அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேரை புகுந்த தேங்காய்ப் போல்...!

சட்ட மன்றத்தில் அண்ணா முழக்கம்

சென்னை, ஏப்ரல் 21 நேற்றுச் சட்டமன்றத்தில் நிலவுடைமை உச்சவரம்பு மசோதா மீது அண்ணா அவர்கள் 50 நிமிட நேரம் உரை நிகழ்த்தினார்.

அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

இந்த நில உச்சவரம்பு மசோதா வருகிறது என்று பல ஆண்டுகளாகப் பொதுமன்றங்களிலும், அரசியல் மாநாடுகளிலும் பேசப்பட்டும், நிபுணர்களின் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டும் ஆசாபாசங்கள் ஊட்டப்பட்டும் இருக்கிறது.

இந்த மசோதாவின் நோக்கத்தை முற்போக்குக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நிலத்துக்கு உச்சவரம்பு கட்டும திட்டம் உண்மையில் மகிழ்ச்சிக்கு உரியதுதான். ஆனால், இந்த மசோதாவை ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளுடன் இரண்டறக் கலந்து உருவாக்கவில்லை. இந்த மசாதா கூடாது என்று தைரியமாக வெளியிலே சொல்லக் கூடியவர்கள் இந்த மன்றத்திலே ஒரு பத்து பேர் இருக்கலாம். சொல்லத் தயங்கிக் கொண்டு இருக்கிறவர்கள் ஒரு 20 பேர் இருக்கலாம். அதற்கு மேல் இருக்க முடியாது.

உழுபவனுக்கு நிலம் சொந்தமென்றால்...!

பொதுவாக இங்குப் பேசியவர்கள் யாராயிருந்தாலும் முப்பது ஏக்கருக்குமேல் வேண்டியதில்லை என்றுதான் சொன்னார்கள்.

பொதுவான உழவனுக்கு நிலம் சொந்தம் என்ற பலகாலம் பேசி வந்திருக்கிறோம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும் இப்படிப் பேசுவதை முன்பு எதிர்த்துப் பேசியிருக்கின்றனர். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்றால் மோட்டாரில் ஏறுபவருக்கு மோட்டர் சொந்தம் இரயிலில் ஏறுபவருக்கு இரயில் சொந்தமாகும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள், முன்பு முதலமைச்சராக இல்லாத நேரத்தில் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை அரசியலில் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மசோதாவின் முன்னுரையில், புதிய ஏற்பாட்டின் மூலம் கிடைக்கும் நிலம் உழுபவனுக்கே சொந்தம் என்று கூறப்பட்டிருந்தாலும் அந்தக் கருத்து அதிகமாக வற்புறுத்தப்படவில்லை.

உழவன் என்பவன் யார்? என்பதிலே எவ்வளவு முற்போக்குக் கருத்து அமைகிறதோ அதைப் பொறுத்துதான் இந்தச் சட்டத்தினுடைய பலாபலன் இருக்கிறது.

இதைவிடப் பிற்போக்கான விளக்கம் உண்டா?

வயலிலே பாடுபட்டு வரப்பு ஓரத்திலே படுத்துறங்குபவன் தான் உழவன். அப்படியின்றிப் பயிரிட்டு அறுத்தெடுத்து வந்து களஞ்சியத்திலே போட்ட பிறகு அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று இன்னொரு இடத்திலே வை என்று உத்தரவிடுகிறானே, அவன் உண்மை உாவனாக மாட்டான்.

ஆனால், இன்றைய தினம் உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்னும் போது யார் யார் பலனை அனுபவிக்கிறார்களோ, அவர்களெல்லாம் தங்களை விவசாயி – உழவன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதைவிடப் பிற்போக்கான விளக்கம் இருக்கமுடியாது.

யார் உழவன் என்பது பற்றி விளக்கியிருந்தால், இச்சட்டத்துக்கு நல்ல முற்போக்குச் சக்தி கிடைத்து இருக்கும். ஆனால், இந்த முற்போக்குக் கருத்தை மறைமுகமாக வெடிவைத்துத் தகர்த்துவிட்டார்கள்.

உடலுழைப்பைப் செலவிட்டுப் பாடுபடுவோன்தான் உழவன் என்று அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டியிலே காங்கிரசுத் தலைவர்கள் சொன்னார்கள். அதன்பிறகு காங்கிரசு விவசாயச் சீர்திருத்தக் கமிட்டியிலே ஆள்வைத்து வேலை வாங்குபவர்கள் பணம் செலவிட்டுப் பயிரிடச் செய்பவர்கள் கூட விவசாயிகள் தான் என்று புதிய விளக்கம் தந்தார்கள். அதன் அடிப்படையில்தான் அம்மசோதாவும் காட்டப்படுகிறது. இது பம்பாய் மாகாணத்து விளக்கம் ‘கல்டிவேட்டர்‘ என்பதற்கு முற்போக்கான விளக்கம் தேவை.

நிலச்சுவான்தாரர்களுக்குப் பாதுகாப்பு!

நிலங்களை 4-5 வகைகளாகப் பிரித்து, சில நிலங்களை விலக்கி விட்டுப் பார்த்தால், எவ்வளவு கணக்கு பார்த்தாலும் பெரிய நிலச் சுவான்தாரர்கள் என்போர் ஒரு ஆயிரம் பேருக்குள்ளாகத்தான் இருப்பார்கள். அந்த ஆயிரம் பேர்களைக் காப்பாற்ற பெரிய பெரிய அரசியல் தத்துவவாதிகள் தனித்த இயக்கம் – ஆட்சி அமைக்கத் தேவையில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பு இம்மசோதாவிலேயே இருக்கிறது.

இந்த உச்ச வரம்புச் சட்டம் வரும், வரும் என்ற ஏறக்குறைய 15 ஆண்டுகளாகவே ஜெய்ப்பூர்த் தீர்மானத்தில் இருந்து, கராய்ச்சித் தீர்மானித்திலிருந்து அடுத்தடுத்துப் பேசப்பட்டு வந்திருக்கிறது.

ஆகையினாலே நிலம் படைத்தவர்கள் என்னென்ன பாதுகாப்பு தேடவேண்டுமோ, அதையெல்லாம் தேடிய பிறகுதான் இந்த மசோதா வந்திருக்கிறது. ரெவின்யூ அமைச்சரிடம் நிலத்தையெல்லாம் பிரித்து வருகிறார்கள், விற்று வருகிறார்கள் என்று பலமுறை முன்பு எடுத்துக் சொன்ன நேரத்தில் கூட அவர் சந்தோஷப்பட்டுக்கொண்டார். நாம் பிரிக்க இருக்கிறோம். இப்பொழுது தானே பிரிந்துவிட்டால் நல்லதுான் என்றார்.

நல்ல எண்ணத்திலேதான் அவர் சந்தோஷப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன். இருந்தாலும் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்காபடி திடீரென இம்மசோதாவைக் கொண்டு வந்திருந்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் இம்மன்றத்திற்கு வெளியிலிருந்து கொண்டு அமைச்சரவையையும், நம்மையும் வாழ்த்தியிருப்பார்கள்.

வினோபாவே பெற்றதே அதிகம்

ஆனால், இன்று இம் மசோதா கொண்டு வந்திருக்கின்ற நேரத்தில் அழுகும் பொருளுக்கு வரி நீக்கியதற்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கூட மக்களிடையே இல்லை. இதுபற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள். என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இந்தச் சட்டம் புரட்சிகரமாக இருக்கக்கூடாது என்பதற்காக இதுபற்றி நீண்டநாள் பேசிப்பேசி, பாதுகாப்பெல்லாம் தேடிக்கொண்ட பிறகு, இப்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள். கொடியில்லாமல், கொட்டு முழக்கு இல்லாமல், சட்டசபை இல்லாமல் சட்டவிரோதம் இல்லாமல் வினோபாவே பெற்றிருக்கும் நிலத்தைவிட அதிகமாக இந்த மசோதா மூலம் நிலம் பெற்றுவிடமுடியாது.

இந்த மசோதா பற்றித் தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசு உறுப்பினர்கள் பேசியதைக் கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் முறையிட்டுக் கொண்டதை இங்குக் கேட்டோம்.

இதை நான் சொல்லுகிறபோது எங்கள் கட்சிக்குள் புகுந்து விளையாடப் பார்க்கிறாயா? என்று ஆளுங்கட்சியினர் கேட்கலாம். நான் உங்கள் கட்சியில் புகுந்து விளையாடவில்லை. உங்கள் கட்சியிலும் இக்கருத்து இருக்கிறது என்பதைக் காட்டத்தான் இதைச் சொல்லுகிறேன்.

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது!

ஒரு உறுப்பினர்க பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்று இந்த மசோதாவைப் பற்றி வர்ணித்தார்கள். பிள்ளையார் பிடிக்க யாரிடமோ சொல்லிவிட்டதால் அது குரங்காய் முடிந்துவிட்டது. எதையோ பிடித்து இதுதான் பிள்ளையார், வேண்டுமானால் குரங்குப் பிள்ளையார் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்ற அவர்கள் சொல்லுகிறார்கள். உண்மையில் அவர்கள் பிள்ளையார் பிடிக்கவில்லை.

சர்க்கரை ஆலைக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சர்க்கரை ஆலைக்கு என்று நிலம் ஒதுக்கி ஆலை துவக்கியிருப்பவர்கள் காங்கிரசில் உள்ள மிராசுதாரர்கள் தான் என்பது ஊரறிந்த உண்மை. காங்கிரசுக்காரர்கள் சர்க்கரை ஆலை துவக்கியதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் நினைக்கிறார்கள். காங்கிரசிலே அடைக்கலம் புகுந்த மிட்டா, மிராசுகளுக்கு கை காட்டிவிட்டார்கள். சர்க்கரை ஆலைக்கொன்று நிலத்தை ஒதுக்கினால் நிலம் என்றும் மிராசுதாரர்களிடமே இருக்கும் நெல்லுக்குப் பதில் கரும்பு விளையும் என்பதை மிராசுதாரர்கள் முன்பே தெரிந்து கொண்டார்கள்.

கரும்பு 100 ஏக்கரில் போட்டால்தான் பயிராகுமா? ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரில் பயிராகாதா? ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கரில் பயிரிட்ட கரும்பைப் புகலூர் சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் சென்று வரிசையிலே நிற்பதைக் காணவில்லையா?

முதலமைச்சர் ஏன் இதயத்தை இரும்பாக்கினார்?

வடபாதிமங்கலமும், தென்பாதிமங்கலமும் பல நூறு ஏக்கரில் கரும்பு பயிட்டால்தான் ஆலை நடக்கம் என்கிற அளவுக்கு முதலமைச்சர் எப்படி தன் உள்ளத்தை இரும்பு ஆக்கி்க் கொண்டார்.

ஒரு சமயம் அடுத்த தேர்தலுக்கு 1962க்கப் பிறகு இதற்கு அவர்கள் பதில் சொல்லக்கூடும். நெல்லைவிடக் கரும்பு எப்படி தளதளவென்று பயிராகின்றதோ அதேபோல் அதிக அதிக இலாபமும் கிடைக்கிறது.

இப்படிப்பட்ட இலாப் பயிரான கரும்புக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும்? இப்படி விளக்களிப்பதன் மூலம் நல்ல முற்போக்குச் சக்தியைப் பாழ்படுத்திவி்ட்டீர்கள். வேண்டுமானால், கிடைக்கின்ற உபரி நிலத்தில் சர்க்காரே பண்ணை நடத்திக் கரும்பு பயிரிட்டு ஆலைக்குக் கொடுக்காலாமே.

அதனால்தான் பிள்ளையாரை அல்லவா கேட்டோம். குரங்கை அல்லவா காட்டுகிறீர்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த மசாதாவில் பங்குக்கு மேல் பங்கு சேர்க்க வழியிருக்கிறது. எப்படியென்றால் மேய்ச்சல் காடு வளர்க்க விதிவிலக்கு இருக்கிறது. கண்ணுக்கெட்டியதூரம் வரை மேய்ச்சல் தரை வைத்துக் கொண்டு ஆடு, மாடு வளர்த்து அதனாலே கவர்னரிடம் கைகுலுக்கிப் பாராட்டு பெற்று இலட்சக்கணக்கிலே பணம் சம்பாதிப்பவர்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

எதற்காக இந்தச் சலுகை?

நான் இதைச் சொல்லும்போது, ஆம் அப்படித்தான் இதை நீ யார் கேட்க? என்று தங்களுக்குள்ள மெஜாரிட்டி பலத்தைக் காட்டி நீங்கள் கேட்கலாம். அல்லது எங்கள் சூட்சமத்தை யாரும் கண்டுபிடித்து விட முடியாது என்று நீங்கள் நினைக்கக்கூடும்.

நான் மன்றத்திலே ஆட்டிறைச்சி தொழிற்சாலை நடத்தலாம். என்று கூறியதைக் கேட்டு நம் நாட்டிலே ஆடு எங்கே மேயும்? அண்ணாதுரை வீட்டுத் தோட்டத்திலே மேயும்? என்ற கிண்டல் பேசினார்கள் அமைச்சர்கள்.

அரசியலில் சலுகை காட்டுவதற்காகப் பெரிய பணக்காரர்கள் 1962-ஐக் கவனம் வைத்துக்கொண்டு கதவு திறந்திருக்கிறது. உள்ளே போங்கள் என்று சொல்லி உள்ளே அனுப்புகிறார்கள். எதற்காக இந்தச் சலுகை அவர்களுக்கு?

கழுகுத் !பாக்கு) தோட்டங்கள் நல்ல பலன் தரக்கூடியவற்றிக்கு ஏன் விதிவிலக்கு, இந்த மசோதாவில் ஒவ்வொன்றிற்கும் தரப்படுகின்ற வியாக்கியானத்தைப் பொதுத்துத்தான் முற்போக்குத் தன்மையும் பிற்போக்குத் தன்மையும் இருக்கிறது, எனவே, இதை ஆராய இருக்கும் ழுகுவினர் கூடுமானவரையில் நீக்க வேண்டியவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நிலம் இருந்தால் அறம் வளருமா?

காங்கிரசு கட்சி்க் கொறடாவான திரு. கருத்திருமன் அவர்கள் பேசுகையில் ஆள் ஒன்றுக்கு முப்பது ஏக்கருக்குமேல் வைத்துக் கொண்டு பயிரிட முடியாது என்றார். அதனால்தான் நாங்கள் பதினைந்து ஏக்கர் போதும் என்று சொல்லுவதிலே வியப்பு இல்லை.

மடலாயங்களுக்கு அடியோடு இல்லை என்னாமல் 200 ஏக்கர் நிலம் என்று வரம்பு காட்டியிருக்கிறார்கள். மதஸ்தாபனங்களுக்கு அற் நிலையங்களுக்கு நிலம் தேவையுண்டா? நிலம் இரப்பதால் அறம் வளருகிறதா?

நம்முடைய விவசாய அமைச்சர் அவர்கள் கூட சாமிக்கு நிலம் தேவையில்லைதான், சில காரியங்களுக்காக நிலம் தேவை என்றார். அப்படித் தேவையென்றால் அறநிலையங்களின் நிலங்களையெல்லாம் சர்க்கார் எடுத்துக் கொண்டு தர்ம காரியங்களுக்குத் தேவைப்படும் போது சர்க்கார் தேவையான பணத்தைக் கொடுக்கலாம். தர்மம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். சில காலமாக நம் உள்துறை அமைச்சர் அவர்கள் அறநிலையங்களிலே நடைபெறும் சில தவறுகளை ஓரளவு முறைமுகமாக எடுத்துச் சொல்லி வருகிறார். உள்துறை அமைச்சராக இருப்பதால் அவர் உள்ளூர உணர்ந்திருக்கிறார். அந்த அளவுதான் அவர் சொல்லமுடியும். அவருடைய அனுபவத்திற்கு அவ்வளவுதான் சொல்லமுடியும். என்னைப் போல் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

விளைவு அறியாமல் பேசுகிறாரோ?

இந்த நேரத்தில் அமைச்சர் பக்தவச்சலம் குறிக்கிட்டு நான் பகிரங்கமாகவே பல தவறுகளை எடுத்துச் சொல்லி வருகிறேன் என்றார்.

அண்ணா – அமைச்சர் அவர்களுடைய அஞ்சா நெஞ்சத்தை பாராட்டுகிறேன். ஒரு வேளை விளைவு அறியாமல் பேசுகிறாரோ என்று அனுதாபப்படுகிறேன்.

மடாலயங்களுக்குச் சொத்து எப்படிக் கிடைத்தது? மறுமையில் பலனடைவதற்காக இம்மையில் தருமம் செய்வது என்பது தமிழரின் பண்பு அல்ல என்பதை ஒரு பழம்பாடல் எடு்த்துக் காட்டுகிறது. தருமம் என்பதற்கும் அறம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இங்கே !இவ்வுலகத்தில்) தர்மம் செய்தால் அங்கே !அவ்வுலகத்தில்) பலன் உண்டு என்னும் கருத்து இடைக்காலத்தில்தான் புகுந்தது. தமிழ் மரபு ஆன்றோர் எவ்வழி செல்வார்களோ அப்படிப்பட்டது.

மடாதிபதிகளுக்கு எதற்குச் சொத்து?

இந்த மடாதிபதிகள் என்ன செய்து கொண்டிருக்க வேண்டும்? பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து, நிழல்கண்ட இடத்தில் அமர்ந்து தங்கள் காலத்தைக் கழிக்க வேண்டியவர்கள். ஆனால், இன்றைய பண்டாரச் சந்நிதிகளுக்குப் பசியே இருப்பதில்லை. அவர்கள் செய்த பாவ காரியங்களால் பசி ஏற்படாமல், உடலும் உள்ளமும் பாழ்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு இருக்கின்ற சொத்து இன்ற தவறான காரியங்களுக்குப் பயன்படுகின்றன. உழவர்களைக் கசக்கிப் பழியப்பயன்படுகின்றன.

உழவன் தன் வீட்டில் ஒரு அழகான காளை வளர்த்தால் எந்த நேரத்தில் அது மடாதிபதி கண்ணில் பட்டுவிடுமோ என்று அஞ்சும் நிலையிலே அவன் அதை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. காளை என்ன அழகான கன்னியாயிருந்தாலும் எந்த நேரத்தில் மடாதிபதியால் கற்வு சூறையாடப்படுமோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

மடாலயத்திற்கு 200 ஏக்கர் நிலம் இருந்தால்தான் மடத்துக்கு விபூதி வருமா? வில்வ மரம் வளருமா? இல்லையேல் சைவ நெறித்தழைக்காதா? சைவ நெறிப் பண்பு எப்படிப்பட்டது? ஏற்கனவே பரமசிவனே காவியுடையில் புலித்தோலை உடுத்தி இருந்ததாகத்தான் கூறியிருக்கிறார்கள்? துறவுக் கோலத்தில் இருக்க வேண்டிய பண்டாரத் தோட்டத்தில் 10 இலட்சம் ஏன்? இவ்வளவு முற்போக்கு நோக்கத்துடன் சட்டம் செய்து ஒரு ஓட்டையைத் தடுக்கத் தவறிவிட்டால் அதனாலே ஒரு துளியும் பலனில்லாமல் போய்விடும்.

நிலமில்லாதவர்களுக்கு என்ன கிடைக்கும்?

மடத்துக்கும் நிலம் தேவையென்றால் பொதுவான தத்துவம் தேவையில்லை.

பெரிய அளவில் நிலம், சிறிய நிலம், பெரிய பண்ணை, சிறிய பண்ணை என்பனவற்றில் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும்.

நான் கனம் ரெவின்யூ அமைச்சரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கேட்டேன். இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலம்தான் உபரியாக கிடைக்கும் என்றார்.

இந்த இரண்டு இலட்சத்தில், ஒன்றரை இலட்சம் ஏக்கர் ஏற்கனவே குத்தகைதாரர்களாக இருப்பவர்களுக்குப் போய்விடும். மீதியிருக்கும் நிலம்தான் நிலமில்லாதவர்க்ளுக்குக் கிடைக்கும்.

தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறித்து அதை உரித்து மட்டையை நீக்கி உடைக்கின்ற போது அதிலுள்ள இளநீரைப் பிடிப்பதற்காகக் குழந்தை பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்த காத்திருக்கும் உடைத்துக் கவிழ்த்தால் அதிலிருந்து இளநீர் வராது. குழந்தை ஏமாறும். உள்ளே பார்த்தால் அது தேரை புகுந்த தேங்காயாக இருக்கும்.

தேரை புகுந்த தேங்காய்!

அதைப்போலத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறித்து வருகிறேன் என்ற ஆசை காட்டியது போல் இந்த மசோதாவைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி ஆசைகாட்டி இறுதியிலே தேரை புகுந்த தேங்காய்போல் இன்று மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரசியல் வேறுபாட்டையெல்லாம் மறந்து இதை எப்படி வாழ்த்தி வரவேற்க முடியும்?

ஒரு நல்ல புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நேம்ஸ் நதிக்கரையில் உள்ளவர்களும் நைல் நதிக்கரையில் உள்ளவர்களும் பாராட்டுவார்கள் என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடையலாம்.

நில உச்சவரம்புச் சட்டம் வரும் என்று பலகாலமாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது இச்சட்டத்தால் எவ்வளவு நிலம் மிச்சப்படும், நிலமில்லாதவர்களுக்கு எவ்வளவு நிலம் கொடுக்க முடியுமென்று கூடக் கணக்குக் காட்ட முடியவில்லை. ஒரு இலட்சம் பேருக்குக் கூட இதனால் நிலம் கொடுக்க முடிய வில்லையென்றால் எதற்கு ஒரு சட்டம்? நீங்கள்தான் பொதுவுடமையைத் தடுத்துச் சமதர்மத்தைக் கொண்டு வருவீர்களா? இருப்பதையே தேயவைத்த உங்கள் சாமர்த்தியத்தை வேண்டுமானால் பாராட்டுவேன்.

விருந்தாளியை விருந்துக்கு அழைத்து இரண்டு மணி நேரம் காத்திருக்கச் செய்து பசியெடுத்து அது தானாக அடங்கிய பிறகு சாப்பாடு போட்டால், சாப்பிடுகிற சாப்பாடும் உள்ளே போகாமல் வெளியே வரும்.

பழைய சோற்று மசோதா

விருந்தாளியைக் காக்கவைத்துவிட்டு, உள்ளே அரைக்கிறது, கரைக்கிறது. தாளிக்கிறது எல்லாம் ஆனதும் சாப்பிடலாம் என்ற சொல்லிக் கடைசியில் சாப்பாட்டுக்கு அழைத்துப் பழைய சோற்றை வைத்து அறைத்தது பக்கத்து வீட்டில், தாளித்தது அடுத்த வீட்டில் என்று சொல்வதுபோல் பதினைந்து ஆண்டாகச் சொல்லி சொல்லி ஆசைகாட்டி இப்பொழுது பழைய சோற்றை வைப்பதுபோல மசோதாவைக் காட்டி ஏமாற்றமடைய செய்துவிட்டார்கள்.

உழுபவனுக்கே நிலம் கொடுத்தால் அவன் உழுவானா? என்று கேட்கிறார்கள். அவன் ஏர் கொடு, மாடு கொடு, விதை கொடு என்று கேட்பான் என்று சொல்லுகிறார்கள்.

நீங்கள் எட்டு மந்திரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? நிங்கள்தான் அவற்றையெல்லாம் கொடுக்கவேண்டும்.

நந்தனார் காலத்தில் சிவகணங்கள் ஒரே இரவில் பயிரிட்டதாகச் சொல்கிறார்கள், அப்படி சிவகணங்களா வந்து பயிரிடும்? மனித கணங்கள்தான் – ஓட்டுக் கூலி பெற்ற மனித கணங்கள்தான் அதைச் செய்யவேண்டும். இங்கே உள்ள மந்திரிகள்தான் அதற்கு வழி செய்யவேண்டுமே தவிர அமெரிக்காவிலிருந்து எவரும் வந்து செய்யமாட்டார்கள்.

மிச்ச வரம்புச் சட்டம் என்பதே சரி!

இதை உச்ச வரம்புச் சட்டம் என்பதைவிட மிசச வரம்புச் சட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். உச்ச வரம்பெல்லாம் ஏற்கனவே கட்டியாகிவிட்டது, மிச்சம் இருப்பதற்குத்தான் வரம்பு கட்டப் போகிறீர்கள்.

உழுபவனுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கம் இதனால் ஈடேறாது, ஏழை மக்களுக்குப் புதுவாழ்வு கொடுக்கம் நிலை இம்மசோதாவில் இல்லை.

எல்லாம் படிப்பதற்காகத்தான் செய்யமுடியும் என்று ஒரு உறுப்பினர் சொன்னார். ஏழை விவசாயி எத்தனைப்படிதான் ஏறுவான்? வழக்கு மன்றப் படிக்கட்டில் ஏறியேறி இறங்குவானா? வேறுபடிகளில் ஏறி இறங்குவானா?

இன்றைய நிலையில் ஏழை சாண் ஏறினால் முழம் சறுக்கிக் கீழே இறங்குகிறான். சாண் ஏறுகிறபோது பார்த்தீர்களா ஏறுவதை? என்று கூறி ஆளுங்கட்சியினர் பெருமைப்படுகின்றனர். ஆனால் முழம் சறுக்குவதை அவர்கள் காட்டுவதில்லை. அரசியலில் இது இயற்கைச் சுபாவமாகிவிட்டது. எனவே, வழக்கு மன்றத்திற்குச் செல்லும் வேலையை அதிகப்படுத்தாமல் இருக்கச் சட்டத்திலுள்ள சிக்கல்களை நீக்கி எளிதாக்கிச் சட்டத்திலுள்ள வியாக்கியானங்களை ஒரு இருபது முப்பதுக்குக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை வாழ்வில் அமைதி ஏற்படுத்தாது

மேய்ச்சல் நிலத்துக்கு விலக்களிப்பதனால் ஏற்படும் விளைவைப் பார்க்கவேண்டும். மேய்ச்சல் நிலத்தை விளைச்சல் நிலமாக மாற்றிக் கொள்ளவும் வழியிருக்கிறது. மேய்ச்சல் நிலமா – விளைச்சல் நிலமா என்ற சில நேரத்தில் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பாக மேய்ச்சல் நிலத்தில் சவுக்கு பயிரிடக்கூடும். அல்லது கருவேல மரத்தைப் பயிரிடக்கூடும். கருவேலம் இலை ஆடுகளுக்குப் பயன்படும் என்று கூறி அதைப் பயிரிடுவார்கள். ஆனால், அதே நேரத்தில் அந்த மரத்தைப் பல விவசாயக் கருவிகள் செய்வதற்கும் நல்ல விலைக்கும் வெட்டிவிற்பார்கள். இதனால் நல்ல இலாபம் அடைவார்கள்.

இப்படி எவ்வளவு முற்போக்கான சட்டம் இயற்றினாலும இலாபம் தேடுவதற்குச் சந்து பொந்து இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். எனவே ஆய்வுக் குழுவினர் இதையெல்லாம் ஆராய வேண்டும்.

இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இந்த மசோதாவினால் ஏழை வாழ்வில் அமைதியை ஏற்படுத்த முடியாது. ஓரளவு அந்தப் பலனைத் தரப்போகிறோம், என்று உலகம் சொல்லுவதற்கும் இதில் ஒன்றும் கிடையாது.

(நம்நாடு - 21-4-60)