அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிறைச்சாலை என்ன செய்யும்?

25.12.1948இல் காஞ்சிபுரத்தில், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்‘ நாடகத்தைச் சர்க்காரின் தடையை மீறி நடித்துச் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு சேலம் தோழர் ஏ. சித்தையன் அவர்கள் தலைமையில் வரவேற்பு விழா நடைபெற்றது. திராவிட கழகச் செயலாளர் தோழர் பெருமான் வரவேற்பிதழை வாசித்தளித்தார். அதுசமயம் தோழர் அண்ணாதுரை நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

சிறை மீண்ட தோழர்களே!

இங்கு மேடை மீது வீற்றிருக்கும் தோழர்கள், மூன்று நாட்களுக்கு முன்தான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துள்ளார்கள். இவர்கள் செய்த குற்றமென்ன? இவர்களை ஏன் அரசாங்கம் சிறைக்கனுப்பிற்று? இவர்கள், அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தார்களா? பேச்சுரிமை தங்கள் பிறப்புரிமை என்று பேசினார்கள். கருத்துக்கு இருட்டு அடித்தல் கூடாது என்று கூறினார்கள். கலைக்கு தடை விதிப்பது தகாது என்று சொன்னார்கள்? கழிகளை கரத்தில் பிடித்துக் கொண்டா தங்கள் கொள்கையை வெளியிட்டனர்? பலர் அறியாமலும் பேசவில்லையே, முகத்தில் சாயம் பூசிக்கொண்டு, உள்ளத்திலே உறைந்து கொண்டிருந்த கோட்பாடுகளை வெளிக்கு எடுத்துக் காட்டினர். தர்மவான்கள் ஆட்சியில் இதற்கு இடமில்லாமல் போய்விட்டது. தடுத்தாட்கொண்டனர், சிறையிலடைத்தனர், சீரற்ற ஆட்சியாளர். திரும்பியும் விடுதலையாகி நம் முன்னர் வந்துள்ளார்கள் நண்பர்கள், அவர்களை நான் வரவேற்கின்றேன். வாழ்த்துகிறேன் – உங்கள் சார்பாக.

விசித்திரமான பகையன்றோ!

எனது நண்பர்களின் தொழில் கூத்தாடுவதன்று, இவர்களைச் சிறையில் அடைத்த துரைத்தனத்தாரும் கூத்தாடுவதைத் தொழிலாக மேற்கொண்டிருப்பவர்கள் அன்று. இரு வெவ்வேறு கூத்தாடும் குழுவினருக்கு வேண்டுமானால் போர் மூளுவதும், ஒரு சாரார் மற்றொரு சாராரை அடக்கி ஒழிக்கப் பார்ப்பதும் முறையாக இருக்கலாம். இதனைத் தொழிலிலே ஏற்படும் கழுத்தறுப்புப் போட்டி என்றும் நினைத்துப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், கூத்தைத் தொழிலாகக் கொண்டிராத இரு சாராருக்கும் பகை ஏற்பட்டு விட்டிருக்கிறது அது தான் இதில் விசித்திரம்.

இரணியன் கதையை அந்தக் காலத்தில் எவனோ ஒருவன், எதற்காகவோ எழுதினான். அந்தக் கதாசிரியனும் இரணியனைக் கண்டவன் அல்ல. பிரகலாதனையும் தரிசித்ததில்லை. என்னமோ கதை எழுதினான். அது மக்களில் பலருக்குப் பிடித்திருக்கவே, அதனை நாடகமாகக் கூத்தாடினார்கள், நடித்தனர், ஊர் ஊராக நடித்தனர். பஜனைக் கூடங்களாகப் பார்த்து நடித்தனர். இன்றும் நடித்து வருகின்றனர். ஆனால், எண்ணிக்கை குறைந்திருக்கிறது இன்று.

அரசு என்ன பேசாப் பதுமையா?

புரட்சிக் கவிஞர் கற்பனையில், வேறொரு இரணியன் உருவானான். அந்த இரணியனை, நாடக உருவில் உலவ விட்டார் வெளியில் கடந்த 15 ஆண்டுகளாக சில இடங்களில், அன்று இருந்த மந்திரிகள் முன்னிலையில், நமது தோழர்கள் கவிஞர் கண்ட இரணியனை நாடக டைக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். இன்று இங்குள்ள இரணியன், இரமணரிஷியின் சீடரால் குற்றவாளியாக்கப்பட்டதுபோல், அன்று, அந்த மந்திரிகளால் செய்யப்படவில்லை. அவர்கள் இருக்கட்டும். ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலும் கவிஞரின் இரணியன் சில பல மேடைகளில் தோன்றிக் கொண்டுதான் இருந்தான். ஆச்சாரியார், இரணாஸ்ரமத்துத் தூதர் போல் அல்லாமல், இரணியனுக்கு இடைஞ்சல் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார். இவ்வளவு காலத்துக்குப் பின்னர், இவர்களுக்கு இந்த ஆளவந்தார்களுக்கு, இரணியன் மீது கோபம் பிறந்து விட்டது. தடுத்து விட்டனர் நாடகம் ஆடக் கூடாது என்று! தகுதியற்ற தடையை மீறினர் இந்தத் தோழர்கள். அதற்காகச் சிறை சென்று திரும்பி வந்துள்ளனர்.

தடை விதித்த துரைத்தனத்தார், எங்கள் இரணியன் கதையிலே கண்ட குறை என்ன? களங்கமென்ன? இதுவரை எடுத்துக் காட்டினரா? கேட்டோம். பத்திரிகை வாயிலாக கேட்டோம் – பொது மக்களைச் சாட்சியாகக் கொண்டு பல மேடைகளில் நின்று கேட்டோம். பேசாப் பதுமைகளாக இருந்து விட்டது அரசாங்கம். அறிவு மந்தம் மட்டும் அல்ல. செவியும் செவிடாக இருக்கிறது இதற்கு!

எங்கள் இரணியன் நாடகத்தை இதுவரை எந்த அமைச்சராவது, பார்த்திருப்பாரா? ஏட்டிலாவது படித்திருப்பாரா? “இந்தப் பகுதி குறையுடையது, இது இயற்கைக்கு பொருத்தமற்றது“ என்று எடுத்துக் காட்டி, அதனை நீக்கி விடுங்கள் என்றாவது கூறி இருப்பார்களா? இந்த நல்ல காரியத்தையா அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது?

இரணியன் நாடகம் ஆடுங்கள்!

நாங்கள் ஏதாவது பழைய இரணியன் நாடகத்தை ஆடக்கூடாது என்று கூறுகிறோமா? அதனை எவராவது ஆடினால், அங்கு சென்று நாங்கள் குழப்பம் விளைவிக்கிறோமா? நாங்கள் ஒரு மூலையில் இரணியன் நடித்தால் பழைய இரணிய விலாசத்தை ஏற்கனவே ஆடிவந்தவர்கள் மற்றொரு மூளையில் ஆடுவதுதானே முறையாகும், அதற்கு ஆள் பஞ்சம் ஏற்பட்டு இருக்குமானால் இன்றுள்ள அமைச்சர்கள் – அவர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் சட்டசபை அங்கத்தினர்கள் ஊர் ஊராகத் தெருத் தெருவாக முகத்திலே சாயம் பூசிக் கொண்டு, நன்றாக ஆடட்டுமே, யார் தடுக்கப் போகிறார்கள், அப்பொழுது வேண்டுமானால் நாங்கள் போட்டிக்கு வராமல் இருந்து விடுகிறோம்.

இந்த அமைச்சர்களுக்குப் பழைய இரணியன், ஏதாவது அடுத்த வீட்டுக்காரனா? நெருங்கிய உறவா? பின் எதற்கு, இவர்களுக்கு அவனிடத்தில் இவ்வளவு பற்றும் பாசமும்? அவனிடத்தில் இவர்களுக்கு அன்பு இருப்பதாக இருந்தபோதிலும், எங்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியந்தான் என்ன? அந்த இரணியனைத் தடுக்காதிருக்கும்பொழுது, எங்கள் இரணியனை மட்டும் தடுக்க வேண்டிய அவசியந்தான் என்னவோ? சென்ற காலத்தில், வெள்ளையனை விரட்ட விடுதலைப்போர் நடந்த நேரத்தில்் காலஞ்சென்ற திருச்சி விஸ்வநாததாஸ் நாடக மேடையில் “கொக்கு பறக்குதடி பாப்பா – வெள்ளை கொக்கு“ – என்று பாடுவார்.

விஸ்வநாத தாஸ் ஆடவில்லையா?

அவர். நாடகத்தையே வாழ்க்கைச் சாதனமாகக் கொண்டிருந்தவர். அன்று இருந்த வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அந்தப் பாட்டைக் கேட்பதென்றாலே, தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருந்தது. பாட்டைப் பாடக்கூடாதென்று தடை செய்தது. மீறினார் விஸ்வநாததாஸ், சிறையில் தள்ளப்பட்டார் தீவிர தேசபக்தர் என்ற பட்டியலிலும் சேர்க்கப்பட்டார். பாடக்கூடாது என்ற தடை செய்த சர்க்காரை, தாக்கிப் பேசினர். தீப்பொறி பறக்க பேச்சுரிமையைப் பறிப்பது அடுக்குமா? என்று அடித்தொண்டையால் அலறினர். கண்டனக் கூட்டங்கள் பல போட்டனர். சைத்தான் சர்க்கார் என்று கண்டித்தனர். இவ்வளவும் பேச்சுரிமையைக் காக்க எடுத்துக் கொண்ட சிறந்த நடவடிக்கைகள் ஆனால், இன்று?

பேச்சுரிமையை மறுக்கிறார் ஓமந்தூரார்

அதே தேச பக்தர்களால் நடத்தப் பெறும் தர்ம ஆட்சியிலே பேச்சுரிமை கொலை செய்யப்படுகிறது. மக்கள் உணர்ச்சியுள்ளவர்கள் – வெறும் மரக்கட்டைகள் அன்று, மண்பதுமைகளுமன்று, பேச்சுரிமை – ஒவ்வொருவருக்கும் எவர் ஆட்சியிலும் – என்றும் இருந்து தீரவேண்டிய அடிப்படையான உரிமைகளில் ஒன்றாகும். அதனை மறுக்கிறார் ஓமந்தூரார் அதிகாரம் அவரிடத்தில் எப்படியோ அகப்பட்டுக் கொண்டிருக்கிறது – என்னும் காரணத்தால்.

நாடக விஷயந்தான் – கலைத்துறைதான் – இந்த இலட்சணம் என்றால், இந்த தர்மாத்மாக்கள் ஆட்சி வேறு எந்த வகையில்தான் சிறந்ததாக இருக்கிறது? எந்தக் கட்சியினரை, ஏதாவது காரணம் கூறி, சிறையில் அடைக்காமல் இருக்கிறார்கள்? கம்யூனிஸ்டுகளை விட்டுவிட்டார்களா? கம்யூனிஸ்டுகள் அகிம்சையில் நம்பிக்கையில்லாதவர்கள். பலாத்காரத்தின் மூலம் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றக் குழப்பம் செய்கிறார்கள் என்று கூறி, சந்து பொந்துகளிலெல்லாம் தேடிப்பார்த்து அகப்பட்டவர்களை எல்லாம் அடைத்தாகி விட்டது சிறையில். சோஷலிஸ்டுகளா? அவர்கள் பதவிப் பித்தம் கொண்டு, வேளையில்லா வேளையில் வேலை நிறுத்த அழிவு வேலையில் ஈடுபட்டு, பதவியைக் கைப்பற்றுப் பிரயத்தனப்படுகிறார்கள்“ என்று கூறிக் கொண்டு, அவர்களில் சிலரையும் சிறைச்சாலையில் தள்ளியாகிவிட்டது. மேலும் சிலரைத் தள்ள முயற்சிக்கப்படுகிறது. இது கூட போராட்டக் காலத்தில் ஒன்று பட்டுக் கூட்டாக ஒத்துழைத்தவரையே, இன்றும் காங்கிரஸ் முத்திரையை விடாமல் சுமந்து கொண்டு இருப்பவரையே, மாயவரம் தோழர் நாராயணசாமியையே, சிறைச்சாலையில் தள்ளின பெருமை, அதுவும் விசாரணை இல்லாமலே அடைத்து வைத்திருந்த அற்புதம் ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் கூட காணமுடியாத ஆச்சரியச் சம்பவமாகும்!

மாயவரம் நாராயணசாமியைச் சிறையில் தள்ளியதேன்?

தோழர் நாராயணசாமி செய்த குற்றந்தான் என்ன? கம்யூனிஸ்டுகள் போன்று அழிவு வேலையிலா ஈடுபட்டார்? கம்யூனிஸ்டுகள் என்ற நாற்றமே அவருக்குப் பிடிக்காதே! அவர் செய்ததெல்லாம். வெளியில் சொன்னதெல்லாம், மிராஸ்தார்கள் கிசான்களை !உழவர்களை) நடத்தும் முறை கேவலமானதாக இருக்கிறது. உழவர்களையும் தங்கள் போன்ற மக்கள் என்று மதித்து நடந்து கொள்ள வேண்டும் மிராஸ்தார்கள் என்று உழவர்களுக்காகச் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பரிந்து பேசினதுதான். இந்தப் பேச்சு – சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர் பேச்சாக இருந்தபோதிலும் – ஓங்கார சொரூபியான ஓமாந்தூராருக்குக் கோபத்தை மூட்டிவிட்டது! தோழர் நாராயணசாமிக்குச் சிறை, வாழ்விடமாக்கப்பட்டது!

பழி சுமத்திய இராமசாமி!

‘நம்மவர் ஆட்சி‘ என்று சொல்லிக் கொள்ளக் கூட வெட்கமாக இருக்கிறதே! ஏதாவது ஒரு தொழில் – பலருக்கு வேலை கொடுக்குமே நிலையில் – புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறதா, இந்த மூன்று ஆண்டுகளில்? விரல் மடக்கட்டும், விஷயம் தெரிந்தவர்கள், பார்ப்போம், கங்கையும், யமுனையும், துங்கபத்திரையும், கோதாவரியும், கிருஷ்ணாவும், காவிரியும், கொள்ளிடமும், பெண்ணாறும், தாமிரபரணியும் பாயும் நாடு இந்தப் பரந்த இந்தியா என்று சொல்லுகிறோமே! “அன்னை முப்பது கோடி முகமுடையாள்“ என்று பாடுகிறோமே! இங்குப் பஞ்சமும் பட்டினியும் மக்களைப் பிடித்து வாட்டுகிறதே! இதற்குப் பரிகாரம் தேடாமல் தரிசு – நிலங்களை ஒன்றுபோல் விட்டுவிட்டு, வெளிநாட்டில் உணவு தேடத் தூதுவர்களை அனுப்புகிறீர்களே, வெட்கமில்லையா? அதுவும் எவரை அனுப்புகிறீர்கள்? முன்னாள் மூர்த்தியின் தேர்தலின்போது தாலியறுத்த முதலியாருக்கா ஓட்டு என்று பழிசுமத்தித் தோற்கடித்த அதே இராமசாமியை அல்லவா அமெரிக்கா அனுப்புகிறீர்கள்?

அம்பேத்கார் காங்கிரஸ்காரரா?

எங்களுக்குத் தடை விதிக்கும் அரசாங்கம், இன்று எவர் எவரைக் கூட்டாளிகளாகக் கொண்டிருக்கிறது தெரியுமா? பண்டிதர் மந்திரி சபையில் சட்ட மந்திரியாக இருக்கிறாரே டாக்டர் அம்பேத்கார், அவர் என்ன காங்கிரஸ்காரரா? அன்றும் – ஏன் – இன்றும் காங்கிரசை எதிர்த்துக் கொண்டு இருப்பவர்தானே! சில நாட்களுக்கு முன்பு கூட பம்பாயில், தாழ்த்தப்பட்டோர் என்பவர்களின் கூட்டத்தில் பேசுகின்ற பொழுது, “காங்கிரசில் சேராதீர்கள் – அதனை நம்பாதீர்கள் – அது கடலிலே சென்று கொண்டிருக்கிற கப்பல்தான் – ஆனால், அமிழ்ந்து கொண்டே இருக்கிற கப்பல்“ என்று கூச்சம் துளியுமின்றிக் கூறினாரே? இன்னும் மந்திரியாகத்தானே இருக்கிறார்? ரோசம் பிறக்கவில்லையே இவர்களுக்கு!

நிதி மந்தரியாக இருந்து விலகிய சர். ஆர்.கே. சண்முகம், யார்? அவர் ஓர் முதலாளி அல்லவா? அவர் இடத்திற்கு வந்திருக்கிற ஜான்மாத்தாய் விடுதலைப் போராட்டத்தில் எந்தக் கட்டத்தில் கலந்து கொண்டவர்? தொழில் மந்திரி முகர்ஜி யார்? இந்து மகாசபையின் தலைவராக இருந்தவரல்லவா? அத்துடன் காங்கிரசையும் எதிர்த்துக் கொண்டு இருந்தவர் ஆயிற்றே! இவ்வளவும் எதனைக் காட்டுகிறது? காங்கிரசிலே உள்ள அறிவுப் பஞ்சத்தையும் ஆள் பஞ்சத்தையும் அல்லவா அம்பலப் படுத்துகிறது? அடிக்கட்டுமே தந்தி, இவர்களை எல்லாம் விலக்கச் சொல்லி! இவர்கள் ஏன் தேசபக்தர்கள் கண்களில் இன்னும் படவில்லை? எப்படித்தான் சகித்துக் கொண்டிருக்கிறார்களோ இவ்வளவையும்!

சாவித்திரி ஒழுக்கத்திலே ஓட்டை அல்லவா?

“பர்மிட்டுக்குப் பல்லிளிக்காதே, லைசன்சுக்கு நாக்கைக் குழைக்காதே, பதவிக்குப் பறக்காதே, ஒழுக்கமாக நடந்துகொள்‘ இவ்வாறு கன்னியாகுமரி முதல் ஜெய்ப்பூர் காங்கிரஸ் வரையில் சிரிப்பாய் சிரிக்கிறதே! எச்சரிக்கை, தீர்மான ரூபத்தில் வருகிறதே! சாதாரணப் பேர்வழிகளுக்கா இந்தத் தாக்கீது? இல்லையே தியாகிகளுக்கன்றோ இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன் உட்பொருள் என்ன? சாவித்திரியைப் பார்த்துச் சத்தியவான். அண்டை வீட்டுக்காரரோடு பேசாதே, பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்காதே“ என்று கூறினால் சாவித்திரியின் போக்கிலே நேர்மை இருக்கிறது என்றா அர்த்தம்? சாவித்திரியின் போக்கின் ஒழுக்கத்திலே ஓட்டை கண்டிருக்கிறது என்பதுதானே பொருள்.

நாங்கள் சின்னக் கட்சி என்று பேசுகிறார்கள் அமைச்சர்கள். நாங்கள் மறுக்கவில்லை இதனை. ஆனால். அமைச்சர்கள் போக்கு, அவர்களின், இந்தக் கூற்றைப் பொய்யாக்கி விடுகிறதே. சின்னக் கட்சிக்காரர்களாகிய நாங்கள் பேசுவது மக்களுக்குப் பிடிக்காமல் போனால், மக்களே எங்களை ஒதுக்கித் தள்ளி விடுவார்கள் என்று உறுதியோடு ஆட்சியாளர்கள் இருந்து விட்டிருக்கலாமே? ஆட்சியாளர்கள் அப்படி இருக்கவில்லையே‘ பத்திரிக்கைகளில் மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எங்கள் கூட்ட நிகழச்சி வருவதில்லையானாலும், இருட்டடித்து விட்ட போதிலும், இரகசிய போலீசின் அறிக்கை, அமைச்சர்களை அலைக் கழிக்கிறதே, அவர்கள் என்ன செய்வார்கள்? தூத்துக்குடியில் 144, கோவில்பட்டியிலே தடையுத்தரவு, தகுந்தவர்கள் மீது ஜாமீன் நடவடிக்கை, சாத்தூரில் கூட்டத்திற்கு அனுமதி கிடையாது, மதுரையில் 144, திருச்சியில் தடை, சென்னையில் தடை, சேலத்தில் தடை உத்தரவு. எங்கள் சின்னக் கட்சியை அடக்க இந்த அடக்குமுறை தேவைப்படுகிறது. ஆளவந்தார்களுக்கு! வெள்ளையர் ஆட்சியில்கூட இந்த விபரீதத்தை நீங்கள் கண்டும் இருக்க மாட்டீர்கள் – கேட்டும் இருக்க மாட்டீர்கள்.

தடை உத்தரவினூடே தர்மதேவதை நடக்கிறாள்!

நல்ல வெளிச்சமில்லை என்று பிரகாசத்தை நீக்கிவிட்டு, இரமண சீடர். மௌன விரத மாண்பினர், கிருத்திகை நோன்புக் கண்ணியர், கனம் மந்திரியாக வந்தார். கண்ட பலன் என்ன? நாடெங்கும் 144 தடை உத்தரவினூடே தர்ம தேவதை தாலுகாவில் நடக்கிறாள்!
கும்பகோணத்தில் கூட்டத்திற்குத் தடை உத்தரவு. எங்கள் கழகத்தினர், அத்தடையை மீறுகின்றனர். மனிதாபிமான அரசாங்கமாக இருந்தால் செய்திருக்க வேண்டியதென்ன? மீறினவர்களைக் கைதியாக்கிச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். நாகரிகமான சர்க்காரிடத்தில் எதிர்பார்க்கக் கூடியதும் இதுதான். ஆனால், ஓமாந்தூரா செய்வதென்ன? மலபார் போலீசை விட்டுத் தடி கொண்டு தாக்கச் செல்லுகிறார்.

தண்டவாளத்தைப் பெயர்த்தார்களா அந்தத் தொண்டர்கள்? கனவிலும் நினைத்தவர்கள் அல்லவே அந்தத் தீவினையை இவர்கள் தபாலாபீசுக்குத் தீ வைத்தார்களா? அவர்களுக்கு அதற்கான தெளிவு கிடையாதே! தந்திக் கம்பியை அறுத்தார்களா? அந்த அற்புதத்தைப் புரியும் ஆற்றல் அவர்களுக்குக் கிடையாதே? அதிகாரிகள் முகத்தில் அக்னித் திராவகத்தை ஊற்றத் தெரிந்தவர்களா? அந்த அகிம்சாமுறை, அவர்கள் கற்காத பாடமாயிற்றே! பின் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தமிழ் வாழ்க! என்று சொல்லும் பாவத்திற்குத் தரப்படும் தண்டனை தடியடி!

இது நியாயந்தானா? முறைதானா?

வெள்ளையர் ஆட்சியில், பேச்சுரிமையைக் காக்கப் போராடிய காங்கிரஸ் வீர இளைஞர்களைக் கேட்கிறேன். இது தர்மந்தானா? இது நம்மவர் ஆட்சி தானா என்று! நெஞ்சில் கைவைத்துக் கூறட்டும். இது நியாந்தானா என்று! மும்முறை யோசித்து விட்டுக் கூறட்டும், இது நேர்மைதானா என்று!

இதற்குத் தானா திருப்பூர் குமரன் தன் இரத்தத்தால் தரையை நனைத்தது? இத்தகைய ஆட்சியைக் காண்பதற்குத்தானா, பாஞ்சால சிங்கம் லாலா லஜிபதிராய் ஆவி துறந்தது?பகவத்சிங் தூக்கிலேறினது, இத்தகைய அலங்கோல வாழ்வை மக்களுக்கு வாங்கித் தருவதற்குத் தானா? இதற்குப் பெயர் சுயாட்சியா?

சுய ஆட்சி என்ற பெயர் பொருந்துமா?

நாளையே புறப்படுங்கள் கும்பகோணத்தில் சென்று பாருங்கள் எங்கள் தொண்டர்களின் குருதி தேகத்திலிருந்து பீறிட்டு வருவதைப் பாருங்கள்! தேகத்தில் தழும்பு தோன்றுவதைக் காணுங்கள்! தடியடி தாங்க முடியாமல் தரையில் சோர்ந்து வீழ்ந்த பின்னரும், குறுந்தடியால் உபசரிப்பதை உணருங்கள்! பின்னர் வாருங்கள் ஒருமுறை முடிவிற்கு, உங்கள் தியாகம் எதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினையுங்கள்!

அன்று, 144 தடையுத்தரவை மீறினால், மீறி கூட்டம் நடத்தினால் மீறுகிறவர்களை அழைத்துச் சென்று அல்லது தூக்கி போலீஸ் வண்டியில் ஏற்றிச் சென்று, தண்டித்துச் சிறைக்கனுப்பினதையும் பார்த்திருக்கிறீர்கள். இன்று குடந்தையில் நடப்பதை, அத்துடன் ஒத்திட்டுப் பாருங்கள் – பிறகு கூறுங்கள், இந்த ஆட்சிக்குச் சுயாட்சி என்ற பெயர் பொருந்துமா என்பதை.

கொடுமுடி கோகிலம், தினம் தவறாமல் ‘சிறைச்சாலை என்ன செய்யும்? என்று பாடினதைக் கேட்டு, விழிப்பும் வீரமுமம் ஏற்பட்டதாகக் கூறி, விடுதலைப் போரில் விறு விறுப்புக் கொண்டீர்களே தேசியத் தோழர்களே அது தேசியச் செவிக்கு மட்டுமன்று, எங்கள் செவிக்கும் கூடத்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

அதிமேதாவி என்று தம்மைத் தவறாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கிற ஓமந்தூரார், இலேசான தடியடிப் பிரயோகந்தான் செய்யப்படுகிறது என்று கூசாமல் கூறுகிறார். இரமணர் சீடராக இருந்து கற்ற பாடம் போலும் இது. ஏகாதிபத்தியவாதிகளும் அன்று இதே பாணியில் தான் கூறினர். அவர்கள் விட்டுப் போன அதே அதிகார பீடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் அவர்கள் மொழியிலேயே பேசிப் பயிற்சி பெறுகிறார். யாக்கை நிலையாமை என்று அவர் அறிந்திருக்கிற அளவிற்கு, அதிகாரத்தில் நிலையற்ற தன்மையை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

பதவி பறிக்கும் கிளர்ச்சி அல்ல!

“மொழி காப்பதல்ல இவர்கள் நோக்கம் – பதவியைக் கைப்பற்றவே இவர்கள் இவ்வாறு கிளர்ச்சி செய்கிறார்கள்“ என்று எங்கள் கிளர்ச்சியைத் திரித்துக் கூறுகிறார்கள் – வாய்மை தவறாத ஆளவந்தார்கள். இவர்கள் கூற்று உண்மையானது தான் என்று வைத்துக் கொண்டு பார்த்தாலும், அதில் இவர்கள் கண்ட குறைதான் என்ன? மாற்றுக் கட்சியினர் தங்கள் இலட்சியங்களை நிறைவேற்ற அதிகாரத்தைப் பெற, அதற்கான முயற்சியை மேற்கொள்வது மக்களாட்சிக் கேட்பாட்டுக்கு முரண்பட்டதா? அதிகாரத்தில் என்றும் இருந்து தீர வேண்டிய கட்சி காங்கிரஸ் என்று பாத்தியத்தைக் கொண்டாடுவது ஜனநாயக முறைதானா? அதிகாரத்திலுள்ள கட்சி வரம்பு நடந்து கொள்வதைத் தடுக்கவும், தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும், தக்கதோர் எதிர்க்கட்சி அமைவது, மக்களாட்சி முறைக்கு ஒவ்வாததா? எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்று பேசும் இவர்களின் இருதயம் களங்கமற்றது என்று எவ்வாறு நம்ப முடியும்? இவர்கள் வகிக்கும் பதவி என்ன, இவர்களுடைய பிதிரார்ஜிதமா? எவரையும் கிட்டே நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ள இவர்களுக்கு என்ன அது பரம்பரைச் சொத்தா? பாசீசப் போக்கு உதவாது! விழிப்படைந்த மக்களிடம் இவர்களுடைய ஜனநாயக வேஷம் கலைந்து விடுவது முக்காலும் உறுதி. அடக்குமுறை, போலீஸ் தடியடி முதலியன இவர்கள் விரைந்து செல்லும் அழிவுப்பாதையை அணையிட்டுத் தடுத்து விடாது! இந்த அறிவுரை ஆளவந்தார்களால் புரிந்து கொள் முடியாதது. இந்த அளவிற்கு அதிகாரப் போதைத் தலைக்கேறி விட்டிருக்கிறது. போகும் பேய் சும்மா போகாது என்பது போல் தடியடி தர்பாரும் நடத்தி விட்டுப் போகிறது! நன்றாக நடத்தட்டும் மேலும், தீவிரமாக நடத்தட்டும்!

அதற்குப் பெயர் ஜனநாயகமல்ல!

கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம். வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் – வனவிலங்குகள் அல்ல. இது நாடு – காடு அல்ல. நாட்டு முறைதான் தேவை – காட்டு ஆட்சி அல்ல. காட்டு முறையைக் கையாண்டடால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது. பாசிச முறை அது.

மற்ற ஊர்களைப் போல், நமது ஊரிலும் 144 தடையுத்தரவைப் போட்டு மக்களின் பேச்சுரிமையைக் கொலை செய்து, பற்பல சங்கடங்களை விளைவிக்காமல், ஆழ்ந்த அறிவோடு போலீஸ் நடந்து கொண்டது, புகழ்ச்சிக்குரியது என்பதோடு மட்டுமல்லாமல், மற்ற ஊர்ப்போலீஸ் அதிகாரிகளுக்கும், இது, தக்கதோர் படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது. மாகாண அமைச்சர்கள் கூட, இதிலிருந்து மதிபெற வேண்டியது முக்கியமாகும் என்பதாகப் பேசி முடித்தார்.