையின் விலை உட்பட எல்லா விவரங்களும் அந்நூலில் எழுதப்பட்டிருந்தன.

நிலைமாறினால் இயலாததா?
நம்முடைய நாட்டில் ஓர் ஓவியனை அழைத்து, ‘குலோத்துங்க சோழன் படத்தை வரைந்து காட்டு’ என்றால் இரு கைகளைக் கூப்பியபடி-மன்னர்கள் என்றாலே, கரங்களைக் கூப்பிக்கொண்டு தான் அவர்கள் இருப்பார்கள் என்பது அவன் எண்ணம் வரைவான்.

நம்முடைய நாட்டில், இப்படிப்பட்ட விவரமான தகவல்கள் இல்லையா என்றால், ஏராளமாக இருக்கின்றன.

கோலார் சுரங்கத்தில் தங்கம் கிடைக்கிறது. தங்கம் கிடைக்கிறது என்று சொன்னால் கட்டி கட்டியாக அப்படியே தங்கத்தை வெட்டியெடு“பபதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கக்கூடும். நாம் பார்க்கும் தங்கம் அச்சுரங்களில் அப்படியே கிடைப்பதில்லை. அத்தங்கம் கற்பாறையோடு சேர்ந்து இழையோடி இருக்கும்; அப்பாறைகளை வெட்டியெடுத்து உடைத்து, உருக்கி, இராசாயனக் கலவையுடன் சேர்த்து வடித்து எடுத்தால்தான் சுத்தமான தங்கமாக ஆகும்.

அதைப்போல், நம்முடைய முன்னோர்கள் இப்படிப் பட்ட விவரங்களை, இலக்கியத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இதை ஆராய்ந்து வெளியே கொண்டு வரவேண்டும். அதற்கு ஒரு தனி குழுவே இருக்க வேண்டும்.

அக்குழு ஆராய்ச்சிகளை நடத்தும்போது, அவர்களுக்குக் குடும்பக் கவலை இருக்கக் கூடாது. அவர்கள் மன நிம்மதியோடு செயல்படத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

பார்க்காமல்... வர்ணிப்பா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு நூலை வாங்கினேன். அதன் விலை பதினெட்டே முக்கால் ரூபாய் ஆகும். அந்த ஆங்கில நூலின் பெயர், ‘லிங்கன் சுடப்பட்ட அன்று’ என்பதாகும். அந“நூலில், லிங்கன் சுடப்பட்டு இறந்த அன்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. சுடப்பட்ட அன்று லிங்கன் காலையில் எத்தனை மணிக்கு எழுந்தார் என்ற தகவலிலிருந்து அன்று அவர் உடுத்தியிருந்த உடை உண்ட உணவு அவர் மனைவியோடு பேசியது-எங்கெங்குச் சென்றார் அவர் எந்தப் பாதை வழியாகத் தியேட்டருக்குப் போனார். எந்த இடத்தில் எந்தத் திசை நோக்கி அமர்ந்து இருந்தார் அப்பொழுது அவரைச்சுட்ட கொலையாளி எந்த வழியாக வந்தான்- எப்படித் தியேட்டருக்குள் வந்தான், அமர்ந்தான், சுட்டான் என்ற தகவல் வரை விரிவாக ஒருநாளை நிகழ்ச்சி மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்நூலை வெளியிட அதன் ஆசிரியர் 13 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தியுள்ளார்.

ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள், தாஜ்மகால் கட்டிடத்தைப் பார்க்காமலேயே அதை வர்ணித்துக் கதை எழுதுவார்கள். அவர்கள், அதைப் பார்க்கக் கூடாது என்று கருதவில்லை; ஆனால், அவர்களால் சென்று பார்க்க இயலவில்லை, பார்க்காத தாஜ்மகாலை எண்ணிக்கொண்டு, கதையை, ‘அந்தப் பளிங்குக்கல் கட்டடத்தின் மீது பால் நிலவு பொழிந்தது, அப்பொழுது...’ என்று வர்ணிப்பர்.

பார்க்காமலேயே இவ்வளவு திறமையுடன் எழுதுவதாக இருந்தால் இன்னும் அதைப் பார்த்து எழுதினால் எவ்வளவு திறமையோடு எழுதக்கூடும்?

தகவல்களை ஆராய்ந்து வெளியிடுவதால்தான் நல்ல பலன் நாட்டுக்கு ஏற்படும்.

விரட்டிக்கொண்டு போகும் பதிப்பாளர்
நான் ஒரு புத்தகப் பதிப்பாளன் அல்ல; என்றாலும், எழுத்தாளர்களை விரட்டிய பதிப்பாளர்களையும் எனக்குத் தெரியும்; இன்று அதே எழுத்தாளர்களை விரட்டிக்கொண்டு போகும் பதிப்பாளர்களையும் எனக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் எடுத்துக் கூறுவது உங்களைவிட மேம்பட்டவன் நான் என்று காட்டிக் கொள்வதற்கல்ல. நான் உங்களிலே ஒருவனாக இருந்து பணியாற்ற இயல வில்லையே என்று வருத்தம் எனக்குண்டு, நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

(நம்நாடு - 4.1.62)