அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திருச்சியில் அறிஞர் அண்ணா

துகிலுரித்த துச்சாதனன், பிறகு, துரோபதைக்கு மஞ்சள் அரைத்துக் கொடுப்பது போல் காங்கிரசைத் தேர்தலில் முறியடித்தவர்களைக் கொண்டே, இப்போது ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி தேடித் தரச் சொல்லும் தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் 30.9.1954 அன்று, திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

திருச்சி பெரிய கடை வீதி தி.மு.கழக ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் 30.8.1954 மாலை 6.30 மணியளவில் திருச்சி டவுண் ஹால் மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கத் தோழர் எம்.எஸ்.மணி தலைமை தாங்கினார்.

தோழர்கள் மதுரை எஸ்.முத்து, அ.பொன்னம்பலனார், முகவை ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் பேசியபின், தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் நீண்டதோர் சொற்பொழிவாற்றினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்ட கூட்டம் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

தலைவரின் முடிவுரைக்கப் பின் கூட்டம் இனிது முடிவுற்றது.

பொதுச் செயலளார் அண்ணாதுரை அவர்கள், மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது.

குடியேற்றம் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றதை ஒட்டி நாட்டவரிடையே ஒரு அரசியல் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது குடியேற்றம் தேர்தலுக்கப் பிறகு, காமராசருக்கும் – தி.மு.கழகத்திற்கும் ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூட கம்யூனிஸ்டு நண்பர்கள் பேசுவதாகக் கேள்விப்பட்டேன், அவர்கள் அப்படிப் பேசுவது உண்மையானால், அதற்காக நான் வருந்துகிறேன்.

காமராசர் என்னைக் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், எனவே, நான் அவரைக் குடியேற்றம் தேர்தலில் ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்ததாகவும் நண்பர்கள் பேசுகிறார்களாம்.

கைத் துப்பாக்கிக்கே நான் அஞ்சி விடுவதானால், அதைவிடப் பயங்கரமான ஆயுதங்களைக் கையாளும் துணிவு கொண்ட கம்யூனிஸ்டுகளிடம் நான் என்ன ஆவது?

இப்படிப்பட்ட கற்பனைகளையெல்லாம் சொல்லி, வளர்ந்து வருகிற ஒரு இயக்கத்தை அழித்துவிடலாம் என எண்ணுவது மிகத் தவறானது?

அதுவும் ஒரு கட்சியின் பொறுப்பான தலைவர் – பொதுவுடைமை காண்பதற்குப் பாடுபடுபவர் – சட்ட நுணுக்கங்கள் பற்றிப் பேசச் சட்ட சபைக்குச் சென்றிருப்பவர் பேசுவது, மிகத் தவறானது!

குடியேற்றம் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு கம்யூனிஸ்டு நண்பர்கள் என்னிடம் கலந்துரையாடவுடம் இல்லை,

அவர்கள் கட்சித் தலைமை எந்தவித வேண்டுகோளையும் எங்கள் முன் வைக்கவுமில்லை.

‘கேட்டிருந்தால் ஆதரித்திருப்பீர்களா?‘ என்று கேட்கக் கூடும், கேட்டிருந்தால், ஆதரித்திருக்கக் கூடும் – சில நிபந்தனைகளின் பேரில்!

சென்ற பொதுத் தேர்தலில் கேட்டது போன்று, திராவிட நாடு பிரச்சனை பற்றிச் சட்டசபையில் பேசுவதாக ஒப்பியிருந்தால், தி.மு.கழகம் அவர்களைக் குடியேற்றம் தேர்தலில் ஆதரித்திருக்கும்.

ஒழிகிறாயா? ஒழிக்கட்டுமா?

பெரியார் ராமசாமி அவர்கள்கூட, காமராசரை ஆதரிப்பதாகக் கூறினாரே அன்றி, காங்கிரசை ஆதரிப்பதாகக் கூறவில்லையே!

மதுரையில் காமராசர் பேசி இருக்கிறார் – ‘கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்ட எல்லாக் கட்சியினரும் ஒன்றுபடுங்கள்‘ என்று. வருகிறோம் என்று சொன்னோமே? நாங்கள் என்ன அவ்வளவு அரசியல் ஏமாளிகளா? எங்களுக்குத் தெரியாதா – கம்யூனிஸ்டுகளை, எல்லோரும் சேர்ந்து ஒழித்தானபிறகு, காமராசர், எங்களையே திரும்பி, ‘ஒழிகிறாயா, அல்லது ஒழிக்கட்டுமா?‘ என்று கேட்பார் என்பது!

காமராசரைத் தி.மு.காகம் பாராட்டுவதாகச் சொல்வதென்றால், அவர், ஆச்சாரியார் புகுத்திய ஆகாத கல்வித் திட்டத்தைக் கை விட்டார் என்ற ஒரே காரணத்தினால்தான். காமராசர் மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டவும் கூடாதா? காமராசரை மட்டுமல்லவே, ஆச்சாரியாரையும் கூடப் பாராட்டியிருக்கிறோம், அவர், தஞ்சை விவசாயிகளுக்குப் பண்ணையாள் சட்டம் கொண்டுவந்தபோது, நாம் அவரைப் பாராட்டி ஆதரித்திருக்கிறோமே!

ஓமந்தூரார் செய்த நல்லவற்றைப் பாராட்டினோம், அவர், இந்தியைப் புகுத்தியபோது எதிர்த்தோம், அதேபோல, ஆச்சாரியார் நமது கல்வித் திட்டத்தைப் புகுத்தி வலிய வலிய வம்புச் சண்டைக்கு வரும் வரையில், நாம் அவருடன் மோதிக் கொண்டது கிடையாது?

பத்தியம் போடட்டும் பார்க்கலாம்

ஜில்லா போர்டு தேர்தல் வருகிறது. அதில், காங்கிரஸ் கட்சியினரின் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், நேற்று வரையில் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்தவர் களெல்லாம் தன்பக்கம் சிலபல பதவிகளைக்காட்டி இழுப்பது என்பது கண்டனத்துக்குரியது.

காங்கிரசிலே இருந்தவர் இடையிலே வெளியேறனிார், திரும்பவும் வருகிறேன் என்றால், எப்படிச் சேர்த்துக் கொள்ளலாம்? சேர்த்துக் கொண்டதும், பதவியையா காட்டவது அவர்களுக்கு?

‘காங்கிரசை விட்டுப் போனாய் – திரும்பவும் வருகிறாயா, நான்க ஆண்டுகள் சாதாரண உறுப்பினராக இரு, பிறகு பார்க்கலாம்‘ என்று ஒரு கண்டிப்பான ‘பத்தியம்‘ போடட்டும், யாராவது காங்கிரசுக்கு மீண்டும் போகிறார்களா பார்க்கிறேன்!

ஒரு தனி மனிதரின் சொல்லுக்கு ஒரு தொகுதி கட்டுப்படுகிறது என்று சொன்னால் ஜனநாயகம் என்ன ஆவது?

இந்தத் தொகுதி எப்பொழுதுமே காங்கிரஸ்!‘ சொல்லட்டுமே, பெருமைக்குரியது!

‘இது என்றும் கம்யூனிஸ்டுகளுடைய தொகுதி!‘ – சொல்லட்டும் பாராட்டுக்குரியது!

இது கழகத்தவரை ஆதரிக்கும் பகுதி‘ – என்று பேசட்டும், மகிழ்ச்சிக்குரியது!

அதை விடுத்து, ‘இவர் சொன்னால் இந்த மக்கள் கேட்கிறார்கள்‘ என்ற ஒரு தனி மனிதனின் சொல்லுக்கு, விருப்பத்திற்கென்று ஒரு தொகுதி இருக்குமானால், அங்கே இப்ப ஜனநாயகம் வாழ முடியும்? இந்த நிலையைப் பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது.

துச்சாதனன் மஞ்சள் அரைக்கலாமா?

துகிலுரித்த துச்சாதனன் துரோபதைக்கு மஞ்சள் அரைத்துத் தர வருகிறான் என்பது போல, காங்கிரசை முறியடித்துக் காட்டியவர்களைக் கொண்டே இப்போது காங்கிரசுக்கு ஜில்லா போர்டு தேர்தலில் வெற்றி தேடித் தரச் சொல்வதா!

காமராசர் நம்மவர் என்று சொல்கிறார்கள், சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது போன்ற, ஒருதலைப் பட்சக் காதல் போல்தானே இருக்கிறது, நாம் காமராசரைத் திராவிடர் என்பது! அவர் மறந்தாவது சொல்கிறாரா – ‘நான் திராவிடனே‘ – என்று!

திராவிடர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சதி வழக்குகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தானே இருக்கின்றன? திராவிடன் என்ற உணர்வு இருந்தால் காமராசர் அந்த வழக்குகளை ஏன் வாபஸ் வாங்கக் கூடாது.

நிலைமை இப்படி இருக்கையில், காமராசர் நம்மவர் என்பதிலே என்ன பொருள் இருக்க முடியும்?

நான் என்ன மறந்தா போய்விட்டேன் – இதே திருச்சியில் சில ஆண்டுகளுக்குமுன் அவர், ‘நமது கட்டை விரல்களை வெட்ட வேண்டும்‘ என்று கூறியதை!

எதிர்க்கட்சி எப்படி வளரும்?

‘ஒன்று சேருங்கள்‘ என்று காமராசர் தஞ்சையில் பேசி இருக்கிறார், எல்லாக் கட்சியினரும் ஒன்று சேர வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது இப்போது?

வெளிநாட்டான் படையெடுப்பிலிருந்து நாட்டைக் காக்க, உள்நாட்டிலே பெரும் விபத்தைப் போக்க, வெள்ளம், புயல் இவைகளால் ஏற்படும் சேதத்தைச் சரிகட்ட, எல்லாக் கட்சினியரும் ஒன்றுபட்டு வேலை செய்வது இயற்கை, இன்றியமையாததும்கூட!

ஆனால், அமைதியான அரசியல் நடைபெறுகையில், எதற்காக ஒன்று சேர வேண்டும்?

‘எதிர்க்கட்சி தேவைதான், ஆனால், அது இப்போத இல்லை“ – என்கிறால் காமராசர்!

கோவலனை இழுத்துக் கொண்ட மாதவிபோல், எதிர்க் கட்சியிலிருக்கும் ராஜா சிதம்பரங்களை, பதவிகளைக் காட்டி இழுத்துக் கொண்டால் எப்படி எதிர்க்கட்சி வளர முடியும்?

அரசியலில் ஒழுக்கம் இருந்தால்தானே ஜனநாயகம் வளர முடியும் எப்படி வர முடியும்?

அப்படியிருக்க, தி.மு.கழகத்தையும் காமராசர் அழைப்பதின் நோக்கம் என்ன?

அரசாங்கம் செய்ய வேண்டும்

‘திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும், ஆன்றோர் ஆண்ட நாடு, அடிமைச் சாவடியாக இருக்கிறது! முன்னோர் வீரம் புகழ ஆண்ட நாடு, அடிமை முடை நாற்றம் வீசுகிறது!

இந்த இழிநிலையை மாற்றுகிற லட்சியத்தை உடையது தி.மு.கழகம். அந்த லட்சியத்தைப் பற்றி எதுவுமே சொல்லாது, ‘வாருங்கள், வாருங்கள்‘ என்றால் எப்படி வர முடியும்?

வருகின்ற அக்டோபர் மாதத்தில் 5,000 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வரவிருக்கிறார்கள், தொடர்ந்து லட்சக்கணக்கான தமிழர்கள் வர இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் இங்கே வருகிறத நேரத்தில், அவர்களுக்கு வாழ்வுதர வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது, அவர்களுக்கென்்று இங்கே, வீடோ வாசலோ, நிலமோ, வேலையோ இருக்காது, அத்தனையும் அவர்களுக்குத் தேடித்தர, இங்குள்ள எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டால் இயலாது, அரசங்கம், அவர்களுக்கென சில பல கோடி ரூபாய்களை ஒதுக்கி வேலை செய்தால்தான் சாத்தியம்.

எல்லாம் சென்னையின் பொறுப்பு

பணப் பேழையை வைத்திருக்கும் மத்திய நிதி மந்திரி தேஷ்முக் அவர்கள், ‘ஏதும் செய்ய இயலாது, எல்லாம் சென்னை அரசின் பொறுப்பு‘ என்று கூறிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், காமராசர், அந்த பிரச்சனையை, ‘சாதரணமானது‘ என்று எண்ணுவதாகப் பத்திரிக்கையிலே பார்த்தேன், அப்படியானால், அந்த இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் கண்ணீரைத் துடைப்பது யார்?

நான் காமராசரைப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் வருகிற அக்டோபரில் வரவிருக்கும் அந்த அகதிகளுக்கு, வாழ்வளிக்க இப்போதே திட்டம் தீட்டாவிட்டால் அவர்களின் நிலை மோசமாகிவிடும், அவ்வாறு நேரிடமால் தடுக்க, இப்போதே அவர், ஆவண செய்தாக வேண்டும்.

இன்று திருவாங்கூர் சொச்சியில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், காமராசர் இதுபற்றி இன்றுவரை வாயே திறக்கவில்லை.

கேரளாவைப் பிடிப்பார்களாம்!

பட்டம் தாணு பேசுகிறார் – காமராசரும், சுப்பிரமணியமும், படைகொண்டு வந்தே மலையாளத்தைப் பிடித்துவிடுவார்கள் – என்று!

ஆனாலும், காமராசர், பட்டம் தாணுவைத் தட்டிக் கேட்கவில்லை.

திருவாங்கூர் – தமிழரின், ‘தாயத்தோடு சேர வேண்டும்‘ என்ற உணர்வை, தமிழரான, திராவிடரான காமராசர் உணர வேண்டாமா?

காமராசர், இவற்றிற்கெல்லாம் – இலங்கையிலிருந்து திரும்பும் அகதிகளுக்கு வாழ்வளிப்பது, திரு – தமிழர் போராட்டத்திற்கு உதவுவது போன்றவற்றிற்கும் உதவி கேட்டால், நாம் தரத் தயாராக இருக்கிறோம்.

நாட்டவரிடை நிலவும் தரித்திரம், வறுமை, சாதி பேதம் ஒழியத் திட்டம் தீட்டி ஆதரவு கேட்டால், நிச்சயம் கிடைக்கும்.

இதையெல்லாம் விடுத்து, ‘உள்ளே வாருங்கள்‘, என்று கூவும் குரல் எதற்காக – கூப்பிடும் போக்கு ஏன் – என்பதைத் தெரிவிக்காமலேயே கூப்பிட்டால் ஓடிவர முடியுமா?

எனவேதான், நாம் சொல்கிறோம் – நம்மைப் பொறுத்தவரை, காமராசர் நண்பருமல்ல, பகைவருமல்ல – என்று!

உறவுக்கு இமயம்! எல்லைக்கு வேங்கடம்!

‘உறவுக்கு இமயம், எல்லைக்கு வேங்கடம்‘, என்ற கூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இன்று, திரு – தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தரும் முறையில் ‘நேருவை எதிர்த்துப் போரிட‘ முடிவு செய்திருக்கிறார்களாம்! வாழ்க அவர்கள்! வளர்க அவர்கள் பகுத்தறிவு!

பொதுச் செயலாளர் அவர்கள், இவ்வாறெல்லாம் குறிப்பிட்டு விட்டு, நாட்டு மக்களின் நலிவு போக்கத் திராவிட நாடு திராவிடர்க் கவிதைத் தவிர வேறு சிறந்த திட்டமிருக்க முடியாது என்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்.

(நம்நாடு - 1-9-1954)