அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சட்டம் ஒரு – புனித ஒப்பந்தம்!

“நாங்கள் நாட்டிற்கும், சிறந்த லட்சியத்திற்கும் எங்கள் கடமைகளைச் செய்து விட்டோம். இந்த வழக்கு மன்றம், எங்களுடைய இந்த நடவடிக்கைகளுக்ாக, எங்களைத் தண்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதினால், ‘நாங்கள் எங்களுடைய கடமைகளைச் செய்து விட்டோம். அதற்கேற்ற பரிசை ஏற்றுக் கொண்டோம்‘ என்ற மகிழ்வான எண்ணத்தோடும், நன்றியோடும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்கள், சட்டத்தை மதிப்பவர்கள், மரியாதை செலுத்துபவர்கள், சட்டத்தின் நோக்கத்தையும், பொறுப்பையும் உணர்ந்து போற்றுபவர்கள்.

சட்டம்-நீதியைக் குறிக்கோளாகக் கொண்டு, மக்களிடையே அமைதியையும்-ஒழுங்கையும் நிலைநாட்ட, நாகரீக அறிவு தந்த சாதனம். ஆள்வோருக்கம் – ஆளப்படுவோருக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஓர் புனித ஒப்பந்தம் – சட்டம். ஆளப்படுவோரின் நலம் கருதி ஆள்வோரும், நீதி, மனித உரிமைகளுக்குக் கட்டுப்பட்டு ஆளப்படுவோரும், சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

ஆலயம் வெறுங் கோயிலாகும்!

நான் சட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களிலோ – புதிய விளக்கங்களிலோ – ஈடுபட விரும்பவில்லை. ஆனால், சட்டம், தன் இடம் மாறாது, தன் பெருமை குன்றாது இருக்க வேண்டுமானால், ஆள்வோர் அல்லது ஆளப்படுவோர் இவர்களில் எவருமே, மீறக்கூடாது. அப்படி இருந்தால்தான், சட்டம் கோலோச்ச முடியும் – சகலரும் சென்று பூஜிப்பர். பூஜைக்குரிய ‘தெய்வத்தை‘ பக்தர்களின் மனதில் அச்சத்தை உண்டு பண்ண அர்ச்சகன் பயன்படுத்தினால், ஆலயம் வெறுங்கோயிலாகிவிடும்! பக்தர்கள் பாதை மாறிட நேரும.

நீதி! அமைதி! ஒழுங்கு! - இவைகளை நிலைநாட்டுவதே, சட்டம். இதனை மறந்து, ஆட்சிபீடம் அமர்ந்தோர், தங்கள் ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு, தன்னிலை மறந்து மக்களின் மன அமைதியைக் கெடுத்து, நீதியைக் கேலிக் கூத்தாக்கினால் – தங்களது ஜனநாயக உரிமைகளைக் காத்துக்கொள்ள அறப்போர் துவங்கும்படியான நிலைக்கு ஆளாகும்போது, ஆட்சியிலே அமர்ந்திருக்கம் அரசாங்கங்கள் சட்டத்தை நீட்டிச் ‘சட்டம், சட்டம்‘ என்று பேசினால், அது ‘சைத்தான், தன் சவுகரியத்துக்காகச் சாஸ்திரத்தைக் காட்டுகிறது‘, எனும் பழமொழியைத்தானே நினைப்பூட்டும்?

ஜனநாயகம் ஆபத்துக்கு ஆளாகும்!

ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி, நாட்டின் அமைதியைக்கெடுத்து, நீதியைச் சாய்த்து, இஷ்டம்போல் நடக்கிறதென்றால், நாட்டின் சட்டத்தைத் தொடவும் அது அருகதையற்று விடுகிற தென்பதே என்றுடைய எண்ணமாகும்.

சட்டத்துக்கு மதிப்பளிக்காத சர்க்கார், விடுதலை விரும்பி களை வீழ்த்த, சட்டத்தை தடியாகக் கருதி அதை எடுத்து வீச முயன்றால், அதை அனுமதிக்கக்கூடாது.

இவ்விதம் நான் கூறுவதால் சட்ட வரம்பு மீறிய செயல்களை ஆதரிப்பதாக அர்த்தமல்ல – தி.மு.க.வைப் போன்ற பொறுப்பு வாய்ந்த இயக்கம், இதுபோன்ற நிலைமைகளை ஒருபோதும் சகிக்காது.

சட்டத்தை மீறுதல் குற்றம். ஆனால், சட்டத்தை மீறுவோர் இருக்கிறார்கள். சிலர், தமது சுயநல ஆசைகளுக்காகச் சட்டத்தை மீறுகிறார்கள் – அங்ஙனம் செய்துவிட்டு, ‘எப்படித் தப்பலாம்‘ என்று முயற்சிப்பவர்கள். இவர்கள், சமுதாயக் காளான்கள் – இவர்களால், ஜனநாயகம் ஆபத்துக்கு ஆளாகும்.

இவர்களும் குற்றவாளிகள்தான்!

ஆனால், உன்னத நோக்கத்துக்காகக் பாடுபட்டும், ‘சட்டத்தை மீறியோர்‘ எனும் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டுவந்து நிறுத்தப்படுவோரும் இருக்கிறார்கள். விடுதலைப் போர் எனும் புனிதப் பணியிலீடுபட்டிருக்கும் அவர்களது உரிமைப் பாதையில் கொடுங்கோலர்கள், சட்டத்தை வீசியோ – வீசாமலோ தடைகளைப் போடுகிறார்களென்றால் அந்தத் தடைகளை விடுதலை விரும்பிகள், பொருட்படுத்த மாட்டார்கள். அமைதியோடு தங்கள் பணியைச் செய்வார்கள் – ஆனால், வரும் விளைவுகள் அத்தனையையும், ஆனந்தமாகத் தாங்கிக் கொள்வார்கள்.

அவரக்ளது இலட்சியம் எவ்வளவுக் கெவ்வளவு உன்னதமாயிருக்குமோ, அவ்வவுக்கவ்வளவு கொடுமையும் அதிகமாயிருக்கும். அவர்கள் யாவரும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படி நின்றவர்களில் ஒருவர்தான், இன்றைய முதலமைச்சர்! இத்தகையவர்கள் ‘சட்டத்தை மதிக்காதோர்‘ என்று, இன்றும் கருதப்படுவதில்லை.

சாதாரணமானச் சட்டத்தை மதியாதவனுக்கும் – இத்தகைய ஒரு புனித லட்சியத்துக்காகச் சட்டத்தை மீறுபவர்களுக்குமிடையே குறிப்பிடத்தகுந்த வித்தியாசம் உண்டு. ஆனால், நீதிமன்றத்தில் இந்த இருபிரிவினரிடையிலும் ஏற்றத் தாழ்வு, காட்டப்படுவதில்லை – சட்டப்படி – இருவகையினரும், குற்றவாளிகள்தான்! ஆனால், சரித்திரம் இதனை மாற்றியிருக்கிறது. நேற்றுச் சட்டத்தை மீறியோர்தான், இன்று சட்டத்தைச் செய்கிறார்கள், நான், இவ்விதம், கூறுவதால், என்னைப் பற்றித் தவறாக எண்ணாதீர்கள். சுயராஜ்யப் போராட்டத்தில் பங்குகொண்ட – அந்த வீரர்களுக்கு, தியாகிகளுக்குச் சமமானவன் என்று நான் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், அவர்களுடைய குழுவில், நானும் சேர்க்கப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்! மகிழ்கிறேன்! தாயகத்துக்காகவும் என் இலட்சியத்துக்காகவும், நான் செலுத்து வேண்டியதைச் செலுத்த வேண்டியவனாகி விட்டேன்.
என்ன குற்றம் செய்தேன்?

நான் எந்தக் குற்றங்களுக்காக இங்கே நிறுத்தப்பட்டுள்ளேன்? நான், சில குற்றங்களைச் செய்யுமாறு தூண்டினேன் – இதனை நிரூபிக்க, ஆதாரங்களைத் தேடியும் சாட்சியங்களைக் கொண்டு வரவும், சர்க்கார் தரப்பினர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – சென்னைத் தி.மு.க. மாநாட்டில் நான் பேசியதின் ஒரு பகுதி – ‘நம்நாடு‘ இதழில் வெளிவந்த சில அறிக்கைகள்! கட்டுரைகள் ஆதாரங்களாகக் காட்டப்பட்டன. இவைகளில் எதையும் மறுக்கவில்லை, உண்மையில் இவைகள், யாவும் இவ்வளவு உணர்ச்சியூட்டக் கூடியதாகயிருந்தது கண்டு வியப்புறுகிறேன். அவைகளின் விளைவால், சுமார் 5000க்கு மேற்பட்ட என் தோழர்கள் சிறைக்குள் – ஒரு வீரத் தோழர் தன்னுடைய கரங்களில் ஒன்றை இழந்தார் – இன்னொருவர், தன் ‘பங்கு‘க்குக் கால் ஒன்றைப் பறிகொடுத்தார் – ஆறு உயிர்கள், ஜூலை 15ஆம் தேதி போய்விட்டன!

அடக்கு முறைத் தீயை கண்டும், ஆயிரக்கணக்கான வாலிபர்களும், பெண்களும் தயாராயிருக்கிறார்கள் என்பதொன்றே போதும். எந்த இலட்சியத்துக்காகப் பாடுபட்டு வருகிறோமோ. அந்த இலட்சியத்துக்கு மக்களின் ‘ஆசி‘ கிடைத்து விட்டது என்பதை விளக்க – அதிகாரமேந்திகளால், அந்த ‘ஆதரவைப்‘ புறக்கணித்துவிட முடியாது – இங்கே, எத்தகையத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் சரி, ‘அதனை‘ அணைத்து விட முடியாது.

காந்தியார்கூட கலங்குவார்!

முதலமைச்சரின் மாளிகைக்கு முன், மறியல் செய்யச் சொன்னது ஒரு குற்றம்! - சத்தியாகிரக முறைக்குகத் தன்னடைய சீடர்கள் வழங்கும் மரியாதையைக் கேட்டால், கல்லறையிலிருக்கும் காந்தியார் திடுக்கிட்டுக் கலங்குவார்.

என்னுடைய தோழர்கள் மீது ‘மறியல் செய்ததாக‘க் குற்றம் சாட்டாமல், லைசென்ஸில்லாமல் ஊர்வலம் நடத்தியதாகவும், சட்ட வரம்பை மீறிய வகையில் கூடியதாகவும், இதுபோன்ற குற்றங்களைச் சுமத்தியிருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன். முறைமுகமாகத் தாக்குவது விவேகமல்ல. ஆட்சியிலிருப்போர், எதிர்கட்சியினரை இவ்வளவு கொடுமையாகவா, நடத்துவது?

தி.மு.க. அதனை ஏற்றுக் கொள்ளும்! அதற்குப் பலம் உண்டு இலட்சியத்தில் உறுதி உண்டு.

கண்ணியத்தோடு கூறுவதா குற்றம்?

நீதிபதி அவர்களே! மக்களின் கோரிக்கைகளை – விருப்பங்களை ஆட்சியாளருக்குத் தெரிவிக்க, ஜனநாயக முறையில் என்னென்ன வழிகளுண்டோ, அத்தனையும் தி.மு.க. செய்து பார்த்தது, சிற புன்னகை – கொஞ்சம் தலையசைப்பு – எதுவும் கிடைக்கவில்லை, ஆட்சியாளரிடமிருந்து கற்சிலைபோல் வாய்திறவாது, மக்கள் குரலைப் பார்த்துக் கேலி செய்து கொண்டிருந்தார்கள், எல்லா வழிகளும் முடிந்து போய் விட்டன – எல்லா வழிகளும் மூடப்பட்டுவிட்டன – மக்கள் குரல் வலுக்க வலுக்கக் கதவுகள் பலமாக மூடப்பட்டன. ஏனிந்த சர்க்கார் ஜனநாயக வழிகளை அவமதித்து, மக்களைக் காண மருண்டு, கொடுங்கோலர் போல் நடந்து கொண்டது என்று இன்னும் எனக்க விளங்கவில்லை. இவ்வளவு வழிகளையும் செய்து பார்த்தும் பலன் காண முடியாது தி.மு.க., வேறு வழிகளைக் காணத் தானே வேண்டும்? எங்களுக்கு பஸ்ஸுல்லா ரோடு மீது மட்டும் மோகமா! எங்களது குறைகளை – முதலமைச்சரிடம் போய்த் தெரிவிக்க – அவருடைய இல்லத்துக்குப் போகாமல் எங்கே போவது! மக்களின் கருத்தை – ஆவலை – அமைதியோடு, கட்டுப்பாடாக, கண்ணியத்தோடு, கூறுவதா குற்றம்?

குண்டுகளாலா பேச வேண்டும்?

ஜனநாயக முறையில் முயன்று பார்த்தும் முடியாமல் போனதன் விளைவாகத்தான், மற்ற இரண்டு அறப்போர்களும் உருவாயின.

ஜனநாயகம் கேலிக் கூத்தாகும்பொழுது, அறப்போர் – கண்டனங்கள் மூலம் நாட்டின் நலிவைச் சர்க்காருக்குணர்த்த தி.மு.க. முயன்றதா குற்றம்? சர்க்கார் சாதாரண வார்த்தைகளால் பதில் சொல்லக் கூடாதா? குண்டுகளாலா பேச வேண்டும்? நீதிபதி அவர்களே! சூழ்நிலைகளின் விளைவால், அமைதியான மக்கள் ஆத்தரமடைந்தார்கள் – சட்டம், அதிகாரம் ஏந்தியவர்களின் கையில் சிக்கிக் கொடுமைகளின் ‘என்ஜீன்‘ போலாகிவிட்டது.

மக்கள் தங்கள் வெற்றிக் கீதத்தைப் பாடும்போது. அதன் உண்மைக் குரலை மறைப்பதற்கு, கொடுங்கோலர்களால் சட்டம் துணைக்கழைக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்தை மீறிய ஐவரையல்ல. ந்த மண்ணின் இன்றைய நிலைமையையே, இந்த வழக்கு எடுத்துச் சொல்லுகிறது. மக்களின் உள்ளத்தில் ஒரு உற்சாகம் – ஆர்வம் – மனோவேகத்தைக் காண்கிறோம். நீதியைப் பெறவும், சுதந்திரத்தை அடையவும் அவர்கள் துடிக்கிறார்கள், அவர்களுடைய உற்சாகத்துக்கு நாங்களே காரணம் என்பது கேட்டு மகிழ்கிறோம்.

இவையாவும் குற்றங்களா?

நீதிபதி அவர்களே, குற்றம் செய்யத் தூண்டியது என்பதை யல்ல, நான் விளக்குவது, சர்க்கார் தரப்பில் கூறப்பட்ட எதையும் நான் மறுக்கவில்லை, இத்தகைய சூழ்நிலைகளில், இவைகள் யாவும் குற்றங்களா என்பதை மட்டுமே கேட்கிறேன், மக்களின் ஆசையை – கோரிக்கைகளை – மதியாமல் ஆட்சிபீடம் ஏறியோர் அக்கிரம வழியில் சென்ற காரணத்தால், அல்லவா, இத்தகைய இன்றியமையாத நடவடிக்கைகளில் நாங்கள் இறங்க நேர்ந்தது.

நம்முடைய முதலமைச்சரைப் பக்திமான், கடவுளுக்குப் பயந்தவர் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அவரோ மனிதனையும் மதிக்கவில்லை – கடவுளையும் மதிக்கவில்லை. மக்கள் குரலே மகேசுவரனின் குரல்‘ என்றோர் அரசியல் மொழி உண்டு, இதனை எவரும் அலட்சியம் செய்ய முடியாது. ஆனால், தெய்வத்துக்குப் பயந்தவர் – பக்திமான் – நம்முடைய முதலமைச்சர், மக்கள் குரலைக் கேட்க மறுக்கிறார்! அதனால் மகேசுவரனின் குரலையும் அவர் மறுக்கவில்லை.

பழமையை எதிர்க்கும் பாதையல்ல

மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே, சாதிபேதம் வகுப்பு வித்தாயசங்களுமற்ற திராவிடர்களை சோஷியலிசப் பாதையில் நிறுவுவதே தி.மு.க.வின், உயர்ந்த இட்சியமாகும். ஆனால், ஆட்சியிரலிருப்பவரோ இந்த இலட்சியத்துக்கு இடையூறு செய்து அநீதி வாழவும் – சமத்துவமற்ற தன்மை நீடிக்கவும், வெளிப்படையாகச் சதி செய்கிறார்கள். இந்த நாட்டைத் தேவர்கள், வானவர்கள், பர்ணசாலைகள், யாகக் கூடங்கள் இருந்த காலத்துக்குக் கொண்டு செல்ல முனைகிறார்கள்.

நவீன முறையில் எங்கள் நிறுவ விரும்பும் சுதந்திரத் திராவிடக் குடியார முயற்சியை அழிப்பதே அவர்கள் நோக்கமாகும். ஆகவே மக்களுக்காகப் பணியாற்றம் நாங்கள், மக்களின் நல்வாழ்வை மனதிலெண்ணி, பழைமைக்கு நாட்டை அழைத்துச் செல்லும் மைத்தியக்காரத்தனமான போக்கை எதிர்த்து நடவடிக்கைகள், எடுக்க வேண்டியவர்களானோம்.

எங்கள் கடமையை, நாங்கள், செய்தோம் – எங்கள் நாட்டின் உன்னத வாழ்வுக்காகச் செய்தோம், எனினும், இவ்விதம் நாங்கள் ஈடுபட்டதற்காக, எங்களை இந்த நீதிமன்றம் தண்டிக்க முன்வந்தால், ‘கடமையைச் செய்தோம், நிரம்பப் பலன் கிடைத்துவிட்டது,‘ என்று நன்றியோடு ஏற்றுக் கொள்வோம்.

(நம்நாடு - 18-8.1953)