அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தி.மு.கழகத்தினர் ஆதரிப்பர்!

தி.மு.கழகப் பொதுச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை அவர்கள், 28.8.1954 அன்று திருவெண்ணெய் நல்லலூர் தி.மு.கழக முதலாண்டு விழாவில் பேசுகையில் குறிப்பிட்டதாவது,

கடந்த பொதுத் தேர்தலில், கோயங்கா போன்ற பெரும்பண முதலைகளை எதிர்த்து வெற்றி பெற்ற கோழிச் சின்னமுள்ள பெட்டிகள், வருகிற ஜில்லா போர்டு தேர்தலில் இருக்காது! மாறாக அத்தனையும் மாட்டுப் பெட்டிகளாக மாற்றப்பட்டு விட்டன – கனம் ராமசாமி படையாட்சியாரால்!

உழைப்பாளர் கட்சியினரின் போக்கால் – நாங்கள் ஏமாற்றப்பட்டோம்! எங்களுக்கு ஏமாற்றம்கூடப் பெரிதல்ல, ஏனெனில், அரசியல் வாழ்விலே அத்தகைய ஏமாற்றங்கள் பலவற்றை நாங்கள் சந்தித்து விட்டிருக்கிறோம்!

ஏமாற்றங்களைச் சந்தித்தவர் நாம்!

“ஆனால் ஒரு பெரும் சமூகத்திற்க நேர்ந்த ஏமாற்றம்தான் மிகப் பெரியது அந்த மக்கள் உண்மையிலேயே ஏமாற்றப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு நேர்ந்துள்ள ஏமாற்றம் எத்தகையது என்பது குறித்து நண்பர் கோவிந்தசாமி விளக்கமாகப் பேசியுள்ளார்.

அநத் ஏமாற்றத்தின் காரணமாக மனம் உடைந்த தோழர் கோவிந்தசாமி போன்றவர்கள், புதியதொரு கட்சியை உழவர் கட்சி என்ற பெயரில் இந்தத் தென்னாற்காடு மாவட்டத்தில் துவக்கி உள்ளனர்.

அவர்கள் வருகிற ஜில்லா போர்டு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அந்தக் கட்சி நிறுத்தியுள்ள அபேட்சகர்களை இந்த மாவட்டத்திலுள்ள தி.மு.கழகத்தவர் ஆதரிப்பார்கள்.

(நம்நாடு - 30-8-1954)