அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிறைமீண்ட நாங்கள் வெளி வந்திருக்கிறோம்!

13.7.1953 இரவு கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து நாங்கள் வெளிவந்திருக்கிறோம் – விடுதலை பெற்று விடவில்லை! வழக்கு, தொடர்ந்துவிட்டார்கள், ஐவர் மீதும்-117, 41, 341, 188 ஆகிய பிரிவுகள் படியும் – ரயில்வே சட்டப்படி 108, 128 ஆகிய பிரிவுகளின் படியும்.

ஒவ்வொரு பிரிவும், ஆண்டுக்கணக்கான சிறைவாசம் தரக்கூடியது. ரயில்வே சட்டத்தின் 128ஆவது பிரிவுக்கே இரண்டாண்டுத் தண்டனை என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

13.7.1953, மாலையில் அறிவகத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, போலீஸ் அதிகாரிகள் 151ஆவது பிரிவுப்படி கைது செய்தார்கள். இந்த 151ஆவது பிரிவின்படி, நாம் அனைவரும் திராவிடர் கழகமாக இருந்தபோது, 100 தோழர்களுக்கு மேல், பெரியார் உட்பட நாம் கைது செய்யப்பட்டோம். அப்போது ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாக, சென்னையில் பவனி வந்தார் – அதன் விளைவு, சிறைக்கூடம்! இப்போது ஆச்சாரியார் முதலமைச்சர், இப்போதும், அதே 151!

முன்பு 151ஆவது பிரிவின்படி சிறையில் தள்ளப்பட்டோம், எனினும் வழக்கு ஏதும் தொடரப்படவில்லை – விடுதலை பெற்றோம். இப்போது 117, 41, 341, 188, 108, 128 என்று வரிசை வரிசையாக செக்ஷன்கள்!!

காங்கிரஸ் நடத்திய துப்பாக்கித் துரைத்தனம்!

சிறையில் 13.7.53லிருந்து 24.7.53 வரையில் இருந்து வந்த நாங்கள், நாட்டிலே நடைபெற்ற கிளர்ச்சிகளையும், வீசப்பட்ட அடக்குமுறைகளையும் பற்றி அறிந்து, மனம் பதறினோம். சொல்லொணாத் துயரம் துளைத்திருக்கிறது திராவிடத்தை! துப்பாக்கித் துரைத்தனம் நடத்தி விட்டது!

பிணமாயினர் திரு இடத்தார்! பேயாட்டம்!! பேயாட்டம்!! சிறை நிரம்பிக் கிடக்கிறது – சீலர்கள் தியாகத் தழும் பேற்றுள்ளனர் – நமது உற்ற நண்பர்களெல்லாம் – உத்தமத் தோழர்கள் அனைவரும் – முன்னணி வீரர்கள் எல்லாம் – கழகத்தைக் கட்டிக் காத்து வரும் காளைகள் சிறையிலே – வெஞ்சிறையிலே உள்ளனர்! வேதனை! வேதனை!

கோரக் காட்சிக் கொடுமைகள்!

காலிழந்தன் – கரம் ஒடிந்தனர் – மண்டை பிளக்கப் பட்டனர் – தடியால் தாக்குண்டனர் – ஐயகோ! துப்பாக்கிக்கே இரையானோர் – இவ்வண்ணம், பாசிசப் புயல், திராவிடத்தைத் தாக்கிற்று – தாக்கிற்று – எண்ணும் போதே நெஞ்சை வேக வைக்கும் நிலை – கண்டது நாடு – நாடு தாயகம் – விடுதலை கேட்கும் வீரக் கோட்டம்.

கருணாநிதி – சிறையில், கண்ணதாசன் – மருத்துவமனையில், கைதியாக – எண்ணற்ற இளம் வீரரர்கள். தங்கள் இரத்தத்தைக் காணிக்கையாகத் தந்துள்ளனர், திராவிடத்தின் விடுதலைக்காக! தாலி இழந்த தையலர் – தகப்பனை இழந்த தனயர்கள் – மகனை இழந்த மாதா – உடன்பிறந்தோரை இழந்தோர் இந்த நிலையில் நாடு.

வெள்ளையன் வெறி பிடித்த ஏகாதிபத்தியத்தின் போதும், 64 ரவுண்டு, ரயில்வே வண்டிக்குள்ளே படுத்து உறங்கியவர்கள் சுடப்பட்டு இறந்து படுவது, போன்றவைகளைக் கண்டதில்லை – காந்தியாரின் வழிவழி வந்தவர்கள் ஆட்சியில் – ஆச்சாரியார் ஆட்சியிலே, கோரக் காட்சிகள் கொடுமைகள் தலைவிரித்தாடும் அடக்குமுறைகள், சொல்லுந்தரத்தல்ல – இதயம் தாங்கும் அளவினதுமல்ல.

வெறிபிடித்த பேயாட்டங்கள்!

சிறையிலே இருந்தோம், செந்தேள் கொட்டுவது போலச் செய்தி மேல் செய்தி வந்தவண்ணம் இருந்தன – சீறிடும் ஆட்சிக்கு எதிராகப் போரிடும் வீரர்களின் மீது வீசப்பட்ட விபரீதமான அடக்கு முறைகளைப் பற்றி, கண்ணீர் சொரிந்தோம் – சிறையில் இருந்தபடியே சீறிடும் விபரீதமான அடக்குமுறைகளைப் பற்றி – கண்ணீர் சொரிந்தோம் – சிறையில் இருந்தபடியே வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டோம். நாடு விடுதலை பெறத் தங்களைத் தத்தம் செய்த தியாகிகளை நோக்கி! வேறென்ன செய்வோம் – நாங்களோ சிறையில்.

தீரமிக்க திராவிடத் தோழர்கள், மறியல் களம் நோக்கி ஏறு நடை போட்டுச் சென்ற எழுச்சி தரும் காட்சியைக் கண்டு களிக்க வேண்டிய எங்கள் கண்கள், சிறைக் கம்பிகளையும், அவற்றைத் நித்த நித்தம் சிறைக் கோட்டம் வந்து சேர்ந்த, தோழர்களைத்தான் கண்டன!

‘முரசொலி‘ வீழ்ந்தது சிறை நிரம்பியது!

மறியல் களம் நோக்கிச் செல்லும் விடுதலைப் படையின் முழக்கத்தைக் கேட்டுப் பெருமை பெற வேண்டிய எமது செவியில் அண்ணா! ஐம்பது! அண்ணா இருபது! அண்ணா தடியடி! அண்ணா அறுபது! என்ற முரசொலி வீழ்ந்தது.

எந்த நாகரீக நாட்டிலும், ஜனநாயகத்தை மதிக்கும் இடத்திலும் உரிமை என்று உவந்து அளிக்கப்படுவதுதான் மறியல். எனினும், அந்த உரிமையின்படி, மறியல் செய்யச் சென்ற வீரர்கள் தான், தடிகொண்டு தாக்கப்பட்டு, வீதியிலே விரட்டி அடிக்கப்பட்டு, கீழே விழுந்த நிலையிலும் தாக்கப்பட்டனர் – கொடுமை, கொடுமை. இதனைத் தாய்மார்கள் கண்டனர் – என்ன அநியாயம் இது என்று அலறினர் – பொதுமக்கள் கண்டனர் – என்ன பொல்லாத ஆட்சி முறை ஐயா இது என்று கதறினர். கேட்டோம் சிறையில் – காட்சியைக் காணவில்லை – சிறையிலே அடைத்து விட்டார்கள்.

இதுவரை, தமிழக வரலாற்றிலே, ஏன், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே காணப்படாத காட்சியாக, வீரச் சின்ன ரயில்வே நிறுத்தம் – பார்க்க முடியவில்லை – உள்ளே தள்ளப்பட்டிருந்தோம்.

கோழையும் வீரனாகும் காட்சி!

கல்லக்குடி! என்ற பெயர் பொலிவுடன் தெரிகிறதாம் – கருணாநிதி ஒட்டிய தாள், டால்மியாபுரத்தை மறைத்ததாம் – அவமானச் சின்னத்தை அழித்தொழிக்கும் போர், ஆர்வமும் ஆற்றலும் மிகுந்த முறையில் நடைபெற்றதாம் – அந்த வீரக் காட்சிகளைக் காணாதவாறு, வெஞ்சிறையில் வைத்துப் பூட்டிவிட்டனர். வெங்கொடுமைச் சாக்காட்டுக்கு அஞ்சாத வெற்றித் தோள்கள் எமக்க என்பது கவிதை! கவிஞர் கண்ணதாசன், அதை விளக்கிடும் வீர உருவமாக மாறினாராம் – பதைக்கப் பதைக்க இழுத்துச் செல்லப்பட்டாராம். உயிர் போகட்டும், உரிமை பறிபோக விடேன் என்றாராம். கோழைகயையும் வீரனாக்கும் அந்தக் காட்சியைக் காணவில்லை – காணக்கூடாது என்று கணக்கிட்டே தானோ, சிறையிலே தள்ளிவிட்டனர் முதல் முழக்கம் கிளம்புதற்கு ஓர் நாள் முன்னதாகவே!

நாடு, எவ்வளவு விடுதலை உணர்ச்சி கொண்டுள்ளது, மக்கள் எந்த அளவுக்கு வீராவேசம் கொண்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், எந்த அளவுக்கு ஆற்றலும் ஆர்வமும் பெற்றிருக்கிறது. கழக வீரர்கள், எத்தகைய கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் தயாராகிவிட்டனர். என்ப மட்டுமா, சர்க்கார், எந்த அளவுக்கு அச்சம் கொண்டு எங்களை, முன்னாலேயே, சம்பவங்கள் கருவில் உருவாகி வருவதைக் கண்டு போலும் சிறையிலே தள்ளிவிட்டது என்பதுமன்றோ விளங்குகிறது.

வெற்றி முரசு எதிரொலிக்கிறது

3000க்கு மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழக வீரர்கள் ஆச்சாரியார் ஆட்சி முறையின் விளைவாக, சிறையிலே தள்ளப்பட்டு விட்டனர். விவரமும் விளக்கமும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் – நடைபெற்ற நிகழச்சிகளை நண்பர்கள் கூறக்கூற, வீரம் கொழுந்துவிட்டு எரிகிறது, கேட்கக் கேட்க, கொட்டு முரசே! கொட்டு முரசே! வெற்றி எட்டு திக்கும் என்று கொட்டு முரசே!! என்று பாடத் தோன்றுகிறது, அந்த வீர இளைஞர்களைக் கட்டித் தழுவி அளவளாவும் நாள் எமது வாழ்விலே திருநாள், என்று எண்ணிடச் செய்கிறது! பாருங்கள் பட்டியலை, என்று துள்ளி விளையாடுகறிது மனம்! கேளுங்கள் சேதியை என்று விளக்குகிறார்கள், “செந்தேன் பாயறு காதினிலே!“ இந்த அருமையான காட்சிகளைக் காணாதவாறு தடுத்து விட்டனர் – சிறையிலே தள்ளி விட்டனர்.

எனினும், சிறைக்குள்ளே எந்த அளவுக்குச் ‘சேதிகள்‘ கிடைக்குமோ அந்த அளவுக்குக் கிடைக்கப் பெற்றோம், வாழ்க்கையிலே என்றுமே அடைந்திராத பெருமிதம் கொண்டோம் திராவிடம் தனி நாடாவது உறுதி- இதனைத் தடுக்கும் திறன் இனி எவருக்கும் இல்லை – உயிர் உடலில் ஊசலாடும் வரையில் உயர்ந்த இந்தக் குறிக்கோளுக்காக அறப்போர் நடத்தியே தீருவோம் என்ற வீர உறுதி பிறந்தது!

அஞ்சேல், வெற்றி நமதே!

அடக்கு முறை அநியாயம் – நெஞ்சை வேக வைத்து – அதற்கு மார் காட்டி நின்ற மறக்குடியினரின் வீரத்தைக் கேட்டுக் கண்களிலே களிப்பு கூததாடிற்று, பல நூற்றாண்டுக் காலமாகப் பாழ்பட்ட நிலையிலே கிடந்து உழன்றாலும், பண்பு பட்டுப் போகவில்லை, வீரம் கருகி விடவில்லை, விடுதலைப் போரை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் திறமும், வீரமும் காணிக்கை செலுத்தும் கடமை உணர்ச்சியும் – கண்ணியமும் கட்டுப்பாடும், நிரம்பிக் காணப்படுகின்றன, நமது இனத்தவரிடம்! விடுதலை விடிவெள்ளி இந்த நிலை! பொழுதுவிடிவதற்கு முன்பு தோன்றும் கருக்கல் போன்றது, இந்த அடக்குமுறை! இதனைத் தாங்கிக் கொள்ளும் நிலை பிறந்துவிட்டது நமது தோழர்களுக்கு, அஞ்சேல் இனி, வெற்றி நமதே!

சுடக் கற்றுக் கொண்டவர்களே! எமக்குச் சாகத் தைரியமுண்டு! சிறையில் தள்ளும் அதிகாரம் பெற்றவர்களே! எமக்கு செல்வக் குடியை, சீராட்டுதலை, பாராட்டுதலை, காதலை, கவிதையை, குடும்பத்தை, குதூகலத்தை இழக்கும் துணிவும் உண்டு, சிறையைக் கோட்டமாகக் கருதும் மாண்பும் உண்டு!

தடி கொண்டு தாக்குவோரே! தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொள்ளச் சித்தமாகி விட்டோம்.

அங்கங்கள் அறுபடுமா! பரவாயில்லை! நாட்டுப் பணிபுரிய, ஒரு அங்கம் போனால், மிச்சமுள்ளது பயன்படட்டும்.

போலீஸ் படைகளையும், ராணுவத்தையும் காட்டி மிரட்டுவோரே, உள்ள உயிர் ஒன்றுதான் – அது ஓர்நாள் பிரிவதும் உறுதிதான் – போகும் உயிர் இந்தப் புனிதப் போரிலே போகட்டும்.

ஒரே குற்றம்தான்! பல சட்டப் பிரிவுகளா?

144, 41, 188, 128, 108, 341 என்று அடுக்கடுக்காகக் குற்றப் பிரிவுகளைக் கோர்த்துக் காட்டுவோரே, கேளீர்! ஒரே ஒரு குற்றத்தைத்தான், இங்ஙனம் பல்வேறு கணக்காகக் கூறுகிறீர்கள் – என் நாட்டை என் நாடு ஆக்கும் அறப்போரைப் புரிகிறேன் – மானத்தை மீ்ட்கும் போரில் ஈடுபட்டிருக்கிறேன் – திராவிட நாடு திராவிடருக்கு! என்ற அடிப்படை உரிமைப் போரிலே இறங்கிவிட்டேன் – இதைக்குற்றம் என்றால், நான் குற்றவாளிதான் – சுருக்கமாக இதைக் கூறாமல், ஏன் செக்ஷன் செக்ஷனாகச் சித்திரிக்கிறீர்! எந்தக் குற்றத்தை ஒவ்வொரு நாட்டு விடுதலை வீரனும் செய்தானோ, அதே குற்றத்தைத்தான் நான் செய்கிறேன் – என் தாயகத்தை மீட்கப் போராடுகிறேன்.

திராவிடம் இங்ஙனம் பேசுகிறது – திராவிட வீரரின் விழி இதைக் கூறுகிறுது – ஆணவத்தை ஆயுதமென்று கருதம் ஆட்சியாளர்கள், இந்த எழுச்சியை அடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். கொடுங்கோலர்கள் ஆதிக்க வெறியர்கள், பாசிசப் பாதகர்கள், இப்படி மனப்பால் குடித்தனர் – அவர்களின் அட்டகாசம் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிவிட்டது.

புதியதோர் வரலாறு அரிய பாடம்!

வரலாறு, ஒரு அரிய பாடம்! கடந்த பத்து நாட்களாகத் திராவிடத்திலே நடைபெற்றவை, புதியதோர் வரலாறு!! திராவிடத்திலே, என்றும் இல்லாத ஓர் எழுச்சி மணம் கமழுகிறது – வெளி வந்ததும் எம்மை வரவேற்ற அந்த மணம், இணையில்லா இன்பத்தை தரவல்லது – இந்த மணம் பெற வெளிவந்திருக்கும் – புதிய உறுதியும். புதி நம்பிக்கையும் பெறுகிறோம்.

எத்தனை நாட்கள் வெளியே இருக்க முடியும் என்பதும் தெரியாது! வழக்கு முடிவில், எத்தனை ஆண்டுகள், உள்ளேயோ தெரியவில்லை.

இன்பத் திராவிடத்தின் எழுச்சியைக் காணாமல் இருட்டறையில் எவ்வளவு காலம் இருந்தாக வேண்டுமோ தெரியாது.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, ஆச்சாரியார் ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தினரில், ஐவரைச் சிறையில் நீண்ட பெருங்காலம் அடைத்து விட்டால், கழகம் கலகலத்துவிடும் என்று கருதுவதாகத் தெரிகிறது. ஐவர் நாங்கள் – செயலாளர் – துணைச் செயலாளர் – என்று உள்ளோம். இதுதான் கழகம் என்று தப்புக் கணக்கு போடுகிறது, இரத்தக்கறை படிந்துள்ள ஆட்சிமுறை.

கழகம் கலகலத்து விடுமா?

இந்த ஐவர் – கோபுரக் கலசங்கள் போல, பளபளப்பாக வெளியே தெரிவன – கோபுரம் போல், அடுக்கடுக்காக உள்ளன, கழக அமைப்பு நாடெங்கும், வீடெல்லாம் – அந்த அமைப்பு வளர்ந்த வண்ணம் இருக்கிறது – அதனை அறியாதார், அறியாதாரே! கலசங்களைக் கோபுரம் என்று எண்ணுவது பேதமை! வீழப்போகும் ஆட்சி முறைக்கு இந்தப் பேதமைதான், தீரா நோய். அந்த நோய் பிடித்தாட்டும் நிலையில் ஆட்சி இருக்கிறதே! நல்லகுறி, மிக நல்ல குறி!

இந்த ஐவர், ஆண்டுக் கணக்கில் சிறையிலே அடைப்பட்டாலும், அங்கேயே ‘முகர்ஜி‘யாகிப் போனாலும், கழகம் குலையாது, கழகம் நிலைத்துவிட்டது! இதனை ஆட்சியாளர்கள், நாங்கள் சிறையிலே இருந்த காலை, நாடு கொண்ட கோலத்தைக் கண்டே உணர்ந்திருக்க வேண்டும். சாகப் போகும் தருவாயில் கண் மங்கும் என்பார்கள் – சரியப் போகும் ஆட்சிக்கு சர்வமும் மங்கும்! நல்ல குறி! மிக நல்ல குறி!

சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறோம் வழக்கு, ஆகஸ்ட் 3ஆம் தேதி துவக்கமாகிறத – எத்தனை நாள் நடைபெறுமோ, தெரியாது – முடிவு என்ன? கவலையில்லை – இடையில் என்ன நிகழ்ச்சி – இன்பத் திராவிடத்தைக் கண்டு அளவளாவுவது – கழகத் தோழர்களைக் கண்டு, விடைபெற்றுக் கொள்வது! நல்ல வாய்ப்பு! மிக நல்ல வாய்ப்பு!

ஆச்சாரியார் முன்பு முதலமைச்சராக இருந்து இந்தியைத் திணித்தபோது, ஐவரில் ஒருவரான, அண்ணாதுரைக்கு 117 செக்ஷன் படிதான் தண்டனை தரப்பட்டது. இப்போது ஐவர் பேரிலும் 117! மேலும் பல செக்ஷன்கள்.

“நம்நாடு“ நம் செல்வக் குழந்தை!

இனிச் சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால்தான் தெரியும், இத்தனை செக்ஷன்களும் சேர்த்து, எத்தனை காலத்துக்கு, உள்ளே தள்ளிவைக்கும் என்ற விஷயம். அதற்கு முன்பு ஒரு விஷயம் தெளிவாக்கி விடுகிறோம் – ஐவர் – செயலாளர், துணைச் செயலாளர்கள், சட்ட திட்டக் குழுச் செயலாளர் எனும் வகையினராக, சிறையில் தள்ளப்பட இருக்கிறோம். கழகத்தின் நடவடிக்கை, நாங்கள் வழக்கு முடிந்து சிறை சென்ற பிறகு எப்படி நடைபெறுவது, முறை என்ன நெறியாது என்பதை அறிய விரும்புகிறோம். கூறுக! புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள, தயாரகிடுங்கள்! கழகத்தில், அதற்கேற்ற அறிவாற்றல் படைத்தவர்கள் ஏராளம். அவர்களைக் காண, இந்த இடைக்காலம் வாய்ப்பாகும்.

“நம்நாடு“ ஏடு நம் செல்வக் குழந்தை – தொட்டில் பருவம், அதனைச் சீராட்டி வளர்த்து வையுங்கள் – பாலூட்ட மறவாதீர்கள் – சிறையில் தள்ளப்பட்ட பிறகு, எமது நினைவு அவ்வளவும் ‘நம் நாடு‘ உங்கள் பராமரிப்பில் எப்படி வண்ணம் பெறுகிறது என்பதாகத்தான் இருக்கும்.

இரண்டோர் நாளில், ஐவரில் சிலர் திருச்சிக்கும், சிலர் தூத்துடிக்கும், சிலர் கோவைப் பகுதிக்கும் வர இருக்கிறோம். சட்டசபை முடிந்ததும், நண்பர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. உடன் வருவதாக இசைந்திருக்கிறார். அறப்போர் வீரர்களே! அரமைத் திராவிடத்தை மீட்கப் போரிடும் தீரர்களே! வெளியே வந்திருக்கிறோம். மீண்டும் உள்ளே இழுத்துச் செல்லப்படுவதற்குள், திராவிடத்துக்குப் பாடுபட்டுத் தியாகத் தீயிலே புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கத் தம்பிகளைக் கண்டு, களிப்படைவதை விட, வேறு ஆனந்தம் ஏது!

சிறை தி.மு.க. கிளை!

வழக்கு முடியும் வரையில், இயக்க வேலைகளில் ஈடுபடலாகாது என்ற நிபந்தனையின் பெயரில் நாங்கள் வெளி வந்தோம் என்று இதழ்கள் சில கூறியுள்ளன – வழக்கமான தப்பலித்தனம்! இயக்க வேலைகளைக் கவனிக்க இந்த இடைக்காலம் – நிபந்தனை ஏதும் கிடையாது, இடைக்காலத்தில் இயக்க வேலையில் ஈடுபடுவதைக் கண்டு, வழக்கை வேண்டமானாலும் அவசர அவசரமாக நடத்த முனையக்கூடும் அரசினர். பரவாயில்லை! கிடைக்கற அளவுக்கு இடைக்காலம் பலன் தரட்டும்! இல்லை வழக்க முடிவதற்குள்ளாகவே மீண்டும் சிறையில் கொண்டு போகட்டும் – அது சிறையாகவா இருக்கிறது – திராவிட முன்னேற்றக் கழகக் கிளையாக இருக்கிறது?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிவும், பொலிவும் நாடு அறிந்த ‘சேதி‘ ஆகிவிட்டது. பெரியாரின் பேராதரவும் நமக்கக் கிடைத்தது! பேசாத வாயெல்லாம், பேசுகின்றன. ஏறெடுத்தும் கொஞ்சிடக் காண்கிறோம். சட்டசபை உறுப்பினர்கள் நம் சார்பில் வாதாடும் நேர்த்தி நமக்கெல்லாம், புத்தம் புதிய பூரிப்பைத் தருகிறது.

பேசாத வாய்கள் பேசுகின்றன!

காங்கிரஸ் வட்டாரத்திலேயே புதியதோர் கண்விழிப்பு காணக் கிடைக்கிறது. அக்டோபரோடு ஆச்சாரியார் ஆட்சி சரி என்று ஆருடம் கணிக்கிறார்கள். புதிய கல்வித் திட்டத்தை விட்டொழிக்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏகக்ளே வற்புறுத்திகிறார்களாம்! இந்த ஐவரைச் சிறையிலே தள்ளிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டதா, அதோ பார் பெரியார், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல தி.மு.கழகத்தார் கொடுமைக்கு ஆளானதும், புனல் ததும்பும் கண்களுடன் நிற்கிறார், கனல் தெறிக்க சர்க்காரைச் சாடுகிறார். பாருமய்யா பாரும் – அவர் மீது மோதிக் கொள்வாயா! என்று அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் ஆச்சாரியாரைக் கேட்கிறார்கள்.

இரட்டைக் குழல் துப்பாக்கி!

ஜூலையில் தி.மு.க. அறப்போர்! ஆகஸ்டில் தி.க. அறப்போர்! இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்களே, உண்மையாகத்தானே இருக்கிறது என்கிறார்கள். உராரும் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்களில் சிலர்! மகா மேதை! சாணக்கியர்! என்ற புகழ்ந்ததெல்லாம், அபத்தம். ஆச்சாரியார் ஆழம் தெரியாமல் காலை விடுகிறார். அவதியைத் தேடிக் கொள்கிறார் என்று காமராசர் கட்சியினர், எச்சரிக்கிறார்கள். மாற்றார் கோட்டையில் மாரடிச் சண்டை! திராவிடத்திலே என்றும் இல்லா எழுச்சி!

இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் எமது வணக்கம். வெளி வந்திருக்கிறோம். மீண்டும் உள்ளே போகுமுன்பு திராவிடத்தைக் கண்டு களித்திட வாய்ப்ப கிடைத்தது, வருகிறோம், வாழ்க நும் வீரம்! வளர்க நும் புகழ்! வாழ்க திராவிடம்.

சி்.என். அண்ணாதுரை,
இரா. நெடுஞ்செழியன்,
ஈ.வி.கே.சம்பத்,
என்.வி.நடராசன்

(நம்நாடு - 25-7-1953)