அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சக்தியை உணர்ந்து பணிபுரிவோம்!

செங்கற்பட்டு மாவட்டம் பரந்தூர் தி.மு.கழக முதல் ஆண்டு நிறைவு விழா 21.9.1954 மாலை 7.30 மணிக்க மறைந்த மாவீரர் அரங்கசாமி மன்றத்தில் தோழர் சி.வி.எம்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. தலைவர் முன்னுரையாகத் தி.மு.கழகக் கொள்கைகளை விளக்கிப் பேசினார். தோழர்கள் சி.வி.இராசகோபால், வேணு, அ.பொன்னம்பலனார், கண்ணபிரான் ஆகியவர்கள் சமூகப் பொருளாதார – அரசியல் விடுதலை பெறப் பணியாற்றும் தி.மு.கழகத்தைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுமென்றும், அதன் கொள்கைகளை மக்கள் மனத்தில் பதியும்படி தி.மு.கழகத் தோழர்கள் விளக்கமாக எடுத்தக்கூறி கிளைக் கழகங்கள் எங்கும் ஏற்படும்படிச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

பின்னர், பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்களுக்குப் பல கிராம கிளைக் கழகங்களும் பரந்தூர்த் தி.மு.கழகத் தோழர்களும் மலர் மாலைகள் சூட்டியும், கைத்தறித் துண்டு வழங்கியும் வரவேற்பு கூறினார்கள்.

பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் பேசுகையில் சமூகத்தில் உயர்வு – தாழ்வு ஏற்படுத்திக் கொண்டு இன்னல் படுவதும், பழமையில் மோகம் கொண்டு, புதுமையை வெறுப்பதும் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றதில்லை என்றார்.

அடிமைகளாய்க் கிடக்கிறோம்!

பிற நாட்டு மக்கள் விஞ்ஞான வளர்ச்சியின் துணைகொண்டு புதுப்புது கருவிகளைக் கண்டுபிடித்து மக்கள் வாழ்க்கைக்குப் பயன்பட உதவுகிறார்கள், நாம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் கண்டுபிடித்த குத்து விளக்குகள், மாட்டு வண்டிகள் ஆகியவைகளில் கூட மாற்றம் ஏற்பட முடியாதபடி பிற்போக்காக வாழ்கின்றோம், மதம், கடவுள், கோயில், திருவிழா, பிரார்த்தனைகள் போன்ற காரியங்களில் பெரும் பொருள்களைப் பாழாக்கி அறிவுக்குப் பொருத்தமற்ற செயல்களால் இடர்ப்படுகின்றோம். இந்நாட்டில் பார்ப்பனியம் எல்லாத் துறைகளிலும் உயர்வு பெற்று, ஆதிக்கம் செலுத்துகின்றது, நாம் அடிமைகளாய்ப் பலப்பல சாதிகளாய்ப் பிரிந்து கிடக்கின்றோம், இதனால் மக்கள் கூட்டுறவுச் சக்திகள் பிளவுபட்டு வீண் சாதிப்பெருமை பேசி, வாழ்வில், உணவு, உடை, குடியிருப்பு வசதி, கைத்தொழில் வசதி ஆகியவைகள் எதுவும் பெறமுடியாத நிலைமையில் அழுந்திக் கிடக்கின்றோம், பசி, வறுமை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளால் அவதியுறுகின்றோம். சாதி மத சமயப் பூசல்களால் பெரும் பிளவுகளை உண்டாக்கிக் கொண்டு முன்னேற்றமடையாமல் பிற்போக்குக் குழுவினராய் வாழ்கின்றோம், உடனடியாக இந்த நிலைமைகள் மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தனியாக வாழ முடியாதா?

நம் நாட்டுச் செல்வம் வரி, வியாபாரம் என்ற பெயரால் பிறரால் சுரண்டப்படக் கூடாது, நம் நாட்டை நாமே ஆட்சி புரியும் உரிமை நமக்கு வேண்டும், சிறு சிறு நாடுகள் தனியாக வாழ்கின்றது – நாம் தனியாக் பிரிந்து ஏன் வாழக்கூடாது? நாம் ஒன்றுபட்டால், நம் சக்தியை உணர்ந்து பணியாற்றினால் உறுதியாக வெற்றிபெறுவோம், திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் என்று விளக்கினார்.

இறுதியாகத் தோழர்கள் பலரும், அண்ணா அவர்களும் ஒரு வேண்டுகோள் விடுத்துப் பேசியதாவது –

செங்கற்ப்பட்டு மாவட்டத் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் தோழர் சி.வி.எம்.அண்ணாமலை பரந்தூர் பிர்க்காவில் அபேட்சகராக நிற்கிறார், அவர் பொது நலம் கொண்டவர், கொள்கையில் உறுதியும், இன்னல்கள் வந்த சமயத்தில் ஓடி மறையாமல், அரசியலார் அடக்குமுறைகட்கு அஞ்சாமல், இருமுறை சிறை சென்றவர், மக்கள் முன்னேற்றம் கருதிப் பல ஆண்டுகளாகப் பொதுத் துறையில் பணியாற்றி வருபவர், தேர்தல் நாளன்று, அவருக்கு அடையாளமுள்ள – கூசாப்பெட்டிக்கு வாக்குரிமை அளித்து அவரை ஆதரிக்க வேண்டுகிறேன், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் கிராம் மக்கட்கு மேலும் நம்மாலான வகையில் சேவை செய்வார், செங்கற்பட்டு மாவட்டப் போர்டர் பொருள் நிலைக்கேற்றபடி பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி, ரோடு வசதிகள் ஆகியவற்றைக் கவனித்து வேண்டுவன செய்வார் என்று குறிப்பிட்டனர்.

சந்தர்ப்பவாதிகள் வருவார்கள் எச்சரிக்கை!

ஜில்லா போர்டு நிர்வாகத்தில் அரசியல் கட்சிப் பூசல்கள் கூடாது, காங்கிரஸ் கட்சியார் ஆட்சிப் பீடத்திலிருந்துகொண்டு இந்த ஏழு ஆண்டுகளாய்ச் செய்து வந்திருக்கும் நன்மைகள் என்ன என்பதை நன்கு அறிவீர்கள், இதுவரையில் ஏற்பட்ட இன்னல்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், காங்கிரஸ் கட்சி பணக்காரர்களையும், மில் முதலாளிகளையும், பட்டாக்காரர்களையும், ராஜாக்களையும், ஜமீன்தாரக்ளையும், கொள்கையில் பற்றில்லாத சுயநலம், பதவி ஆசை, பர்மிட் மந்திரிப் பதவி, மோகம் கொண்ட சந்தர்ப்பவாதிகளையும் எல்லாம் சேர்த்துக் கொண்டு தேர்தல் வேட்டையாடுகிறது, பணச் செல்வாக்கால் மக்கள் வாக்குரிமைகளைப் பறிக்கலாம் என்று துணியவும் செய்கிறார்கள் என்பதை நினைவுறுத்தினர்.

காங்கிரசின் செல்வாக்கு குறைவதை ஈடுசெய்யக் கிராமங்கட்குப் பெரும் பொருட்செலவில் மந்திரிகளை அழைத்து வந்து, கோவிலுக்குப் பூக்குடைகள் வாங்கித் தருகின்றோம். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப் பொருள் கொடுக்கின்றோம் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை கூறி, கிராம் மக்களை ஏமாற்ற முயலுகின்றனர் என்று எச்சரித்தார்.

மாட்டுப் பெட்டிகளை மறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள சந்தர்ப்பவாதிகள் உங்களிடம் வருவார்கள். கார்கொண்டு வருகின்றோம் என்பார்கள், எனவே, இந்தத் தேர்தல் காலத் தேசப் பக்தர்களிடம் ஏமாறாமல் சுயேட்சையாக நிற்கும் தோழர் சி.வி.எம். அண்ணாமலை அவர்கட்குக் கிராம் மக்கள் ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தலைவர் முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு முடிறற்றது.

செந்தமிழ் நாடக மன்றம்

ஆண்டு விாழ நிகழ்ச்சிக்குப் பிறகு இரவு 11 மணிக்கு, செங்காட்டூர்ச் செந்தமிழ் நாடக மன்றத்தினர் ஆரியப் புரட்டுகளை விளக்கியும் நாட்டை ஆண்டு மன்னர்களை நசுக்க நமக்க ஆரியக் கொள்கைகளை நம்பும்படி செய்ய ஆரியர்களும், புரோகிதர்களும் கையாண்ட தந்திரங்களையும், சதிச்செயல்களையும் விளக்கி உணர்ச்சியும் ததும்ப அதிகாலை 3.30 மணி வரை நடித்துக் காட்டினார்கள்.

பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் நாடக மன்றத்தார் அறிவு வளர்ச்சிக்கேற்ற சமூக சீர்த்திருத்த நாடகங்களை நடத்தி வருவதையும் நடிகர்கள் உணர்ச்சியுடன் நடிப்பதையும் பாராட்டிப் பேசினார். நன்றி கூறலுடன் நாடகம் முடிவுற்றது.

(நம் நாடு - 24-9-1954)