அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பெரியார் – நேரு சந்திப்பு தேவை!

சேலம், டிசம்பர் 14 – சேலம் ரோட்டரி கிளப் கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஆட்சிமன்ற ‘போக்ஸ் ஹாலில்‘ திரு.இ.ஏ.ஹால்லோ தலைமையில் நடைபெற்றது.

அண்ணா அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுகையில், ‘இந்தியா முழுவதிலும் புகழ்பெற்று அண்ணா விளங்குவார்‘ என வழக்கறிஞர் அ.கணேச சங்கரன் குறிப்பிட்டார்.

அண்ணா அவர்கள், ஆங்கிலத்தில் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு –

சேலம் ரோட்டரி சங்கத்தில் பேச எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரோட்டரி சங்கங்களைப் போன்ற நிறுவனங்களில் நான் அதிகமாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை, பொதுவாகக் கூட்டங்களில் நான் தமிழில்தான் பேசுவது வழக்கம், இப்பொழுது ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆங்கிலத்தை நாம் விட்டுவிட முடியாது. தாய்மொழி தமிழ் என்றாலும், ஆங்கிலத்தை நாம் விட முடியாது.

ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நன்மைகள்!

ரோட்டரி சங்கம் நல்ல கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்திற்குச் சேவை செய்து வருகிறது. ஆங்கிலேயர் இந்த நாட்டிற்கு வந்த பொழுது ரோட்டரி சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், ஆங்கில மொழி ஆகியவை நாம் நாட்டிற்கு வந்தன. ஆங்கிலேயர் நம்மை விட்டுச் சென்ற பின்னும் இந்த மூன்றும் நன்மை தரக் கூடியவைகளில் இவை மூன்றும் சில, ரோட்டரி சங்கமும், செஞ்சிலுவைச் சங்கமும் நல்ல கொள்கைகளின் அடிப்படையில் சிறந்த முறையில் சேவை செய்து வருகின்றன.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் முடிவுற்றது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை வகக்க பிறகு, இந்தியப் பேரரசின் கஜானாவை திறந்து பார்த்தால் திட்டத்தை நிறைவேற்ப் போதிய பணமில்லை.

வெளி நாட்டுக்குச் சென்று கடனுதவி பெற்று வர மத்தியப் பேரரசின் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றார், பல கூட்டங்களில் பேசினார். பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் இந்தியாவின் நிலையை விளக்கினார். கடன் உதவி அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆனால் வெறுங்கையுடன் இந்தியாவுக்குத் திரும்பினார்.

டி.டி.கேயை நேரு ஏன் அனுப்ப வேண்டும்?

ரஷ்யா செயற்கைச் சந்திரனைப் பறக்க விட்ட நேரத்தில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அமெரிக்கா சென்றார், ரஷியாவில் செயற்கைச் சந்திரன் மீது அமெரிக்காவின் கவனம் இருந்ததே தவி, இந்தியாவைப் பற்றி இல்லை. அமெரிக்காவின் கவனத்தைச் சரியான முறையில் இந்தியாவின் மீது திருப்ப டி.டி.கே. தவறிவிட்டார். தான் சென்ற காரியத்தைச் சாதிக்க முடியாமல் வெறுங்கையுடன் இந்தியா திரும்பினார். இதைக் கண்ட நேரு, வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் – இந்தியாவின் திட்டங்கள் ஒன்றும் கெட்டுவிடாது‘ என்று கூறினார். அவ்வாறு கூறும் நேரு, வெளிநாட்டிலிருந்து, பண உதவி பெற, கிருஷ்ணமாச்சாரியை ஏன் அனுப்ப வேண்டும்.

இந்தியாவின் இராணுவ இலாகா அமைச்சராக வி.கே.கிருஷ்ணமேனன் ஐ.நா. சபையில் பேசிக் சிக்கலையும், குழப்பத்தையும் உண்டு பண்ணியிருக்கிறார். அமெரிக்கா சென்றதும், இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வி.கே.கிருஷ்ணமேனன் தனக்குண்டான இயல்பான கணத்தோடு பேசி இருக்கிறார்.

அரசியலைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்று சொல்வது ஒருவித நாகரிகம் என வியாபாரிகள், அதிகாரிகள் முதலானோர் நினைக்கிறார்கள். அரசியலைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளும்படி அவர்கள் அரசியல் செய்து விடுகிறதே! எனவே, அரசியலில் அக்கறை கொள்வதில்லை என்பதை விடுத்து வியாபாரிகள் அதிகாரிகள் ஆகியோர், அரசியலில் அக்கறை கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள், அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

சட்டபுத்தக எரிப்பு இயக்கம்!

கடந்த இரண்டு வாரக் காலமாக திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்களின் சட்டப் புத்தக எரிப்பு இயக்கம் பற்றித் தென்னாட்டில் பேசப் படுகிறது. தென்னாட்டுக்கு வருகை தந்த பண்டித நேரு, உணர்ச்சி வேகத்தில் தகாத வார்த்தைகளால் பெரியார் அவர்களைத் தாக்கிப் பேசியிருக்கிறார். பண்டித நேருவின் தாக்குதலான வார்த்தைகளுக்குப் பதிலளிக்கும் முறையில் பெரியார் அவர்களும் பண்டித நேருவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

பெரியாரைத் தாக்கிப் பேசிய நேரு, முடிவில் என்ன சொன்னார் என்பதைக் கவனிக்க வேண்டும், ‘சாதிகளே கூடாது‘ என்று கூறும் நேருவும், பெரியார் ஈ.வே.ராவும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்வானேன்?

பெரியார் ஈ.வே.ரா.வும், பண்டித நேருவும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம், வீணாக விவாதத்திற்காகப் பேசுவதில் பலனில்லை.

சாதிகள் ஒழிய வேண்டும்!

சாதிகள் வேண்டும் என்று யாரும் கூறவில்லை. ‘சாதிகள் கூடாது‘ என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். சாதிகளை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கான முறைகளில்தான் வித்தியாசம் காண்கிறோம். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதித்துப் பேசி, சாதிகள் ஒழிவதற்கான திட்டங்களை வகுக்கலாம்.

ஒருபுறம் பஞ்சம், மற்றொரு புறம் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளைத் தற்போதுள்ள மக்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு எப்படி முடிவு காண்பது என்பது தற்போதுள்ள மக்களின் பொறுப்பாகும். இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும் அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாகக் சொல்ல வேண்டும்.

பொதுமக்கள் அன்றாடப் பிரச்சனையையும் ரோட்டரி சங்கங்கள் விவாதி்த்து அவற்றிற்குப் பரிகாரம் காண வழி தேட வேண்டும். முக்கியப் பிரச்சனையாக விளங்கும் சாதிப் பிரச்சனையைப் பற்றி நல்ல முடிவு காண்பதற்கான திட்டங்களை ரோட்டரி சங்கங்கள் வகுத்துக் கொடுக்கலாம்.

அரசியல் வாக்காளர் கடமை!

திருவாளர்கள் எம்.வி.கோபால் !செட்டியார்), டாக்டர் எஸ்.ஆர்.ராஜாராம், அனுமந்தராவ், டி.என், சம்பத்குமாரன் ஆகிய ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதாவது –

சில அரசியல் கட்சிகள், வியாபாரிகளிடத்தில் பணத்தை வாங்கி ஏழைகளுக்குக் கொடுத்து, வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன. அரசியல் கட்சிகள் நல்ல ஒழுக்கத்துடனும் பண்பாட்டுடனும் நடந்து கொள்ளும்படி செய்வது வாக்காளர்களுடைய கடமையாகும். வாக்காளர்கள் தங்கள் பொறுப்பைச் சரியாகச் செய்யாவிட்டால், வாக்காளர்களை எவ்வாறு ஏமாற்றி வாக்குகளைப் பெறுவது என்றுதான் அரசியல் கட்சிகள் நினைக்கும்.

வியாபாரிகள் அரசியலைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும், தங்கள் கொள்கைகள் என்னவென்பதை வியாபாரிகள் சுதந்திரமாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விவாதம் நடத்திக் கொண்டிருந்தால் பிரச்சனைகளில் முடிவு காண முடியாது. பெரும்பான்மை – சிறுபான்மை என்பதை மறந்து அரசியல் கட்சித் தலைவர்கள் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசினால் பிரச்சனைகள் தீரும். இவற்றை நடைமுறையில் நான் கண்டிருக்கிறேன். அதை விடுத்து விவாதம் மட்டும் நடத்தினால் முடிவு காண முடியாது.

அரசியல் சட்டத்தில் முரண்பாடு!

சட்டப்புத்தக எரிப்பு போன்ற இயக்கங்களில் நான் பங்குகொள்ளவில்லை, அவற்றை ஆதரிக்கவுமில்லை. அரசியல் சட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அதே அரசியல் சட்டத்தில் சாதிகளையும், மதங்களையும் காப்பாற்றவும் உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. சாதிகளைப் பற்றி அரசியல் சட்டத்திலேயே முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

சிலருக்குப் பாட்டுகளில் கீர்த்தனை ராகம் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது, தெம்மாங்கு, தில்லானா பாட்டுகள் பெரும்பாலும் பிடிக்கும். அதேபோல, சாதிகளை ஒழிக்க சட்டத்தை எரிப்பதன் மூலம் காரியத்தைச் சாதிக்க முடியும் என்று திராவிடர் கழகத்தினர் எண்ணுகிறார்கள், அது அவர்களுடைய எண்ணம்.

தலைவர்கள் கலப்பு மணம்!

திரு.சி.இராசகோபாலாச்சாரியார் தன் மகனுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார், டாக்டர் பி.சுப்பராயன், சி. சுப்பிரமணியம் முதலியவர்களும் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். சாதிகள் இல்லை என்பதை இவர்கள் தைரியமாக மேடைகளில் பேச வேண்டும். எல்லா முற்போக்குச் சக்தி உடைய கட்சிகளும் ஒன்று கூடிப் பேசி, சாதிகளை ஒழிப்பதற்கான திட்டங்கள் வகுக்க வேண்டும்.

அண்ணா அவர்கள், ரோட்டரி சங்கத்தில் பேசப் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டதும். ஏராளமான மக்கள், மாவட்ட ஆட்சி மன்ற போகிஸ் ஹாலுக்குள் கூடிவிட்டனர்.

அண்ணா அவர்கள் – ஆங்கிலத்தில் பேசியதைப் பார்வையாளர்களும், ரோட்டரி சங்க உறுப்பினர்களும் அமைதியாகக் கேட்டனர்.

ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அண்ணா அவர்கள் விளக்கமாகவும், தெளிவாகவும் பதில் சொல்லியதையும் பார்வையாளர்கள் அமைதியாகக் கேட்டனர்.

(நம்நாடு - 17-12-1957)