அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


புனிதமான பொங்கல் நாள்

“பொங்கல் விழா ஒன்றுதான் இந்த லோகத்திலும், இந்த நாட்டிலும் வாழ்வதைப் பற்றி இருக்கிறது. ஏகாதசி போன்ற விழாக்கள் அந்த (மோட்ச) லோகத்தைப் பற்றிய கதைகளாக இருப்பதால், அதைவிட மற்ற எல்லாவற்றையும் விட பொங்கல் தனிச்சிறப்பு வாய்ந்தது.”

“திராவிடர்களாகிய நாம் திராவிடர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம்; ஆனால், ஆரியர்கள், தங்களை ஆரியர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறார்கள்; ஆரியர்களை, ஆரியத்தை நாங்கள் கண்டிக்கும் பொழுது திராவிடர் என்று கூறிக்கொள்ளும் ஆரியர்கள் ஏன் ஆத்திரப்பட வேண்டும்? திராவிடர் என்று கூறிக்கொள்வதில் மட்டும் பயனில்லை; இதுபோன்ற மேடைகளில் நம்முடன் ஆரவாமுத அய்யங்கார் கலந்து கொள்கிறார்-பேசுகிறார் என்ற நிலைமை வரவேண்டும்.”

“அடுத்தாண்டு பொங்கலில் திராவிடர் திருநாள் கொண்டாடும் பொழுது நல்ல உழவர்களுக்கும், நல்ல உணவு உற்பத்தி செய்தவருக்கும், நல்ல காளை-பசு வளர்ப்பவர்களுக்கும், நல்ல குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கும் இது போன்ற பரிசுகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

அணையப் போகும் விளக்கு

“இந்தப் புனிதமான பொங்கல் திருநாளில், நான் அரசியல் பற்றி அதிகமாய்ப் பேச விரும்பவில்லை; முழு நிலவாகிய பொங்கல் திருநாளில், அணையப்போகும் அரிக்கன் விளக்காகிய இன்றைய ஆட்சியைப் பற்றிப் பேச விரும்பவில்லை; தூத்துக்குடித் தோழர்களின் துயர் துடைக்க ஆவன செய்வீர்கள் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு, கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.கழகப் பொதுச் செயலாளர் தோழர் அண்ணாதுரை பேசுகையில் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு மதிப்பு
13-1-54 காலை 10 மணிக்கு நியூ சினிமாவில் தோழியர் சாந்தகுமாரி குழுவினரின் இன்னிசையுடன் தோழர் ஆர்.பாலகுருசாமி தலைமையில் விழா ஆரம்பமாயிற்று. தோழர்கள் இரெ.இளம்வழதி, எம்.ஏ.,பி.எல்., ஏ.கோவிந்த சாமி எம்.எல்.ஏ., ஆகியோர் பேசிய பின், புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் பேசும்பொழுது குறிப்பிட்டதாவது:-
“பொங்கல் விழா என்பது, தீபாவளி மற்றும் பல விழாக்களைப் போன்று தமிழர்-திராவிடர் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் மாறுபட்டதல்ல; திராவிடர் திருநாள் கொண்டாடுவதன் மூலம், உழை“பபாளர்களுக்கும், குறிப்பாக உழவர்களுக்கும், பொதுவாக நம் நாட்டிற்கும் மதிப்பளித்தவர்களாகிறோம்.”

திராவிடத் திருநாள்
அடுத்துத் தோழர் க.அன“பழகன், எம்.ஏ., பேசியதாவது:-

“சங்கராந்தி பண்டிகையைப் பொங்கல் விழாவாக மாற்றித் தமிழர் திருநாளாக ஆக்கி இன்று அது திராவிடர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பெருமை திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்ததேயாகும்.”

கடலூர் (என்.டி) மஞ்சை நகர் நேப்பிடர் மீராட்டு தொடக்கத்திலிருந்து பல வீதிகளில், தோழர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன், இரெ.இளம்வழுதி எம்.ஏ., பி.எல். சித்தார்த்தன் பி.ஏ. மற்றும் இயக்கத் தோழர்களுடன் கைத்தறித் துணிகள் விற்றனர்.

கைத்தறி விற்பனை
கடலூர் (ஓ.டி) முக்கிய வீதிகளில், தோழர்கள் க.அன்பழகன், ஏ.கோவிந்தசாமி, மற்றும் இயக்கத் தோழர்களால் கைத்தறித்துணி மொத்தத்தில் ரூ.800 அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மாலை 6.30 மணிக்குக்க் கடலூர் (ஓ.டி) செல்வம் திடலில், தோழர் ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.கழகத் திறப்பு விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தோழர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன், க.அன்பழகன், இரெ.இளம்வழுதி ஆகியோர் பேசினர். பல இடங்களில் தோழர் க.அன்பழகன், ஏ.கோவிந்தசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

14.1.54 காலை 7 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பூப்பந்தாட்டம் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்ப மாயின. பல குழுக்களும் கலந்து கொண்டன.

கட்டுரைப் போட்டி
காலை 10 மணிக்குக் கட்டுரைப் போட்டி, நீதிபதிகள் இரெ.இளம்வழுதி, வாணிதாசன், புதுமைச்சித்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. “திராவிட நாட்டுப்பிரிவினை, பெண்கள் முன்னேற்றம், கவிதையில் மறுமலர்ச்சி” என்ற தலைப்புகள் போட்டிக்கெனக் கொடுக்கப்பட்டது.

அன்று மாலை 6 மணிக்குப் “புதிய கல்வித்திட்டம்; திராவிடர் திருநாள்; மதம் அவசியமா?” என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டி
15.1.54 காலை 7 மணிக்குத் தொடர்ந்து கால்பந்தாட்டமும், பூப்பந்தாட்டமும், 10 மணிக்குச் சடுகுடு விளையாட்டும் நடைபெற்றன. மாலையில் கால்பந்தாட்ட முடிவும், சருக்குமரப் போட்டியும், வேகமாக சைக்கிள் ஓட்டுதலும், ஒரு மைல் ஓட்டமும் 220 கெஜ ஓட்டமும், நீளந்தாண்டுதலும் மாறுவேடப் போட்டியும் நடைபெற்றன.

16.1.54 காலை 7.30 மணிக்குப் பூப்பந்தாட்டம் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் திராவிட ஐவர்கள் வெற்றி பெற்றனர்.

காலை 9.30 மணிக்கு நியூ சினிமாவில் கூட்டம் தோழர் சென்னை சண்முகம் தோழியர் ஜி.சாந்தகுமாரி ஆகியோரின் இன்னிசையுடன் துவங்கியது. தோழர் தில்லை வில்லாளன் தலைøயில் விழாக் கூட்டம் நடைபெற்றது. அதுசமயம் தோழர்கள் வாணிதாசன் மு.கருணாநிதி ஆகியோர் பேசினர்.

ஆசிரியர் வேறு-திராவிடர் வேறு
தோழர் கருணாநிதி பேசுகையில், ஆரியர்-திராவிடர் வேற்றுமைக்கு இலக்கியச் சான்றுடன் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தைக் காட்டியும், ‘கல்கி’ ஆசிரியர் ஆரியர் திராவிடர் என்பது அறிவீனம் என்று எழுதியிருப்பதைத் தக்க சான்றுடன் மறுத்துக் கூறியும், இன்று நமது வீட்டில் பொங்கல் பொங்கும் பொழுது தூத்துக்குடி, கல்லக்குடித் தோழர்களின் வீட்டில் துயரம் பொங்குவதையும் குறிப்பிட்டார்.

மாலை 3.30 மணிக்கு, தோழர்கள் அண்ணாத்துரை, கே.ஏ.மதியழகன், சி.வி.ராஜகோபால் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

மாலை 5.00 மணிக்குத் தோழர் கருணாநிதி வன்னியர் பாளையத்திலும், வண்ணாரப் பாளையத்திலும், அழகிரிநாடக மன்றத்திலும் கொடியேற்றி வைத்தார்.

திருப்பாப்புலியூரில் பல இடங்களில் தோழர்கள் ஏ.கோவிந்தசாமி ஆர்.பாலகுருசாமி ஆகியோர் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தார்கள்.

மறுமலர்ச்சி மன்றம்
மாலை 5.30 மணிக்குத் திருப்பாப்புலியூர் தி.மு.கழகத்திலிருந்து தோழர் கருணாநிதி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு மஞ்சை நகர் மைதானம் வந்தடைந்தது.

மஞ்சை நகர் மறுமலர்ச்சி மன்றத் திறப்பு விழாவில் தோழர் சித்தார்த்தன் தலைமையில் தோழர் இளவழகன் கொடியேற்றி வைக்க, தோழர் மதிவாணன் தோழர் அண்ணாதுரை படத்தைத் திறந்து வைத்தார். தோழர் வாணிதாசன் சொற்பொழிவாற்றினார்.

பொதுக்கூட்டம்
மஞ்சை நகர் மைதானத்தில் அழகிரி நாடகக் குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கூட்டம் ஆரம்பமாயிற்று. சென்னைத் தோழர் சண்முகம் இசை விருந்து அளித்தார். தோழர் இரெ.இளம்வழுதி அவர்கள் தலைவர்களை வரவேற்றும், விழாவிற்குப் பலவகையிலும் உதவி செய்து தொண்டாற்றிய வர்களைப் பாராட்டியும், தோழர் ஏ.கோவிந்தசாமி அவர்களைத் தலைமை தாங்கும்படி முன்மொழிந்தும் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புத்தகங்களும், விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பைகளும், பதக்கங்களும் பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்களால் அளிக்கப் பட்டன.

பின்னர் தோழர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்துப் பேசினார். சி.வி.ராஜகோபால் தோழர் கோவிந்தசாமி அவர்கள், சட்ட சபையிலும், வெளியிலும் மக்களுக்காகப் போராடுவதை விளக்கிக் கூறினார்.

அடுத்து, தோழர் மதியழகன் ஆச்சாரியர் கல்கி மலரில் எழுதிய “வண்ணாரச்சின்னாள்” கதையைக் குறிப்பிட்டு, ஆரிய-திராவிடப் பண்பாட்டை விளக்கிப் பேசினார்.

பின்னர், தோழர் கருணாநிதி தி.மு.கழகத்தின் மும்முனைப் போராட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார்.

அடுத்து, பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்களுக்குப் பொங்கல் விழாக் குழுச் சார்பிலும் பல கழகங்கள், தொழிற்சங்கங்கள், மன்றங்கள், நாடகக் குழுக்கள், நகரமக்கள் முன்னணி ஆகியவற்றின் சார்பிலும் கைத்தறி ஆடைகள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

தூத்துக்குடி நிதி
இறுதியாக, தூத்துக்குடி நிதிக்காகக் கடலூர் நகரத் தி.மு.கழகங்களின் சார்பில் ரூ.350 கொண்ட பணமுடிப்பு விழாக்குழுத் தலைவர் இரெ.இளம்வழுதி அவர்களால் பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்களிடம் அளிக்கப் பட்டது.

கடலூர் ஓ.டி.உண்டியல் வசூல் 9-8-3 கருணாநிதி கையொப்பம் போட்டதில் ரூ.3-12-0, எம்.ஜி.இராமச்சந்திரன் கையொப்பமிட்டதில் ரூ.2-12-0 மதியழகன் கையொப்பமிட்டதில் அணா 8, மாறுவேடம் பூண்ட பார்த்தசாரதி உண்டி வசூல் ரூ.2-0-6 திருப்பினாம்பாக்கம் எம்.ஏ.சண்முகம் ரூ.5 ஆக ரூ.24-8-9 தொகை பொறுப்பாளர் ஏ.கோவிந்த சாமி அவர்களிடம் தூத்துக்குடி நிதிக்காக கொடுக்கப்பட்டது. தோழர் கே.ஜி.ராமநாதன் நன்றி கூறலுடன் விழா முடிந்தது.
16-1-54 மதியம் 2.30 மணிக்கு ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.

(நம்மாடு - 22.1.54)