அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சாகித்திய அகாடமி தமிழ்மொழிக்கு இழைத்த அநீதி

சென்னை டி.30 தமிழ் எழுத்தாளர் சங்க ஒன்பதாவது மாநாடு, தியாகராயர் நகர் வாணி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மாநாட்டில் நிகழ்ச்சி, காலை 9 மணியளவில் துவங்கியது. மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலாளர் மா.இளஞ்செழியன் அனைவரையும் வரவேற்று, மாநாட்டு நிகழ்ச்சிகளை விவரித்தார்.
அடுத்து, வரவேற்புக் குழுத் தலைவர் ‘முரசொலி’ மாறன் அனைவரையும் வரவேற்று, உரையாற்றுகையில் தேவநாகரி வரிவடிவத் திணிப்பு அபாயம் ஏற்பட்டிருப்பதைக் சுட்டக்காட்டி, கட்சி சார்பற்று அனைவரும் இப்பிரச்சினையை அணுகி, அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரினார்.

பின்னர், எழுத்தாளர் சங்கத் தலைவரும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியருமான திரு.அன்பு கணபதி மாநாட்டுக்குத் தலைமையேற்று, எழுத்தாளர் சங்கம் துவக்கப்பட்டதையும் அது சிரமத்துடன் முன்னேறிப் பணியாற்றி வருவதையும் விளக்கிக் கூறினார்.

அடுத்து நடந்த கருத்தரங்க நிகழ்ச்சியைப் பேராசிரியர் க.அன்பழகன் துவக்கி வைத்துச் ‘சென்ற பத்தாண்டுகளில் தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பில் அரியதோர் கருத்துரை வழங்கினார்.

இக்கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்ற பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் ‘புலவர்களை இழித்துக் கூறும் புனை கதைகளுக்கு ஆக்கம் தரக்கூடாது’ என்றார்.

‘பத்திரிகை’ என்ற தலைப்பில் கே.இராமநாதன் பேசுகையில், ஜனநாயகப் பண்பாட்டை வளர்க்கப் பத்திரிகைகள் முனைய வேண்டும்’ என்றார்.

‘பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் திரு.சஞ்சீவி எம்.ஏ., பேசுகையில், ‘தமிழ் வளர்ச்சியில் பல்கலைக் கழகம் ஆற்றியுள்ள அரும் பணிகளை விளக்கிக் கூறினார்.

‘திரைப்படம்’ என்ற தலைப்பில் பேசிய திரு. அகிலன், இத்தொழில் அரசின் உடைமையாக்கப்பட வேண்டும் மென்று எடுத்துக் கூறினார்.

‘பதிப்பகம்’ என்ற தலைப்பில் திரு.வ.சுப்பையா பேசுகையில், தனித் தமிழ் வளரவேண்டும் என்று ஆவலோடு துவக்கப்பெற்ற தமது பதிப்பம் பெற்ற அனுபவங்களை எடுத்துச் சொன்னார்.

திரு.டி.கே.சண்முகம் அவர்கள், ‘நாடகம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிற்பகல் நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், தங்களைத் தாங்களே ஒவ்வொருவராகப் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து கொண்டனர்.

அடுத்து, மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவற்றில் முக்கியத் தீர்மானங்களாவன:
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குவதில், சாகித்திய அகாடமி கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்காமையை இம்மாநாடு எடுத்துக்காட்டி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானத்தை மா.சு.சம்பந்தம் முன்மொழிய, அ.ச.புஷ்பரத்தினம் வழிமொழிந்தார். தீர்மானம் நிறைவேறியது.
“எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து வடிவம் அமைக்கும் வகையில், தேவநாகரி வரிவடிவத்தைத் திணிக்க இந்திய அரசு முயலுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது” என்ற தீர்மானத்தை ஊ.செயராமன் முன்மொழிய, சு.ம.சண்முகசுந்தரம் வழிமொழிய, தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

“தமிழ் நாகரிகப் பெருமை, தொன்மை இவற்றை விளக்கும் பொருள்கள் கிழக்கு ஆசியா, மற்றும் பல்வேறு நாடுகளில் இருப்பதை இந்திய அரசும், தமிழக அரசும் முயன்று சேகரித்து, அவை குறித்து ஆராய்ச்சி நடத்த முன்வரவேண்டும்” இத்தீர்மானத்தைப் புலவர் திருமகன் முன்மொழிய திரு.மயிலை சீனி.வேங்கடசாமி வழி மொழிய, தீர்மானம் நிறைவேறியது.

“சென்னை மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று சட்டபூர்வமாக்கப்படவேண்டும்” என்று தீர்மானத்தை திரு.கா.வேழவேந்தன் முன்மொழிய, த.வீ.ஆனந்தகிருஷ்ணன் வழிமொழிய தீர்மானம் நிறைவேறியது.

அடு“த்து, எழுத்தாளர் சங்கச் சார்பில், திரு.மயிலை சீனி.வேங்கடசாமி. பரலி.சு.நெல்லையப்பர், செக் நாட்டுத்தமிழ் அறிஞர் டாக்டர் கமீல் ஸ்வாலபில் ஆகியோரைப் பாராட்டும் வகையில், புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் 300 ரூபாய் அளவில் செய்து தரப்பட்ட வெள்ளிக் கேடயத்தையும், பதக்கத்தையும் டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்கள் வழங்கினார்.
செக் நாட்டுத் தமிழ் அறிஞர் வர இயலாத காரணத்தால் அவருக்குரிய பதக்கம் அனுப்பி வைக்கப்படும்.

அடுத்து மயிலை சிவமுத்து அவர்களும், பனிமொழிப் புலவர் கா.அப்பாதுரையாரும் பாராட்டுரை வழங்கினர்.

இப்பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து, மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் பரலி சு.நெல்லையப்பரும் பேசினர்.

இறுதியாக அண்ணா அவர்கள் அரியதோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாநாடு இரவு 8 மணியளவில் முடிவுற்றது.

(நம்நாடு - 1.1.62)